கலாத்தியருக்குக் கடிதம்
1 மனிதனிடமிருந்தும் அல்ல, மனிதனாலும் அல்ல, இயேசு கிறிஸ்து மூலமாகவும்+ அவரை உயிரோடு எழுப்பிய பரலோகத் தகப்பனாகிய கடவுள் மூலமாகவும்+ அப்போஸ்தல நியமிப்பைப் பெற்றிருக்கிற பவுலாகிய நான், 2 என்னோடு இருக்கிற சகோதரர்கள் எல்லாரோடும் சேர்ந்து கலாத்தியாவிலுள்ள சபைகளுக்கு எழுதுவது:
3 பரலோகத் தகப்பனாகிய கடவுளிடமிருந்தும் நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அளவற்ற கருணையும் சமாதானமும் கிடைக்கட்டும். 4 இந்தப் பொல்லாத உலகத்திலிருந்து* நம்மைக் காப்பாற்ற+ நம்முடைய பாவங்களுக்காகக் கிறிஸ்து தன்னையே கொடுத்தார்.+ இதுதான் நம்முடைய கடவுளாகவும் தகப்பனாகவும் இருக்கிறவருடைய விருப்பம்.*+ 5 இவருக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக! ஆமென்.*
6 கிறிஸ்துவின் அளவற்ற கருணையால் உங்களை அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாக விட்டுவிட்டு வேறொரு நல்ல செய்தியை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டீர்களே!+ எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. 7 சொல்லப்போனால், அது நல்ல செய்தியே கிடையாது. சிலர் உங்களைக் குழப்பி,+ கிறிஸ்துவைப் பற்றிய நல்ல செய்தியைத் திரித்துச் சொல்லப் பார்க்கிறார்களே தவிர வேறொன்றும் இல்லை. 8 நாங்கள் உங்களுக்கு அறிவித்த நல்ல செய்தியைத் தவிர வேறொரு நல்ல செய்தியை எங்களில் ஒருவனோ பரலோகத்திலிருந்து வருகிற ஒரு தேவதூதனோ உங்களுக்கு அறிவித்தால், அவன் சபிக்கப்பட்டவனாக இருக்கட்டும். 9 இப்போது சொன்னதையே மறுபடியும் சொல்கிறேன்: நீங்கள் ஏற்றுக்கொண்ட நல்ல செய்தியைத் தவிர வேறொரு நல்ல செய்தியை எவனாவது உங்களுக்கு அறிவித்தால் அவன் சபிக்கப்பட்டவனாக இருக்கட்டும்.
10 உண்மையில், நான் இப்போது மனிதர்களுடைய தயவைப் பெறுவதற்கு முயற்சி செய்கிறேனா, கடவுளுடைய தயவைப் பெறுவதற்கு முயற்சி செய்கிறேனா? நான் மனிதர்களையா பிரியப்படுத்தப் பார்க்கிறேன்? நான் இன்னமும் மனிதர்களைப் பிரியப்படுத்திக்கொண்டிருந்தால் கிறிஸ்துவின் அடிமையாக இருக்க முடியாது, இல்லையா? 11 சகோதரர்களே, நான் உங்களுக்கு ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன்: நான் அறிவித்த நல்ல செய்தி மனிதனிடமிருந்து வந்தது கிடையாது.+ 12 அதை நான் எந்த மனிதனிடமிருந்தும் பெற்றுக்கொள்ளவில்லை, அதை எந்த மனிதனும் எனக்குக் கற்றுக்கொடுக்கவும் இல்லை. இயேசு கிறிஸ்துதான் அதை எனக்கு வெளிப்படுத்தினார்.
13 நான் யூத மதத்தில் இருந்தபோது எப்படி நடந்துகொண்டேன் என்று நீங்களே கேள்விப்பட்டிருப்பீர்கள்.+ கடவுளுடைய சபையைப் பயங்கரமாகத் துன்புறுத்திக்கொண்டும் பாழாக்கிக்கொண்டும் இருந்தேன்.+ 14 என் முன்னோர்களுடைய பாரம்பரியங்களைக் கடைப்பிடிப்பதில் மிகவும் வைராக்கியமாக இருந்தேன்.+ அதனால், என் தேசத்தில் என் வயதிலிருந்த நிறைய பேரைவிட யூத மதத்தைப் பின்பற்றுவதில் சிறந்தவனாக இருந்தேன். 15 ஆனால், என் அம்மாவின் வயிற்றிலிருந்து என்னைப் பிரித்தெடுத்த கடவுள், 16 தன்னுடைய மகனைப் பற்றிய நல்ல செய்தியை என் மூலம் மற்ற தேசத்து மக்களுக்குச் சொல்வது நல்லதென்று நினைத்தார்.+ அதனால், அவர்களுக்கு என் மூலம் அவரை வெளிப்படுத்துவதற்காகத் தன்னுடைய அளவற்ற கருணையால் என்னை அழைத்தார்.+ நான் உடனே இன்னொருவரிடம் போய் ஆலோசனை கேட்கவில்லை. 17 எனக்கு முன்பே அப்போஸ்தலர்களாக இருந்தவர்களைச் சந்திக்க எருசலேமுக்குப் போகவுமில்லை. அதற்குப் பதிலாக, அரேபியாவுக்குப் போனேன், அங்கிருந்து தமஸ்குவுக்குத் திரும்பி வந்தேன்.+
18 மூன்று வருஷங்களுக்குப் பிறகு, கேபாவை*+ சந்தித்துப் பேசுவதற்காக எருசலேமுக்குப் போய்+ அவரோடு 15 நாட்கள் தங்கினேன். 19 ஆனால், மற்ற அப்போஸ்தலர்களில் நம் எஜமானுடைய சகோதரராகிய யாக்கோபைத்+ தவிர வேறு யாரையும் நான் பார்க்கவில்லை. 20 நான் உங்களுக்கு எழுதுகிற இந்த விஷயங்களெல்லாம் பொய் அல்ல என்று கடவுளுக்கு முன்னால் உறுதியாகச் சொல்கிறேன்.
21 அதற்குப் பிறகு சீரியா, சிலிசியா பகுதிகளுக்குப் போனேன்.+ 22 ஆனால், யூதேயாவில் இருக்கிற கிறிஸ்தவ சபைகளுக்கு நான் அதுவரை அறிமுகமாகாமல் இருந்தேன். 23 “இதற்கு முன்பு நம்மைத் துன்புறுத்தி,+ கிறிஸ்தவ மதத்தை அழிக்கப் பார்த்தவன் இப்போது அதைப் பற்றிய நல்ல செய்தியை அறிவிக்கிறான்”+ என்று மட்டுமே அவர்கள் கேள்விப்பட்டிருந்தார்கள். 24 அதனால், என்னை முன்னிட்டு கடவுளை அவர்கள் மகிமைப்படுத்த ஆரம்பித்தார்கள்.