கடவுள் கொடுத்த சுயாதீனம் மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது
“யெகோவாவுக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன்.”—நெகேமியா—8:10, NW.
1. மகிழ்ச்சி என்பது என்ன? கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தவர்கள் ஏன் அதை அனுபவிக்க முடியும்?
யெகோவா தம்முடைய மக்களின் இருதயங்களை மகிழ்ச்சியினால் நிரப்புகிறார். இந்தப் பெரும் மகிழ்ச்சி அல்லது களிகூருதலான நிலை, நன்மையை அடைவதனால் அல்லது எதிர்பார்த்திருப்பதனால் கிடைக்கிறது. கடவுளுக்கு ஒப்புக்கொடுத்த மனிதர்கள், இப்படிப்பட்ட ஓர் உணர்ச்சியை அனுபவிக்க முடியும், ஏனென்றால் மகிழ்ச்சி அவருடைய பரிசுத்த ஆவி அல்லது கிரியை நடப்பிக்கும் சக்தியின் ஒரு கனியாக இருக்கிறது. (கலாத்தியர் 5:22, 23) ஆகவே இக்கட்டான சோதனைகள் நம்மைத் தாக்கினாலும்கூட அவருடைய ஆவியினால் வழிநடத்தப்படும் யெகோவாவின் ஊழியர்களாக நாம் மகிழ்ச்சியுள்ளவர்களாயிருக்கலாம்.
2. எஸ்றாவின் நாளில் யூதர்கள் விசேஷமான ஒரு சந்தர்ப்பத்தில் ஏன் களிகூர்ந்தார்கள்?
2 பொ.ச.மு. ஐந்தாவது நூற்றாண்டில், விசேஷமான ஒரு சந்தர்ப்பத்தின் போது, யூதர்கள், எருசலேமில் மகிழ்ச்சியான கூடார பண்டிகையை ஆசரிப்பதற்காக கடவுள் கொடுத்த சுயாதீனத்தைப் பயன்படுத்திக் கொண்டனர். எஸ்றாவும் மற்ற லேவியர்களும் கடவுளுடைய நியாயப்பிரமாணத்தை அவர்களுக்கு வாசித்து விளக்கிய பின்பு, “ஜனங்கள் எல்லாரும் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட வார்த்தைகளை உணர்ந்து கொண்டபடியால், புசித்துக் குடிக்கவும், பங்குகளை அனுப்பவும், மிகுந்த சந்தோஷம் கொண்டாடவும் போனார்கள்.”—நெகேமியா 8:5-12.
யெகோவாவுக்குள் மகிழ்ச்சியாயிருப்பது நம்முடைய பெலன்
3. என்ன சூழ்நிலைமைகளின் கீழ், “யெகோவாவுக்குள் மகிழ்ச்சியாயிருப்பது” நம்முடைய பெலனாக இருக்க முடியும்?
3 அந்தப் பண்டிகையின் போது, யூதர்கள் இந்த வார்த்தைகளின் உண்மையை உணர்ந்துகொண்டார்கள்: “கர்த்தருக்குள் [யெகோவாவுக்குள், NW] மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன்.” (நெகேமியா 8:10) யெகோவாவின் ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்ட சாட்சிகளாக கடவுள் கொடுத்த சுயாதீனத்துக்காக நாம் உறுதியாக நிலைநிற்போமானால், இந்த மகிழ்ச்சி நம்முடைய பெலனாகவும் கூட இருக்கிறது. நம்மில் வெகு சிலர், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தையும் கிறிஸ்துவோடுகூட பரலோக உடன்சுதந்தரவாளிகளாக கடவுளுடைய குடும்பத்திற்குள் ஏற்றுக்கொள்ளப்படுவதையும் அனுபவித்திருக்கிறோம். (ரோமர் 8:15-23) நம்மில் பெரும்பான்மையினர், இன்று பூமிக்குரிய பரதீஸில் ஜீவனின் எதிர்பார்ப்பை உடையவர்களாக இருக்கிறோம். (லூக்கா 23:43) நாம் எவ்வளவு மகிழ்ச்சியாயிருக்க வேண்டும்!
4. கிறிஸ்தவர்கள் ஏன் துன்பங்களையும் துன்புறுத்தலையும் சகித்திருக்க முடியும்?
4 நமக்கு அதிசயமான எதிர்பார்ப்புகள் இருந்தபோதிலும், துன்பங்களையும் துன்புறுத்தல்களையும் சகித்திருப்பது எளிதல்ல. என்றபோதிலும், கடவுள் நமக்கு அவருடைய பரிசுத்த ஆவியைக் கொடுப்பதன் காரணமாக நாம் அவ்விதமாகச் செய்ய முடியும். அதைக்கொண்டு, நம்முடைய நம்பிக்கையை அல்லது கடவுளுடைய அன்பை நம்மிடமிருந்து எதுவுமே பறித்துவிட முடியாது என்ற சந்தோஷத்தையும் நம்பிக்கையையும் கொண்டிருக்கிறோம். மேலுமாக நாம் யெகோவாவிடம் நம்முடைய முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும், பலத்தோடும், மனதோடும் அன்புகூருகிறவரை, யெகோவா நம்முடைய பெலனாக இருப்பார் என்பதில் நாம் நிச்சயமாயிருக்கலாம்.—லூக்கா 10:27.
5. களிகூருவதற்கான காரணங்களை நாம் எங்கே காணமுடியும்?
5 யெகோவாவின் மக்கள் ஐசுவரியமான ஆசீர்வாதங்களை அனுபவிக்கிறவர்களாக, களிகூருவதற்கு அநேக காரணங்களைக் கொண்டிருக்கிறார்கள். மகிழ்ச்சிக்கான ஒரு சில காரணங்கள் கலாத்தியருக்கு பவுல் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. மற்றவை வேதாகமத்தின் வேறு இடங்களில் கூறப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட மகிழ்வூட்டும் ஆசீர்வாதங்களை சிந்திப்பது நமக்கு உற்சாகமளிப்பதாக இருக்கும்.
கடவுள் கொடுத்த சுயாதீனத்தை உயர்வாக கருதுங்கள்
6. பவுல் ஏன் கலாத்திய கிறிஸ்தவர்களை நிலைகொண்டிருக்கும்படியாக துரிதப்படுத்தினார்?
6 கிறிஸ்தவர்களாக கடவுளோடு ஏற்கத்தகுந்த ஒரு நிலைநிற்கையின் மகிழ்வூட்டும் ஆசீர்வாதம் நமக்கிருக்கிறது. கிறிஸ்து தம்மை பின்பற்றினவர்களை மோசேயின் நியாயப்பிரமாணத்திலிருந்து விடுவித்த காரணத்தால், கலாத்தியர்கள் அந்த “அடிமைத்தனத்தின் நுகத்திற்குட்”பட்டில்லாமல் நிலைகொண்டிருக்கும்படியாக துரிதப்படுத்தப்பட்டார்கள். நம்மைப் பற்றி என்ன? நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்வதன் மூலம் நீதிமான்களாக அறிவிக்கப்பட நாம் முயற்சி செய்வோமானால், நாம் கிறிஸ்துவிலிருந்து பிரிந்துவிட்டவர்களாவோம். என்றபோதிலும் கடவுளுடைய ஆவியின் உதவியோடு, சரீர விருத்தசேதனத்திலிருந்தோ அல்லது மற்ற நியாயப்பிரமாண கிரியைகளிலிருந்தோ அல்ல, ஆனால் அன்பின் மூலமாக கிரியை செய்யும் விசுவாசத்திலிருந்து வருகின்ற நீதிக்காக ஆவலோடு எதிர்பார்த்து நாம் காத்திருக்கிறோம்.—கலாத்தியர் 5:1-6.
7. யெகோவாவுக்கு பரிசுத்த சேவையை நாம் எவ்வாறு கருதவேண்டும்?
7 ‘மகிழ்ச்சியோடே யெகோவாவுக்கு ஆராதனை செய்ய’ நமக்கு கடவுள் கொடுத்திருக்கும் சுயாதீனத்தை பயன்படுத்துவது ஓர் ஆசீர்வாதமாகும். (சங்கீதம் 100:2) ஆம், “சர்வ வல்லமையுள்ள யெகோவா தேவனுக்கு” “நித்தியத்தின் ராஜாவுக்கு” பரிசுத்த சேவை செய்வது விலைமதிக்கமுடியாத சிலாக்கியமாகும்! (வெளிப்படுத்துதல் 15:3, NW) தாழ்வான சுய-மதிப்பு அலைகள் எப்போதாவது உங்கள் மீது வந்து மோதும் போது, இயேசு கிறிஸ்துவின் மூலமாக கடவுள் உங்களை அவரிடமாக வரவழைத்து, “கடவுளுடைய நற்செய்தியின் பரிசுத்த வேலையில்” ஒரு பங்கை உங்களுக்கு அருளிச்செய்திருப்பதை உணர்ந்து கொள்வது பிரயோஜனமாயிருக்கக்கூடும். (ரோமர் 15:16, NW; யோவான் 6:44; 14:6) மகிழ்ச்சியாயிருப்பதற்கும் கடவுளுக்கு நன்றியுள்ளவர்களாயிருப்பதற்கும் என்னே காரணங்கள்!
8. மகா பாபிலோனைப் பொறுத்தவரை, கடவுளுடைய மக்களுக்கு சந்தோஷத்துக்கு என்ன காரணமிருக்கிறது?
8 பொய் மத உலக பேரரசாகிய மகா பாபிலோனிலிருந்து கடவுள் கொடுத்த சுயாதீனம் மகிழ்ச்சிக்கு மற்றொரு காரணமாகும். (வெளிப்படுத்துதல் 18:2, 4, 5) இந்த மத சம்பந்தமான வேசி அடையாள அர்த்தத்தில் “திரளான தண்ணீர்கள்” அதாவது, “ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரரு”மாகியவர்கள் மீது “உட்கார்ந்திருக்கிற” போதிலும் அவள் யெகோவாவின் ஊழியர்கள் மீது உட்காருவதோ அல்லது அவர்கள் மீது மதசம்பந்தமான செல்வாக்கைச் செலுத்துவதோ அல்லது கட்டுப்படுத்துவதோ கிடையாது. (வெளிப்படுத்துதல் 17:1, 15) மகா பாபிலோனின் ஆதரவாளர்கள் ஆவிக்குரிய அந்தகாரத்தில் இருக்கையில், கடவுளுடைய அதிசயமான வெளிச்சத்தில் இருப்பதில் நாம் களிகூருகிறோம். (1 பேதுரு 2:9) ஆம், “தேவனுடைய ஆழங்களில்” சிலவற்றைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கக்கூடும். (1 கொரிந்தியர் 2:10) ஆனால் ஞானத்துக்காக ஜெபங்களும் பரிசுத்த ஆவியின் உதவியும், அவைகளை உடையவர்களுக்கு ஆவிக்குரிய விடுதலையளிக்கும் வேதாகம சத்தியங்களை புரிந்துகொள்ள நமக்கு துணைபுரிகிறது.—யோவான் 8:31, 32; யாக்கோபு 1:5-8.
9. மத சம்பந்தமான பிழைகளிலிருந்து நாம் முடிவில்லாத சுயாதீனத்தை அனுபவித்துக்களிக்க வேண்டுமானால் நாம் என்ன செய்யவேண்டும்?
9 மத சம்பந்தமான பிழைகளிலிருந்து முடிவில்லாத சுயாதீனத்தின் ஆசீர்வாதத்தை நாம் அனுபவித்துக் களிக்கிறோம், ஆனால் அந்தச் சுதந்தரத்தைக் காத்துக்கொள்ள நாம் விசுவாசதுரோகத்தை நிராகரித்துவிட வேண்டும். கலாத்தியர்கள் கிறிஸ்தவ ஓட்டத்தை நன்றாக ஓடிக்கொண்டிருந்தனர், ஆனால் ஒரு சிலர் சத்தியத்துக்கு கீழ்ப்படிவதிலிருந்து அவர்களை தடைசெய்துகொண்டிருந்தனர். இப்படிப்பட்ட பொல்லாத தூண்டுதல் கடவுளிடமிருந்து வரவில்லை, அது தடைசெய்யப்பட வேண்டியிருந்தது. கொஞ்சம் புளித்த மா பிசைந்த மா முழுவதையும் உப்பச் செய்வது போல, பொய் போதகர்கள் அல்லது விசுவாசதுரோகத்திடமாக மனச்சாய்வு முழு சபையையும் கெடுத்துவிடக்கூடும். கலாத்தியருடைய விசுவாசத்தை கவிழ்க்க நாடிய விருத்தசேதன ஆதரவாளர்கள், அவர்கள் தாமே வெறுமென விருத்தசேதனம் பண்ணிக்கொள்வது மாத்திரமல்ல, அவர்களுடைய பாலுறுப்புகளை சிதைத்துக்கொள்ளும்படி பவுல் விருப்பம் தெரிவிக்கிறார். நிச்சயமாகவே கடுமையான வார்த்தைகள்! ஆனால் நமக்கு கடவுள் கொடுத்த சுயாதீனத்தை மதசம்பந்தமான பிழைகளிலிருந்து காத்துக்கொள்ள வேண்டுமாயின் நாம் விசுவாசதுரோகத்தை நிராகரித்துவிடுவதில் அதுபோலவே உறுதியாக இருக்க வேண்டும்.—கலாத்தியர் 5:7-12.
அன்பிலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள்
10. கிறிஸ்தவ சகோதரத்துவத்தின் பாகமாக நம்முடைய உத்தரவாதம் என்ன?
10 கடவுள் கொடுத்த சுயாதீனம் அன்புள்ள ஒரு சகோதரத்துவத்தின் கூட்டுறவுக்குள் நம்மைக் கொண்டுவந்திருக்கிறது, ஆனால் அன்பு காண்பிக்க நம்முடைய பங்கை நாம் செய்ய வேண்டும். கலாத்தியர்கள் தங்களுடைய சுயாதீனத்தை “மாம்சத்திற்கேதுவாக அநுசரியாமல்” அல்லது அன்பற்ற சுயநலத்துக்கு ஒரு சாக்காக பயன்படுத்திக்கொள்ளாமலும் இருக்க வேண்டும். அவர்கள் அன்பை உள்நோக்கமாகக் கொண்டு ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்ய வேண்டும். (லேவியராகமம் 19:18; யோவான் 13:35) நாம் ஒருவரையொருவர் பட்சித்துப் போடுவதில் விளைவடையக்கூடிய புறங்கூறுதலையும் பகைமையையும் நாமும்கூட தவிர்க்க வேண்டும். நிச்சயமாகவே, சகோதர சிநேகத்தை நாம் காண்பிப்போமானால் இது சம்பவிக்காது.—கலாத்தியர் 5:13-15.
11. நாம் எவ்விதமாக மற்றவர்களுக்கு ஓர் ஆசீர்வாதமாக இருக்கக்கூடும்? அவர்கள் நம்மை எவ்வாறு ஆசீர்வதிக்கக்கூடும்?
11 கடவுளுடைய பரிசுத்த ஆவியின் வழிநடத்தலுக்கு இசைவாக கடவுள் கொடுத்த நம்முடைய சுயாதீனத்தைப் பயன்படுத்துவதன் மூலம் நாம் அன்பு காண்பிக்கிறவர்களாகவும் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாகவும் இருப்போம். பரிசுத்த ஆவியினால் கட்டுப்படுத்தப்படவும் அதனால் வழிநடத்தப்படவும் நம்மை அனுமதிப்பது ஒரு பழக்கமாக இருக்க வேண்டும். அப்பொழுது ‘ஆவிக்கும் அதன் இச்சைக்கும் விரோதமாக’ இருக்கும் நம்முடைய பாவமுள்ள மாம்சத்தை அன்பற்ற விதமாக திருப்திப்படுத்திக் கொள்ளும் மனச்சாய்வு நமக்கிராது. நாம் கடவுளுடைய ஆவியால் வழிநடத்தப்படுகிறோமென்றால் அன்பானவற்றை நாம் செய்வோம். ஆனால் சட்டங்கள் வற்புறுத்துகிறது, தவறு செய்கிறவர்கள் மீது தண்டனை சுமத்தப்படுகிறது என்பதற்காக அவ்விதமாகச் செய்யமாட்டோம். உதாரணமாக ஒரு சட்டம் அல்ல, ஆனால் அன்புதானே மற்றவர்களை அவதூறாக பேசுவதிலிருந்து நம்மை காத்துக்கொள்ளும். (லேவியராகமம் 19:16) அன்பு தயவாக பேசவும் நடந்துகொள்ளவும் நம்மை உந்துவிக்கும். நாம் ஆவியின் கனியாகிய அன்பைக் காண்பித்தால், மற்றவர்கள் நம்மை ஆசீர்வதிப்பார்கள் அல்லது நம்மைப் பாராட்டிப் பேசுவார்கள். (நீதிமொழிகள் 10:6) மேலுமாக நம்மோடு கூட்டுறவுக் கொள்வது அவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.—கலாத்தியர் 5:16-18.
முரண்படுகின்ற கனி
12. பாவமுள்ள “மாம்சத்தின் கிரியை”களைத் தவிர்ப்பதோடு சம்பந்தப்பட்ட ஒரு சில ஆசீர்வாதங்கள் யாவை?
12 கடவுள் கொடுத்த சுயாதீனத்தோடு சம்பந்தப்பட்ட அநேக ஆசீர்வாதங்கள், பாவமுள்ள “மாம்சத்தின் கனிகளை” தவிர்ப்பதனால் கிடைக்கிறது. கடவுளுடைய மக்களாக, நாம் பொதுவாக, விபசாரம், அசுத்தம், ஒழுக்கமற்ற நடத்தையை அப்பியாசியாமல் இருப்பதால் மிகுதியான மனவேதனைகளை தவிர்த்துவிடுகிறோம். விக்கிரகாராதனையை தவிர்ப்பதன் மூலம் இந்த விஷயத்தில் யெகோவாவைப் பிரியப்படுத்துவதால் வரும் சந்தோஷம் நமக்கிருக்கிறது. (1 யோவான் 5:21) நாம் ஆவிக்கொள்கையை அப்பியாசியாமல் இருப்பதால், பிசாசுகளின் ஆதிக்கத்திலிருந்து நாம் விடுபட்டிருக்கிறோம். நம்முடைய கிறிஸ்தவ சகோதரத்துவமானது, விரோதங்கள், வைராக்கியங்கள், பொறாமை, கோபம், சண்டைகள், பிரிவினைகள், மற்றும் மார்க்கபேதங்களால் கெடுக்கப்பட்டில்லை. வெறியிலும் களியாட்டுகளிலும் நம்முடைய சந்தோஷம் இழக்கப்படுவதில்லை. மாம்சத்தின் கிரியைகளை அப்பியாசிக்கிறவர்கள் கடவுளுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை என்பதாக பவுல் எச்சரித்தார். என்றபோதிலும் அவருடைய வார்த்தைகளுக்கு நாம் செவி சாய்ப்பதால், சந்தோஷமான ராஜ்ய நம்பிக்கையை நாம் பற்றிக்கொண்டிருக்கலாம்.—கலாத்தியர் 5:19-21.
13. யெகோவாவின் பரிசுத்த ஆவி என்ன கனிகளைப் பிறப்பிக்கிறது?
13 கிறிஸ்தவர்கள் யெகோவாவின் ஆவியினுடைய கனியை வெளிப்படுத்துவதன் காரணமாக கடவுள் கொடுத்த சுயாதீனம் நமக்குச் சந்தோஷத்தைக் கொண்டுவருகிறது. தேவபக்தியுள்ள இருதயங்களில் ஊன்றவைக்கப்படும் ஆவியின் மிகச் சிறந்த கனிகளாகிய அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் போன்றவற்றுக்கு எதிர்மாறாக பாவமுள்ள மாம்சத்தின் கனிகள் முட்களைப் போன்றிருப்பதை கலாத்தியருக்கு பவுல் எழுதிய வார்த்தைகளிலிருந்து காண்பது எளிதாக உள்ளது. பாவமுள்ள மாம்சத்தின் இச்சைகளுக்கு எதிர்மாறாக வாழ தீர்மானித்தவர்களாய், நாம் கடவுளுடைய ஆவியால் வழிநடத்தப்படவும் அதன்படி வாழவும் விரும்புகிறோம். ஆவி நம்மை மனத்தாழ்மையும் சமாதானமுள்ளவர்களாகவும் ஆக்குகிறது, “வீண்புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர் மேல் ஒருவர் பொறாமை கொள்ளாமலும்” இருக்கச் செய்கிறது. ஆவியின் கனியை வெளிப்படுத்துபவர்களோடு கூட்டுறவுக்கொள்வது சந்தோஷமாயிருப்பது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை!—கலாத்தியர் 5:22-26.
மகிழ்ச்சிக்கு மற்ற காரணங்கள்
14. பொல்லாத ஆவி சேனைகளுக்கு எதிரான நம்முடைய போராட்டத்தில் நமக்கு என்ன ஆயுதம் தேவையாயிருக்கிறது?
14 நமக்கு கடவுள் கொடுத்த ஆவிக்குரிய சுயாதீனத்தோடு சம்பந்தப்பட்டிருப்பது, சாத்தான் மற்றும் பேய்களிடமிருந்து பாதுகாக்கப்படும் ஆசீர்வாதமாகும். பொல்லாத ஆவி சேனைகளோடு நம்முடைய போராட்டத்தில் வெற்றி பெற, “தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை” நாம் தரித்துக் கொள்ள வேண்டும். நமக்கு சத்தியம் என்னும் கச்சையும் நீதி என்னும் மார்க்கவசமும் தேவையாக இருக்கிறது. சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையை நம் கால்கள் தொடுத்திருக்க வேண்டும். பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப் போடும் விசுவாசம் என்னும் பெரிய கேடகமுங்கூட தேவையாயிருக்கிறது. இரட்சணியமென்னும் தலைச்சீராவை அணிந்துகொண்டு, கடவுளுடைய வார்த்தையாகிய “ஆவியின் பட்டயத்தை” நாம் கையாள வேண்டும். மேலும் “எந்தச் சமயத்திலும் . . . ஆவியினாலே ஜெபம்பண்ணு”வோமாக. (எபேசியர் 6:11-18) ஆவிக்குரிய ஆயுதங்களை தரித்து, பேய்த்தனத்தை நாம் நிராகரித்துவிடுவோமானால் நாம் தைரியமுள்ளவர்களாகவும் சந்தோஷமுள்ளவர்களாகவும் இருக்கலாம்.—அப்போஸ்தலர் 19:18-20 ஒப்பிடவும்.
15. நாம் கடவுளுடைய வார்த்தைக்கு இசைவாக நம்மை நடத்திக் கொள்வோமானால், என்ன மகிழ்ச்சியான ஆசீர்வாதம் நம்முடையதாயிருக்கும்?
15 நம்முடைய நடத்தை கடவுளுடைய வார்த்தைக்கு இசைவாயிருப்பதாலும், தவறு செய்கிற அநேகரை தொல்லைப்படுத்தும் குற்றவுணர்விலிருந்து விலகியிருப்பதாலும் மகிழ்ச்சி நம்முடையதாக இருக்கிறது. நாம், ‘தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவர்களாயிருக்க பிரயாசப்படுகிறோம்.’ (அப்போஸ்தலர் 24:16) ஆகவே, வேண்டுமென்றேயும் மனந்திரும்பாமல் பாவம் செய்கிறவர்களுக்கு வரவிருக்கும் தெய்வீக பழிவாங்குதலைக் குறித்து நாம் பயப்பட வேண்டியதில்லை. (மத்தேயு 12:22-32; எபிரெயர் 10:26-31) நீதிமொழிகள் 3:21-26-லுள்ள புத்திமதியைப் பொருத்துவதன் மூலம், நாம் அந்த வார்த்தைகளின் நிறைவேற்றத்தை உணர்ந்துகொள்கிறோம்: “மெய்ஞ்ஞானத்தையும் நல்லாலோசனையையும் காத்துக்கொள். அவைகள் உன் ஆத்துமாவுக்கு ஜீவனும், உன் கழுத்துக்கு அலங்காரமுமாயிருக்கும். அப்பொழுது நீ பயமின்றி உன் வழியில் நடப்பாய், உன் கால் இடறாது. நீ படுக்கும்போது பயப்படாதிருப்பாய்; நீ படுத்துக்கொள்ளும்போது உன் நித்திரை இன்பமாயிருக்கும். சடுதியான திகிலும், துஷ்டர்களின் பாழ்க்கடிப்பும் வரும்போது நீ அஞ்ச வேண்டாம். கர்த்தர் [யெகோவா, NW] உன் நம்பிக்கையாயிருந்து, உன் கால் சிக்கிக்கொள்ளாதபடி காப்பார்.”
16. ஜெபம் எவ்விதமாக மகிழ்ச்சிக்கு ஒரு காரணமாயிருக்கிறது? இந்த விஷயத்தில் யெகோவாவின் ஆவி என்ன பங்கை வகிக்கிறது?
16 நாம் கேட்கப்படுவோம் என்ற உறுதியோடு யெகோவாவை ஜெபத்தில் அணுகுவதற்கு நமக்கு கடவுள் கொடுத்திருக்கும் சுயாதீனம் மகிழ்ச்சிக்கு மற்றொரு காரணமாகும். ஆம், நாம் பக்தியுடன் கூட ‘யெகோவாவுக்கு பயப்படு’கிற காரணத்தால், நம்முடைய ஜெபங்கள் பதிலளிக்கப்படுகின்றன. (நீதிமொழிகள் 1:7) மேலுமாக, நாம் “பரிசுத்த ஆவிக்குள்” ஜெபம் பண்ணுவதன் மூலம், நாம் கடவுளுடைய அன்பில் நம்மை வைத்துக்கொள்ள நாம் உதவப்படுகிறோம். (யூதா 20, 21) யெகோவா ஏற்றுக்கொள்ளத்தக்க ஓர் இருதய நிலையை வெளிப்படுத்துவதன் மூலமும், அவருடைய சித்தத்துக்கும், மற்றும் எவ்விதமாக ஜெபிப்பது என்றும் ஜெபத்தில் என்ன கேட்பது என்றும் நமக்குக் காண்பிக்கின்ற அவருடைய வார்த்தைக்கு இசைவான காரியங்களுக்காக ஆவியின் செல்வாக்கின் கீழ் ஜெபிப்பதன் மூலமும் இதை நாம் செய்கிறோம். (1 யோவான் 5:13-15) நாம் கடுமையான சோதனைக்குள்ளாகி, எதற்காக ஜெபிப்பது என்பதை அறியாதவர்களாக இருப்போமானால், ‘நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்ய ஆவிதானே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறது.’ கடவுள் இப்படிப்பட்ட ஜெபங்களுக்கு பதிலளிக்கிறார். (ரோமர் 8:26, 27) பரிசுத்த ஆவிக்காக ஜெபித்து குறிப்பிட்ட ஒரு சோதனையை எதிர்ப்படுவதற்கு குறிப்பாகத் தேவைப்படும் அதன் கனிகளை நம்மில் பிறப்பிக்க அதை அனுமதிப்போமாக. (லூக்கா 11:13) கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்டெழுதப்பட்ட வார்த்தையையும் ஆவியின் வழிநடத்துதலின் கீழ் தயாரிக்கப்பட்ட கிறிஸ்தவ பிரசுரங்களையும் ஜெபசிந்தையுடனும் ஊக்கமாகவும் படிப்போமேயானால் நம்முடைய மகிழ்ச்சியை நாம் அதிகரிக்கவும்கூட செய்வோம்.
எப்போதுமிருக்கும் உதவியால் ஆசீர்வதிக்கப்படுதல்
17. மோசேயின் அனுபவங்களும் தாவீதின் வார்த்தைகளும் எவ்விதமாக யெகோவா தம்முடைய மக்களோடுகூட இருக்கிறார் என்பதைக் காண்பிக்கின்றன?
17 நமக்கு கடவுள் கொடுத்த சுயாதீனத்தை சரிவர பயன்படுத்துவதன் மூலம் யெகோவா நம்மோடிருக்கிறார் என்று அறிந்திருக்கும் மகிழ்ச்சி நமக்கிருக்கிறது. பாதகமான சூழ்நிலைமைகள் எகிப்தைவிட்டு புறப்படும்படி மோசேயை செய்வித்த போது, அவர் விசுவாசத்தின் மூலம் “அதரிசனமானவரைத் தரிசிக்கிறது போல உறுதியாயிருந்”தார். (எபிரெயர் 11:27) மோசே தனிமையாக நடக்கவில்லை; யெகோவா தன்னோடிருந்ததை அவர் அறிந்திருந்தார். அதேவிதமாகவே கோராகின் புத்திரர் இவ்விதமாகப் பாடினார்கள்: “தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர். ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்து போனாலும், அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம்.” (சங்கீதம் 46:1-3) கடவுளில் இப்படிப்பட்ட விசுவாசம் உங்களுக்கிருக்குமானால், அவர் உங்களை ஒருபோதும் கைவிடமாட்டார். தாவீது சொன்னார்: “என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் [யெகோவா, NW] என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்.” (சங்கீதம் 27:10) கடவுள் இவ்வளவாக தம்முடைய ஊழியர்கள் மீது அக்கறையுள்ளவராக இருக்கிறார் என்பதை அறிவதில் என்னே மகிழ்ச்சி இருக்கிறது!—1 பேதுரு 5:6, 7.
18. யெகோவாவின் மகிழ்ச்சியைப் பெற்றுள்ளவர்கள் சமாளிக்க முடியாத கவலையிலிருந்து ஏன் கடவுள் கொடுத்த சுயாதீனத்தை உடையவர்களாயிருக்கிறார்கள்?
18 யெகோவாவின் மகிழ்ச்சியை பெற்றவர்களாய், சமாளிக்க முடியாத கவலையிலிருந்து கடவுள் கொடுத்த சுயாதீனத்தை நாம் உடையவர்களாய் இருக்கிறோம். “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடேகூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.” (பிலிப்பியர் 4:6, 7) தேவ சமாதானம் என்பது மிகவும் சோதனையான சூழ்நிலைகளிலும்கூட ஒப்பற்ற அமைதியாக இருக்கிறது. அது இருக்குமானால் நம்முடைய இருதயங்கள் அமைதியாக இருக்கின்றன—ஆவிக்குரிய விதமாகவும், உணர்ச்சி சம்பந்தமாகவும், சரீரப்பிரகாரமாயும் இது நமக்கு நன்மையாக இருக்கிறது. (நீதிமொழிகள் 14:30) அது மனதின் சமநிலையை காத்துக்கொள்ளவும்கூட நமக்கு உதவிசெய்கிறது, ஏனென்றால் கடவுள் அனுமதிக்கின்ற எதுவும் நமக்கு நிரந்தரமான தீங்கை உண்டுபண்ணிவிடமுடியாது என்பதை நாம் அறிந்திருக்கிறோம். (மத்தேயு 10:28) நாம் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து, சந்தோஷம், சமாதானம் போன்ற கனிகளைப் பிறப்பிக்கும் அவருடைய ஆவியின் வழிநடத்துதலுக்கு நம்மைக் கீழ்ப்படுத்துவதன் காரணமாக கிறிஸ்துவின் மூலமாக கடவுளோடு கொள்ளும் நெருக்கமான உறவிலிருந்து விளையும் இந்தச் சமாதானம் நம்முடையதாக இருக்கிறது.
19. நம்முடைய இருதயங்களை எதன் மீது ஊன்ற வைப்பது மகிழ்ச்சியாயிருக்க நமக்கு உதவி செய்யும்?
19 நமக்கு கடவுள் கொடுத்த சுயாதீனத்தின் மீதும் ராஜ்ய நம்பிக்கையின் மீதும் நம்முடைய இருதயங்களை ஊன்ற வைப்பது மகிழ்ச்சியாயிருக்க நமக்கு உதவி செய்யும். உதாரணமாக மோசமான உடல்நிலைக் குறித்து சில சமயங்களில் செய்வதற்கு அதிகமிருக்காது, ஆனால் அதை சமாளிப்பதற்கு ஞானத்துக்காகவும் மனவலிமைக்காகவும் நாம் ஜெபிக்கலாம். இப்பொழுது நாம் அனுபவித்துவரும் ஆவிக்குரிய சுக ஆரோக்கியத்தையும் ராஜ்ய ஆட்சியின் கீழ் சம்பவிக்க இருக்கும் சரீரப்பிரகாரமான சுகப்படுத்தல்களையும் குறித்து சிந்திப்பதில் ஆறுதலைப் பெறலாம். (சங்கீதம் 41:1-3; ஏசாயா 33:24) இன்று நாம் ஒருவேளை வறுமையை சகித்திருக்க வேண்டியிருந்தாலும், வெகு அருகாமையில் இருக்கும் பரதீஸிய பூமியில் வாழ்க்கைக்கு இன்றியமையாதிருப்பவற்றில் குறைவேதுமிராது. (சங்கீதம் 72:14, 16; ஏசாயா 65:21-23) ஆம், நம்முடைய பரம தகப்பன் நம்மை இப்பொழுது தாங்கி, இறுதியில் நம்முடைய மகிழ்ச்சியை நிறைவாக்குவார்.—சங்கீதம் 145:14-21.
உங்களுக்கு கடவுள் கொடுத்த சுயாதீனத்தை பேணி காப்பாற்றுங்கள்
20. சங்கீதம் 100:1-5-ன் பிரகாரம் நாம் எவ்விதமாக யெகோவாவுக்கு முன்னால் வரவேண்டும்?
20 யெகோவாவின் மக்களாக, நமக்கு மகிழ்ச்சியையும் இத்தனை அநேக ஆசீர்வாதங்களையும் கொண்டுவந்திருக்கும் கடவுள் கொடுத்த சுயாதீனத்தை நாம் பேணி காப்பாற்ற வேண்டும். சங்கீதம் 100:1-5 “ஆனந்தசத்தத்தோடே” கடவுளுடைய சந்நிதிமுன் வரும்படியாக நம்மை துரிதப்படுத்துவது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை. நாம் யெகோவாவினுடையவர்களாக இருக்கிறோம், ஓர் அன்புள்ள மேய்ப்பனைப் போல அவர் நம்மீது அக்கறையுள்ளவராயிருக்கிறார். ஆம், நாம் அவருடைய “ஜனங்களும் அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம்.” அவர் சிருஷ்டிகராயிருப்பதும் அவருடைய மகத்தான குணாதிசயங்களும் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தின் பிரகாரங்களில் துதியோடும் ஸ்தோத்திரத்தோடும் பிரவேசிக்க நமக்குத் தூண்டுதலை அளிக்கின்றது. நாம் அவருடைய “நாமத்தை ஸ்தோத்திரி”க்கவும் யெகோவா தேவனைப் பற்றி பாராட்டிப் பேசவும் உந்தப்படுகிறோம். மேலுமாக அவருடைய கிருபை அல்லது நம்மீது அவர் வைத்துள்ள இரக்கமுள்ள கவனத்தை நாம் எப்பொழுதும் நம்பியிருக்கலாம். “தலைமுறை தலைமுறைக்கும்” யெகோவா உண்மையுள்ளவராக, தம்முடைய சித்தத்தைச் செய்கிறவர்களிடம் அன்பு செலுத்துவதில் மாறாதவராக இருக்கிறார்.
21. இப்பத்திரிகையின் முதல் பிரதியில் என்ன ஊக்குவிப்பு கொடுக்கப்பட்டது? கடவுள் கொடுத்த சுயாதீனத்தைக் குறித்து நாம் என்ன செய்ய வேண்டும்?
21 அபூரண மனிதர்களாக நாம் இப்பொழுது எல்லா சோதனைகளிலிருந்தும் தப்பியோடிவிட முடியாது. என்றபோதிலும் தெய்வீக உதவியோடு, நாம் யெகோவாவின் தைரியமுள்ள மற்றும் மகிழ்ச்சியுள்ள சாட்சிகளாக இருக்க முடியும். இதன் சம்பந்தமாக இப்பத்திரிகையின் முதல் பிரதியில் (ஜூலை 1879) காணப்பட்ட இந்த வார்த்தைகள் குறிப்பிடத்தக்கவையாகும்: “குறுகலான வழியில் களைப்புற்று அடியெடுத்து ஓட நாடும் என் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே . . . தைரியமாயிருங்கள். கரடுமுரடான பாதையைக் குறித்து கவலைப்படாதீர்கள். அது எல்லாம் நம்முடைய எஜமானரின் ஆசீர்வதிக்கப்பட்ட கால்களினால் தூய்மையாக்கவும் பரிசுத்தமாக்கவும்பட்டுள்ளது. ஒவ்வொரு முள்ளையும் ஒரு மலராக கருதுங்கள்; ஒவ்வொரு கூரான கல்லையும் உங்களை முன்னால் இலக்கை நோக்கி விரைவாகக் கொண்டு செல்லும் ஒரு மைல்கல்லாக கருதுங்கள். . . . பரிசின் மேல் கண்களை ஊன்ற வையுங்கள்.” யெகோவாவை இப்பொழுது சேவித்துக்கொண்டிருக்கும் லட்சக்கணக்கானோர் பரிசின் மீது தங்கள் கண்களை வைத்திருக்கிறார்கள், தைரியத்துக்கும் சந்தோஷத்துக்கும் அநேக காரணங்களை உடையவர்களாக இருக்கின்றனர். அவர்களோடுகூட கடவுள் கொடுத்த சுயாதீனத்தில் நிலைத்திருங்கள். அதன் நோக்கத்தை தவறவிட்டுவிடாதீர்கள். யெகோவாவின் மகிழ்ச்சியே எப்பொழுதும் உங்கள் பெலனாக இருக்கட்டும். (w92 3/15)
நீங்கள் எவ்விதமாக பதிலளிப்பீர்கள்?
◻‘யெகோவாவுக்குள் மகிழ்ச்சி’ எவ்விதமாக நம்முடைய பெலனாக இருக்க முடியும்?
◻மத சம்பந்தமாக பேசுகையில், கடவுள் கொடுத்த சுயாதீனம் யெகோவாவின் மக்களுக்கு என்ன ஆசீர்வாதங்களைக் கொண்டுவந்திருக்கிறது?
◻அன்பில் ஒருவருக்கொருவர் ஏன் ஊழியஞ் செய்யவேண்டும்?
◻கடவுள் கொடுத்த சுயாதீனத்தோடு சம்பந்தப்பட்ட சில ஆசீர்வாதங்கள் யாவை?
◻கடவுளுடைய மக்கள் எவ்விதமாக மகிழ்ச்சியாக நிலைத்திருக்க முடியும்?
[பக்கம் 23-ன் படம்]
“ஒவ்வொரு முள்ளையும் ஒரு மலராக கருதுங்கள்; ஒவ்வொரு கூரான கல்லையும் உங்களை முன்னால் இலக்கை நோக்கி விரைவாகக் கொண்டு செல்லும் ஒரு மைல்கல்லாக கருதுங்கள்”