அப்போஸ்தலரின் செயல்கள்
6 அந்த நாட்களில், சீஷர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போனபோது எபிரெய மொழி பேசிய யூதர்களுக்கு எதிராகக் கிரேக்க மொழி பேசிய யூதர்கள் குறை சொல்ல ஆரம்பித்தார்கள்; ஏனென்றால், அன்றாட உணவு கொடுக்கிற விஷயத்தில் அவர்கள் மத்தியிலிருந்த விதவைகள் சரியாகக் கவனிக்கப்படவில்லை.+ 2 அப்போது, பன்னிரண்டு அப்போஸ்தலர்கள் மற்ற எல்லா சீஷர்களையும் கூப்பிட்டு, “நாங்கள் கடவுளுடைய வார்த்தையைக் கற்பிக்கும் வேலையை விட்டுவிட்டு உணவு கொடுக்கிற வேலையில் ஈடுபடுவது சரியாக இருக்காது.+ 3 அதனால் சகோதரர்களே, கடவுளுடைய சக்தியாலும் ஞானத்தாலும் நிறைந்தவர்களாகவும்,+ நல்ல பெயரெடுத்தவர்களாகவும்+ இருக்கிற ஏழு ஆண்களை உங்கள் மத்தியிலிருந்து தேர்ந்தெடுங்கள். இந்த அவசியமான வேலையை மேற்பார்வை செய்ய நாங்கள் அவர்களை நியமிப்போம்.+ 4 அதேசமயத்தில், ஜெபம் செய்வதற்கும் கடவுளுடைய வார்த்தையைக் கற்பிப்பதற்கும் நாங்கள் முழு கவனம் செலுத்துவோம்” என்று சொன்னார்கள். 5 அவர்கள் சொன்னது சரியென்று அங்கிருந்த எல்லாருக்கும் தோன்றியது. அதனால், கடவுளுடைய சக்தியும் விசுவாசமும் நிறைந்தவரான ஸ்தேவானையும், பிலிப்புவையும்,+ பிரொகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், அந்தியோகியா நகரத்தைச் சேர்ந்தவரும் யூத மதத்துக்கு மாறியவருமான நிக்கொலாவையும் தேர்ந்தெடுத்தார்கள். 6 பின்பு, அவர்களை அப்போஸ்தலர்களிடம் கூட்டிக்கொண்டு வந்தார்கள்; அப்போஸ்தலர்கள் ஜெபம் செய்துவிட்டு அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள்.+
7 இதன் காரணமாக, கடவுளுடைய வார்த்தை பரவிக்கொண்டே வந்தது;+ எருசலேமில் சீஷர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக்கொண்டே வந்தது;+ ஏராளமான குருமார்களும் இயேசுவின் சீஷர்களானார்கள்.+
8 கடவுளுடைய கருணையும் வல்லமையும் நிறைந்தவரான ஸ்தேவான் பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் மக்கள் மத்தியில் செய்துவந்தார். 9 இருந்தாலும், ‘விடுதலை பெற்றவர்களின் ஜெபக்கூடம்’ என்ற பிரிவைச் சேர்ந்த ஆட்களில் சிலர், சிரேனே, அலெக்சந்திரியா, சிலிசியா, ஆசியா ஆகிய இடங்களைச் சேர்ந்த சிலரோடு வந்து ஸ்தேவானோடு வாக்குவாதம் செய்தார்கள். 10 ஆனால், ஞானத்தாலும் கடவுளுடைய சக்தியாலும் பேசிய அவரை அவர்களால் ஜெயிக்க முடியவில்லை.+ 11 பின்பு, அவர்கள் சில ஆட்களை ரகசியமாகக் கூப்பிட்டு, “மோசேயையும் கடவுளையும் இவன் நிந்தித்துப் பேசியதை நாங்கள் கேட்டோம்” என்று சொல்லும்படி தூண்டிவிட்டார்கள். 12 அதோடு, மக்களையும் பெரியோர்களையும்* வேத அறிஞர்களையும் தூண்டிவிட்டார்கள்; அவர்கள் திடீரென்று அவரிடம் வந்து, அவரைப் பலவந்தமாகப் பிடித்து நியாயசங்கத்துக்கு இழுத்துக்கொண்டு போனார்கள். 13 பின்பு, பொய் சாட்சிகளை அங்கே நிறுத்தினார்கள்; இவர்கள், “இந்தப் பரிசுத்த இடத்துக்கு எதிராகவும் திருச்சட்டத்துக்கு எதிராகவும் இவன் பேசிக்கொண்டே இருக்கிறான். 14 உதாரணத்துக்கு, நாசரேத்தூர் இயேசு இந்த இடத்தை அழித்துவிடுவார், மோசே நமக்குக் கொடுத்த சட்டதிட்டங்களை* மாற்றிவிடுவார் என்றெல்லாம் இவன் சொல்கிறான்; அதை நாங்களே கேட்டோம்” என்று சொன்னார்கள்.
15 நியாயசங்கத்தில் உட்கார்ந்திருந்த எல்லாரும் அவரை உற்றுப் பார்த்தபோது அவருடைய முகம் ஒரு தேவதூதரின் முகம்போல் இருந்ததைக் கவனித்தார்கள்.