எசேக்கியேல்
44 கிழக்கே பார்த்தபடி இருந்த ஆலயத்தின் வெளிப்பிரகார வாசலுக்கு அவர் என்னை மறுபடியும் கொண்டுவந்தார்.+ அதன் நுழைவாசல் மூடப்பட்டிருந்தது.+ 2 அப்போது யெகோவா என்னிடம், “அந்த நுழைவாசல் எப்போதும் மூடப்பட்டிருக்க வேண்டும். அதைத் திறக்கக் கூடாது. எந்த மனுஷனும் அந்த நுழைவாசல் வழியாக வரக் கூடாது. ஏனென்றால், இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா அதன் வழியாக வந்திருக்கிறார்.+ அதனால் அது மூடப்பட்டே இருக்க வேண்டும். 3 ஆனாலும், தலைவராக இருக்கிறவர் யெகோவாவுக்கு முன்னால் உணவு சாப்பிடுவதற்காக அங்கே வந்து உட்காருவார்.+ அவர் தலைவராக இருப்பதால் நுழைவு மண்டபத்தின் வழியாக வந்துபோவார்”+ என்றார்.
4 பின்பு, அவர் என்னை வடக்கு நுழைவாசல் வழியாக ஆலயத்தின் முன்பகுதிக்குக் கொண்டுவந்தார். யெகோவாவின் ஆலயம் யெகோவாவின் மகிமையால் நிரம்பியிருந்ததை நான் பார்த்தேன்.+ அதனால் அப்படியே சாஷ்டாங்கமாக விழுந்தேன்.+ 5 அப்போது, யெகோவா என்னிடம் இப்படிச் சொன்னார்: “மனிதகுமாரனே, யெகோவாவின் ஆலயத்தைப் பற்றிய எல்லா சட்டதிட்டங்களையும் நான் சொல்லும்போது நீ நன்றாகக் கேள், உன்னிப்பாகக் கவனி. ஆலயத்துக்கு உள்ளே போகிற வழிகளையும் பரிசுத்தமான இடத்திலிருந்து வெளியே வருகிற வழிகளையும் பற்றி நான் சொல்வதைக் கவனித்துக் கேள்.+ 6 எனக்கு அடங்கி நடக்காத இஸ்ரவேல் ஜனங்களிடம் இப்படிச் சொல்: ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “இஸ்ரவேல் ஜனங்களே, நீங்கள் செய்கிற அருவருப்பான காரியங்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது! 7 உடலிலும் உள்ளத்திலும் விருத்தசேதனம் செய்யாத மற்ற தேசத்து ஜனங்களை என்னுடைய ஆலயத்துக்குள் கூட்டிக்கொண்டு வருகிறீர்கள். அவர்கள் அதைத் தீட்டுப்படுத்துகிறார்கள். நீங்கள் எனக்கு உணவையும் கொழுப்பையும் இரத்தத்தையும் செலுத்துகிறீர்கள். அதேசமயத்தில், அருவருப்பான காரியங்களைச் செய்து என்னுடைய ஒப்பந்தத்தை மீறுகிறீர்கள். 8 எனக்குப் பரிசுத்தமாக இருக்கிறவற்றை நீங்கள் அலட்சியப்படுத்துகிறீர்கள்.+ என்னுடைய ஆலய வேலைகளை மற்றவர்களுக்குக் கொடுக்கிறீர்கள்.”’
9 ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “உடலிலும் உள்ளத்திலும் விருத்தசேதனம் செய்யாத மற்ற தேசத்து ஜனங்கள் யாரும் என்னுடைய ஆலயத்துக்குள் வரக் கூடாது.”’
10 ‘இஸ்ரவேலர்கள் என்னைவிட்டு விலகி அருவருப்பான* சிலைகளை வணங்க ஆரம்பித்தபோது லேவியர்களும் என்னைவிட்டு விலகினார்கள்.+ அந்தக் குற்றத்துக்கான விளைவுகளை அவர்கள் அனுபவிப்பார்கள். 11 அதன்பின், என்னுடைய ஆலயத்தில் சேவை செய்வார்கள். ஆலய நுழைவாசல்களைக் கண்காணித்து,+ ஆலய வேலைகளைச் செய்வார்கள். தகன பலிகளுக்காகவும் மற்ற பலிகளுக்காகவும் ஜனங்கள் கொண்டுவருகிற மிருகங்களை அவர்கள் வெட்டுவார்கள். ஜனங்கள்முன் நின்று அவர்களுக்குச் சேவை செய்வார்கள். 12 முன்பு இஸ்ரவேல் ஜனங்களின் அருவருப்பான சிலைகளுக்குமுன் நின்று அவர்களுக்குச் சேவை செய்து அவர்களைப் பாவக்குழியில் விழ வைத்ததால்,+ அந்தக் குற்றத்துக்கான விளைவுகளை அவர்கள் சந்திப்பார்கள். இதை என்மேல் ஆணையாகச் சொல்கிறேன்’ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார். 13 ‘அவர்கள் என்னுடைய சன்னிதியில் குருமார்களாகச் சேவை செய்ய மாட்டார்கள். பரிசுத்தமான அல்லது மகா பரிசுத்தமான எதையும் நெருங்க மாட்டார்கள். அவர்கள் செய்த அருவருப்பான காரியங்களுக்காக அவமானம் அடைவார்கள். 14 ஆனாலும், ஆலயத்தைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை அவர்களுக்குக் கொடுப்பேன். ஆலய வேலைகளை அவர்கள் மேற்பார்வை செய்வார்கள். அங்கு செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்வார்கள்.’+
15 ‘இஸ்ரவேலர்கள் என்னைவிட்டு விலகிப்போன சமயத்தில்+ சாதோக்கின் வம்சத்தைச் சேர்ந்த லேவியர்களான குருமார்கள்+ என்னுடைய ஆலய வேலைகளைக் கவனித்துக்கொண்டார்கள். அவர்கள்தான் என்னுடைய சன்னிதியில் தொடர்ந்து சேவை செய்வார்கள். எனக்கு முன்னால் நின்று கொழுப்பையும்+ இரத்தத்தையும் செலுத்துவார்கள்’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார். 16 ‘அவர்கள்தான் என்னுடைய ஆலயத்துக்குள் வந்து, என்னுடைய பலிபீடத்தில் எனக்குச் சேவை செய்வார்கள்.+ எனக்குச் செய்ய வேண்டிய எல்லா வேலைகளையும் செய்வார்கள்.+
17 உட்பிரகாரத்தின் நுழைவாசல்களுக்கு வந்ததும் அவர்கள் நாரிழை* அங்கிகளைப் போட்டுக்கொள்ள வேண்டும்.+ உட்பிரகாரத்தின் நுழைவாசல்களிலோ அதற்கு உள்ளேயோ சேவை செய்யும்போது அவர்கள் கம்பளி உடைகளைப் போட்டுக்கொள்ளக் கூடாது. 18 நாரிழையால் செய்த தலைப்பாகையையும், நாரிழையால் செய்த நீளமான கால்சட்டைகளையும் போட்டுக்கொள்ள வேண்டும்.+ வியர்க்க வைக்கும் எந்தத் துணியையும் அவர்கள் போட்டுக்கொள்ளக் கூடாது. 19 ஜனங்கள் இருக்கும் வெளிப்பிரகாரத்துக்கு அவர்கள் போகும்போது, பரிசுத்த சேவைக்கான உடைகளைக் கழற்றிவிட வேண்டும்.+ பரிசுத்தமான சாப்பாட்டு அறைகளில் அவற்றை வைத்துவிட்டு,+ வேறு உடைகளைப் போட்டுக்கொள்ள வேண்டும். மற்ற ஜனங்கள் எதேச்சையாக அந்த உடைகளினால் பரிசுத்தமாகிவிடாதபடிக்கு அப்படிச் செய்ய வேண்டும். 20 குருமார்கள் தங்களுடைய தலைமுடியை நீளமாக வளர்க்காமல், அதை வெட்டிவிட வேண்டும். ஆனால், தலையை மொட்டையடிக்கக் கூடாது.+ 21 அவர்கள் திராட்சமதுவைக் குடித்துவிட்டு உட்பிரகாரத்துக்குள் வரக் கூடாது.+ 22 விதவைப் பெண்ணையோ விவாகரத்தான பெண்ணையோ அவர்கள் கல்யாணம் செய்துகொள்ளக் கூடாது.+ ஆனால், இஸ்ரவேல் ஜனங்களிலுள்ள ஒரு கன்னிப் பெண்ணையோ, குருமார்களில் ஒருவருக்கு மனைவியாக இருந்த விதவையையோ கல்யாணம் செய்துகொள்ளலாம்.’+
23 ‘பரிசுத்தமான காரியங்களுக்கும் சாதாரணமான காரியங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை அவர்கள் என் ஜனங்களுக்குக் கற்றுத்தர வேண்டும். சுத்தம் எது, அசுத்தம் எது என்று சொல்லிக்கொடுக்க வேண்டும்.+ 24 வழக்குகளில் நடுவர்களாக இருக்க வேண்டும்.+ என்னுடைய நீதித்தீர்ப்புகளின்படி தீர்ப்பு சொல்ல வேண்டும்.+ என்னுடைய பண்டிகைகள் சம்பந்தப்பட்ட எல்லா சட்டதிட்டங்களையும் கடைப்பிடித்து,+ என்னுடைய ஓய்வுநாட்களைப் புனிதப்படுத்த வேண்டும். 25 இறந்தவர்களுடைய உடலுக்குப் பக்கத்தில் அவர்கள் போகக் கூடாது. அப்படிப் போனால் அவர்கள் தீட்டுப்படுவார்கள். ஆனாலும் அவர்களுடைய அப்பா, அம்மா, மகன், மகள், சகோதரன், அல்லது கல்யாணமாகாத சகோதரி இறந்துவிட்டால் அவர்களுக்காகத் தங்களைத் தீட்டுப்படுத்திக்கொள்ளலாம்.+ 26 அவர்கள் தூய்மைப்படுத்தப்பட்டு ஏழு நாட்களுக்குப் பின்புதான் பழையபடி ஆலயத்தில் சேவை செய்ய வேண்டும். 27 ஆலய சேவைக்காக உட்பிரகாரத்தில் உள்ள பரிசுத்தமான இடத்துக்குப் போகும் நாளிலே அவர்கள் தங்களுக்காகப் பாவப் பரிகாரப் பலியைச் செலுத்த வேண்டும்’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.
28 ‘நான்தான் அவர்களுடைய சொத்து.+ இஸ்ரவேலில் அவர்களுக்கு வேறெந்தச் சொத்தும் நீங்கள் கொடுக்கக் கூடாது. ஏனென்றால், நான்தான் அவர்களுடைய சொத்து. 29 உணவுக் காணிக்கையையும்,+ பாவப் பரிகாரப் பலியையும், குற்ற நிவாரண பலியையும் அவர்கள் சாப்பிட வேண்டும்.+ இஸ்ரவேலில் கடவுளுக்காக அர்ப்பணிக்கப்படுகிற எல்லாமே அவர்களுக்குச் சொந்தமாகும்.+ 30 முதல் விளைச்சலில் மிகச் சிறந்ததும், நீங்கள் காணிக்கையாகக் கொடுக்கிற எல்லா பொருள்களும் குருமார்களுக்குத்தான் போய்ச் சேரும்.+ உங்களுடைய முதல் விளைச்சலின் முதல் மாவை* குருமார்களுக்குக் கொடுக்க வேண்டும்.+ அதனால், உங்கள் குடும்பத்தாருக்கு ஆசீர்வாதம் கிடைக்கும்.+ 31 தானாகச் செத்துப்போன அல்லது இன்னொரு மிருகத்தால் கடித்துக் குதறிப்போடப்பட்ட எந்தப் பறவையையும் மிருகத்தையும் குருமார்கள் சாப்பிடக் கூடாது.’”+