யெகோவாவுக்குப் பயப்படுகிற பயத்தில் நடந்திடுங்கள்
“யெகோவாவுக்குப் பயப்படுகிற பயத்திலும் பரிசுத்த ஆவியின் ஆறுதலிலும் [சபை] நடந்தபோது அது பெருகிக்கொண்டேச் சென்றது.”—அப்போஸ்தலர் 9:31, NW.
1, 2. (எ) கிறிஸ்தவ சபை சமாதானமான காலப்பகுதிக்குள் பிரவேசித்த போது என்ன நடந்தது? (பி) யெகோவா துன்புறுத்தலை அனுமதித்தப் போதிலும், வேறு எதையும் அவர் செய்கிறார்?
சீஷன் ஒருவன் உன்னதமான ஒரு சோதனையை எதிர்ப்பட்டான். கடவுளுக்கு உத்தமத்தன்மையை அவன் காத்துக் கொள்வானா? ஆம், நிச்சயமாக! அவன் தன்னை உண்டாக்கினவரிடமாக பயபக்தியோடு, கடவுளுக்குப் பயப்படுகிற பயத்தில் நடந்து வந்திருந்தான், அவன் யெகோவாவுக்கு உண்மையுள்ள ஒரு சாட்சியாக மரிப்பான்.
2 கடவுள் பயமுள்ள உத்தமத்தைக் காத்துக்கொண்ட அந்த மனிதன், “விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்தவனாகிய” ஸ்தேவான். (அப்போஸ்தலர் 6:5) அவனுடைய கொலை துன்புறுத்தலின் அலையைத் தூண்டிவிட்டது, ஆனால் அதற்குப் பின்பு யூதேயா, கலிலேயா மற்றும் சமாரியாவிலுமிருந்த சபை, சமாதானமான ஒரு காலப்பகுதிக்குள் பிரவேசித்து ஆவிக்குரிய விதத்தில் கட்டியெழுப்பப்பட்டது. மேலுமாக, “யெகோவாவுக்குப் பயப்படுகிற பயத்திலும் பரிசுத்த ஆவியின் ஆறுதலிலும் நடந்தபோது அது பெருகிக் கொண்டே சென்றது.” (அப்போஸ்தலர் 9:31, NW) அப்போஸ்தலர் 6 முதல் 12 வரையான அதிகாரங்களில் காண்பிக்கப்பட்டபடி, இன்று யெகோவாவின் சாட்சிகளாக நாம் சமாதானத்தையோ அல்லது துன்புறுத்தலையோ அனுபவித்தாலும் சரி, கடவுள் நம்மை ஆசீர்வதிப்பார் என்று நாம் நிச்சயமாயிருக்கலாம். ஆகவே துன்புறுத்தப்படுகையில் கடவுளிடம் பக்தியோடுகூடிய பயத்தோடு நடந்துகொண்டு அல்லது துன்புறுத்தலிலிருந்து கிடைக்கும் இடைஓய்வை ஆவிக்குரிய மேம்பாட்டுக்கும் அவருக்கு அதிக சுறுசுறுப்பாக சேவை செய்வதற்கும் பயன்படுத்துவோமாக.—உபாகமம் 32:11, 12; 33:27.
முடிவு வரை உண்மையாய் இருத்தல்
3. என்ன பிரச்னை எருசலேமில் மேற்கொள்ளப்பட்டது? எவ்விதமாக?
3 சமாதான காலங்களின் போது, பிரச்னைகள் எழுந்தபோதிலும், நல்ல ஒழுங்கமைப்பு அவற்றைத் தீர்க்க உதவி செய்யும். (6:1–7) எருசலேமிலிருந்த கிரேக்க பாஷை பேசும் யூதர்கள், தங்கள் விதவைகள் அன்றாட பந்தி விசாரணையில் அசட்டை செய்யப்படுவதாக எபிரெயு பேசும் யூத விசுவாசிகளுக்கு எதிராக முறுமுறுத்தார்கள். அப்போஸ்தலர்கள் “இந்த வேலைக்காக” ஏழு பேரை நியமித்தபோது இந்தப் பிரச்னை தீர்க்கப்பட்டது. அவர்களில் ஒருவன்தான் ஸ்தேவான்.
4. பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு ஸ்தேவான் எவ்விதமாகப் பிரதிபலித்தான்?
4 என்றபோதிலும் கடவுள் பயமுள்ள ஸ்தேவான் சீக்கிரத்திலேயே ஒரு சோதனையை எதிர்ப்பட்டான். (6:8–15) ஒருசில மனுஷர் எழும்பி ஸ்தேவானோடு வாக்குவாதம் செய்தார்கள். சிலர் “லிபர்த்தீனர் என்னப்பட்டவர்களின் ஆலயத்தைச் சேர்ந்த”வர்களாயிருந்தனர். இவர்கள் ஒருவேளை ரோமர்களால் சிறைப்படுத்தப்பட்டு பின்னால் விடுதலைச் செய்யப்பட்டவர்களாக அல்லது ஒருசமயம் அடிமைகளாக இருந்து பின்னர் யூத மதத்துக்கு மதமாறியவர்களாக இருக்கலாம். ஸ்தேவான் பேசிய ஞானத்தையும் ஆவியையும் எதிர்த்து நிற்க அவர்களால் கூடாமற்போனபோது, அவனுடைய விரோதிகள் அவனை ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக இழுத்துக்கொண்டுப்போனார்கள். அங்கே பொய்ச் சாட்சிகள் சொன்னதாவது: ‘இயேசு ஆலயத்தை அழித்து மோசே நமக்குக் கொடுத்த முறைமைகளை மாற்றுவாரென்று இவன் சொல்லக் கேட்டோம்.’ என்றபோதிலும் அவனுடைய எதிரிகளும்கூட ஸ்தேவான் குற்றவாளி அல்ல, ஆனால் நிச்சயமாகவே கடவுளுடைய ஆதரவைக் கொண்டிருந்த அவருடைய தூதுவரான தேவதூதனின் மாசுமறுவற்ற முகத்தோற்றம் அவனுக்கிருந்தது என்பதைக் காணக்கூடியவர்களாக இருந்தனர். சாத்தானால் பயன்படுத்தப்பட தங்களை அனுமதித்ததன் காரணமாக பொல்லாப்பினால் வெறுப்புணர்ச்சியோடிருந்த அவர்களுடைய முகங்களிலிருந்து எத்தனை வித்தியாசம்!
5. சாட்சி கொ.டுக்கையில், ஸ்தேவான் என்ன குறிப்புகளைச் சொன்னான்?
5 பிரதான ஆசாரியனாகிய காய்பாவினால் விசாரிக்கப்படுகையில், ஸ்தேவான் தைரியமான ஒரு சாட்சியைக் கொடுத்தான். (7:1–53) இஸ்ரவேலரின் சரித்திரத்தைப் பற்றிய அவனுடைய விமர்சனம், மேசியா வரும்போது நியாயப்பிரமாணத்தையும் ஆலய சேவையையும் தள்ளுபடி செய்வது கடவுளுடைய நோக்கம் என்பதைக் காண்பித்தது. ஒவ்வொரு யூதனும் கனப்படுத்துவதாக உரிமைப்பாராட்டிய அந்த மீட்பவனாகிய மோசேயை, இஸ்ரவேலர் இப்பொழுது பெரிய மீட்பைக் கொண்டுவருபவரை செய்வது போலவே ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள் என்பதாக ஸ்தேவான் குறிப்பிட்டான். தேவன் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசம் செய்வதில்லை என்று சொல்வதன் மூலம் ஆலயமும் அதனுடைய வணக்கமுறையும் ஒழிந்துபோய்விடும் என்பதைக் காண்பித்தான். ஆனால் அவருடைய நியாயாதிபதிகள் கடவுளுக்குப் பயப்படாமலும் அவருடைய சித்தத்தை அறிந்துகொள்ள விரும்பாமலும் இருந்தபடியால் ஸ்தேவான் சொன்னான்: ‘வணங்கா கழுத்துள்ளவர்களே, நீங்கள் எப்பொழுதும் பரிசுத்த ஆவிக்கு எதிர்த்து நிற்கிறீர்கள். தீர்க்கதரிசிகளில் யாரை உங்கள் பிதாக்கள் துன்பப்படுத்தாமல் இருந்தார்கள்? நீதிபரருடைய வருகையை முன்னறிவித்தவர்களை அவர்கள் கொலைசெய்தார்கள். இப்பொழுது நீங்கள் அவருக்கு துரோகிகளும் அவரை கொலைசெய்த பாதகருமாயிருக்கிறீர்கள்.’
6. (எ) தன்னுடைய மரணத்துக்கு முன்பாக, விசுவாசத்தைப் பலப்படுத்தும் என்ன அனுபவத்தை ஸ்தேவான் கொண்டிருந்தான்? (பி) “கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும்” என்று ஸ்தேவான் ஏன் பொருத்தமாகவே சொல்லக்கூடும்?
6 ஸ்தேவானின் தைரியமான சொற்பொழிவு அவன் கொலைசெய்யப்படுவதற்கு வழிநடத்தியது. (7:54–60) இயேசுவின் மரணத்தில் தங்களுடைய குற்றப்பழி இவ்விதமாக வெளிப்படுத்தப்பட்டதில் நியாயாதிபதிகள் மூர்க்கமடைந்தார்கள். ஆனால் ஸ்தேவான் ‘வானத்தை அண்ணாந்து பார்த்து, தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும்’ கண்டபோது அவனுடைய விசுவாசம் எவ்வளவாய் பலப்படுத்தப்பட்டது! ஸ்தேவான் இப்பொழுது, தான் கடவுளுடைய சித்தத்தைச் செய்திருக்கும் நம்பிக்கையோடு தன்னுடைய விரோதிகளை எதிர்ப்படமுடியும். யெகோவாவின் சாட்சிகள் தரிசனங்களைக் காணாவிட்டாலும் துன்புறுத்தப்படுகையில் நாம் அதேப்போன்ற கடவுள் அருளும் அமைதியைக் கொண்டிருக்கலாம். ஸ்தேவானை எருசலேமுக்கு வெளியேத் தள்ளி அவனுடைய விரோதிகள் அவனைக் கல்லெறிந்தபோது, அவன், “கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும்,” என்று வேண்டிக்கொண்டான். இது பொருத்தமாகவே இருந்தது, ஏனென்றால் மற்றவர்களை உயிர்த்தெழுப்ப கடவுள் இயேசுவுக்கு அதிகாரமளித்திருக்கிறார். (யோவான் 5:26; 6:40; 11:25, 26) ஸ்தேவான் முழங்காற்படியிட்டு, “யெகோவாவே, (NW) இவர்கள்மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும்” என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். பின்னர் அவன் ஓர் உயிர்த்தியாகியாக மரணத்தில் நித்திரையடைந்தான். அப்போது முதற்கொண்டு இயேசுவை பின்பற்றும் அநேகர் நவீன காலங்களிலும்கூட அதேவிதமாகச் செய்திருக்கின்றனர்.
துன்புறுத்தலினால் நற்செய்தி பரவுகிறது
7. துன்புறுத்தலிலிருந்து விளைவடைந்தது என்ன?
7 ஸ்தேவானின் மரணம் உண்மையில் நற்செய்தி பரவுவதில் விளைவடைந்தது. (8:1–4) துன்புறுத்துதல் அப்போஸ்தலர் தவிர, எல்லாச் சீஷர்களும் யூதேயா சமாரியா தேசங்களில் சிதறப்பட்டுப்போகச் செய்தது. ஸ்தேவான் கொலைசெய்யப்படுவதற்கு சம்மதித்திருந்த சவுல் சபையை ஒரு மிருகத்தைப் போல் பாழாக்கி, வீடுகள்தோறும் நுழைந்து, காவலில் போடுவதற்காக இயேசுவைப் பின்பற்றுகிறவர்களை இழுத்துக்கொண்டு வந்தான். சிதறிப் போன சீஷர்கள் தொடர்ந்து பிரசங்கித்துவந்தபோது அவர்களைத் துன்புறுத்துவதன் மூலம் கடவுள் பயமுள்ள ராஜ்ய பிரஸ்தாபிகளை தடுத்துநிறுத்த சாத்தான் தீட்டிய திட்டம் தோல்வியடைந்தது. இன்றும்கூட துன்புறுத்தல் அநேகமாக நற்செய்தியைப் பரப்பவும் அல்லது ராஜ்ய பிரசங்க வேலைக்கு கவனத்தை இழுக்கவுமே உதவியிருக்கிறது.
8. (எ) சமாரியாவில் செய்யப்பட்ட பிரசங்கிப்பின் விளைவாக என்ன சம்பவித்தது? (பி) இயேசு, பேதுருவிடம் ஒப்படைத்திருந்த இரண்டாவது திறவுகோலை அவன் எவ்விதமாகப் பயன்படுத்தினான்?
8 சுவிசேஷகனாகிய பிலிப்பு “கிறிஸ்துவைக் குறித்துப் பிரசங்கிக்க” சமாரியாவுக்குச் சென்றான். (8:5–25) நற்செய்தி அறிவிக்கப்பட்டு, அசுத்த ஆவிகள் வெளியேற்றப்பட்டு, ஜனங்கள் சுகப்படுத்தப்பட்டபோது அந்தப் பட்டணத்திலே மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று. எருசலேமிலிருந்த அப்போஸ்தலர்கள் பேதுருவையும் யோவானையும் சமாரியாவுக்கு அனுப்பிவைத்தார்கள். இவர்கள் ஜெபம்பண்ணி முழுக்காட்டப்பட்டவர்கள் மீது தங்கள் கைகளை வைத்தபோது புதிய சீஷர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டார்கள். புதிதாக முழுக்காட்டப்பட்டிருந்த முன்னாள் மாயவித்தைக்காரனாகிய சீமோன் இந்த அதிகாரத்தைப் பணம்கொடுத்து வாங்க முயற்சி செய்தான். ஆனால் பேதுரு சொன்னதாவது: ‘உன் பணம் உன்னோடேகூட நாசமாய்ப் போகக்கடவது. உன் இருதயம் தேவனுக்கு முன்பாகச் செம்மையாய் இல்லை.’ மனந்திரும்பி மன்னிப்புக்காக தேவனைநோக்கி வேண்டிக்கொள்ளும்படியாகச் சொல்லப்பட்டபோது தனக்காக அப்போஸ்தலர்களை வேண்டிக்கொள்ளும்படியாக அவன் கேட்டுக்கொண்டான். இது இன்று யெகோவாவுக்குப் பயப்படும் அனைவரும் இருதயத்தைக் காத்துக்கொள்வதில் தெய்வீக உதவிக்காக ஜெபிக்கும்படியாக அவர்களைத் தூண்டவேண்டும். (நீதிமொழிகள் 4:23) (இந்தச் சம்பவத்திலிருந்துதானே “சைமனி” என்ற வார்த்தை வந்தது, “சர்ச் உத்தியோகம் அல்லது திருச்சபை தொடர்பான மேற்பதவியை வாங்குவது அல்லது விற்பது.”) பேதுருவும் யோவானும் நற்செய்தியை அநேக சமாரிய கிராமங்களில் அறிவித்தார்கள். இவ்விதமாக பேதுரு பரலோக ராஜ்யத்துக்குள் பிரவேசிப்பதற்குரிய அறிவு மற்றும் வாய்ப்பின் கதவைத் திறப்பதற்கு இயேசு அவனுக்குக் கொடுத்த இரண்டாவது திறவுகோலைப் பயன்படுத்தினான்.—மத்தேயு 16:19.
9. பிலிப்பு சாட்சி கொடுத்த அந்த எத்தியோப்பியன் யார்? அந்த மனிதன் ஏன் முழுக்காட்டப்பட முடிந்தது?
9 கடவுளுடைய தூதன், பின்பு பிலிப்புவுக்கு ஒரு புதிய வேலை நியமனத்தைக் கொடுத்தான். (8:26–40) எருசலேமிலிருந்து காசாவுக்குப் போகும் வழியில், எத்தியோப்பியாவின் ராஜஸ்திரீயாகிய கந்தாகே என்பவளுடைய பொக்கிஷமெல்லாவற்றிகும் தலைவனாயிருந்த “அண்ணகன்” ஒருவன் ஓர் இரதத்தில் போய்க்கொண்டிருந்தான். யூத சபையிலிருந்து விலக்கப்பட்ட சரீரப்பிரகாரமான ஓர் அண்ணகனாக அவன் இல்லை. ஆனால் விருத்தசேதனம் பண்ணப்பட்ட மதமாறிய ஒருவனாக பணிந்துகொள்வதற்காக எருசலேமுக்குப் போயிருந்தான். (உபாகமம் 23:1) அந்த அண்ணகன் ஏசாயா புத்தகத்தை வாசித்துக் கொண்டிருப்பதைப் பிலிப்பு கண்டான். இரதத்தில் ஏறிக்கொள்ளும்படியாக அழைக்கப்பட்டபோது, பிலிப்பு ஏசாயா தீர்க்கதரிசனத்தை குறித்து சம்பாஷித்து, ‘இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அவனுக்குப் பிரசங்கித்தான்.’ (ஏசாயா 53:7, 8) அப்பொழுது அந்த எத்தியோப்பியன்: “இதோ! தண்ணீர் இருக்கிறதே, நான் முழுக்காட்டுதல் பெறுகிறதற்குத் தடையென்ன?” (NW) என்றான். எதுவும் இல்லை, ஏனென்றால் அவன் கடவுளைப் பற்றி அறிந்திருந்தான், இப்பொழுது கிறிஸ்துவை விசுவாசித்தான். ஆகவே பிலிப்பு மந்திரிக்கு முழுக்காட்டுதல் கொடுத்தான், அவன் அப்புறம் சந்தோஷத்தோடே தன்வழியே போனான். முழுக்காட்டப்படுவதிலிருந்து உங்களை ஏதாவது தடைசெய்கிறதா?
துன்பப்படுத்துகிறவன் மாற்றப்படுகிறான்
10, 11. தமஸ்குவுக்குப் போகும் வழியிலும் அதற்குப் பிற்பாடும் தர்சு பட்டணத்தானாகிய சவுலுக்கு என்ன சம்பவித்தது?
10 இதற்கிடையில், சவுல், இயேசுவைப் பின்பற்றுகிறவர்களைக் காவலில் போடுவிப்பதாக அல்லது கொலைசெய்வதாக பயமுறுத்தி அவர்களுடைய விசுவாசத்தை மறுதலிக்கும்படிச் செய்ய முயற்சி செய்தான். (9:1–18எ) பிரதான ஆசாரியன் (பெரும்பாலும் காய்பா) “இந்த மார்க்கம்” அல்லது கிறிஸ்துவின் முன்மாதிரியின் அடிப்படையில் வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டிருப்பவர்களைச் சேர்ந்த புருஷரையும் ஸ்திரீகளையும் கட்டி எருசலேமுக்குக் கொண்டுவரும்படி அதிகாரமளித்த நிருபங்களைத் தமஸ்குவிலுள்ள ஜெபஆலயங்களுக்கு அவனிடத்தில் கொடுத்தனுப்பினான். தமஸ்குவுக்கு அருகே நடுப்பகலில், வானத்திலிருந்து ஓர் ஒளி பிரகாசித்து ஒரு சத்தம் கேட்டது. “சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்?” சவுலோடு இருந்தவர்கள் ஒரு “சத்தத்தைக் கேட்”டார்கள், ஆனால் என்ன சொல்லப்பட்டது என்பதை புரிந்துகொள்ளாதவர்களாக இருந்தனர். (அப்போஸ்தலர் 22:6, 9 ஒப்பிடவும்.) மகிமைப்படுத்தப்பட்ட இயேசுவின் அந்தப் பகுதியளவான வெளிப்படுத்துதல் சவுலைக் குருடாக்குவதற்குப் போதுமானதாக இருந்தது. அவனுடைய பார்வையை மீட்டுத்தர கடவுள் அனனியா என்ற சீஷனைப் பயன்படுத்தினார்.
11 முழுக்காட்டுதலுக்குப் பின்பு, முன்னாளில் துன்பப்படுத்தின இவன்தானே துன்புறுத்தலின் இலக்கானான். (9:18பி–25) தமஸ்குவிலிருந்த யூதர்கள் சவுலைக் கொலைசெய்ய விரும்பினார்கள். என்றபோதிலும் இரவில் சீஷர்கள் அவனைக் கூடையிலே வைத்து மதிலில் இருந்த ஒரு திறப்பு வழியாய் இறக்கிவிட்டார்கள். இது கயிறு அல்லது கோத்துப் பின்னப்பட்ட கம்புகளாலான ஒரு பெரிய பின்னல்கூடையாக இருக்கவேண்டும். (2 கொரிந்தியர் 11:32, 33) அந்தத் திறப்பு ஒருவேளை மதிலில் கட்டப்பட்ட ஒரு சீஷனுடைய வீட்டின் ஜன்னலாக இருக்கலாம். இது சத்துருக்களின் கையில் பிடிபடாமல் ஏய்த்துவிட்டு தொடர்ந்து பிரசங்கிக்கும் ஒரு கோழைத்தனமானச் செயலாக இருக்கவில்லை.
12. (எ) எருசலேமில் சவுலுக்கு என்ன நடந்தது? (பி) சபை எவ்விதமாக இருந்தது?
12 எருசலேமில், சவுலை உடன்விசுவாசியாக ஏற்றுக்கொள்வதற்கு பர்னபா சீஷர்களுக்கு உதவிசெய்தான். (9:26–31) அங்கே சவுல் தைரியமாக கிரேக்க மொழிபேசும் யூதர்களுடன் பேசி தர்க்கித்தான். இவர்களும்கூட அவனைக் கொலைசெய்ய முயற்சி செய்தார்கள். இதை அறியவந்த சகோதரர்கள், அவனைச் செசரியாவுக்கு அழைத்துக் கொண்டுபோய், சிலிசியாவிலுள்ள அவனுடைய சொந்த ஊரான தர்சுவுக்கு அனுப்பிவிட்டார்கள். யூதேயா, கலிலேயா மற்றும் சமாரியா முழுவதிலுமாக இருந்த சபைகள் “சமாதானம் பெற்று” ஆவிக்குரிய விதமாகக் “கட்டியெழுப்பப்பட்டன.” அது ‘கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும் பரிசுத்த ஆவியின் ஆறுதலோடும் நடந்த போது அது பெருகிக்கொண்டே சென்றது.’ சபைகள் யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், இது இன்றுள்ள எல்லாச் சபைகளுக்கும் என்னே நேர்த்தியான ஒரு முன்மாதிரி!
புறஜாதிகள் விசுவாசிகளாகிறார்கள்!
13. பேதுரு லித்தாவிலும் யோப்பாவிலும் என்ன அற்புதங்களைச் செய்ய கடவுள் உதவிசெய்தார்?
13 பேதுருவும்கூட சுறுசுறுப்பாகத் தன்னை வைத்துக்கொண்டிருந்தான். (9:32–43) சாரோன் சமவெளியில் லித்தா ஊரிலே (இப்பொழுது லோத்) திமிர்வாதமுள்ளவனாய்க் கிடந்த ஐனேயாவை அவன் சுகப்படுத்தினான். இந்தச் சுகப்படுத்துதல் அநேகரைக் கர்த்தரிடத்தில் திரும்பும்படிச் செய்தது. யோப்பா பட்டணத்தில், அன்பார்ந்த சீஷி தபீத்தாள் (தொற்காள்) வியாதிப்பட்டு மரணமடைந்தாள். பேதுரு அங்கு வந்தபோது அழுதுக்கொண்டிருந்த விதவைகள் அவர்கள் உடுத்தியிருந்திருக்கக்கூடிய தொற்காள் செய்திருந்த அங்கிகளை அவனுக்குக் காண்பித்தார்கள். அவன் தொற்காளைத் திரும்ப உயிரோடு எழுந்திருக்கப் பண்ணினான். இதைப் பற்றிய செய்தி பரவியபோது அநேகர் விசுவாசிகளானார்கள். பேதுரு கடலோரத்திலே தன் வீட்டைக் கொண்டிருந்த தோல் பதனிடுகிறவனாகிய சீமோனுடைய வீட்டில் தங்கினான். தோல் பதனிடுகிறவர்கள் மிருகங்களின் தோலைக் கடலில் ஊறவைத்து மயிரை அகற்றுவதற்கு முன்னால் சுண்ணாம்புக் கொண்டு அதைப் பதப்படுத்தினர். ஒருசில தாவரங்களிலிருந்து கிடைக்கும் திரவம் கொண்டு மிருகங்களின் தோல் பதனிட்ட தோலாக மாற்றப்பட்டது.
14. (எ) கொர்நேலியு யார்? (பி) கொர்நேலியுவின் ஜெபங்களைப் பற்றியதில் எது உண்மையாக இருந்தது?
14 அந்தச் சமயத்தில் (பொ.ச. 36) வேறோரிடத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருந்துவந்தது. (10:1–8) பட்டாளத்திலே நூற்றுக்கு அதிபதியாக இருந்த தேவபக்தியுள்ள புறஜாதியான கொர்நேலியு என்னப்பட்ட ஒருவன் செசரியாவிலே வாழ்ந்து வந்தான். அவன் “இத்தாலியா பட்டாளத்துக்குத்” தலைமைதாங்கினான். இது ரோம குடிமக்கள் மற்றும் இத்தாலியிலிருந்த லிபர்த்தீனர் மத்தியில் புதிதாகச் சேர்க்கப்பட்ட படைவீரர்களால் ஆனதாக இருந்திருக்க வேண்டும். கொர்நேலியு கடவுளுக்குப் பயந்தவனாய் இருந்தபோதிலும், அவன் யூத மதத்துக்கு மதமாறினவனாக இருக்கவில்லை. அவனுடைய ஜெபங்கள் “தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சந்நிதியில் வந்தெட்டியிருப்பதாய்” அவனிடத்தில் ஒரு தேவதூதன் ஒரு தரிசனத்திலே சொன்னான். அவன் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்தவனாக அந்தச் சமயத்தில் இல்லாவிட்டாலும்கூட அவன் தன் ஜெபத்துக்கு ஒரு பதிலைப் பெற்றுக்கொண்டான். ஆனால் தேவதூதனின் கட்டளைபடியே பேதுருவை அழைத்துவர ஆட்களை அனுப்பினான்.
15. பேதுரு சீமோனின் மேல்வீட்டில் ஜெபம் பண்ணிக்கொண்டிருக்கையில் என்ன நடந்தது?
15 இதற்கிடையில், பேதுரு சீமோனின் மேல் வீட்டில் ஜெபம் பண்ணிக்கொண்டிருக்கையில், ஒரு தரிசனத்தைக் கண்டான். (10:9–23) ஒரு ஞானதிருஷ்டியில், அசுத்தமான நாலுகால் ஜீவன்களும், ஊரும்பிராணிகளும், ஆகாயத்துப் பறவைகளும் நிறைந்த ஒரு துப்பட்டியைப் போன்ற ஒருவிதமான ஓர் கூடு வானத்திலிருந்து இறங்கிவரக் கண்டான். அவைகளை அடித்துப் புசிக்கும்படியாக அவனுக்கு கட்டளையிடப்பட்ட போது பேதுரு அசுத்தமாயிருந்த ஒன்றையும் தான் ஒருகாலும் புசித்ததில்லை என்று சொன்னான். “தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே,” என்று அவனுக்குச் சொல்லப்பட்டது. தரிசனம் பேதுருவைக் குழப்பமடையச் செய்தது. ஆனால் அவன் ஆவியின் கட்டளைபடியே செய்தான். இவ்விதமாக அவனும் ஆறு யூத சகோதரர்களும் கொர்நேலியுவின் தூதுவர்களோடே கூடப் போனார்கள்.—அப்போஸ்தலர் 11:12.
16, 17. (எ) கொர்நேலியுவிடமும் அவனுடைய வீட்டில் கூடியிருந்தவர்களிடமும் பேதுரு என்ன சொன்னான்? (பி) பேதுரு தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் என்ன சம்பவித்தது?
16 இப்பொழுது முதல் புறஜாதிகள் நற்செய்தியைக் கேட்க இருந்தார்கள். (10:24–43) பேதுருவும் அவனுடைய தோழர்களும் செசரியாப் பட்டணத்துக்கு வந்துசேர்ந்தபோது, கொர்நேலியுவும் அவன் உறவினர்களும் அவனுடைய நெருங்கிய நண்பர்களும் காத்துக்கொண்டிருந்தார்கள். கொர்நேலியு பேதுருவின் பாதத்தில் விழுந்தான். ஆனால் அப்போஸ்தலன் இப்படிப்பட்ட ஒரு வணக்கமுறையை மனத்தாழ்மையோடு ஏற்றுக்கொள்ள மறுத்தான். யெகோவா எவ்விதமாக இயேசுவை மேசியாவாக பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணினார் என்பதைப் பற்றி அவன் பேசி, அவரில் விசுவாசம் வைக்கும் எவரும் பாவமன்னிப்பைப் பெறுகிறார் என்பதை விளக்கிச் சொன்னான்.
17 யெகோவா இப்பொழுது செயல்பட்டார். (10:44–48) பேதுரு இன்னும் பேசிக்கொண்டிருக்கையில் விசுவாசித்த அந்தப் புறஜாதிகள் மீது கடவுள் பரிசுத்த ஆவியைப் பொழிந்தருளினார். அப்பொழுதே, அவர்கள் கடவுளுடைய ஆவியால் பிறப்பிக்கப்பட்டு, அவர்கள் அந்நிய பாஷைகளைப் பேசவும் அவரைப் புகழவும் ஆவியால் ஏவப்பட்டார்கள். ஆகவே அவர்கள் பொருத்தமாகவே இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே முழுக்காட்டுதல் பெற்றார்கள். இவ்விதமாக கடவுள் பயமுள்ள புறஜாதிகள் பரலோக ராஜ்யத்துக்குள் பிரவேசிப்பதற்குரிய அறிவு மற்றும் வாய்ப்பின் கதவைத் திறப்பதற்கு பேதுரு மூன்றாவது திறவுகோலை பயன்படுத்தினான்.—மத்தேயு 16:19.
18. “புறஜாதியார்” பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள்” என்பதை பேதுரு விளக்கியபோது யூத சகோதரர்கள் எவ்விதமாகப் பிரதிபலித்தார்கள்?
18 பின்னால் எருசலேமில், விருத்தசேதனத்தை ஆதரிப்பவர்கள் பேதுருவோடு வாக்குவாதம் பண்ணினார்கள். (11:1–18) புறஜாதியார் எவ்விதமாக “பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள்” என்பதை அவன் விளக்கியபோது அதை சகோதரர்கள் ஏற்றுக்கொண்டு பின்வருமாறு சொல்லி கடவுளை மகிமைப்படுத்தினார்கள்: “அப்படியானால், ஜீவனுக்கேதுவான மனந்திரும்புதலைத் தேவன் புறஜாதியாருக்கும் அருளிச்செய்தார்.” நாமும்கூட தெய்வீக சித்தம் நமக்குத் தெளிவுபடுத்தப்படுகையில் அதை ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களாக இருக்கவேண்டும்.
புறஜாதி சபை ஸ்தாபிக்கப்பட்டது
19. சீஷர்கள் எவ்விதமாகக் கிறிஸ்தவர்கள் என்றழைக்கப்படலானார்கள்?
19 முதல் புறஜாதி சபை இப்பொழுது நிறுவப்பட்டது. (11:19–26) சீஷர்கள் ஸ்தேவான் நிமித்தமாய் எழும்பின உபத்திரவத்தினாலே சிதறப்பட்டபோது சிலர், அசுத்தமான வணக்கத்துக்கும் ஒழுக்கச் சீர்க்குலைவுக்கும் பேர்போனதாயிருந்த சீரியாவிலுள்ள அந்தியோகியாவுக்குப் போனார்கள். அங்கே கிரேக்க மொழி பேசும் ஆட்களிடம் நற்செய்தியைப் பேசியபோது “யெகோவாவுடைய (NW) கரம் அவர்களோடே இருந்தது,” அநேகர் விசுவாசிகளானார்கள். பர்னபாவும் சவுலும் அங்கே ஒரு வருஷகாலமாய் உபதேசம் பண்ணினார்கள். மேலும் “முதல் முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று.” அவர்கள் அவ்விதமாக அழைக்கப்பட வேண்டும் என்பது யெகோவாவின் கட்டளையாக இருந்தது. ஏனென்றால் கிரேக்க வார்த்தை கிரிமேட்டிசோ என்பது “தெய்வீக அருளினால் அழைக்கப்படுவது” என்று பொருள்படுகிறது, அது எப்பொழுதும் கடவுளிடமிருந்து வருகிறவற்றின் சம்பந்தமாக வேதப்பூர்வமாக பயன்படுத்தப்படுகிறது.
20. அகபு முன்னறிவித்தது என்ன? அந்தியோகியா சபை எவ்விதமாகப் பிரதிபலித்தது?
20 கடவுள் பயமுள்ள தீர்க்கதரிசிகளும்கூட எருசலேமிலிருந்து அந்தியோகியாவுக்கு வந்தார்கள். (11:27–30) அவர்களில் ஒருவன் அகபு என்பவன். இவன் “உலகமெங்கும் கொடிய பஞ்சம் உண்டாகும் என்று ஆவியானவராலே அறிவித்தான்.” தீர்க்கதரிசனம் ரோம பேரரசனாகிய கிலவுதியுவின் ஆட்சிகாலத்தில் (பொ.ச. 41–54) நிறைவேறியது. சரித்திராசிரியன் ஜோசிஃபஸ் இந்த “மகா கொடிய பஞ்சத்தைப்” பற்றி குறிப்பிடுகிறான். (யூத தொன்மை நிகழ்ச்சிகள், XX, 51 [II, 5]; XX, 101 [V, 2]) அந்தியோகியா சபை அன்பினால் உந்தப்பட்டு, யூதேயாவிலே தேவையிலிருந்த சகோதரர்களுக்கு பண உதவியை அனுப்பினார்கள்.—யோவான் 13:35.
துன்புறுத்தல் பயனற்றுப் போகிறது
21. முதலாம் ஏரோது அகிரிப்பா பேதுருவுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்தான்? ஆனால் என்ன விளைவோடு?
21 முதலாம் ஏரோது அகிரிப்பா எருசலேமில் யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்களைத் துன்புறுத்த ஆரம்பித்தபோது சமாதான காலம் முடிவுக்கு வந்தது. (12:1–11) ஏரோது யாக்கோபைப் பட்டயத்தினால் கொலைசெய்தான். உயிர்த்தியாகியான முதல் அப்போஸ்தலனாக, அவன் தலை வெட்டப்பட்டிருக்க வேண்டும். இது யூதருக்குப் பிரியமாயிருந்ததைக் கண்டு ஏரோது பேதுருவைச் சிறைச்சாலையில் வைத்தான். அப்போஸ்தலன் இரண்டு பக்கங்களும் இரு சேவகரோடு சங்கிலியால் கட்டப்பட்டிருக்க, இரண்டு சேவகர் கதவுக்கு முன்னிருந்து சிறைச்சாலையைக் காத்துக்கொண்டிருந்தார்கள். ஏரோது பஸ்காவுக்கும் புளிப்பில்லா அப்பப் பண்டிகைக்கும் பின்பு (நிசான் 14–21) அவனை கொலைசெய்யலாம் என்று திட்டமிட்டிருந்தான், ஆனால் அடிக்கடி நம்முடைய ஜெபங்களுக்கு ஏற்படுவது போலவே அவனுக்காக சபையார் செய்த ஜெபங்கள் சரியான நேரத்தில் பதிலளிக்கப்பட்டன. கடவுளுடைய தூதன் அற்புதமாக அப்போஸ்தலனை விடுவித்தபோது இது சம்பவித்தது.
22. பேதுரு மாற்குவின் தாய் மரியாளின் வீட்டுக்குச் சென்றபோது என்ன நடந்தது?
22 பேதுரு விரைவிலேயே ஒருவேளை கிறிஸ்தவ கூட்டங்கள் நடைபெறும் இடமாகிய மரியாளின் வீட்டுக்கு (யோவான் மாற்குவின் தாய்) வந்துசேர்ந்தான். (12:12–19) இருட்டில் ரோதை என்ற வேலைக்காரப் பெண், பேதுருவின் குரலை அறிந்துகொண்டாள், ஆனால் பூட்டப்பட்டக் கதவைத் திறவாதிருந்தாள். முதலில் சீஷர்கள் கடவுள், பேதுருவை பிரதிநிதித்துவம் செய்து அவனுடைய குரலில் பேசுகின்ற ஒரு தேவதூதனை அனுப்பியிருக்கிறார் என்பதாக நினைத்திருக்கக்கூடும். ஆனால் பேதுருவை அவர்கள் உள்ளே வர அனுமதித்த போது அவன் தான் காவலிலிருந்து விடுதலையானதை யாக்கோபுக்கும் சகோதரர்களுக்கும் (ஒருவேளை மூப்பர்கள்) அறிவிக்கும்படியாக அவர்களுக்குச் சொன்னான். அவன் பிற்பாடு புறப்பட்டு தான் செல்லவிருக்கும் இடத்தைத் தெரிவிக்காமலே தலைமறைவாகிவிட்டான். குறுக்கு விசாரணை வருகையில் அவர்களுக்கோ தனக்கோ ஆபத்து நேரிடுவதைத் தவிர்ப்பதற்காக இப்படிச் செய்தான். பேதுருவைத் தேட ஏரோது செய்த முயற்சி தோல்வியடைந்தது. காவற்காரர் தண்டிக்கப்பட்டு ஒருவேளை கொலைசெய்யப்பட்டிருக்கவும்கூடும்.
23. முதலாம் ஏரோது அகிரிப்பாவின் ஆட்சி எப்படி முடிவுக்கு வந்தது? இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
23 பொ.ச. 44-ல் முதலாம் ஏரோது அகிரிப்பா 54 வயதாயிருக்கையில் அவன் ஆட்சி திடீரென்று செசரியாவில் ஒரு முடிவுக்கு வந்தது. (12:20–25) அவன் தீரியருக்கும் சீதோனியருக்கும் விரோதமாகப் போர் செய்யும் மனநிலையிலிருந்தான். இவர்களோ சமாதானம் பண்ணிக்கொள்வதற்காக, அவனை நேரில் பார்க்க ஏற்பாடு செய்யும்படியாக அவனுடைய வீட்டு விசாரணைக்காரனாகிய பிலாஸ்துவுக்கு இலஞ்சம் கொடுத்தார்கள். “குறித்தநாளிலே” (கிலவுதியு இராயனை கனம் பண்ணும் ஒரு விழாநாளுங்கூட) ஏரோது ராஜவஸ்திரம் தரித்துக்கொண்டு, சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்து, அவர்களுக்குப் பிரசங்கம் பண்ண ஆரம்பித்தான். அப்பொழுது ஜனங்கள் “இது மனுஷ சத்தமல்ல, இது தேவசத்தம்” என்பதாக ஆர்ப்பரித்தார்கள். உடனே, யெகோவாவின் தூதன் அவனை அடித்தான், ஏனென்றால் “அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்த”வில்லை. ஏரோது “புழுப்புழுத்து இறந்தான்.” தொடர்ந்து யெகோவாவுக்குப் பயப்படுகிற பயத்தில் நடந்து, பெருமையை விட்டொழித்து அவருடைய மக்களாக நாம் செய்கிறவற்றிற்கு அவருக்கு மகிமையைக் கொடுக்க இந்த எச்சரிப்பான உதாரணம் நம்மைத் தூண்டட்டும்.
24. வளர்ச்சியின் சம்பந்தமாக அடுத்த கட்டுரை என்ன காண்பிக்கும்?
24 ஏரோதின் துன்புறுத்தலின் மத்தியிலும் “யெகோவாவின் வசனம் வளர்ந்து பெருகிற்று.” உண்மையில் அடுத்த கட்டுரை காண்பிக்கப்போகும் வண்ணம், சீஷர்கள் கூடுதலான வளர்ச்சியை எதிர்ப்பார்த்திருக்கலாம். ஏன்? ஏனென்றால் அவர்கள் “யெகோவாவுக்குப் (NW) பயப்படுகிற பயத்தில்” நடந்தார்கள். (w90 6/1)
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻கடவுளுடைய ஊழியரில் அநேகர் அன்று முதல் இருந்ததுபோல ஸ்தேவான் எவ்விதமாக தான் யெகோவாவுக்குப் பயந்தவன் என்பதைக் காண்பித்தான்?
◻ஸ்தேவானின் மரணம் ராஜ்ய–பிரசங்கிப்பு வேலையின் மீது என்ன பாதிப்பைக் கொண்டிருந்தது? இதற்கு நவீன–நாளைய இணைப்பொருத்தம் உண்டா?
◻துன்பப்படுத்துகிறவனான தர்சு பட்டணத்துச் சவுல் எவ்விதமாக யெகோவாவுக்குப் பயப்படுகிறவனானான்?
◻புறஜாதிகளில் முதல் விசுவாசிகளானவர்கள் யார்?
◻துன்புறுத்தல் யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்களை தடுத்து நிறுத்துவதில்லை என்பதை அப்போஸ்தலர் 12-ம் அதிகாரம் எவ்விதம் காண்பிக்கிறது?
[பக்கம் 12,13-ன் படம்]
வானத்திலிருந்து ஓர் ஒளி பிரகாசித்து ஒரு சத்தம் கேட்டது: “சவுலே, சவுலே நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்?”