எபிரெயருக்குக் கடிதம்
5 மனிதர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிற ஒவ்வொரு தலைமைக் குருவும், மனிதர்கள் சார்பில் கடவுளுக்குச் சேவை செய்ய நியமிக்கப்படுகிறார்;+ பாவங்களுக்காகக் காணிக்கைகளையும் பலிகளையும் அவர் கொடுக்கிறார்.+ 2 அதோடு, தனக்கும் பலவீனங்கள் இருப்பதை அவர் உணர்ந்திருப்பதால், தெரியாமல் தவறு செய்கிறவர்களிடம்* கரிசனையோடு* நடந்துகொள்கிறார். 3 மக்களுடைய பாவங்களுக்காக அவர் பலி கொடுப்பது போல, தன்னுடைய பாவங்களுக்காகவும் பலி கொடுக்க வேண்டும்.+
4 மதிப்புள்ள இந்தப் பொறுப்பை ஒருவரும் தானாகப் பெற முடியாது; ஆரோனைப்+ போல் கடவுளால் அழைக்கப்பட்டால்தான் இதைப் பெற முடியும். 5 அதேபோல், கிறிஸ்துவும் தன்னைத் தானே தலைமைக் குருவாக்கிக்கொள்வதன் மூலம் தன்னை மகிமைப்படுத்திக்கொள்ளவில்லை;+ “நீ என்னுடைய மகன்; இன்று நான் உனக்குத் தகப்பனாக ஆனேன்”+ என்று அவரிடம் சொன்னவர்தான் அவரை மகிமைப்படுத்தினார். 6 வேறொரு வசனத்தில், “மெல்கிசேதேக்கைப் போலவே நீ என்றென்றும் குருவாக இருக்கிறாய்” என்று அவர் சொல்லியிருக்கிறார்.+
7 கிறிஸ்து இந்தப் பூமியில் வாழ்ந்தபோது, தன்னை மரணத்திலிருந்து காப்பாற்ற முடிந்தவரிடம் கண்ணீர்விட்டுக் கதறி, மன்றாட்டுகளையும் விண்ணப்பங்களையும் ஏறெடுத்தார்;+ அவருடைய பயபக்தியின் காரணமாகக் கடவுள் அவருடைய ஜெபத்தைக் கேட்டார். 8 அவர் கடவுளுடைய மகனாக இருந்தாலும் தான் பட்ட கஷ்டங்களின் மூலம் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்.+ 9 இப்படி அவர் பரிபூரணமாக்கப்பட்ட பின்பு,+ தனக்குக் கீழ்ப்படிகிற எல்லாருக்கும் நிரந்தர மீட்பு கிடைப்பதற்குக் காரணமானார்.+ 10 மெல்கிசேதேக்கைப் போலவே தலைமைக் குருவாக இருக்கும்படி கடவுள் அவரை நியமித்திருக்கிறார்.+
11 அவரைப் பற்றிச் சொல்வதற்கு நிறைய இருக்கிறது; ஆனால், காதுகொடுத்துக் கேட்பதில் நீங்கள் மந்தமாக இருப்பதால் அதை விளக்கிச் சொல்வது கஷ்டம். 12 இதற்குள்* நீங்கள் போதகர்களாகியிருக்க வேண்டும். ஆனால், கடவுளுடைய பரிசுத்த வார்த்தைகளில் இருக்கிற அடிப்படை விஷயங்களை+ ஆரம்பத்திலிருந்து மறுபடியும் சொல்லிக்கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறீர்கள். திட உணவு சாப்பிடுகிறவர்களாக அல்ல, திரும்பவும் பால் குடிக்கிறவர்களாகவே ஆகியிருக்கிறீர்கள். 13 பாலையே குடித்துக்கொண்டிருக்கிற எல்லாரும் குழந்தைகள் என்பதால், கடவுளுடைய நீதியான வார்த்தையைப் பற்றித் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.+ 14 திட உணவோ முதிர்ச்சியுள்ளவர்களுக்கே உரியது; சரி எது, தவறு எது என்பதைப் பிரித்துப் பார்க்க தங்களுடைய பகுத்தறியும் திறன்களைப் பயன்படுத்திப் பயிற்றுவித்திருக்கிற ஆட்களுக்கே உரியது.