யோவானுக்குக் கிடைத்த வெளிப்படுத்துதல்
4 இதற்குப் பின்பு நான் பார்த்தபோது, இதோ! பரலோகத்தின் கதவு திறந்திருந்தது. முதலில் நான் கேட்ட குரல் எக்காளம்போல் முழங்கியது. அது என்னிடம், “இங்கே ஏறி வா, நடக்கப்போகும் காரியங்களை நான் உனக்குக் காட்டுகிறேன்” என்று சொன்னது. 2 உடனடியாகக் கடவுளுடைய சக்தி என்மேல் வந்தது. இதோ! பரலோகத்தில் ஒரு சிம்மாசனம் இருந்தது; அந்தச் சிம்மாசனத்தில் ஒருவர் உட்கார்ந்திருந்தார்.+ 3 அவருடைய தோற்றம் சூரியகாந்தக் கல்+ போலவும் சுநீரம்* போலவும் இருந்தது. சிம்மாசனத்தைச் சுற்றி ஒரு வானவில் இருந்தது. அது பார்ப்பதற்கு மரகதம்போல் இருந்தது.+
4 அந்தச் சிம்மாசனத்தைச் சுற்றி 24 சிம்மாசனங்கள் இருந்தன. அந்தச் சிம்மாசனங்களில் 24 மூப்பர்கள்+ உட்கார்ந்திருந்தார்கள். இவர்கள் வெள்ளை உடைகளைப் போட்டுக்கொண்டு, தலையில் தங்கக் கிரீடங்களைச் சூடியிருந்தார்கள். 5 அந்தச் சிம்மாசனத்திலிருந்து மின்னல்களும்+ குரல்களும் இடிமுழக்கங்களும்+ வந்தன. சிம்மாசனத்துக்கு முன்னால் ஏழு பெரிய விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. இவை கடவுளுடைய ஏழு சக்திகளைக் குறிக்கின்றன.+ 6 அதோடு, சிம்மாசனத்துக்கு முன்னால் பளிங்கு போன்ற கண்ணாடிக் கடல்+ இருந்தது.
சிம்மாசனத்தின் நடுவிலும்* சிம்மாசனத்தைச் சுற்றிலும் நான்கு ஜீவன்கள் இருந்தன.+ அந்த ஜீவன்களின் முன்பக்கமும் பின்பக்கமும் கண்களால் நிறைந்திருந்தன. 7 முதலாவது ஜீவன் சிங்கத்தைப் போலவும்,+ இரண்டாவது ஜீவன் இளம் காளையைப் போலவும்,+ மூன்றாவது ஜீவன்+ மனித முகத்தைப் போன்ற முகமுள்ளதாகவும் நான்காவது ஜீவன்+ பறக்கிற கழுகைப் போலவும்+ இருந்தது. 8 அந்த நான்கு ஜீவன்கள் ஒவ்வொன்றுக்கும் ஆறு சிறகுகள் இருந்தன. சிறகுகள் முழுவதிலும் அவற்றின் உள்பக்கத்திலும் கண்கள் இருந்தன.+ அவை, “இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமான+ சர்வவல்லமையுள்ள கடவுளாகிய யெகோவா* பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்”+ என்று இரவு பகலாகத் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தன.
9 சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்தவருக்கு, அதாவது என்றென்றும் வாழ்கிறவருக்கு,+ அந்த ஜீவன்கள் மகிமையும் மாண்பும் நன்றியும் செலுத்தியபோதெல்லாம், 10 இருபத்து நான்கு மூப்பர்களும்+ சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்தவருக்கு முன்னால் விழுந்து, என்றென்றும் வாழ்கிற அவரை வணங்கினார்கள். அதோடு, தங்கள் கிரீடங்களைக் கழற்றி சிம்மாசனத்துக்கு முன்னால் வைத்துவிட்டு, 11 “எங்கள் கடவுளாகிய யெகோவாவே,* நீங்கள் மகிமையும்+ மாண்பும்+ வல்லமையும்+ பெற்றுக்கொள்ளத் தகுதியானவர். ஏனென்றால், நீங்கள்தான் எல்லாவற்றையும் படைத்தீர்கள்,+ உங்களுடைய விருப்பத்தின்படியே* அவை உண்டாயின, படைக்கப்பட்டன” என்று சொன்னார்கள்.