பரலோகக் குடியுரிமையுடைய கிறிஸ்தவ சாட்சிகள்
“நம்முடைய குடியிருப்போ [“குடியுரிமையோ,” NW] பரலோகத்திலிருக்கிறது.” —பிலிப்பியர் 3:20.
1. சில மானிடர்களைக் குறித்து யெகோவா என்ன அதிசயமான நோக்கத்தைக் கொண்டிருக்கிறார்?
மானிடர்களாகப் பிறந்திருக்கும் நபர்கள் பரலோகத்தில் ராஜாக்களாகவும் ஆசாரியர்களாகவும் தேவதூதர்கள் மீதும்கூட ஆட்சிசெய்வர். (1 கொரிந்தியர் 6:2, 3; வெளிப்படுத்துதல் 20:6) என்னே வியப்பூட்டும் சத்தியம் அது! இருந்தபோதிலும், யெகோவா அதைச் செய்யப்போவதாக நோக்கம் கொண்டிருந்தார், அவர் அதைத் தம்முடைய ஒரேபேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் நிறைவேற்றுகிறார். ஏன் நம்முடைய சிருஷ்டிகர் அப்படிப்பட்ட ஒரு காரியத்தைச் செய்கிறார்? அதைப் பற்றிய அறிவு இன்று ஒரு கிறிஸ்தவனை எவ்வாறு பாதிக்க வேண்டும்? இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பைபிள் எவ்வாறு பதிலளிக்கிறது என்பதை நாம் காண்போம்.
2. இயேசு செய்யப்போகும் என்ன புதிய காரியத்தை யோவான் ஸ்நானன் அறிவித்தார், இந்தப் புதிய காரியம் எதனுடன் சம்பந்தப்பட்டிருந்தது?
2 யோவான் ஸ்நானன் இயேசுவுக்கு வழியை ஆயத்தம் செய்துகொண்டிருந்தபோது, இயேசு ஏதோவொரு புதிய காரியத்தைச் செய்வார் என்று அவர் அறிவித்தார். அப்பதிவு சொல்கிறது: “என்னிலும் வல்லவர் ஒருவர் எனக்குப்பின் வருகிறார், அவருடைய பாதரட்சைகளின் வாரைக் குனிந்து அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல. நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன்; அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் என்று [யோவான்] பிரசங்கித்தான்.” (மாற்கு 1:7, 8) அந்தச் சமயத்துக்கு முன்பு, எவருமே பரிசுத்த ஆவியினால் முழுக்காட்டப்படவில்லை. பரிசுத்த ஆவியை உட்படுத்திய இது ஒரு புதிய ஏற்பாடாக இருந்தது, பரலோக ஆட்சிக்கு மானிடர்களைத் தயார் செய்வதற்கு சீக்கிரத்தில் வெளிப்படுத்தப்படவிருந்த யெகோவாவின் நோக்கத்தோடு அது சம்பந்தப்பட்டிருந்தது.
‘மறுபடியும் பிறப்பது’
3. பரலோக ராஜ்யத்தைப் பற்றிய என்ன புதிய காரியங்களை இயேசு நிக்கொதேமுவுக்கு விளக்கினார்?
3 முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பரிசேயனோடு கொண்டிருந்த இரகசிய சந்திப்பு ஒன்றில் இயேசு இந்தத் தெய்வீக நோக்கத்தைப்பற்றி இன்னும் கூடுதலாக வெளிப்படுத்தினார். பரிசேயனாகிய நிக்கொதேமு இரவிலே இயேசுவிடம் வந்தார். இயேசு அவரிடம் சொன்னார்: “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான்.” (யோவான் 3:3) நிக்கொதேமு ஒரு பரிசேயனாக எபிரெய வேதாகமத்தைப் படித்திருந்திருக்கவேண்டும். ஆகையால் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய மகத்தான சத்தியத்தை அவர் ஓரளவு அறிந்திருந்தார். அந்த ராஜ்யம், ‘மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவரிடமும்,’ ‘உன்னதமானவருடைய பரிசுத்தவான்களாகிய ஜனங்களிடமும்’ கொடுக்கப்படும் என்று தானியேலின் புத்தகம் தீர்க்கதரிசனமுரைத்தது. (தானியேல் 7:13, 14, 27) அந்த ராஜ்யம் மற்ற எல்லா ராஜ்யங்களையும் “நொறுக்கி நிர்மூலமாக்கி” என்றென்றைக்கும் நிலைத்திருக்க வேண்டும். (தானியேல் 2:44) இந்தத் தீர்க்கதரிசனங்கள் யூத தேசத்தின் சம்பந்தமாக நிறைவேற்றமடையும் என்று நிக்கொதேமு அநேகமாக நினைத்திருக்கவேண்டும்; ஆனால் அந்த ராஜ்யத்தை காணவேண்டுமானால் ஒருவன் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று இயேசு சொன்னார். நிக்கொதேமுவுக்குப் புரியவில்லை, எனவே இயேசு தொடர்ந்து சொன்னதாவது: “ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் [“ஜலத்திலிருந்தும் ஆவியிலிருந்தும்,” NW] பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான்.”—யோவான் 3:5.
4. பரிசுத்த ஆவியிலிருந்து பிறந்தவர்களுக்கு, யெகோவாவோடு அவர்கள் கொண்டுள்ள உறவு எவ்வாறு மாறும்?
4 பரிசுத்த ஆவியினால் முழுக்காட்டுதல் பெறுவதைக் குறித்து யோவான் ஸ்நானன் பேசியிருந்தார். ஒரு நபர் தேவனுடைய ராஜ்யத்துக்குள் பிரவேசிக்க வேண்டுமென்றால், அவர் பரிசுத்த ஆவியிலிருந்து பிறக்க வேண்டும் என்று இயேசு இப்போது கூடுதலாக சொல்கிறார். தனித்தன்மை வாய்ந்த இந்தப் பிறப்பின் மூலம், அபூரணரான ஆண்களும் பெண்களும் யெகோவா தேவனோடு ஒரு விசேஷித்த உறவுக்குள் பிரவேசிக்கின்றனர். அவர்கள் அவருடைய சுவீகாரப் பிள்ளைகளாக ஆகின்றனர். நாம் வாசிக்கிறோம்: “[இயேசுவுடைய] நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார். அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.”—யோவான் 1:12, 13; ரோமர் 8:15.
கடவுளுடைய பிள்ளைகள்
5. எப்போது உண்மைத்தன்மையுள்ள சீஷர்கள் பரிசுத்த ஆவியினால் முதலாவது முழுக்காட்டப்பட்டனர், அதோடு சம்பந்தப்பட்ட பரிசுத்த ஆவியின் என்ன செயல்பாடுகள் அதே சமயத்தில் நிகழ்ந்தன?
5 இயேசு நிக்கொதேமுவிடம் பேசியபோது, பரிசுத்த ஆவி ஏற்கெனவே இயேசுவின்மீது வந்திறங்கியிருந்தது, கடவுளுடைய ராஜ்யத்தில் எதிர்கால அரசபதவிக்காக அவர் அபிஷேகம் செய்யப்பட்டிருந்தார், கடவுள் வெளிப்படையாக இயேசுவை தம்முடைய குமாரனாக ஏற்றுக்கொண்டிருந்தார். (மத்தேயு 3:16, 17) யெகோவா பொ.ச. 33-ல் பெந்தெகொஸ்தே நாளன்று இன்னும் கூடுதலான ஆவிக்குரிய பிள்ளைகளைப் பிறப்பித்தார். எருசலேமில் மேல் அறையில் கூடியிருந்த உண்மையுள்ள சீஷர்கள் பரிசுத்த ஆவியினால் முழுக்காட்டப்பட்டனர். அதே சமயத்தில், கடவுளுடைய ஆவிக்குரிய குமாரர்களாக ஆவதற்கு பரிசுத்த ஆவியிலிருந்து அவர்கள் மறுபடியும் பிறந்தனர். (அப்போஸ்தலர் 2:2-4, 38; ரோமர் 8:15) மேலும், எதிர்காலத்தில் பரலோக சுதந்தரிப்பைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்தோடு அவர்கள் பரிசுத்த ஆவியினால் அபிஷேகம்செய்யப்பட்டனர். அந்தப் பரலோக நம்பிக்கையின் நிச்சயத்தன்மைக்கு அடையாளமாக அவர்கள் பரிசுத்த ஆவியினால் முதலில் முத்திரையிடப்பட்டனர்.—2 கொரிந்தியர் 1:21, 22.
6. பரலோக ராஜ்யத்தைக் குறித்து யெகோவாவின் நோக்கம் என்ன, இதில் மானிடர்கள் ஒரு பங்கைக் கொண்டிருக்க வேண்டும் என்பது ஏன் பொருத்தமானது?
6 இவர்கள் ராஜ்யத்துக்குள் பிரவேசிப்பதற்கு கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்ட முதலாவது அபூரண மானிடர்கள் ஆவர். அதாவது, அவர்கள் தங்கள் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்குப் பின்பு மானிடர்கள் மீதும் தேவதூதர்கள் மீதும் ஆளப்போகும் பரலோக ராஜ்ய அமைப்பின் பாகமாக ஆகவேண்டியிருந்தது. இந்த ராஜ்யத்தின் மூலம் அவருடைய உயர்ந்த நாமம் பரிசுத்தப்படுத்தப்படும் என்றும் அவருடைய பேரரசுரிமை எல்லா சிருஷ்டிக்கும் முன்பாக நியாய நிரூபணம் செய்யப்படும் என்றும் யெகோவா நோக்கம் கொண்டுள்ளார். (மத்தேயு 6:9, 10; யோவான் 12:28) அந்த ராஜ்யத்தில் மானிடர்கள் ஒரு பங்கைக் கொண்டிருப்பது எவ்வளவு பொருத்தமானது! யெகோவாவின் பேரரசுரிமைக்கு எதிராக தன் முதல் சவாலை ஏதேன் தோட்டத்தில் எழுப்பியபோது சாத்தான் மானிடர்களைப் பயன்படுத்தினான், அந்தச் சவாலுக்குப் பதிலளிப்பதில் மானிடர்கள் உட்பட்டிருப்பர் என்று இப்போது யெகோவா நோக்கம் கொண்டுள்ளார். (ஆதியாகமம் 3:1-6; யோவான் 8:44) அந்த ராஜ்யத்தில் ஆட்சிசெய்வதற்காக தெரிந்தெடுக்கப்பட்டிருப்பவர்களுக்கு அப்போஸ்தலனாகிய பேதுரு எழுதினார்: “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; அவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார். . . . உங்களுக்கு அந்தச் சுதந்தரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.”—1 பேதுரு 1:3, 4, 5.
7. பரிசுத்த ஆவியினால் முழுக்காட்டப்பட்டிருப்போர் இயேசுவோடு என்ன தனித்தன்மை வாய்ந்த உறவை அனுபவிக்கின்றனர்?
7 கடவுளுடைய சுவீகாரப் பிள்ளைகளாக தெரிந்தெடுக்கப்பட்ட இந்தக் கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் சகோதரர்களாக ஆனார்கள். (ரோமர் 8:16, 17; 9:4, 26; எபிரெயர் 2:11) ஆபிரகாமுக்கு வாக்களிக்கப்பட்டிருந்த வித்தாக இயேசு நிரூபித்ததன் காரணமாக, ஆவியினால்-அபிஷேகம்செய்யப்பட்ட இந்தக் கிறிஸ்தவர்கள் அந்த வித்தின் உடன் அல்லது துணை பாகமாக இருக்கின்றனர், அந்த வித்து விசுவாசமுள்ள மனிதவர்க்கத்தின் மீது ஆசீர்வாதத்தைப் பொழியும். (ஆதியாகமம் 22:17, 18; கலாத்தியர் 3:16, 26, 29) என்ன ஆசீர்வாதம்? அது பாவத்திலிருந்து மீட்கப்பட்டு கடவுளிடம் ஒப்புரவாகி, அவரை இப்போதும் நித்தியத்துக்குமாயும் சேவிப்பதற்கான வாய்ப்பு ஆகும். (மத்தேயு 4:23; 20:28; யோவான் 3:16, 36; 1 யோவான் 2:1, 2) பூமியிலிருக்கும் அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் தங்கள் ஆவிக்குரிய சகோதரராகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்தும், தங்கள் சுவீகாரத் தந்தையாகிய யெகோவா தேவனைக் குறித்தும் சாட்சிகொடுப்பதன் மூலம் இந்த ஆசீர்வாதத்தினிடமாக நேர்மை இருதயமுள்ளோரை வழிநடத்துகின்றனர்.—அப்போஸ்தலர் 1:8; எபிரெயர் 13:15.
8. ஆவியினால் பிறப்பிக்கப்பட்ட தேவனுடைய புத்திரர் ‘வெளிப்படுவது’ என்பது எது?
8 ஆவியினால்-பிறப்பிக்கப்பட்ட தேவனுடைய இந்தப் புத்திரர் ‘வெளிப்படுவதைக்’ குறித்து பைபிள் பேசுகிறது. (ரோமர் 8:19) அந்த ராஜ்யத்தில் உடன் அரசர்களாக இயேசுவோடு இருந்து, சாத்தானின் உலக காரிய ஒழுங்குமுறையை அழிப்பதில் அவர்கள் பங்குகொள்கின்றனர். அதற்குப் பிறகு, ஓராயிரம் ஆண்டுக்கு மீட்பின் கிரயபலியின் நன்மைகளை மனிதவர்க்கத்தினர் பெறுவதற்கு அவர்கள் உதவிசெய்கின்றனர், இவ்வாறு ஆதாம் இழந்த பரிபூரண நிலைக்கு மானிட இனத்தை உயர்த்துகின்றனர். (2 தெசலோனிக்கேயர் 1:7-10; வெளிப்படுத்துதல் 2:26, 27; 20:6; 22:1, 2) அவர்கள் வெளிப்படுவது மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து காரியங்களையும் உட்படுத்துகிறது. இது விசுவாசமுள்ள மானிட சிருஷ்டிப்பு ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒன்று.
9. அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களடங்கிய உலகளாவிய தொகுதியை பைபிள் எவ்வாறு குறிப்பிடுகிறது?
9 அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் அடங்கிய உலகளாவிய தொகுதியே “பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் . . . சபை.” (எபிரெயர் 12:23) அவர்கள் இயேசுவினுடைய மீட்பின் கிரயபலியிலிருந்து நன்மையடைபவர்களில் முதலாவதானவர்கள். அவர்கள் “கிறிஸ்துவின் சரீரமாயும்”கூட இருக்கின்றனர், இது அவர்கள் ஒருவரோடொருவரும் இயேசுவோடும் கொண்டுள்ள மிக நெருங்கிய உறவை காண்பிக்கிறது. (1 கொரிந்தியர் 12:27) பவுல் எழுதினார்: “சரீரம் ஒன்று, அதற்கு அவயவங்கள் அநேகம்; ஒரே சரீரத்தின் அவயவங்களெல்லாம் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றாகவேயிருக்கிறது; அந்தப்பிரகாரமாகக் கிறிஸ்துவும் இருக்கிறார். நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்.”—1 கொரிந்தியர் 12:12, 13; ரோமர் 12:5; எபேசியர் 1:22, 23; 3:3.
‘தேவனுடைய இஸ்ரவேலர்’
10, 11. முதல் நூற்றாண்டில் ஒரு புதிய இஸ்ரவேல் ஏன் தேவைப்பட்டது, இப்புதிய ஜனத்தில் அடங்கியிருந்தவர்கள் யார்?
10 இயேசு வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவாக வருவதற்கு 1,500-க்கும் மேற்பட்ட வருடங்களுக்கு முன்பு, மாம்சப்பிரகாரமான இஸ்ரவேல் தேசத்தார் யெகோவாவின் விசேஷித்த ஜனங்களாய் இருந்தனர். எப்போதும் நினைப்பூட்டுதல்களைப் பெற்றுக்கொண்டேயிருந்தபோதிலும், முழு தேசமும் உண்மையற்றதாய் நிரூபித்தது. இயேசு தோன்றியபோது, அத்தேசம் அவரை நிராகரித்தது. (யோவான் 1:11) ஆகையால் இயேசு யூத மதத்தலைவர்களிடம் இவ்வாறு கூறினார்: “தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்.” (மத்தேயு 21:43) ‘ராஜ்யத்தின் கனிகளைத் தரும் ஜனத்தை’ அடையாளம் கண்டுகொள்வது இரட்சிப்புக்கு மிகவும் முக்கியமானது.
11 பொ.ச. 33-ல் பெந்தெகொஸ்தே அன்று பிறந்த அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவ சபையே அப்புதிய ஜனம். இயேசுவை தங்கள் பரலோக ராஜாவாக ஏற்றுக்கொண்ட அவருடைய யூத சீஷர்களே அதன் முதல் அங்கத்தினர்களாய் இருந்தனர். (அப்போஸ்தலர் 2:5, 32-36) இருப்பினும், அவர்கள் தங்கள் யூத வம்சாவழியின் அடிப்படையில் அல்லாமல் இயேசுவின் பேரில் விசுவாசம் வைத்ததன் அடிப்படையில், கடவுளுடைய புதிய ஜனத்தின் அங்கத்தினர்களாய் இருந்தனர். இவ்வாறு, தேவனுடைய இந்தப் புதிய இஸ்ரவேல் தனித்தன்மை வாய்ந்த ஒன்றாக இருந்தது—இது ஒரு ஆவிக்குரிய ஜனம். பெரும்பாலான யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ள மறுத்தபோது, அப்புதிய ஜனத்தின் பாகமாக ஆவதற்கான அழைப்பு சமாரியருக்கும் பின்பு புறஜாதியாருக்கும் கொடுக்கப்பட்டது. அப்புதிய ஜனம் ‘தேவனுடைய இஸ்ரவேல்’ என்று அழைக்கப்பட்டது.—கலாத்தியர் 6:16.
12, 13. புதிய இஸ்ரவேல் யூத மதத்தின் வெறும் ஒரு உட்பிரிவாக மட்டும் இல்லை என்பது எவ்வாறு தெளிவாக ஆனது?
12 பண்டைய இஸ்ரவேலில், யூதரல்லாதவர்கள் யூத மதத்துக்கு மாறியபோது, அவர்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டிருக்க வேண்டியிருந்தது, ஆண்கள் விருத்தசேதனம் செய்துகொள்வதன் மூலம் இதை அடையாளப்படுத்திக் காண்பிக்க வேண்டியிருந்தது. (யாத்திராகமம் 12:48, 49) தேவனுடைய இஸ்ரவேலில் உள்ள யூதரல்லாதவர்களுக்கும் இதே காரியம் பொருந்தவேண்டும் என்று சில யூத கிறிஸ்தவர்கள் நினைத்தனர். இருப்பினும், யெகோவா வித்தியாசமான ஒன்றை மனதில் கொண்டிருந்தார். பரிசுத்த ஆவி புறஜாதியானாயிருந்த கொர்நேலியுவின் வீட்டுக்கு அப்போஸ்தலனாகிய பேதுருவை வழிநடத்தியது. கொர்நேலியுவும் அவருடைய குடும்பத்தாரும் பேதுருவின் பிரசங்கிப்புக்குப் பிரதிபலித்தபோது—அவர்கள் தண்ணீரினால் முழுக்காட்டுதல் பெறுவதற்கு முன்பே—பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டனர். மோசேயின் நியாயப்பிரமாணத்துக்கு அவர்கள் கீழ்ப்பட்டிருக்க வேண்டும் என்று வற்புறுத்தாமலேயே தேவனுடைய இஸ்ரவேலின் அங்கத்தினர்களாக யெகோவா இந்தப் புறஜாதியாரை ஏற்றுக்கொண்டிருந்தார் என்பதை இது தெளிவாகக் காண்பித்தது.—அப்போஸ்தலர் 10:21-48.
13 சில விசுவாசிகள் இதை ஏற்றுக்கொள்வதற்கு கடினமாகக் கண்டனர், விரைவில் இந்த முழு விஷயமும் எருசலேமிலிருந்த அப்போஸ்தலர்களாலும் மூப்பர்களாலும் கலந்தாலோசிக்கப்பட வேண்டியிருந்தது. அதிகாரம் பெற்றிருந்த அந்தக் குழு யூதரல்லாத விசுவாசிகளின்மீது பரிசுத்த ஆவி எவ்வாறு செயல்பட்டது என்பதைப் பற்றிய விவரமான அத்தாட்சியை செவிகொடுத்துக் கேட்டது. இது ஏவப்பட்டெழுதப்பட்ட தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாயிருந்தது என்பதை பைபிள் ஆராய்ச்சி காண்பித்தது. (ஏசாயா 55:5; ஆமோஸ் 9:11, 12) ஒரு சரியான தீர்மானம் எடுக்கப்பட்டது: யூதரல்லாத கிறிஸ்தவர்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டிருக்க வேண்டியதில்லை. (அப்போஸ்தலர் 15:1, 6-29) இவ்வாறு, ஆவிக்குரிய இஸ்ரவேல் மெய்யாகவே ஒரு புதிய ஜனமாக இருந்தது, யூத மதத்தின் வெறும் ஒரு உட்பிரிவாக மட்டும் இருக்கவில்லை.
14. ‘சிதறியிருக்கிற பன்னிரண்டு கோத்திரங்கள்’ என்று யாக்கோபு கிறிஸ்தவ சபையை அழைப்பது எதைச் சுட்டிக்காட்டுகிறது?
14 இதற்கிசைவாக, முதல் நூற்றாண்டிலிருந்த அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு எழுதுகையில், சீஷனாகிய யாக்கோபு தன் கடிதத்தை “சிதறியிருக்கிற பன்னிரண்டு கோத்திரங்களுக்கு” எழுதினார். (யாக்கோபு 1:1; வெளிப்படுத்துதல் 7:3-8) புதிய இஸ்ரவேலின் குடிமக்கள் குறிப்பிட்ட கோத்திரங்களில் இருக்கும்படி நியமிக்கப்படவில்லை. 12 வித்தியாசமான கோத்திரங்களாக பிரிக்கப்பட்டிருந்த பிரிவு மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலில் இருந்ததுபோல ஆவிக்குரிய இஸ்ரவேலில் இல்லை. இருப்பினும், யெகோவாவின் பார்வையில் தேவனுடைய இஸ்ரவேல், இயற்கையான இஸ்ரவேலின் 12 கோத்திரங்களை முழுவதுமாக பதிலீடு செய்துவிட்டது என்பதை யாக்கோபின் ஏவப்பட்டெழுதப்பட்ட சொற்றொடர் குறிப்பிட்டுக் காட்டுகிறது. இயற்கையானப் பிறப்பின்படி இஸ்ரவேலன் ஒருவர் அப்புதிய ஜனத்தின் பாகமானால், அவருடைய மாம்சப்பிரகாரமான வம்சாவழி—அவர் யூதா அல்லது லேவி கோத்திரத்தாராக இருந்தாலும்கூட—எந்த முக்கியத்துவமும் உடையதாக இருக்கவில்லை.—கலாத்தியர் 3:28; பிலிப்பியர் 3:5, 6.
ஒரு புதிய உடன்படிக்கை
15, 16. (அ) தேவனுடைய இஸ்ரவேலின் யூதரல்லாத அங்கத்தினர்களை யெகோவா எவ்வாறு கருதுகிறார்? (ஆ) என்ன சட்டப்பூர்வமான அடிப்படையின் பேரில் புதிய இஸ்ரவேல் ஸ்தாபிக்கப்பட்டது?
15 இப்புதிய ஜனத்தின் இஸ்ரவேலரல்லாத அங்கத்தினர்கள், யெகோவாவின் பார்வையில் முழு-நிலையடைந்த ஆவிக்குரிய யூதர்களாக இருக்கின்றனர்! அப்போஸ்தலனாகிய பவுல் விளக்கினார்: “புறம்பாக யூதனானவன் யூதனல்ல, புறம்பாக மாம்சத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல. உள்ளத்திலே யூதனானவனே யூதன்; எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்; இப்படிப்பட்டவனுக்குரிய புகழ்ச்சி மனுஷராலே அல்ல, தேவனாலே உண்டாயிருக்கிறது.” (ரோமர் 2:28, 29) அநேக புறஜாதியார் தேவனுடைய இஸ்ரவேலின் பாகமாக ஆவதற்கான அழைப்புக்குப் பிரதிபலித்தனர், இந்த வளர்ச்சி பைபிள் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றியது. உதாரணமாக, தீர்க்கதரிசியாகிய ஓசியா எழுதினார்: “இரக்கம் பெறாதிருந்தவளுக்கு இரங்குவேன்; என் ஜனமல்லாதிருந்தவர்களை நோக்கி நீ என் ஜனமென்று சொல்லுவேன்; அவர்கள் என் தேவனே என்பார்கள்.”—ஓசியா 2:23; ரோமர் 11:25, 26.
16 மோசேயின் நியாயப்பிரமாண உடன்படிக்கையின்கீழ் ஆவிக்குரிய இஸ்ரவேலர் இல்லையென்றால், அவர்கள் எதன் அடிப்படையில் அப்புதிய தேசத்தின் பாகமாயிருந்தனர்? யெகோவா இந்த ஆவிக்குரிய ஜனத்தோடு இயேசுவின் மூலம் ஒரு புதிய உடன்படிக்கை செய்தார். (எபிரெயர் 9:15) இயேசு தம் மரண நினைவு ஆசரிப்பை பொ.ச. 33, நிசான் 14-ல் ஆரம்பித்து வைத்தபோது, அவர் அப்பத்தையும் திராட்சரசத்தையும் 11 உண்மையுள்ள அப்போஸ்தலருக்கு சுற்றுமுறையில் அனுப்பி, அந்தத் திராட்சரசம் ‘உடன்படிக்கைக்குரிய இரத்தத்தை’ அடையாளப்படுத்தியது என்று சொன்னார். (மத்தேயு 26:28; எரேமியா 31:31-34) லூக்காவின் பதிவில் எடுத்துரைக்கப்பட்டிருக்கிறபடி, திராட்சரசப் பாத்திரம் ‘புதிய உடன்படிக்கையை’ அடையாளப்படுத்தியது என்று இயேசு சொன்னார். (லூக்கா 22:20) இயேசுவின் வார்த்தைகளின் நிறைவேற்றமாக, பெந்தெகொஸ்தே நாளன்று பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டு தேவனுடைய இஸ்ரவேல் பிறந்தபோது, அந்த ராஜ்யம் மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலிடமிருந்து எடுக்கப்பட்டு புதிய ஆவிக்குரிய ஜனத்தினிடம் கொடுக்கப்பட்டது. மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலுக்குப் பதிலாக, இப்புதிய ஜனம் இப்போது அவருடைய சாட்சிகள் அடங்கிய யெகோவாவின் ஊழியனாக இருந்தது.—ஏசாயா 43:10, 11.
‘புதிய எருசலேம்’
17, 18. அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்காகக் காத்திருக்கும் மகிமையைக் குறித்து வெளிப்படுத்துதல் புத்தகத்தில் என்ன விவரிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன?
17 பரலோக அழைப்பில் பங்குகொள்வதற்கு சிலாக்கியம் பெற்றிருப்பவர்களுக்கு எப்பேர்ப்பட்ட மகிமை காத்திருக்கிறது! அவர்களுக்காகக் காத்திருக்கும் அற்புதமான அனுபவங்களைக் குறித்து கற்றறிவது என்னே இன்பமாயுள்ளது! அவர்களுடைய பரலோக சுதந்தரிப்பைக் குறித்து வெளிப்படுத்துதல் புத்தகம் கிளர்ச்சியூட்டும் கணநேரக் காட்சிகளை நமக்கு அளிக்கிறது. உதாரணமாக, வெளிப்படுத்துதல் 4:4-ல் நாம் வாசிக்கிறோம்: “[யெகோவாவின்] அந்தச் சிங்காசனத்தைச் சூழ இருபத்துநான்கு சிங்காசனங்களிருந்தன; இருபத்துநான்கு மூப்பர்கள் வெண்வஸ்திரந்தரித்து, தங்கள் சிரசுகளில் பொன்முடி சூடி, அந்தச் சிங்காசனங்களின்மேல் உட்கார்ந்திருக்கக்கண்டேன்.” இந்த 24 மூப்பர்களும் அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள், அவர்கள் உயிர்த்தெழுப்பப்பட்டு யெகோவா அவர்களுக்கு வாக்களித்திருந்த பரலோக ஸ்தானத்தை இப்போது வகிக்கின்றனர். அவர்களுடைய கிரீடங்களும் சிங்காசனங்களும் அவர்களுடைய ராஜபதவியை நமக்கு நினைப்பூட்டுகின்றன. அவர்கள் யெகோவாவின் சிங்காசனத்தைச் சுற்றி சேவைசெய்யும் வியப்புக்குரிய அதிவுயர்வான சிலாக்கியத்தையும்கூட சிந்தித்துப் பாருங்கள்!
18 வெளிப்படுத்துதல் 14:1-ல் அவர்களைப் பற்றி மற்றொரு கணநேரக் காட்சியை நாம் காண்கிறோம்: “பின்பு நான் பார்த்தபோது, இதோ, சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடேகூட அவருடைய பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேரையும் நிற்கக்கண்டேன்.” இங்கே நாம் இந்த அபிஷேகம்செய்யப்பட்டவர்களின் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையை காண்கிறோம்—1,44,000. அவர்கள், யெகோவாவினால் சிங்காசனத்தில் அமர்த்தப்பட்டிருக்கும் ‘ஆட்டுக்குட்டியானவராகிய’ இயேசுவோடு நின்றுகொண்டிருப்பதிலிருந்து அவர்களுடைய ராஜபதவி கண்டுணரப்படுகிறது. மேலும் அவர்கள் பரலோக சீயோன் மலையில் இருக்கின்றனர். பூமிக்குரிய சீயோன் மலை இஸ்ரவேலின் ராஜரீக நகரமாகிய எருசலேமில் இருந்தது. இயேசுவும் அவரோடுகூட ஆட்சிசெய்யப்போகிறவர்களும் வகிக்கும் உயர்த்தப்பட்ட ஸ்தானத்தை பரலோக சீயோன் மலை பிரதிநிதித்துவம் செய்கிறது. அவர்கள் பரலோக எருசலேமை உண்டுபண்ணுகின்றனர்.—2 நாளாகமம் 5:2; சங்கீதம் 2:6.
19, 20. (அ) அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் எந்தப் பரலோக அமைப்பின் பாகமாக இருப்பர்? (ஆ) பரலோகத்தில் குடியுரிமை பெறப்போகிறவர்களை எந்தக் காலப்பகுதியில் யெகோவா தெரிந்தெடுத்தார்?
19 இதற்கிசைவாக, பரலோக மகிமையில் இருக்கும் அபிஷேகம்செய்யப்பட்டோர் ‘புதிய எருசலேம்’ என்றும்கூட பேசப்பட்டிருக்கின்றனர். (வெளிப்படுத்துதல் 21:2) பூமிக்குரிய எருசலேம் ‘மகா ராஜாவினுடைய நகரமாகவும்’ ஆலயத்தின் இருப்பிடமாகவும் இருந்தது. (மத்தேயு 5:35) பரலோக புதிய எருசலேம், ராஜரீக ராஜ்ய அமைப்பாக இருக்கிறது, அதன் மூலம் மகா பேரரசராகிய யெகோவாவும் அவருடைய நியமிக்கப்பட்ட ராஜாவாகிய இயேசுவும் இப்போது ஆளுகை செய்கின்றனர். அதில் ஆசாரிய சேவை செய்யப்படுகையில் மனிதவர்க்கத்தைக் குணப்படுத்துவதற்கு யெகோவாவின் சிங்காசனத்திலிருந்து செழுமையான ஆசீர்வாதங்கள் பொங்கிவருகின்றன. (வெளிப்படுத்துதல் 21:10, 11; 22:1-5) விசுவாசமுள்ள, உயிர்த்தெழுப்பப்பட்ட, அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் ‘ஆட்டுக்குட்டியானவருடைய மனைவி’ என்று குறிப்பிடப்படுவதை மற்றொரு தரிசனத்தில் யோவான் கேட்கிறார். அவர்கள் இயேசுவோடு அனுபவிக்கப்போகும் நெருங்கிய உறவையும், அவர்கள் அவருக்கு மனமுவந்து கீழ்ப்படிவதையும் பற்றிய என்னே இருதயத்துக்கு மகிழ்வூட்டும் காட்சியை இது வர்ணிக்கிறது! அவர்களுள் கடைசி நபர் தன் பரலோக வெகுமதியை இறுதியில் பெற்றுக்கொள்ளும்போது பரலோகத்தில் உண்டாகும் மகிழ்ச்சியை கற்பனை செய்து பாருங்கள். இப்போது, கடைசியாக, “ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம்” நடைபெறலாம்! அந்த ராஜரீக பரலோக அமைப்பு அப்போது முழுமையாக இருக்கும்.—வெளிப்படுத்துதல் 19:6-8.
20 ஆம், அப்போஸ்தலனாகிய பவுல் “நம்முடைய குடியிருப்போ [“குடியுரிமையோ,” NW] பரலோகத்திலிருக்கிறது” என்று யாரைக் குறித்து சொன்னாரோ அவர்களுக்கு ஆச்சரியமான ஆசீர்வாதங்கள் காத்திருக்கின்றன. (பிலிப்பியர் 3:20) ஏறக்குறைய இரண்டாயிரம் வருடங்களாக, யெகோவா தம்முடைய ஆவிக்குரியப் பிள்ளைகளைத் தெரிந்தெடுத்து, அவர்களை பரலோக சுதந்தரத்துக்காக தயார்படுத்திக்கொண்டு வருகிறார். எல்லா அத்தாட்சிகளின்படி, இந்தத் தெரிந்தெடுத்தல் மற்றும் தயார்படுத்தும் வேலையானது ஏறக்குறைய முழுமையாகிவிட்டது. ஆனால் அதைத் தொடர்ந்து இன்னும் கூடுதல் வரவிருந்தது, அது வெளிப்படுத்துதல் 7-ஆம் அதிகாரத்தில் பதிவுசெய்யப்பட்டு யோவானுக்கு வெளிப்படுத்திய தரிசனத்தில் உள்ளது. ஆகையால் இப்போது மற்றொரு கிறிஸ்தவத் தொகுதி நம்முடைய கவனத்தைக் கோருகிறது. இத்தொகுதியைப் பற்றி நாம் அடுத்தக் கட்டுரையில் சிந்திப்போம்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ பரலோக சுதந்தரிப்பை உடையோர்மீது ஆவியின் வித்தியாசமான செயல்பாடுகள் யாவை?
◻ அபிஷேகம்செய்யப்பட்டோர் யெகோவாவோடு என்ன நெருக்கமான உறவை அனுபவிக்கின்றனர்? இயேசுவோடு என்ன நெருக்கமான உறவை அனுபவிக்கின்றனர்?
◻ அபிஷேகம்செய்யப்பட்டவர்களின் சபை பைபிளில் எவ்வாறு விவரிக்கப்பட்டுள்ளது?
◻ தேவனுடைய இஸ்ரவேல் எந்தச் சட்டப்பூர்வமான அடிப்படையின் பேரில் ஸ்தாபிக்கப்பட்டது?
◻ அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு என்ன பரலோக சிலாக்கியங்கள் காத்திருக்கின்றன?
[பக்கம் 10-ன் படங்கள்]
ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டு காலப்பகுதியினூடே, யெகோவா பரலோக ராஜ்யத்தில் ஆளப்போகிறவர்களைத் தெரிந்தெடுத்தார்.