எரேமியா
20 எரேமியா சொன்ன இந்தத் தீர்க்கதரிசனங்களை இம்மேரின் மகன் பஸ்கூர் கேட்டுக்கொண்டிருந்தார். அவர் யெகோவாவின் ஆலயத்தில் குருவாகவும் தலைமை ஆணையராகவும் இருந்தார். 2 எல்லாவற்றையும் கேட்ட பின்பு அவர் எரேமியாவைத் தடியால் அடிக்கவும், தொழுமரத்தில் மாட்டி வைக்கவும்+ உத்தரவு போட்டார். அந்தத் தொழுமரம் யெகோவாவின் ஆலயத்தில் ‘பென்யமீனின் உயர்ந்த நுழைவாசலுக்கு’ பக்கத்தில் வைக்கப்பட்டிருந்தது. 3 அடுத்த நாள், எரேமியாவை பஸ்கூர் விடுதலை செய்தார். அப்போது எரேமியா அவரிடம்,
“பஸ்கூர் என்ற உன் பெயரை மாகோர்மீசாபீப்*+ என்று யெகோவா மாற்றிவிட்டார். 4 ஏனென்றால், ‘உன்னையும் உன் நண்பர்களையும் திகிலடைய வைப்பேன்’ என்று யெகோவா சொல்கிறார். ‘உன்னுடைய கண் எதிரிலேயே அவர்கள் எதிரிகளின் வாளுக்குப் பலியாவார்கள்.+ யூதா முழுவதையும் நான் பாபிலோன் ராஜாவின் கையில் கொடுப்பேன். அவன் யூதா ஜனங்களை பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போவான், அவர்களை வாளால் வெட்டிச் சாய்ப்பான்.+ 5 இந்த நகரத்தின் செல்வங்கள், வளங்கள், விலைமதிப்புள்ள பொருள்கள், ராஜாக்களின் பொக்கிஷங்கள் எல்லாவற்றையுமே எதிரிகளின் கையில் கொடுத்துவிடுவேன்.+ அவர்கள் அவற்றையெல்லாம் கைப்பற்றி பாபிலோனுக்குக் கொண்டுபோவார்கள்.+ 6 பஸ்கூரே, நீயும் உன் வீட்டில் இருக்கிற எல்லாரும் பாபிலோனுக்குக் கைதிகளாகக் கொண்டுபோகப்படுவீர்கள். நீ அங்கே போய் செத்துப்போவாய். உன்னுடைய எல்லா நண்பர்களோடும் சேர்த்து அங்கே புதைக்கப்படுவாய். ஏனென்றால், நீ அவர்களிடம் பொய்த் தீர்க்கதரிசனங்களைச் சொன்னாய்’”+ என்றார்.
7 யெகோவாவே, என்னை ஆச்சரியப்படுத்திவிட்டீர்கள்!* உண்மையிலேயே ஆச்சரியப்படுத்திவிட்டீர்கள்!*
உங்கள் பலத்தால் என்னை ஜெயித்துவிட்டீர்கள்!+
கடவுளே, எல்லாரும் என்னைக் கிண்டல் செய்கிறார்கள்.
நாள் முழுவதும் என்னைப் பார்த்துக் கேலியாகச் சிரிக்கிறார்கள்.+
8 நான் எப்போதுமே அவர்களிடம்,
“நகரம் நாசமாகப்போகிறது! அழிவு வரப்போகிறது!” என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.
யெகோவாவே, உங்களுடைய செய்தியைச் சொல்வதால் ஜனங்கள் என்னை நாள் முழுவதும் கிண்டல் செய்துகொண்டே இருக்கிறார்கள்; என்னைக் கண்டபடி பேசுகிறார்கள்.+
ஆனால், உங்களுடைய செய்தியைச் சொல்லாமல் என் நெஞ்சுக்குள் அடைத்து வைத்தபோது,
எரிகிற நெருப்பை என் எலும்புகளுக்குள் அடைத்து வைத்தது போல உணர்ந்தேன்.
அதை அடக்கி அடக்கி சோர்ந்துபோனேன்.
அந்த அவஸ்தையை அதற்குமேல் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.+
10 எனக்கு ஒரே திகிலாக இருந்தது.+
ஏனென்றால், ஜனங்கள் என்னைப் பற்றி ஏதேதோ பேசுவது என் காதில் விழுந்தது.
“அவனைக் கண்டிக்கலாம்! எல்லாரும் போய் அவனைக் கண்டிக்கலாம்!” என்றெல்லாம் சொல்லிக்கொண்டார்கள்.
எனக்கு வாழ்த்துச் சொன்னவர்கள்கூட* என்னுடைய வீழ்ச்சிக்காகக் காத்திருந்தார்கள்.+
“இவன் ஏதாவது மடத்தனமாகச் செய்யாமலா போய்விடுவான்?
அப்போது இவனை மடக்கிப்பிடித்துப் பழிவாங்கிவிடலாம்” என்று பேசிக்கொண்டார்கள்.
11 ஆனால் யெகோவாவே, மிரள வைக்கும் ஒரு மாவீரரைப் போல நீங்கள் என்னோடு இருந்தீர்கள்.+
அதனால்தான், என்னைக் கொடுமைப்படுத்தியவர்கள் சறுக்கி விழுந்தார்கள், தோற்றுப்போனார்கள்.+
அவர்கள் ஜெயிக்கவே மாட்டார்கள். வெட்கப்பட்டும் கேவலப்பட்டும்தான் போவார்கள்.
அவர்களுக்கு வரும் அவமானம் காலத்துக்கும் மறக்கப்படாது.+
12 ஆனால், பரலோகப் படைகளின் யெகோவாவே, நீங்கள் நீதிமான்களை சோதித்தறிகிறீர்கள்.
இதயத்தையும் அடிமனதின் யோசனைகளையும்* தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.+
என்னுடைய வழக்கை உங்களிடமே ஒப்படைத்துவிட்டேன்.+
என்னை எதிர்க்கிறவர்களை நீங்கள் பழிவாங்குவதை என் கண்ணாலேயே பார்க்க வையுங்கள்.+
13 யெகோவாவைப் புகழுங்கள்! யெகோவாவைப் போற்றிப் பாடுங்கள்!
ஏனென்றால், எளியவனை அக்கிரமக்காரர்களின் கையிலிருந்து அவர் காப்பாற்றிவிட்டார்.
14 என் தாய் என்னைப் பெற்றெடுத்த நாள்
சாபக்கேடான நாளாகட்டும்!+
15 என் அப்பாவிடம் வந்து,
“உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது!” என்று சொல்லி,
அவரைச் சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்தவன் சபிக்கப்படட்டும்!
16 யெகோவா பாவம்பார்க்காமல் அழித்த நகரங்களைப் போல அவன் ஆகட்டும்!
காலையில் அலறல் சத்தத்தையும் நடுப்பகலில் போர் முழக்கத்தையும் அவன் கேட்கட்டும்!