மத்தேயு எழுதியது
15 பின்பு, எருசலேமிலிருந்து பரிசேயர்களும் வேத அறிஞர்களும் இயேசுவிடம் வந்து,+ 2 “உன்னுடைய சீஷர்கள் ஏன் முன்னோர்களின் பாரம்பரியத்தை மீறுகிறார்கள்? சாப்பிடுவதற்கு முன்னால் அவர்கள் கை கழுவுவதில்லையே”+ என்று சொன்னார்கள்.
3 அதற்கு அவர், “உங்களுடைய பாரம்பரியத்தால் ஏன் கடவுளுடைய கட்டளையை மீறுகிறீர்கள்?+ 4 உதாரணமாக, ‘உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டும்’+ என்றும், ‘அப்பாவையோ அம்மாவையோ கேவலமாகப் பேசுகிற* எவனும் கொல்லப்பட* வேண்டும்’+ என்றும் கடவுள் சொன்னார். 5 ஆனால், ‘ஒருவன் தன் அப்பாவிடமோ அம்மாவிடமோ, “என்னிடம் இருப்பதையெல்லாம் ஏற்கெனவே கடவுளுக்கு அர்ப்பணித்துவிட்டேன், அதனால் உங்களுக்கு என்னால் உதவி செய்ய முடியாது”+ என்று சொல்லிவிட்டால், 6 அதன்பின் அவன் தன்னுடைய அப்பாவுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டியதே இல்லை’ என்று நீங்கள் சொல்கிறீர்கள். இப்படி, உங்களுடைய பாரம்பரியத்தால் கடவுளுடைய வார்த்தையை மதிப்பற்றதாக்கிவிடுகிறீர்கள்.+ 7 வெளிவேஷக்காரர்களே, உங்களைப் பற்றி ஏசாயா சரியாகத்தான் இப்படித் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறார்:+ 8 ‘இந்த ஜனங்கள் என்னை உதட்டளவில் புகழ்கிறார்கள். ஆனால், இவர்களுடைய இதயம் என்னைவிட்டுத் தூரமாக இருக்கிறது. 9 இவர்கள் என்னை வணங்குவது வீண், ஏனென்றால் மனுஷர்களுடைய கோட்பாடுகளைத்தான் இவர்கள் கற்றுக்கொடுக்கிறார்கள்’”+ என்று சொன்னார். 10 பின்பு, கூட்டத்தாரைத் தன் பக்கத்தில் வரச் சொல்லி, “நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டு, அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.+ 11 ஒரு மனுஷனுடைய வாய்க்குள் போகிற எதுவும் அவனைத் தீட்டுப்படுத்தாது; அவனுடைய வாயிலிருந்து வெளியே வருவதுதான் அவனைத் தீட்டுப்படுத்தும்”+ என்று சொன்னார்.
12 பின்பு சீஷர்கள் அவரிடம் வந்து, “நீங்கள் சொன்னதைக் கேட்டு பரிசேயர்கள் கோபமாக இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?”+ என்று கேட்டார்கள். 13 அதற்கு அவர், “என் பரலோகத் தகப்பன் நடாத எந்தச் செடியும் வேரோடு பிடுங்கப்படும். 14 அவர்களை விடுங்கள். அவர்கள் குருட்டு வழிகாட்டிகள். குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இரண்டு பேருமே குழியில்தான்* விழுவார்கள்”+ என்று சொன்னார். 15 அப்போது பேதுரு அவரிடம், “அந்த உவமையை எங்களுக்குக் கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்கள்”+ என்று கேட்டார். 16 அதற்கு அவர், “நீங்களுமா இன்னும் புரிந்துகொள்ளவில்லை?+ 17 ஒருவனுடைய வாய்க்குள் போகிற எல்லாமே வயிற்றுக்குள் போய் பின்பு கழிப்பிடத்துக்குப் போய்விடுகிறது என்பது உங்களுக்குத் தெரியாதா? 18 ஆனால், வாயிலிருந்து வருவதெல்லாம் இதயத்திலிருந்து வருகின்றன; அவைதான் ஒரு மனுஷனைத் தீட்டுப்படுத்துகின்றன.+ 19 உதாரணமாக, பொல்லாத யோசனைகள்,+ அதாவது கொலை, மணத்துணைக்குத் துரோகம், பாலியல் முறைகேடு, திருட்டு, பொய் சாட்சி, நிந்தனை என எல்லா தீமைகளும் இதயத்திலிருந்தே வருகின்றன. 20 இவைதான் ஒரு மனுஷனைத் தீட்டுப்படுத்துகின்றன; கை கழுவாமல் சாப்பிடுவது அவனைத் தீட்டுப்படுத்தாது” என்று சொன்னார்.
21 பின்பு, இயேசு அங்கிருந்து புறப்பட்டு தீரு, சீதோன் பகுதிக்குப் போனார்.+ 22 அந்தப் பகுதியைச் சேர்ந்த பெனிக்கேயப் பெண் ஒருத்தி அவரிடம் வந்து, “எஜமானே, தாவீதின் மகனே, எனக்கு இரக்கம் காட்டுங்கள்; என்னுடைய மகளைப் பேய் பிடித்து ஆட்டுகிறது”+ என்று கதறினாள். 23 ஆனால், இயேசு அவளிடம் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அதனால், அவருடைய சீஷர்கள் அவரிடம் வந்து, “இவள் நம் பின்னால் கதறிக்கொண்டே வருகிறாள், இவளை அனுப்பிவிடுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்கள். 24 அதற்கு அவர், “கடவுள் என்னை எல்லா மக்களிடமும் அனுப்பவில்லை, வழிதவறிப்போன ஆடுகளைப் போல் இருக்கிற இஸ்ரவேல் மக்களிடம்தான் அனுப்பியிருக்கிறார்”+ என்று சொன்னார். 25 அப்போது, அந்தப் பெண் அவர் முன்னால் மண்டிபோட்டு, “ஐயா, எனக்கு உதவி செய்யுங்கள்!” என்று கேட்டாள். 26 அதற்கு அவர், “பிள்ளைகளின் ரொட்டியை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது சரியல்ல” என்று சொன்னார். 27 அவளோ, “உண்மைதான், ஐயா; ஆனால், எஜமானுடைய மேஜையிலிருந்து விழுகிற துணுக்குகளை நாய்க்குட்டிகள் சாப்பிடுமே”+ என்று சொன்னாள். 28 அப்போது இயேசு, “பெண்ணே, உனக்கு எவ்வளவு விசுவாசம்! நீ விரும்புகிறபடியே நடக்கட்டும்” என்று சொன்னார். அந்த நொடியே அவளுடைய மகள் குணமானாள்.
29 இயேசு அங்கிருந்து புறப்பட்டு கலிலேயா கடலுக்குப் பக்கத்தில் வந்தார்;+ பின்பு, ஒரு மலைமேல் ஏறி அங்கே உட்கார்ந்தார். 30 அப்போது, மக்கள் கூட்டம் கூட்டமாக அவரிடம் வந்தார்கள்; நடக்க முடியாதவர்களையும் கைகால் ஊனமானவர்களையும் பார்வை இல்லாதவர்களையும் பேச முடியாதவர்களையும் இன்னும் பல நோயாளிகளையும் அவருடைய காலடியில் கொண்டுவந்து விட்டார்கள்; அவர்களை அவர் குணமாக்கினார்.+ 31 பேச முடியாதவர்கள் பேசுவதையும், கைகால் ஊனமானவர்கள் குணமானதையும், நடக்க முடியாதவர்கள் நடப்பதையும், பார்க்க முடியாதவர்கள் பார்ப்பதையும் கூட்டத்தார் கண்டு பிரமித்துப்போய், இஸ்ரவேலின் கடவுளை மகிமைப்படுத்தினார்கள்.+
32 பின்பு, இயேசு தன்னுடைய சீஷர்களைக் கூப்பிட்டு, “இந்த மக்களைப் பார்க்கும்போது என் மனம் உருகுகிறது;+ இவர்கள் மூன்று நாட்களாக என்னோடு இருக்கிறார்கள், சாப்பிடுவதற்கும் இவர்களிடம் ஒன்றும் இல்லை. இவர்களைப் பட்டினியாக* அனுப்ப எனக்கு விருப்பமில்லை; அப்படி அனுப்பினால் அவர்கள் ஒருவேளை வழியிலேயே மயங்கி விழுந்துவிடலாம்”+ என்று சொன்னார். 33 அதற்கு சீஷர்கள், “ஒதுக்குப்புறமான இந்த இடத்தில் இத்தனை பேருக்குத் தேவையான ரொட்டிகளை எங்கிருந்து வாங்க முடியும்?”+ என்று கேட்டார்கள். 34 அப்போது இயேசு, “உங்களிடம் எத்தனை ரொட்டிகள் இருக்கின்றன?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஏழு ரொட்டிகளும் சில சிறிய மீன்களும் இருக்கின்றன” என்று சொன்னார்கள். 35 அப்போது, தரையில் உட்காரும்படி கூட்டத்தாரிடம் அவர் சொன்னார்; 36 பின்பு, அந்த ஏழு ரொட்டிகளையும் மீன்களையும் எடுத்து, கடவுளுக்கு நன்றி சொல்லி, அவற்றைப் பிட்டு, சீஷர்களிடம் கொடுத்தார். சீஷர்கள் கூட்டத்தாருக்குக் கொடுத்தார்கள்.+ 37 அவர்கள் எல்லாரும் திருப்தியாகச் சாப்பிட்டார்கள்; அதன் பின்பு, மீதியான ரொட்டித் துண்டுகளை ஏழு பெரிய கூடைகள் நிறைய சேகரித்தார்கள்.+ 38 இத்தனைக்கும், பெண்களையும் சின்னப் பிள்ளைகளையும் தவிர, 4,000 ஆண்கள் சாப்பிட்டிருந்தார்கள். 39 கடைசியில், அவர் கூட்டத்தாரை அனுப்பிவிட்டு மக்தலா என்ற பகுதிக்குப் படகில் ஏறிப்போனார்.+