நெகேமியா
8 ‘தண்ணீர் நுழைவாசலின்’+ எதிரில் இருந்த பொது சதுக்கத்தில் ஜனங்கள் எல்லாரும் ஒருமனதாகக் கூடிவந்தார்கள். இஸ்ரவேலர்களுக்கு மோசேயின் மூலம் யெகோவா கொடுத்திருந்த திருச்சட்ட புத்தகத்தை+ எடுத்து வரும்படி நகலெடுப்பவராகிய* எஸ்றாவை+ அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். 2 அது ஏழாம் மாதம் முதல் நாள்.+ குருவாகிய எஸ்றா சபையாகக்+ கூடிவந்திருந்த ஆண்களுக்கும், பெண்களுக்கும், கேட்டு புரிந்துகொள்கிற வயதிலிருந்த மற்ற எல்லாருக்கும் முன்பாகத் திருச்சட்டத்தை எடுத்துவந்தார். 3 ‘தண்ணீர் நுழைவாசலின்’ எதிரில் பொது சதுக்கத்தில் கூடிவந்திருந்த ஆண்களுக்கும், பெண்களுக்கும், புரிந்துகொள்கிற வயதிலிருந்த மற்ற எல்லாருக்கும் முன்பாக விடியற்காலை தொடங்கி மத்தியானம்வரை அவர் அதைச் சத்தமாக வாசித்தார்.+ எல்லாரும் திருச்சட்ட புத்தகத்தின் வார்த்தைகளைக் கூர்ந்து கவனித்துக் கேட்டார்கள்.+ 4 நகலெடுப்பவராகிய* எஸ்றா, அந்த நாளுக்காகவே செய்யப்பட்ட மரத்தாலான ஒரு மேடைமேல் நின்றுகொண்டிருந்தார். அவருடைய வலது பக்கத்தில் மத்தித்தியா, சேமா, ஆனாயா, உரியா, இல்க்கியா, மாசெயா ஆகியவர்களும், அவருடைய இடது பக்கத்தில் பெதாயா, மீஷாவேல், மல்கீயா,+ ஆசூம், அஸ்-பதானா, சகரியா, மெசுல்லாம் ஆகியவர்களும் நின்றுகொண்டிருந்தார்கள்.
5 உயரமான மேடையில் நின்றுகொண்டிருந்த எஸ்றா, ஜனங்கள் எல்லாரும் பார்க்கும்படி அந்தப் புத்தகத்தைத் திறந்தார். உடனே, எல்லாரும் எழுந்து நின்றார்கள். 6 அப்போது எஸ்றா, மகத்துவமுள்ள உண்மைக் கடவுளாகிய யெகோவாவைப் புகழ்ந்தார். உடனே ஜனங்கள் எல்லாரும், “ஆமென்! ஆமென்!”*+ என்று சொல்லி, தங்கள் கைகளை வானத்துக்கு நேராக விரித்தார்கள். பின்பு, யெகோவாவுக்கு முன்பாக மண்டிபோட்டு, தரைவரைக்கும் குனிந்து வணங்கினார்கள். 7 அதன்பின் யெசுவா, பானி, செரெபியா,+ யாமின், அக்கூப், சபெதாய், ஒதியா, மாசெயா, கேலிதா, அசரியா, யோசபத்,+ ஆனான், பெலாயா ஆகிய லேவியர்கள் திருச்சட்டத்தை விளக்கிச் சொன்னார்கள்.+ ஜனங்களும் நின்றுகொண்டே அதைக் கேட்டார்கள். 8 இப்படி, எஸ்றாவும் லேவியர்களும் உண்மைக் கடவுளுடைய திருச்சட்ட புத்தகத்திலிருந்து சத்தமாக வாசித்து, அதைத் தெளிவாக விளக்கி, அதன் அர்த்தத்தை ஜனங்களின் மனதில் பதிய வைத்தார்கள். வாசிக்கப்பட்ட விஷயங்களை எல்லாரும் புரிந்துகொள்வதற்கு உதவி செய்தார்கள்.*+
9 திருச்சட்டத்திலுள்ள வார்த்தைகளைக் கேட்ட ஜனங்கள் எல்லாரும் அழுதுகொண்டிருந்தார்கள். அதனால் ஆளுநராக* இருந்த நெகேமியாவும், நகலெடுப்பவரும்* குருவுமான எஸ்றாவும்,+ ஜனங்களுக்குக் கற்றுக்கொடுத்த லேவியர்களும் அங்கு கூடியிருந்தவர்களைப் பார்த்து, “இந்த நாள் உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குப் பரிசுத்தமான நாள்.+ அதனால் வருத்தப்படாதீர்கள், அழாதீர்கள்” என்று சொன்னார்கள். 10 பின்பு நெகேமியா அவர்களிடம், “நீங்கள் போய் நல்ல நல்ல உணவு வகைகளைச் சாப்பிடுங்கள், இனிப்பான பானங்களைக் குடியுங்கள், ஒன்றுமே இல்லாதவர்களுக்குப் பலகாரங்களை அனுப்பி வையுங்கள்.+ இந்த நாள் நம் எஜமானுக்குப் பரிசுத்தமான நாள். அதனால் சோகமாக இருக்காதீர்கள். யெகோவா தரும் சந்தோஷம்தான் உங்களுக்குப் பலத்த கோட்டை”* என்று சொன்னார். 11 லேவியர்களும், “அழாதீர்கள்! இது பரிசுத்தமான நாள், வருத்தப்படாதீர்கள்” என்று சொல்லி ஜனங்களை அமைதிப்படுத்தினார்கள். 12 உடனே ஜனங்கள் எல்லாரும், சாப்பிடவும் குடிக்கவும் பலகாரங்களைக் கொடுக்கவும் கொண்டாடி மகிழவும்+ அங்கிருந்து புறப்பட்டுப் போனார்கள். ஏனென்றால், அவர்கள் எல்லாரும் தங்களுக்கு விளக்கிச் சொல்லப்பட்ட விஷயங்களைப் புரிந்துகொண்டார்கள்.+
13 இரண்டாம் நாளில், திருச்சட்ட வார்த்தைகளை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்வதற்காக, தந்தைவழிக் குடும்பத் தலைவர்களும் குருமார்களும் லேவியர்களும் நகலெடுப்பவராகிய* எஸ்றாவைச் சூழ்ந்துகொண்டார்கள். 14 ஏழாம் மாதப் பண்டிகையின்போது+ இஸ்ரவேலர்கள் கூடாரங்களில் தங்க வேண்டுமென்று மோசே மூலம் யெகோவா கொடுத்த கட்டளை திருச்சட்டத்தில் எழுதப்பட்டிருந்ததை அப்போது அவர்கள் தெரிந்துகொண்டார்கள். 15 அதோடு, எல்லா நகரங்களிலும் எருசலேமிலும் இருக்கிற ஜனங்களிடம், “திருச்சட்டத்தில் எழுதியிருக்கிறபடியே மலைப்பகுதிக்குப் போய் ஒலிவ மரக் கிளைகளையும், எண்ணெய் மர* கிளைகளையும், குழிநாவல் மரக் கிளைகளையும், பேரீச்ச ஓலைகளையும், மற்ற அடர்ந்த மரக் கிளைகளையும் கொண்டுவந்து கூடாரங்களை அமையுங்கள்” என்று அறிவிப்பு செய்ய வேண்டுமென்ற+ விஷயத்தையும் தெரிந்துகொண்டார்கள்.
16 அதன்படியே, ஜனங்கள் போய் அடர்ந்த மரக் கிளைகளைக் கொண்டுவந்து தங்கள் மொட்டைமாடிகளிலும், முற்றங்களிலும், உண்மைக் கடவுளுடைய ஆலயப் பிரகாரங்களிலும்,+ ‘தண்ணீர் நுழைவாசலின்’+ பக்கத்தில் இருந்த பொது சதுக்கத்திலும், ‘எப்பிராயீம் நுழைவாசலின்’+ பக்கத்தில் இருந்த பொது சதுக்கத்திலும் கூடாரங்களை அமைத்தார்கள். 17 இப்படி, எருசலேமுக்குத் திரும்பி வந்த சபையார் எல்லாரும் கூடாரங்களை அமைத்து அதில் தங்கினார்கள். நூனின் மகனான யோசுவாவின்+ நாளிலிருந்து அந்த நாள்வரை இஸ்ரவேலர்கள் அவ்வளவு சிறப்பாக அந்தப் பண்டிகையைக் கொண்டாடியதே இல்லை. சந்தோஷத்தில் தேசமே களைகட்டியது.+ 18 முதல் நாளிலிருந்து கடைசி நாள்வரை, உண்மைக் கடவுளின் திருச்சட்ட புத்தகம் தினமும் வாசிக்கப்பட்டது.+ ஏழு நாட்களுக்குப் பண்டிகை கொண்டாடப்பட்டது. எட்டாம் நாளில், திருச்சட்டத்தின்படியே ஒரு விசேஷ மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.+