கொரிந்தியருக்கு இரண்டாம் கடிதம்
10 உங்களோடு இருக்கும்போது அற்பமானவனாகவும்+ உங்களோடு இல்லாதபோது கண்டிப்பானவனாகவும்+ தெரிகிற பவுலாகிய நான் கிறிஸ்துவுக்கே உரிய சாந்தத்தோடும் கருணையோடும்+ உங்களை ஒன்று கேட்டுக்கொள்கிறேன். 2 நாங்கள் உலகச் சிந்தையோடு நடப்பதாக நினைக்கிற சிலருக்கு எதிராக நான் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நினைத்தாலும், நான் உங்களைப் பார்க்க வரும்போது அப்படி நடவடிக்கை எடுக்கத் தேவையில்லாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். 3 நாங்கள் இந்த உலகத்தில் வாழ்ந்தாலும், உலக மக்களைப் போல் போர் செய்வதில்லை. 4 ஏனென்றால், எங்களுடைய போராயுதங்கள் இந்த உலக மக்களுடைய போராயுதங்களைப் போன்றவை அல்ல.+ அவற்றைக் கடவுள் எங்களுக்குக் கொடுத்திருக்கிறார்,+ ஆழமாக வேரூன்றியவற்றைத் தகர்த்தெறிகிற சக்தி அவற்றுக்கு இருக்கிறது. 5 தவறான யோசனைகளையும், கடவுளைப் பற்றிய அறிவுக்கு எதிராகத் தலைதூக்குகிற ஆணவமான எல்லாவற்றையும் நாங்கள் தகர்த்தெறிந்து வருகிறோம்.+ அதோடு, எல்லா எண்ணங்களையும் கட்டுப்படுத்தி கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் செய்துவருகிறோம். 6 நீங்கள் எல்லாரும் முழுமையான கீழ்ப்படிதலைக் காட்டிய பின்பு யாராவது கீழ்ப்படியாமல் இருந்தால் அதற்குத் தண்டனை கொடுக்கவும் தயாராக இருக்கிறோம்.+
7 நீங்கள் எல்லாவற்றையும் வெளித்தோற்றத்தை வைத்து எடை போடுகிறீர்கள். ஒருவன் தன்னைக் கிறிஸ்துவின் சீஷன் என்று உறுதியாக நம்பினால், அவனைப் போல் நாங்களும் கிறிஸ்துவின் சீஷர்கள் என்பதை அவன் ஞாபகப்படுத்திக்கொள்ளட்டும். 8 நம் எஜமான் எங்களுக்குத் தந்திருக்கிற அதிகாரத்தைப் பற்றி நான் சற்று அதிகமாகப் பெருமை பேசினாலும் அதற்காக நான் வெட்கப்பட மாட்டேன். ஏனென்றால், உங்களை நொறுக்கிப்போடுவதற்கு அல்ல, உங்களைப் பலப்படுத்துவதற்காகத்தான் அவர் இந்த அதிகாரத்தை எங்களுக்குத் தந்திருக்கிறார்.+ 9 கடிதங்கள் மூலம் நான் உங்களைப் பயமுறுத்துவதாக நீங்கள் நினைக்கக் கூடாது என்பதற்காகவே இதைச் சொல்கிறேன். 10 ஏனென்றால், “அவனுடைய கடிதங்களில் ஆழமான கருத்துகள் இருக்கின்றன, அவை வலிமையானவையாக இருக்கின்றன. ஆனால் நேரில் பார்க்கும்போது அவனுடைய தோற்றம் கம்பீரமாக இல்லை, பேச்சும் அர்த்தமுள்ளதாக இல்லை” என்று சிலர் சொல்கிறார்கள். 11 அப்படிச் சொல்கிறவர்கள் ஒன்றைத் தெரிந்துகொள்ளட்டும்: நாங்கள் தூரத்திலிருந்து கடிதங்களை எழுதும்போது என்ன சொல்கிறோமோ, அதைத்தான் உங்களிடம் வந்திருக்கும்போது செயலில் காட்டுவோம்.+ 12 ஆனாலும், தங்களையே சிபாரிசு செய்துகொள்கிற சிலரோடு எங்களைச் சரிசமமாக்கிக்கொள்வதற்கோ அப்படிப்பட்ட சிலரோடு எங்களை ஒப்பிடுவதற்கோ நாங்கள் துணிய மாட்டோம்.+ அவர்கள் தங்களை வைத்தே தங்களை அளவிடுகிறார்கள், தங்களை வைத்தே தங்களை ஒப்பிடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் அறிவில்லாதவர்கள்.+
13 எங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளை மீறி நாங்கள் பெருமை பேச மாட்டோம்; கடவுள் எங்களுக்கு அளந்துகொடுத்த பகுதியின் எல்லைக்குள்ளாகவே பெருமை பேசுவோம்; அந்த எல்லைக்குள்தான் நீங்களும் இருக்கிறீர்கள்.+ 14 நீங்கள் அந்த எல்லைக்குள் இல்லாதிருந்தால் நாங்கள் எல்லை மீறிப்போகிறவர்களாக இருந்திருப்போம். உண்மையில், கிறிஸ்துவைப் பற்றிய நல்ல செய்தியைச் சொல்வதற்கு நாங்கள்தான் உங்களிடம் முதன்முதலில் வந்தோம்.+ 15 மற்றவர்கள் செய்த வேலையை நாங்கள் செய்ததாகச் சொல்லி, எங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளை மீறி நாங்கள் பெருமை பேசவில்லை. உங்கள் விசுவாசம் அதிகரிக்க அதிகரிக்க எங்களுடைய ஊழியமும் இந்தப் பகுதியில் அதிகரிக்கும். 16 உங்களுடைய பகுதிக்கு அப்பால் இருக்கிற இடங்களில் நாங்கள் நல்ல செய்தியை அறிவிக்கும்போது எங்களுடைய ஊழியம் இன்னும் அதிகரிக்கும். மற்றவர்களுடைய பகுதியில் ஏற்கெனவே செய்யப்பட்டிருக்கிற ஊழியத்தைப் பற்றி நாங்கள் பெருமை பேச மாட்டோம். 17 “ஆனால், பெருமை பேசுகிறவன் யெகோவாவை* பற்றியே பெருமை பேசட்டும்.”+ 18 தன்னைத் தானே சிபாரிசு செய்கிறவன் யெகோவாவினால்* ஏற்றுக்கொள்ளப்பட மாட்டான்,+ அவரால் சிபாரிசு செய்யப்படுகிறவன்தான் ஏற்றுக்கொள்ளப்படுவான்.+