லூக்கா எழுதியது
14 ஓர் ஓய்வுநாளில், பரிசேயர்களின் தலைவன் ஒருவனுடைய வீட்டுக்கு விருந்து சாப்பிட இயேசு போனார். அங்கிருந்தவர்கள் அவரைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார்கள். 2 நீர்க்கோவை நோயால்* பாதிக்கப்பட்ட ஒருவன் அவருக்கு முன்னால் இருந்தான். 3 அந்தச் சமயத்தில், திருச்சட்ட வல்லுநர்களிடமும் பரிசேயர்களிடமும், “ஓய்வுநாளில் குணமாக்குவது சரியா இல்லையா?”+ என்று இயேசு கேட்டார். 4 அவர்கள் ஒன்றும் பேசவில்லை. அப்போது, அவர் அந்த மனிதனைத் தொட்டு, குணமாக்கி அனுப்பினார். 5 பின்பு அவர்களிடம், “ஓய்வுநாளில் உங்களுடைய பிள்ளையோ காளையோ கிணற்றில் விழுந்தால்,+ அதை உடனே தூக்கிவிட மாட்டீர்களா?”+ என்று கேட்டார். 6 அதற்கு அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.
7 விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் மிக முக்கியமான இடங்களைத் தேர்ந்தெடுப்பதை+ அவர் கவனித்தபோது அவர்களுக்கு ஓர் உவமையைச் சொன்னார்; 8 “யாராவது உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்தால், மிக முக்கியமான இடத்தில் போய் உட்காராதீர்கள்.+ ஏனென்றால், உங்களைவிட முக்கியமான நபரும் அழைக்கப்பட்டிருக்கலாம். 9 உங்களையும் அவரையும் அழைத்தவர் உங்களிடம் வந்து, ‘இவருக்கு இந்த இடத்தைக் கொடுங்கள்’ என்று சொல்வார். அப்போது, நீங்கள் அவமானத்தோடு கடைசி இடத்துக்குப் போக வேண்டியிருக்கும். 10 அதனால் நீங்கள் அழைக்கப்பட்டிருந்தால், கடைசி இடத்தில் போய் உட்காருங்கள்; உங்களை அழைத்தவர் வந்து, ‘நண்பரே, முன்னால் வந்து உட்காருங்கள்’ என்று சொல்வார். அப்போது, மற்ற விருந்தினர்கள்முன் உங்களுக்குக் கெளரவமாக இருக்கும்.+ 11 தன்னைத்தானே உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத்தானே தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்”+ என்றார்.
12 பின்பு, தன்னை விருந்துக்கு அழைத்தவரிடம், “நீங்கள் மத்தியானத்தில் அல்லது சாயங்காலத்தில் விருந்து கொடுக்கும்போது, உங்கள் நண்பர்களையோ சகோதரர்களையோ சொந்தக்காரர்களையோ அக்கம்பக்கத்தில் இருக்கிற பணக்காரர்களையோ அழைக்காதீர்கள். அப்படி அழைத்தால் ஒருவேளை பதிலுக்கு அவர்களும் உங்களை எப்போதாவது அழைக்கலாம். அது உங்களுக்குக் கைமாறு செய்வதுபோல் ஆகிவிடும். 13 அதனால் விருந்து கொடுக்கும்போது, ஏழைகளையும் உடல் ஊனமானவர்களையும் கால் ஊனமானவர்களையும் பார்வை இல்லாதவர்களையும் அழையுங்கள்.+ 14 அப்போது சந்தோஷப்படுவீர்கள். ஏனென்றால், உங்களுக்குக் கைமாறு செய்ய அவர்களிடம் ஒன்றும் இருக்காது. ஆனால், நீதிமான்கள் உயிரோடு எழுப்பப்படும்போது+ உங்களுக்குக் கைமாறு கிடைக்கும்” என்று சொன்னார்.
15 இதையெல்லாம் கேட்ட விருந்தாளிகளில் ஒருவர் அவரிடம், “கடவுளுடைய அரசாங்கத்தில் விருந்து சாப்பிடுகிறவன் சந்தோஷமானவன்” என்று சொன்னார்.
16 அதற்கு இயேசு அவரிடம்: “ஒரு மனுஷர் பெரிய விருந்தை ஏற்பாடு செய்து+ நிறைய பேரை அழைத்தார். 17 விருந்துக்கு நேரமானபோது, அவர் தன்னுடைய அடிமையைக் கூப்பிட்டு, ‘“எல்லாம் தயாராக இருக்கிறது, வாருங்கள்” என அழைக்கப்பட்டவர்களிடம் போய்ச் சொல்’ என்றார். 18 ஆனால், அவர்கள் எல்லாருமே சாக்குப்போக்கு சொல்ல ஆரம்பித்தார்கள்.+ முதலில் ஒருவன், ‘நான் ஒரு வயல் வாங்கியிருக்கிறேன். அதைப் போய்ப் பார்க்க வேண்டும், தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள்’ என்று சொன்னான். 19 மற்றொருவன், ‘ஐந்து ஜோடி ஏர்மாடுகளை வாங்கியிருக்கிறேன். அவற்றைச் சோதித்துப் பார்க்கப் போகிறேன், தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள்’+ என்று சொன்னான். 20 இன்னொருவனோ, ‘எனக்கு இப்போதுதான் கல்யாணம் ஆகியிருக்கிறது. அதனால் நான் வர முடியாது’ என்று சொன்னான். 21 அந்த அடிமை வந்து நடந்ததையெல்லாம் வீட்டு எஜமானிடம் சொன்னான். அப்போது அந்த எஜமான் பயங்கர கோபத்தில் தன் அடிமையிடம், ‘நீ நகரத்தில் இருக்கிற முக்கியத் தெருக்களுக்கும் வீதிகளுக்கும் சீக்கிரமாகப் போய், ஏழைகளையும் உடல் ஊனமானவர்களையும் பார்வை இல்லாதவர்களையும் கால் ஊனமானவர்களையும் இங்கே கூட்டிக்கொண்டு வா’ என்று சொன்னார். 22 பின்பு அந்த அடிமை அவரிடம் வந்து, ‘எஜமானே, நீங்கள் சொன்னபடியே செய்துவிட்டேன், ஆனால் இன்னமும் இடம் இருக்கிறது’ என்று சொன்னான். 23 அப்போது எஜமான் அந்த அடிமையிடம், ‘நீ சாலைகளுக்கும் சந்துகளுக்கும் போய், என் வீடு நிரம்பும் அளவுக்கு ஆட்களை வற்புறுத்திக் கூட்டிக்கொண்டு வா.+ 24 முதலில் அழைக்கப்பட்ட யாரும் நான் கொடுக்கிற விருந்தைச் சாப்பிடப்போவதில்லை என்று உங்கள் எல்லாருக்கும் சொல்கிறேன்’+ என்றார்.”
25 மக்கள் கூட்டம் கூட்டமாக இயேசுவோடு பயணம் செய்துகொண்டிருந்தார்கள். அப்போது அவர் அவர்களைத் திரும்பிப் பார்த்து, 26 “என்னிடம் வருகிற ஒருவன் தன் அப்பாவையும் அம்மாவையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும், ஏன், தன் உயிரையும்கூட வெறுக்கவில்லை* என்றால்+ அவன் என்னுடைய சீஷனாக இருக்க முடியாது.+ 27 சித்திரவதைக் கம்பத்தை* சுமந்துகொண்டு என்னைப் பின்பற்றி வராத எவனும் என்னுடைய சீஷனாக இருக்க முடியாது.+ 28 உதாரணத்துக்கு, உங்களில் யாராவது ஒரு கோபுரம் கட்ட விரும்பினால், அதைக் கட்டி முடிக்க தனக்குப் போதுமான வசதி இருக்கிறதா என்று முதலில்* செலவைக் கணக்கு பார்க்காமல் இருப்பானா? 29 அப்படிச் செய்யாவிட்டால், அஸ்திவாரம் போட்ட பிறகு, அவனால் அதைக் கட்டி முடிக்க முடியாமல் போய்விடும். பார்ப்பவர்கள் எல்லாரும், 30 ‘இந்த மனுஷன் கட்ட ஆரம்பித்தான், ஆனால் முடிக்க முடியவில்லை’ என்று சொல்லி அவனைக் கேலி செய்வார்கள். 31 எந்த ராஜாவாவது போருக்குப் போகும்போது, தனக்கு எதிராக 20,000 படைவீரர்களோடு வருகிற ராஜாவைத் தன்னுடைய 10,000 படைவீரர்களோடு ஜெயிக்க முடியுமா, முடியாதா என்று முதலில்* கலந்தாலோசிக்காமல் இருப்பாரா? 32 அவரால் ஜெயிக்க முடியாது என்று தெரிந்தால், எதிரி தூரத்தில் வரும்போதே தன்னுடைய தூதுவர் குழுவை அனுப்பி, சமாதானம் செய்துகொள்ளப் பார்ப்பார், இல்லையா? 33 அதுபோலவே, உங்களில் யாராவது தன் உடைமைகள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வரவில்லை என்றால், அவன் நிச்சயமாகவே என்னுடைய சீஷனாக இருக்க முடியாது.+
34 உப்பு நல்லதுதான். ஆனால், உப்பு அதன் சுவையை இழந்தால், எதை வைத்து அதற்கு மறுபடியும் சுவை சேர்க்க முடியும்?+ 35 அது நிலத்துக்கும் பயன்படாது, உரத்துக்கும் பயன்படாது. மக்கள் அதை வெளியில்தான் கொட்டுவார்கள். கேட்பதற்குக் காதுள்ளவன் கவனித்துக் கேட்கட்டும்”+ என்று சொன்னார்.