பிலிப்பியருக்குக் கடிதம்
3 கடைசியாக, என் சகோதரர்களே, நம் எஜமானுடைய சேவையில் தொடர்ந்து சந்தோஷமாக இருங்கள்.+ எழுதிய விஷயங்களையே எழுதுவதில் எனக்குக் கஷ்டமில்லை, உங்களுடைய பாதுகாப்புக்காகத்தான் எழுதுகிறேன்.
2 அருவருப்பாக நடக்கிறவர்களை* குறித்து எச்சரிக்கையாக இருங்கள், தீமை செய்கிறவர்களைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள், விருத்தசேதனம் செய்கிறவர்களை*+ குறித்து எச்சரிக்கையாக இருங்கள். 3 ஏனென்றால், நாமே உண்மையான விருத்தசேதனம்* செய்தவர்கள்,+ கடவுளுடைய சக்தியால் பரிசுத்த சேவை செய்கிறவர்கள், கிறிஸ்து இயேசுவைக் குறித்துப் பெருமைப்படுகிறவர்கள்,+ மனிதர்களுடைய காரியங்கள்மேல் நம்பிக்கை வைக்காதவர்கள். 4 அப்படி மனிதர்களுடைய காரியங்கள்மேல் நம்பிக்கை வைக்க யாருக்காவது காரணங்கள் இருந்தால், அது நிச்சயம் நானாகத்தான் இருப்பேன்.
மனிதர்களுடைய காரியங்கள்மேல் நம்பிக்கை வைக்க காரணங்கள் இருப்பதாக யாராவது நினைத்தால், அவரைவிட எனக்குத்தான் அதிகமான காரணங்கள் இருக்கின்றன: 5 நான் எட்டாம் நாளில் விருத்தசேதனம் செய்யப்பட்டவன்,+ இஸ்ரவேல் தேசத்தைச் சேர்ந்தவன், பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன், எபிரெயர்களுக்குப் பிறந்த எபிரெயன்,+ திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் பரிசேயன்;+ 6 பக்திவைராக்கியமாக இருந்ததால் சபையைத் துன்புறுத்தியவன்,+ திருச்சட்டத்தின் நீதியைப் பொறுத்ததில் குற்றமற்றவனாக இருந்தவன். 7 ஆனாலும், நான் லாபம் என்று நினைத்தவற்றை கிறிஸ்துவுக்காக நஷ்டம் என்று நினைக்கிறேன்.*+ 8 உண்மையில், என் எஜமானாகிய கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவுதான் ஈடில்லாத செல்வம் என்பதால், மற்ற எல்லாவற்றையும் நஷ்டம் என்று நினைக்கிறேன். அவருக்காக எல்லா நஷ்டத்தையும் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். கிறிஸ்துவை நான் லாபமாக்கிக்கொண்டு அவரோடு ஒன்றுபட்டிருப்பதற்காக அவற்றையெல்லாம் வெறும் குப்பையாக நினைக்கிறேன். 9 திருச்சட்டத்தின் அடிப்படையில் சுயநீதிமானாக இருக்க விரும்பாமல், கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தின் அடிப்படையில்+ கடவுளால் நீதிமானாக ஏற்றுக்கொள்ளப்படவே விரும்புகிறேன்.+ 10 நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும்+ தெரிந்துகொண்டு, அவரைப் போலவே பாடுகள் பட்டு,+ அவரைப் போலவே இறந்து,+ 11 எப்படியாவது முந்தின உயிர்த்தெழுதலை+ அடைவதற்கு முயற்சி செய்கிறேன்.
12 நான் ஏற்கெனவே அதைப் பெற்றுவிட்டேன் என்றோ, ஏற்கெனவே பரிபூரணம் அடைந்துவிட்டேன் என்றோ சொல்லவில்லை; கிறிஸ்து இயேசு எதற்காக என்னைத் தேர்ந்தெடுத்தாரோ+ அதை அடைவதற்காகவே முயற்சி செய்கிறேன்.+ 13 சகோதரர்களே, அதை அடைந்துவிட்டேன் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்: பின்னால் இருப்பவற்றை மறந்தபடியே,+ முன்னால் இருப்பவற்றை எட்டிப்பிடிப்பதற்காக ஓடுகிறேன்,+ 14 கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் கொடுக்கிற பரலோக அழைப்பு+ என்ற பரிசைப்+ பெற்றுக்கொள்ளும் லட்சியத்தோடு ஓடுகிறேன். 15 நம்மில் முதிர்ச்சியுள்ள எல்லாரும்+ இதே மனப்பான்மையோடு இருக்க வேண்டும்; எதிலாவது உங்களுக்கு மாறுபட்ட மனப்பான்மை இருந்தால், சரியான மனப்பான்மை எதுவென்று கடவுள் உங்களுக்கு வெளிப்படுத்துவார். 16 முன்னேற்றப் பாதையில் நாம் எதுவரை போயிருந்தாலும் சரி, அதே பாதையில்* தொடர்ந்து சீராக நடக்க வேண்டும்.
17 சகோதரர்களே, நீங்கள் எல்லாரும் என்னைப் பின்பற்றி நடங்கள்;+ நாங்கள் வைத்த முன்மாதிரியின்படி நடக்கிறவர்களைக் கூர்ந்து கவனியுங்கள். 18 நிறைய பேர் கிறிஸ்துவுடைய சித்திரவதைக் கம்பத்துக்கு* விரோதிகளாக நடந்துகொள்கிறார்கள்; அவர்களைப் பற்றி உங்களிடம் நிறைய தடவை சொல்லியிருக்கிறேன், இப்போதும் கண்ணீரோடு சொல்கிறேன். 19 அழிவுதான் அவர்களுடைய முடிவு; வயிறுதான் அவர்களுடைய கடவுள். வெட்கப்பட வேண்டிய விஷயங்களை நினைத்து அவர்கள் பெருமைப்படுகிறார்கள்; பூமிக்குரிய காரியங்களிலேயே சிந்தனையாக இருக்கிறார்கள்.+ 20 ஆனால், நம்முடைய குடியுரிமை+ பரலோகத்தில் இருக்கிறது;+ அங்கே இருக்கிற எஜமானாகிய இயேசு கிறிஸ்து என்ற மீட்பருக்காக நாம் ஆவலோடு காத்திருக்கிறோம்.+ 21 எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக,+ அவர் தன்னுடைய வல்லமையால் நம்முடைய அற்பமான உடலைத் தன்னுடைய மகிமையான உடலைப் போல் மாற்றுவார்.+