எரேமியா
51 யெகோவா சொல்வது இதுதான்:
2 அழிவு நாளில் நாலாபக்கத்திலிருந்தும் பாபிலோனைத் தாக்க நான் எதிரிகளை அனுப்புவேன்.+
தானியத்தைப் புடைப்பது போல அவர்கள் அவளைப் புடைப்பார்கள்.
அப்போது, ஜனங்கள் எல்லாரும் பதரைப் போலச் சிதறிப்போவார்கள்; தேசம் வெறுமையாகும்.
3 வில்வீரர்கள் வில்லை வளைக்க வேண்டாம்.
யாரும் உடல்கவசத்தைப் போட்டுக்கொண்டு நிற்க வேண்டாம்.
அவளுடைய வாலிபர்கள்மேல் இரக்கம் காட்டாதீர்கள்.+
அவளுடைய படைகளை மொத்தமாக அழித்துவிடுங்கள்.
4 கல்தேயர்களின் தேசத்தில் அவர்கள் வெட்டிச் சாய்க்கப்படுவார்கள்.
குத்திப்போடப்பட்டவர்கள் அவளுடைய தெருக்களில் கிடப்பார்கள்.+
5 ஏனென்றால், இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளைப் பொறுத்தவரை, அவர்களுடைய தேசம்* குற்றங்களால் நிறைந்திருக்கிறது.
அதோடு, பரலோகப் படைகளின் கடவுளான யெகோவா இஸ்ரவேலையும் யூதாவையும் கைவிடவில்லை. அவர்கள் விதவைகளைப் போல ஆகவில்லை.+
அவள் செய்த குற்றத்துக்காக நீங்கள் அழிந்துபோகாதீர்கள்.
ஏனென்றால், இது யெகோவா பழிவாங்கும் நேரம்.
அவள் செய்ததற்குச் சரியான கூலியை அவர் கொடுக்கிறார்.+
7 பாபிலோன் யெகோவாவின் கையில் ஒரு தங்கக் கிண்ணத்தைப் போல இருந்தாள்.
பூமியிலுள்ள எல்லாரும் போதையேறக் குடிக்கும்படி அவள் செய்தாள்.
அவளுடைய திராட்சமதுவை எல்லா தேசத்து ஜனங்களும் போதையேறக் குடித்தார்கள்.+
அதனால்தான் பைத்தியக்காரத்தனமாக நடக்கிறார்கள்.+
8 பாபிலோன் திடீரென்று விழுந்து நொறுங்கினாள்.+
அவளுக்காக அழுது புலம்புங்கள்!+
அவளுடைய வலியைக் குறைப்பதற்காக பரிமளத் தைலத்தை வாங்கி வாருங்கள்.
அவள் ஒருவேளை குணமாகலாம்.”
9 “பாபிலோனைக் குணப்படுத்த நினைத்தோம், ஆனால் முடியவில்லை.
அவளை விட்டுவிட்டு அவரவர் ஊருக்குத் திரும்பிப் போகலாம், வாருங்கள்.+
ஏனென்றால், அவளுடைய குற்றங்கள் வானத்தை எட்டிவிட்டன.
மேகங்களைத் தொட்டுவிட்டன.+
10 யெகோவா நமக்காக நியாயம் செய்திருக்கிறார்.+
வாருங்கள், நாம் சீயோனுக்குப் போய், நம் கடவுளான யெகோவா செய்ததை எல்லாருக்கும் சொல்லலாம்.”+
11 “அம்புகளைத்+ தீட்டிப் பளபளப்பாக்குங்கள்; வட்டமான கேடயங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.*
யெகோவா பாபிலோனை அழிக்க நினைத்திருக்கிறார்.
அதனால், மேதியர்களின் ராஜாக்களை யெகோவா தூண்டியிருக்கிறார்.+
அவருடைய ஆலயத்துக்காக அவர் பழிவாங்கப்போகிறார்.
12 பாபிலோனின் மதில்களுக்கு எதிராகக் கொடியை+ ஏற்றுங்கள்.*
பாதுகாப்பைக் கூட்டுங்கள்; காவலர்களை நிறுத்துங்கள்.
பதுங்கியிருந்து தாக்குவதற்கு ஆட்களைத் தயாராக்குங்கள்.
ஏனென்றால், யெகோவா அவளுக்கு எதிராகப் போர்த்தந்திரம் செய்திருக்கிறார்.
பாபிலோனின் ஜனங்களை என்ன செய்யப்போவதாகச் சொன்னாரோ அதைச் செய்வார்.”+
13 “ஏராளமான தண்ணீரின் மேல் உட்கார்ந்திருக்கிறவளே,+
சொத்துகளைக் குவித்து வைத்திருக்கிறவளே,+
நீ கொள்ளை லாபம் சம்பாதித்தது போதும்! உனக்கு முடிவு வந்துவிட்டது!+
14 பரலோகப் படைகளின் யெகோவா உன்னிடம்,
‘வெட்டுக்கிளிகளைப் போல ஏராளமான ஆட்கள் உன்மேல் படையெடுத்து வரும்படி செய்வேன்.
அவர்கள் உன்னைத் தோற்கடித்து, வெற்றி முழக்கம் செய்வார்கள்’+ என்று தன்மீதே ஆணையிட்டுச் சொல்கிறார்.
16 அவர் குரல் கொடுக்கும்போது
வானத்தில் உள்ள தண்ணீர் கொந்தளிக்கிறது.*
பூமியின் எல்லா இடங்களிலிருந்தும் அவர் மேகங்களை* எழும்ப வைக்கிறார்.
17 மனுஷர்கள் எல்லாருமே அறிவும் புத்தியும் இல்லாமல் நடக்கிறார்கள்.
சிலைகளைச் செதுக்கிய ஆசாரிகள் எல்லாருமே வெட்கப்பட்டுப் போவார்கள்.+
அவர்கள் வார்த்த சிலைகள் பொய்யானவை.
உயிர்மூச்சு இல்லாதவை.+
18 அவை ஒன்றுக்கும் உதவாதவை,+ கேலிக்குரியவை.
கடவுளுடைய தண்டனைத் தீர்ப்பின் நாளில் அவை அழிந்துபோகும்.
19 யாக்கோபின் கடவுளோ அந்தச் சிலைகளைப் போன்றவர் அல்ல.
அவர்தான் எல்லாவற்றையும் உருவாக்கினார்.
அவருடைய விசேஷ சொத்தாகிய ஜனத்தை உருவாக்கியவரும் அவர்தான்.+
பரலோகப் படைகளின் யெகோவா என்பதுதான் அவருடைய பெயர்.”+
20 “நீதான் என் கையில் இருக்கிற தடி; நீதான் என்னுடைய போர் ஆயுதம்.
உன்னை வைத்து நான் தேசங்களை நொறுக்குவேன்.
உன்னை வைத்து ராஜ்யங்களை அழிப்பேன்.
21 உன்னை வைத்து குதிரைகளையும் குதிரைவீரர்களையும் நொறுக்குவேன்.
உன்னை வைத்து போர் ரதங்களையும் ரதவீரர்களையும் நொறுக்குவேன்.
22 உன்னை வைத்து ஆண்களையும் பெண்களையும் நொறுக்குவேன்.
உன்னை வைத்து வயதானவர்களையும் சிறுவர்களையும் நொறுக்குவேன்.
உன்னை வைத்து வாலிபப் பையன்களையும் வாலிபப் பெண்களையும் நொறுக்குவேன்.
23 உன்னை வைத்து மேய்ப்பர்களையும் மந்தைகளையும் நொறுக்குவேன்.
உன்னை வைத்து உழவர்களையும் ஏர்மாடுகளையும் நொறுக்குவேன்.
உன்னை வைத்து ஆளுநர்களையும் துணை அதிகாரிகளையும் நொறுக்குவேன்.
24 பாபிலோனையும் கல்தேயர்கள் எல்லாரையும் நான் பழிதீர்ப்பேன்.
சீயோனில் உங்களுடைய கண் முன்னால் அவர்கள் செய்த எல்லா அக்கிரமத்துக்கும்
கூலி கொடுப்பேன்”+ என்று யெகோவா சொல்கிறார்.
25 “அழிவு உண்டாக்குகிற மலையே, நான் உன்னைத் தண்டிப்பேன்”+ என்று யெகோவா சொல்கிறார்.
“முழு உலகத்தையும் அழிக்கிறவளே,+
என்னுடைய கையால் உன்னைப் பாறைகளிலிருந்து கீழே உருட்டிவிடுவேன்.
தீயில் கொளுத்திவிடுவேன்.”
26 “உன்னிடமிருந்து மூலைக் கல்லையோ அஸ்திவாரக் கல்லையோ யாரும் எடுக்க மாட்டார்கள்.
ஏனென்றால், நீ என்றென்றும் பாழாய்க் கிடப்பாய்”+ என்று யெகோவா சொல்கிறார்.
27 “தேசத்தில் கொடியை* ஏற்றுங்கள்.+
ஜனங்களின் நடுவே ஊதுகொம்பை ஊதுங்கள்.
அவளைத் தாக்குவதற்கு ஜனங்களைத் தயாராக்குங்கள்.
அரராத்,+ மின்னி, அஸ்கினாஸ்+ ராஜ்யங்களைக் கூப்பிடுங்கள்.
படைக்கு ஆள்சேர்க்க படை அதிகாரிக்குக் கட்டளை கொடுங்கள்.
குதிரைகளை இளம் வெட்டுக்கிளிகளைப் போல வரச் செய்யுங்கள்.
28 மேதியாவின் ராஜாக்களையும்,+ ஆளுநர்களையும், துணை அதிகாரிகளையும்,
அவர்கள் ஆட்சி செய்கிற எல்லா தேசங்களையும்
அவளோடு போர் செய்யத் தயாராகச் சொல்லுங்கள்.
29 பூமி அதிர்ந்து நடுநடுங்கும்.
யெகோவா பாபிலோனை என்ன செய்ய நினைத்தாரோ அதைச் செய்வார்.
அதற்குக் கோரமான முடிவைக் கொண்டுவருவார்; அங்கே யாரும் குடியிருக்க மாட்டார்கள்.+
30 பாபிலோனின் வீரர்கள் போர் செய்வதை நிறுத்திவிட்டு,
அவர்களுடைய கோட்டைகளில் உட்கார்ந்திருக்கிறார்கள்.
அவர்களுடைய பலமெல்லாம் போய்விட்டது.+
அவர்கள் பெண்களைப் போல ஆகிவிட்டார்கள்.+
பாபிலோனின் வீடுகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.
அவளுடைய தாழ்ப்பாள்கள் உடைக்கப்பட்டன.+
31 ஒரு அஞ்சல்காரன் இன்னொரு அஞ்சல்காரனிடமும்,
ஒரு தூதுவன் இன்னொரு தூதுவனிடமும் ஓடுகிறான்.
நகரம் எல்லா பக்கத்திலிருந்தும் கைப்பற்றப்பட்டது+ என்றும்,
32 ஆற்றுத்துறைகள்* கைப்பற்றப்பட்டன+ என்றும்,
நாணற்புல்* படகுகள் கொளுத்தப்பட்டன என்றும்,
வீரர்கள் பயந்து நடுங்குகிறார்கள் என்றும்
பாபிலோன் ராஜாவுக்கு அறிவிப்பதற்காக அவர்கள் ஓடுகிறார்கள்.”
33 இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்:
“பாபிலோன் மகள் ஒரு களத்துமேட்டைப் போல இருக்கிறாள்.
அவளை நன்றாக மிதிப்பதற்கு இதுதான் சமயம்.
ரொம்பச் சீக்கிரத்தில் அவளுடைய அறுவடைக் காலம் வந்துவிடும்.”
34 “பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சார் என்னை விழுங்கிவிட்டான்.+
என்னைக் குழப்பத்தில் தவிக்க வைத்துவிட்டான்.
என்னை ஒரு காலியான பாத்திரத்தைப் போல ஆக்கிவிட்டான்.
ஒரு பெரிய பாம்பு விழுங்குவது போல அவன் என்னை விழுங்கிவிட்டான்.+
என்னிடமிருந்த நல்ல பொருள்களால் தன்னுடைய வயிற்றை நிரப்பிவிட்டான்.
என்னைக் கழுவி ஊற்றிவிட்டான்.
35 ‘என்னையும் என் உடலையும் கொடுமைப்படுத்திய பழியை பாபிலோன் சுமக்கட்டும்’ என்று சீயோன் சொல்கிறாள்.+
‘என்னுடைய இரத்தத்தைச் சிந்திய பழியை கல்தேயர்கள் சுமக்கட்டும்’ என்று எருசலேம் சொல்கிறாள்.”
36 அதனால் யெகோவா சொல்வது இதுதான்:
அவளுடைய கடலையும் கிணறுகளையும் வற்றிப்போக வைப்பேன்.+
37 பாபிலோன் வெறும் கற்குவியலாகும்.+
அது நரிகள் தங்கும் இடமாகும்.+
அதற்குக் கோரமான முடிவு வரும்; அதைப் பார்த்து எல்லாரும் கேலி செய்வார்கள்.*
அங்கு மனுஷ நடமாட்டமே இல்லாமல் போகும்.+
38 எல்லாரும் இளம் சிங்கங்களைப் போல ஒன்றாகக் கர்ஜிப்பார்கள்.
சிங்கக் குட்டிகளைப் போல உறுமுவார்கள்.”
39 “அவர்கள் குஷியாக இருக்கும்போது நான் அவர்களுக்கு விருந்து வைப்பேன்.
அவர்களைக் குடிக்க வைத்து போதையில் மிதக்க வைப்பேன்.+
அவர்கள் ஒரேயடியாகத் தூங்கிவிடுவார்கள்.
எழுந்திருக்கவே மாட்டார்கள்”+ என்று யெகோவா சொல்கிறார்.
40 “செம்மறியாட்டுக் குட்டிகளையும், செம்மறியாட்டுக் கடாக்களையும், வெள்ளாட்டுக் கடாக்களையும் போல
அவர்களை நான் வெட்டுவதற்குக் கொண்டுபோவேன்.”
பாபிலோனுக்கு வந்த கோரமான முடிவைப் பார்த்து எல்லாரும் கதிகலங்குகிறார்களே!
42 கடல் பொங்கிவந்து பாபிலோனை மூழ்கடித்தது.
அதன் அலைகள் திரண்டு வந்து அவளை மூடிவிட்டன.
43 அவளுடைய நகரங்களுக்குக் கோரமான முடிவு வந்தது.
அவை தண்ணீர் இல்லாத பொட்டல் காடாகவும் பாலைவனமாகவும் ஆகிவிட்டன.
அங்கு யாரும் குடியிருக்க மாட்டார்கள். அங்கு மனுஷ நடமாட்டமே இருக்காது.+
மற்ற தேசங்களிலிருந்து இனி யாரும் அவனிடம் திரண்டுவர மாட்டார்கள்.
பாபிலோனின் மதில் விழுந்துவிடும்.+
45 என் ஜனங்களே, அவளைவிட்டு வெளியே வாருங்கள்!+
யெகோவாவின் கோபம் பற்றியெரிகிறது!+ தப்பித்து ஓடுங்கள்!+
46 தேசத்துக்கு வரப்போகிற செய்தியைக் கேட்டுப் பயந்து நடுங்காதீர்கள்.
ஒரு வருஷத்தில் அந்தச் செய்தி வரும்.
அடுத்த வருஷத்தில் இன்னொரு செய்தி வரும்.
தேசத்தில் வன்முறை நடப்பதையும், ஆட்சியாளர்கள் மோதிக்கொள்வதையும் பற்றிய செய்தியே அது.
47 இதோ, காலம் வருகிறது.
அப்போது, பாபிலோனின் சிலைகளை அழிப்பேன்.
அவளுடைய தேசத்துக்கு அவமானம் வரும்.
அவளுடைய ஜனங்கள் அங்கேயே வெட்டிச் சாய்க்கப்படுவார்கள்.+
48 அவளை அழிப்பவர்கள் வடக்கிலிருந்து வருவார்கள்.+
பாபிலோனின் அழிவைப் பார்த்து
வானமும் பூமியும் அவற்றில் உள்ளவையும் சந்தோஷமாகப் பாடும்”+ என்று யெகோவா சொல்கிறார்.
49 “பாபிலோன் இஸ்ரவேலர்களை வெட்டி வீழ்த்தியதோடு நிற்கவில்லை,+
உலகத்திலுள்ள எல்லா ஜனங்களையுமே தன்னுடைய தேசத்தில் வெட்டி வீழ்த்தினாள்.
50 வாளுக்குத் தப்பியவர்களே, நிற்காமல் ஓடுங்கள்!+
தூர தேசத்திலிருந்து யெகோவாவை நினைத்துப் பாருங்கள்.
எருசலேமைப் பற்றியும் யோசித்துப் பாருங்கள்.”+
51 “எங்களுக்கு அவமானமாக இருக்கிறது; எங்களைப் பழித்துப் பேசுகிறார்கள்.
எங்களால் தலைநிமிரவே முடியவில்லை.
மற்ற தேசத்து ஜனங்கள்* யெகோவாவின் ஆலயத்துக்கு வந்து அதன் பரிசுத்தமான இடங்களை அழித்துவிட்டார்கள்.”+
52 யெகோவா சொல்வது இதுதான்: “இதோ, காலம் வருகிறது.
அப்போது, அவளுடைய சிலைகளை அழிப்பேன்.
அவளுடைய தேசமெங்கும் குத்தப்பட்டுக் கிடக்கிறவர்கள் முனகுவார்கள்.”+
53 “பாபிலோன் வானம்வரை ஏறிப்போனாலும்,+
அவளுடைய உயரமான கோட்டைகளைப் பலப்படுத்தினாலும்,
அவளை அழிப்பதற்கு நான் ஆட்களை அனுப்புவேன்”+ என்று யெகோவா சொல்கிறார்.
54 “கேளுங்கள்! பாபிலோனில் அலறல் சத்தம் கேட்கிறது!+
கல்தேயர்களின் தேசத்தில் பேரழிவின் சத்தம் கேட்கிறது!+
55 யெகோவா பாபிலோனை அழிக்கிறார்.
அவளுடைய சத்தமான குரலை அவர் அடக்கிவிடுவார்.
அவளுடைய எதிரிகள் போடுகிற சத்தம் கடல் அலைகளின் சத்தத்தைப் போல இருக்கும்.
அவர்களுடைய குரல் எல்லாருக்கும் கேட்கும்.
56 ஏனென்றால், அழிக்கிறவன் பாபிலோனுக்கு எதிராக வருவான்.+
அவளுடைய வீரர்களைப் பிடித்துக்கொண்டு போவான்.+
அவர்களுடைய வில்லை உடைப்பான்.
ஏனென்றால், யெகோவா பழிதீர்க்கும் கடவுள்.+
அவர் கண்டிப்பாகப் பழிவாங்குவார்.+
57 நான் அவளுடைய அதிகாரிகளையும் துணை அதிகாரிகளையும் ஞானிகளையும் ஆளுநர்களையும் போர்வீரர்களையும்
போதை ஏறுமளவுக்குக் குடிக்க வைப்பேன்.+
அவர்கள் ஒரேயடியாகத் தூங்கிவிடுவார்கள்.
எழுந்திருக்கவே மாட்டார்கள்”+ என்று ராஜா சொல்கிறார்.
பரலோகப் படைகளின் யெகோவா என்பதுதான் அவருடைய பெயர்.
58 பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்:
“பாபிலோனின் மதில் எவ்வளவு அகலமாக இருந்தாலும் அது தரைமட்டமாக்கப்படும்.+
அவளுடைய நுழைவாசல்கள் எவ்வளவு உயரமாக இருந்தாலும் அது சுட்டெரிக்கப்படும்.
ஜனங்களின் உழைப்பெல்லாம் வீணாகிப்போகும்.
தேசங்கள் படும் பாடுகளெல்லாம் நெருப்புக்குத்தான் பலியாகும்.”+
59 சிதேக்கியா யூதாவை ஆட்சி செய்த நான்காவது வருஷத்தில்தான் மாசெயாவின் மகனான நேரியாவின்+ மகன் செராயாவுக்கு எரேமியா தீர்க்கதரிசி இந்தக் கட்டளையைக் கொடுத்தார். அப்போது, செராயா சிதேக்கியாவுடன் சேர்ந்து பாபிலோனுக்குப் போயிருந்தார். ராஜாவின் அலுவல்களைக் கவனித்துக்கொள்ளும் அதிகாரியாக செராயா இருந்தார். 60 பாபிலோனுக்கு வரவிருந்த தண்டனைகளைப் பற்றிய இந்த எல்லா வார்த்தைகளையும் எரேமியா ஒரு புத்தகத்தில் எழுதினார். 61 பின்பு எரேமியா செராயாவிடம், “நீங்கள் போய் பாபிலோனைப் பார்க்கும்போது இந்த எல்லா வார்த்தைகளையும் சத்தமாக வாசிக்க வேண்டும். 62 அதன்பின், ‘யெகோவாவே, இந்த நகரம் அழிக்கப்பட்டு மனுஷர்களோ மிருகங்களோ இல்லாதபடி காலமெல்லாம் பாழாய்க் கிடக்கும்+ என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்களே’ என்று சொல்ல வேண்டும். 63 இந்தப் புத்தகத்திலிருந்து வாசித்து முடித்த பின்பு, அதனோடு ஒரு கல்லைக் கட்டி, யூப்ரடிஸ்* ஆற்றின் நடுவே எறிந்துவிட வேண்டும். 64 பின்பு, ‘இப்படித்தான் பாபிலோன் மூழ்கிப்போகும். அவள் மறுபடியும் தலைதூக்க மாட்டாள்.+ ஏனென்றால் கடவுள் அவளைத் தண்டிக்கப்போகிறார். அவளுடைய ஜனங்கள் களைத்துப்போவார்கள்’+ என்று சொல்ல வேண்டும்” என்றார்.
எரேமியாவின் வார்த்தைகள் இத்துடன் முடிகின்றன.