2 சாமுவேல்
9 பின்பு தாவீது, “சவுலின் குடும்பத்தில் இன்னும் யாராவது உயிரோடு இருக்கிறார்களா? நான் அவர்களுக்கு மாறாத அன்பு காட்ட வேண்டும். யோனத்தானுக்காக அப்படிச் செய்ய விரும்புகிறேன்”+ என்று சொன்னார். 2 சீபா+ என்பவன் சவுலின் வீட்டில் வேலைக்காரனாக இருந்தான். அவனை தாவீதிடம் கூட்டிக்கொண்டு வந்தார்கள். ராஜா அவனிடம், “நீதான் சீபாவா?” என்று கேட்டார். அதற்கு அவன், “உங்கள் வேலைக்காரனாகிய சீபா நான்தான்” என்று சொன்னான். 3 ராஜா அவனிடம், “சவுலின் குடும்பத்தில் இன்னும் யாராவது உயிரோடு இருக்கிறார்களா? கடவுள் காட்டுவது போல நானும் அவர்களுக்கு மாறாத அன்பு காட்ட வேண்டும்” என்று சொன்னார். சீபா அவரிடம், “யோனத்தானின் மகன் ஒருவர் இருக்கிறார். அவருக்கு இரண்டு கால்களும் ஊனம்”+ என்று சொன்னான். 4 அதற்கு ராஜா, “அவன் எங்கே இருக்கிறான்?” என்று கேட்டார். அதற்கு சீபா, “அவர் லோ-தேபாரில் குடியிருக்கிறார், அம்மியேலின் மகனான மாகீரின்+ வீட்டில் இருக்கிறார்” என்று சொன்னான்.
5 உடனே தாவீது ராஜா ஆள் அனுப்பி, லோ-தேபாரில் அம்மியேலின் மகனான மாகீரின் வீட்டிலிருந்து அவரைக் கூட்டிக்கொண்டு வந்தார். 6 சவுலின் பேரனும் யோனத்தானின் மகனுமாகிய மேவிபோசேத் தாவீதின் முன்னால் சாஷ்டாங்கமாய் விழுந்தார். அப்போது தாவீது, “மேவிபோசேத்!” என்று கூப்பிட்டார். அதற்கு அவர், “சொல்லுங்கள், எஜமானே” என்று சொன்னார். 7 தாவீது அவரிடம், “பயப்படாதே, உன் அப்பா யோனத்தானுக்காக நான் உனக்கு மாறாத அன்பு காட்டுவேன்.+ உன் தாத்தா சவுலுக்குச் சொந்தமான எல்லா நிலங்களையும் திருப்பித் தருவேன். இனி எப்போதும் நீ என் மேஜையில் சாப்பிட வேண்டும்”+ என்று சொன்னார்.
8 அப்போது அவர் சாஷ்டாங்கமாய் விழுந்து, “இந்தச் செத்த நாய்க்குப்+ போய்க் கருணை காட்டுகிறீர்களே, எனக்கு என்ன தகுதி இருக்கிறது?” என்று கேட்டார். 9 ராஜா உடனே சவுலின் வேலைக்காரன் சீபாவை வரவழைத்து, “இறந்துபோன உன் எஜமான் சவுலுக்கும் அவருடைய குடும்பத்துக்கும் சொந்தமான எல்லாவற்றையும் அவருடைய பேரனிடம் கொடுக்கிறேன்.+ 10 நீயும் உன் மகன்களும் உன் வேலைக்காரர்களும் அவனுடைய நிலத்தில் பயிர்செய்ய வேண்டும். உன் எஜமானுடைய பேரனின் குடும்பம் சாப்பிடுவதற்காக விளைச்சலைக் கொடுக்க வேண்டும். ஆனால், உன் எஜமானுடைய பேரன் மேவிபோசேத் இனிமேல் என் மேஜையில்தான் சாப்பிடுவான்”+ என்று சொன்னார்.
சீபாவுக்கு 15 மகன்களும் 20 வேலைக்காரர்களும் இருந்தார்கள்.+ 11 அதற்கு சீபா, “ராஜாவே, நீங்கள் கட்டளை போட்டபடியெல்லாம் அடியேன் செய்வேன்” என்று சொன்னான். இளவரசர்களில் ஒருவரைப் போல மேவிபோசேத்தும் தாவீதின்* மேஜையில் சாப்பிட்டார். 12 மேவிபோசேத்துக்கு ஒரு மகன் இருந்தான், அந்தச் சிறுவனின் பெயர் மிக்கா.+ சீபாவின் வீட்டிலிருந்த எல்லாரும் மேவிபோசேத்துக்கு வேலைக்காரர்களாக ஆனார்கள். 13 இரண்டு கால்களும் ஊனமாக இருந்த+ மேவிபோசேத் எருசலேமில் குடியிருந்தார். அவர் தினமும் ராஜாவின் மேஜையில் சாப்பிட்டார்.+