2 சாமுவேல்
10 பின்பு அம்மோனியர்களின்+ ராஜா இறந்துபோனார், அடுத்ததாக அவருடைய மகன் ஆனூன் ராஜாவானான்.+ 2 அப்போது தாவீது, “நாகாஸ் எனக்கு மாறாத அன்பு காட்டியதுபோல் நானும் அவருடைய மகன் ஆனூனுக்கு மாறாத அன்பு காட்டுவேன்” என்று சொன்னார். அதனால், அவனுக்கு ஆறுதல் சொல்ல தன்னுடைய ஊழியர்களை அனுப்பிவைத்தார். தாவீதின் ஊழியர்கள் அம்மோனியர்களின் தேசத்துக்குப் போனார்கள். 3 அப்போது அந்தத் தேசத்தின் தலைவர்கள் ஆனூன் ராஜாவிடம், “தாவீது ஆறுதல் சொல்வதற்காக ஆட்களை அனுப்பியிருக்கிறானே, அது உங்கள் அப்பா மீதிருக்கிற மரியாதையால் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். நகரத்தை ஆராய்ந்து உளவு பார்ப்பதற்காகவும், பின்பு அதை அழிப்பதற்காகவும்தான் இவர்களை அனுப்பியிருக்கிறான்” என்று சொன்னார்கள். 4 அதனால், ஆனூன் தாவீதுடைய ஊழியர்களைப் பிடித்து ஒருபக்க தாடியைச் சிரைத்தான்,+ அவர்களுடைய அங்கிகளை இடுப்புக்குக் கீழே வெட்டிவிட்டு அவர்களைத் துரத்தியடித்தான். 5 இந்த விஷயம் தாவீதுக்குத் தெரிவிக்கப்பட்டவுடனே, அவர்களைச் சந்திக்க ஆட்களை அனுப்பினார். ஏனென்றால், அவர்கள் மிகவும் அவமானப்படுத்தப்பட்டிருந்தார்கள். “தாடி வளரும்வரை எரிகோவில்+ தங்கிவிட்டு, பின்பு திரும்பி வாருங்கள்” என்று ராஜா அவர்களிடம் சொல்லச் சொன்னார்.
6 அதன் பின்பு, தாங்கள் தாவீதின் வெறுப்புக்கு ஆளாகிவிட்டதை அம்மோனியர்கள் புரிந்துகொண்டார்கள். அதனால், பெத்-ரேகோபிலிருந்தும்+ சோபாவிலிருந்தும்+ சீரியர்களைக் கூலி கொடுத்து வரவழைத்தார்கள்; 20,000 காலாட்படையினர் வந்தார்கள். மாக்காவின்+ ராஜாவையும் 1,000 வீரர்களையும் இஷ்தோப்பிலிருந்து* 12,000 வீரர்களையும் வரவழைத்தார்கள்.+ 7 தாவீது இதைக் கேள்விப்பட்டபோது, யோவாபின் தலைமையில் முழு படையையும் தலைசிறந்த வீரர்களையும் அனுப்பினார்.+ 8 அம்மோனியர்கள் வெளியே வந்து தங்களுடைய நகரத்தின் நுழைவாசலில் அணிவகுத்து நின்றார்கள்; ஆனால், சோபாவையும் ரேகோபையும் சேர்ந்த சீரியர்களும், இஷ்தோப்* மற்றும் மாக்காவைச் சேர்ந்த வீரர்களும் இன்னொரு அணியாக வெட்டவெளியில் நின்றார்கள்.
9 முன்னாலிருந்தும் பின்னாலிருந்தும் எதிரிகள் தன்னைத் தாக்க வருவதை யோவாப் பார்த்தார், அதனால் இஸ்ரவேலர்களில் மிகச் சிறந்த வீரர்கள் சிலரைத் தேர்ந்தெடுத்து சீரியர்களோடு போர் செய்வதற்காக அவர்களை அணிவகுத்து நிற்க வைத்தார்.+ 10 அம்மோனியர்களோடு+ போர் செய்வதற்காக மற்ற வீரர்களைத் தன்னுடைய சகோதரன் அபிசாயின்+ தலைமையில் அணிவகுத்து நிற்க வைத்தார். 11 யோவாப் அபிசாயிடம், “சீரியர்களை என்னால் சமாளிக்க முடியவில்லை என்றால், நீ வந்து எனக்கு உதவி செய். அம்மோனியர்களை உன்னால் சமாளிக்க முடியவில்லை என்றால், நான் வந்து உனக்கு உதவி செய்கிறேன். 12 நம்முடைய மக்களையும் நம்முடைய கடவுளின் நகரங்களையும் பாதுகாப்பதற்காகத் தைரியத்தோடும் உறுதியோடும்+ போர் செய்வோம். யெகோவா தன்னுடைய பங்கில் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வார்”+ என்று சொன்னார்.
13 யோவாபும் அவரோடு இருந்த வீரர்களும் சீரியர்களோடு போர் செய்ய முன்னேறிப் போனார்கள், அப்போது சீரியர்கள் அங்கிருந்து தலைதெறிக்க ஓடினார்கள்.+ 14 சீரியர்கள் தப்பித்து ஓடியதை அம்மோனியர்கள் பார்த்ததும், அவர்களும் அபிசாயிடமிருந்து பின்வாங்கி நகரத்துக்குள் ஓடிப்போனார்கள். இதற்குப் பின்பு, யோவாப் எருசலேமுக்குத் திரும்பினார்.
15 இஸ்ரவேலர்களிடம் தோற்றுப்போன சீரியர்கள் மறுபடியும் படை திரட்டினார்கள்.+ 16 அதற்காக ஆற்றுப்பகுதிக்கு* பக்கத்தில்+ குடியிருந்த சீரியர்களை ஆதாதேசர்+ வரவழைத்தான். ஆதாதேசரின் படைத் தளபதியான சோபாக்கின் தலைமையில் ஈலாம் என்ற இடத்துக்கு அவர்கள் வந்தார்கள்.
17 தாவீதுக்கு இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டது, உடனே அவர் இஸ்ரவேல் வீரர்கள் எல்லாரையும் ஒன்றுதிரட்டி, யோர்தானைக் கடந்து ஈலாமுக்கு வந்தார். சீரியர்கள் தாவீதுக்கு எதிராக அணிவகுத்து நின்று, அவரை எதிர்த்துப் போர் செய்தார்கள்.+ 18 ஆனால், சீரியர்கள் இஸ்ரவேலர்களிடம் தோற்றுப்போய் ஓடினார்கள். சீரியர்களுடைய 700 ரதவீரர்களையும் 40,000 குதிரைவீரர்களையும் தாவீது கொன்றுபோட்டார். அவர்களுடைய படைத் தளபதியான சோபாக்கையும் கொன்றுபோட்டார்; அவன் அங்கே செத்துப்போனான்.+ 19 ஆதாதேசரின் ஊழியர்களாக இருந்த ராஜாக்கள் எல்லாரும் இஸ்ரவேலர்களிடம் தோற்றுப்போனதால் அவர்கள் உடனடியாக இஸ்ரவேலர்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்து, அவர்களுக்கு அடிபணிந்தார்கள்.+ அதன் பின்பு, அம்மோனியர்களுக்கு உதவி செய்ய சீரியர்கள் பயந்தார்கள்.