பைபிள் நியமங்களைப் பின்பற்றுவீர், வாழ்வில் திருப்தி காண்பீர்!
ஒரு பூனை கால்களைக் குறுக்கிக்கொண்டு, சுருண்டு படுத்து, ‘மியாவ்’ என்று சன்னமாகக் குரல்கொடுத்து தன் திருப்தியை வெளிக்காட்டுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதை மாதிரி நம்மாலும் திருப்தியோடு இருக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! ஆனால், அநேகருக்குத் திருப்தி என்பது தேடினாலும் கிடைப்பதில்லை, கிடைத்தாலும் நிலைப்பதில்லை. ஏன் இப்படி?
அபூரணத்தின் காரணமாக நாம் அடிக்கடி தவறுகள் செய்கிறோம், அதோடு, பிறருடைய தவறுகளையும் பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதுமட்டுமல்ல, ‘கடைசி நாட்கள்’ என்று பைபிள் குறிப்பிடுகிற ஒரு காலப்பகுதியில் நாம் வாழ்ந்து வருகிறோம். இவை, “கையாளுவதற்குக் கடினமான கொடிய காலங்களாக” இருக்கின்றன. (2 தீமோத்தேயு 3:1-5, NW) பிள்ளைப் பருவத்தில் திருப்தியாகத் துள்ளித் திரிந்த இனிய தருணங்களை நாம் ஆசை ஆசையாக நினைத்துப் பார்க்கிறோம். என்றாலும் இப்பொழுது இந்தக் ‘கொடிய காலங்களில்’ நாம் பயங்கரமான அழுத்தங்களை எதிர்ப்படுகிறோம். அப்படியிருக்கையில், இந்தக் காலத்திலும் திருப்தியோடு வாழ்வது சாத்தியமா?
இந்தக் கொடிய காலங்களைக் கையாளவே முடியாதென சொல்வதற்குப் பதிலாக அவற்றைக் கையாளுவது கடினமாயிருக்கும் என்று பைபிள் சொல்வதைக் கவனியுங்கள். பைபிள் நியமங்களைப் பின்பற்றும்போது அவற்றை நம்மால் கையாள முடியும். ஒருவேளை எல்லா சமயத்திலும் நம்மால் பிரச்சினைகளைச் சரிசெய்ய முடியாமல் போகலாம். இருந்தாலும், நாம் ஓரளவு திருப்தியைப் பெற முடியும். இப்பொழுது அத்தகைய பைபிள் நியமங்களில் மூன்றை நாம் ஆராயலாம்.
எதார்த்தமான கண்ணோட்டம்
வாழ்க்கையில் திருப்தி காண, நம்முடைய வரையறைகளையும் பிறருடைய வரையறைகளையும் குறித்ததில் எதார்த்தமான கண்ணோட்டம் அவசியம். ரோமர்களுக்கு எழுதிய கடிதத்தில் அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு குறிப்பிட்டார்: ‘எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாக ஆனார்கள்.’ (ரோமர் 3:23) யெகோவாவுடைய மகிமையின் பல அம்சங்கள் நம் அறிவுக்கு எட்டாதவை. ஆதியாகமம் 1:31-ல் உள்ள விஷயம் இதற்கு ஓர் உதாரணம்: “தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது.” தாம் உண்டாக்கியவற்றை அவர் நினைத்துப் பார்க்கும்போதெல்லாம் “அது மிகவும் நன்றாயிருந்தது” என்றே அவரால் சொல்ல முடிகிறது. எந்த மனிதனாலும் அப்படி எல்லா சமயங்களிலும் சொல்ல முடியாது. திருப்தியைக் காண்பதற்கு முதலாவது நம்முடைய வரையறைகளை உணர்ந்திருப்பது அவசியம். அதோடு, ஒரு விஷயத்தில் யெகோவாவின் கண்ணோட்டத்தைப் புரிந்துகொண்டு, அதை ஏற்றுக்கொள்வதும் அவசியம்.
“பாவம்” என மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தையின் வேர்ச்சொல், “குறியைத் தவறவிடு” என்ற அர்த்தத்தைத் தருகிறது. இதை இப்படி விளக்கலாம்: குறி பார்த்து அம்பு எய்யும் போட்டியில் பரிசைத் தட்டிச் செல்ல விரும்பும் ஒரு வில் வீரனைக் கற்பனை செய்து பாருங்கள். எய்வதற்கு அவரிடம் மூன்று அம்புகள் இருக்கின்றன. அவர் முதல் அம்பை எய்கிறார், ஆனால் அது ஒரு மீட்டர் வித்தியாசத்தில் தவறிவிடுகிறது. இரண்டாவது அம்பை இன்னும் நன்றாக குறி பார்த்து எய்கிறார், அது 30 சென்டிமீட்டர் வித்தியாசத்தில் தவறிவிடுகிறது. கடைசி அம்பை முழு கவனத்தோடு எய்கிறார், அதுவும் இரண்டே சென்டிமீட்டர் வித்தியாசத்தில் தவறிவிடுகிறது. அது இலக்கிலிருந்து கொஞ்சம்தான் விலகியிருந்தது. என்றாலும் தவறியது தவறியதுதானே.
நாம் எல்லாருமே அந்த வில் வீரனைப்போல் விரக்தி அடைந்த நிலையில் இருக்கிறோம். சிலசமயங்களில் நாம் ‘குறியை ரொம்பவே தவறவிட்டதைப்’ போல் தோன்றலாம். இன்னும் சில சமயங்களில் நாம் ஏறக்குறைய இலக்கை நெருங்கிவிட்டாலும் குறியைத் தவறவிடுகிறோம். கடினமாக முயன்றும்கூட நம்மால் இலக்கை அடைய முடியாமல் போகும்போது நாம் விரக்தி அடைகிறோம். நாம் திரும்பவும் அந்த வில் வீரனுடைய விஷயத்துக்கு வரலாம்.
பரிசைத் தட்டிச் செல்ல ஆசைப்பட்டவர் அதைப் பெற முடியாததால் மனமொடிந்துபோய் அங்கிருந்து மெதுவாக நகர ஆரம்பிக்கிறார். திடீரென, போட்டி நடத்தியவர் அவரை அழைத்து பரிசைக் கொடுக்கிறார். “உங்களை எனக்குப் பிடித்திருக்கிறது, நீங்கள் கடும் முயற்சி எடுத்ததை நான் கவனித்தேன். அதனால் இந்தப் பரிசைத் தருகிறேன்” என்று சொல்கிறார். அந்த வில் வீரனுக்கு சந்தோஷத்தில் தலைகால் புரிவதில்லை!
ஆம், அவர் சந்தோஷத்தின் உச்சிக்கே சென்றுவிடுகிறார்! கடவுளிடமிருந்து நித்திய வாழ்வு எனும் ‘பரிசைப்’ பெறும் அனைவரும் இவ்விதமாகவே உணருவார்கள். (ரோமர் 6:23, NW) அதைப் பெற்ற பிறகு, அவர்கள் எல்லாவற்றையும் சிறப்பாக செய்வார்கள், குறியை ஒருபோதும் தவறவிட மாட்டார்கள். அவர்கள் பரம திருப்தியுடன் இருப்பார்கள். அது வரையில், நமக்கு எதார்த்தமான கண்ணோட்டம் இருந்தால், நம்மைக் குறித்தும் மற்றவர்களைக் குறித்தும் நாம் குறைப்பட்டுக்கொள்ள மாட்டோம்.
எதற்குமே காலம் தேவை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்
எதைச் செய்வதற்கும் காலம் எடுக்கும் என்பது உண்மையே. இருந்தாலும், நீங்கள் எதிர்பார்ப்பது கிடைக்க, நினைத்ததைவிட அதிக காலம் ஆகிக்கொண்டிருக்கலாம். அல்லது, உங்களுடைய நெருக்கடியான நிலை நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக காலம் நீடித்துக்கொண்டிருக்கலாம். அச்சமயங்களில் பொறுமையாக இருப்பது எவ்வளவு கடினம் என்பதைக் கவனித்திருக்கிறீர்களா? இருப்பினும், அப்படிப்பட்ட சூழ்நிலைகளிலும் சிலரால் திருப்தியாக இருக்க முடிந்திருக்கிறது. இயேசுவின் உதாரணத்தைக் கவனியுங்கள்.
இயேசு பூமிக்கு வருவதற்கு முன் பரலோகத்தில் இருக்கையில் கீழ்ப்படிதலுக்கு ஒரு தலைசிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்தார். என்றாலும், அவர் இந்தப் பூமியில் இருந்தபோதுதான் ‘கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்.’ எப்படி? ‘அவர் பட்ட பாடுகளினாலே.’ இதற்கு முன் அவர் மற்றவர்கள் படும் துன்பத்தைப் பார்த்திருக்கிறார், ஆனால் அவர் அதை அனுபவித்ததில்லை. அவர் பூமியில் இருந்தபோது, முக்கியமாக, யோர்தானில் முழுக்காட்டுதல் பெற்றதுமுதல் கொல்கொதாவில் இறக்கும்வரை பல கஷ்டங்களை அனுபவித்தார். கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்ளும் விஷயத்தில் அவர் எப்படி ‘பூரணராக்கப்பட்டார்’ என்பது பற்றிய எல்லா விவரங்களும் நமக்குத் தெரியாது. ஆனால், அதைக் கற்றுக்கொள்வதற்கு காலம் எடுத்தது என்பது நமக்குத் தெரியும்.—எபிரெயர் 5:8, 9.
‘தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தை,’ அதாவது தம்முடைய உண்மைத்தன்மைக்குக் கிடைக்கப்போகும் பலனைக் குறித்து ஆழ்ந்து சிந்தித்ததால்தான் அவரால் வெற்றிகாண முடிந்தது. (எபிரெயர் 12:2) இருந்தாலும், சில சமயங்களில் அவர் ‘பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம் பண்ணி, வேண்டுதல் செய்திருக்கிறார்.’ (எபிரெயர் 5:7) நாமும்கூட சில சமயங்களில் இதே விதமாக ஜெபிக்கக்கூடும். அந்த ஜெபத்தை யெகோவா எப்படிக் கருதுகிறார்? அவர் இயேசுவின் ஜெபத்தைக் ‘கேட்டு பதில் அளித்தார்’ என அதே வசனம் கூறுகிறது. அவ்விதமாகவே நம்முடைய ஜெபத்தையும் கேட்டு பதில் அளிப்பார். ஏன் அப்படிச் சொல்கிறோம்?
ஏனெனில், நம்முடைய வரையறைகளை யெகோவா அறிந்திருக்கிறார், அதனால் நமக்கு உதவுகிறார். சகித்திருப்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஓர் எல்லை உண்டு. “அதிகமான தண்ணீர், தவளைகளையும் மூழ்கடிக்கும்” என்பது ஆப்பிரிக்காவிலுள்ள பெனின் வாசிகளின் பழமொழி. ஆகவே, அந்த எல்லையை நாம் நெருங்கும்போது நம்மைவிட யெகோவாவுக்கு அது நன்கு தெரியும். அதனால், அவர் அன்புடன் ‘இரக்கம்’ காட்டுகிறார், ‘ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யும் கிருபையையும்’ அளிக்கிறார். (எபிரெயர் 4:16) இயேசுவுக்கு அவர் இதை அளித்தார், எண்ணற்றோருக்கும் இதை அளித்திருக்கிறார். மானிக்கா என்பவர் கடவுளுடைய உதவியை எப்படிப் பெற்றார் என்பதைக் கவனியுங்கள்.
மானிக்கா, சிறகடிக்கும் பட்டாம்பூச்சிபோல் எந்தக் கவலையுமின்றி எப்போதும் இன்முகத்துடன் இருந்தார். 1968-ல், அவருக்கு 22, 23 வயதிருக்கும்போது மல்ட்டிபிள் ஸ்க்லரோஸிஸ் எனும் ஒரு வியாதி வந்திருப்பதை அறிந்தபோது அவர் அதிர்ச்சி அடைந்தார். அது பக்கவாதத்தை ஏற்படுத்தும் ஒரு வியாதி. அது அவருடைய வாழ்க்கையை அடியோடு மாற்றிவிட்டது, அவருடைய முழுநேர ஊழியத்திலும் பெரும் மாற்றங்களைச் செய்ய வேண்டியதாயிற்று. இது ஒரு தீரா வியாதி என்பதையும் மானிக்கா அறிந்துகொண்டார். பதினாறு வருடங்களுக்குப் பின் அவர் இவ்வாறு சொன்னார்: “என்னுடைய வியாதி இதுவரை குணமாகவில்லை, ஒருவேளை, கடவுளுடைய புதிய உலகில் அவர் சகலத்தையும் புதிதாக்கும்வரைகூட இந்த வியாதி குணமாகாமலே இருக்கலாம்.” ஆனால் அதைச் சமாளிப்பது தனக்குச் சுலபமாக இருக்கவில்லை என்பதை ஒத்துக்கொள்கிறார். தன் நிலைமையை அவரே இவ்வாறு விவரிக்கிறார்: “நான் எப்போதும்போல சந்தோஷமாகவும் சிரித்த முகத்துடனும் இருப்பதாக என்னுடைய நண்பர்கள் சொன்னாலும்கூட . . . சில சமயங்களில் தாரைதாரையாய் நான் கண்ணீர் வடிப்பது என்னுடைய நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும்தான் தெரியும்.”
என்றாலும், அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “பொறுமையாய் இருப்பதற்கும், என் உடல்நிலையில் கொஞ்சம் முன்னேற்றம் தென்பட்டாலும் அதைக் குறித்து சந்தோஷப்படுவதற்கும் கற்றுக்கொண்டிருக்கிறேன். வியாதியை எதிர்த்துப் போராடுவதில் மனிதன் எந்தளவு கையாலாகாதவனாய் இருக்கிறான் என்பதை நினைக்கையில் யெகோவாவோடு உள்ள பந்தம் எனக்கு இன்னும் நெருக்கமாகிறது. யெகோவாவால் மட்டுமே வியாதியை முற்றிலுமாகக் குணப்படுத்த முடியும்.” யெகோவாவின் உதவியோடு மானிக்கா மனநிறைவைப் பெற்றிருக்கிறார், 40 வருடங்களுக்கும் மேலாக முழுநேர ஊழியம் செய்ய முடிந்ததை இப்போதும் நினைத்து சந்தோஷப்படுகிறார்.
இதுபோன்ற சூழ்நிலைகளைச் சமாளிப்பது கடினம்தான். என்றாலும், சில காரியங்களுக்கு நீங்கள் எதிர்பார்ப்பதைவிட அதிக காலம் எடுக்கும் என்பதை அறிந்துகொள்ளும்போது, கவலைப்படாமல் அதிக திருப்தியுடன் இருப்பீர்கள் என்பது நிச்சயம். யெகோவா ‘ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்வார்’ என்பதில் மானிக்காவைப் போல நீங்களும் உறுதியுடன் இருக்கலாம்.
பிறருடன் ஒப்பிடாதீர்கள்—எட்ட முடிந்த இலக்குகளை வையுங்கள்
எல்லாரும் ஒரேபோல் இருப்பதில்லை. நபருக்கு நபர் வித்தியாசம் இருக்கிறது. “ஐந்து விரல்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை” என்றொரு பழமொழி உண்டு. ஒரு விரலை மற்றொரு விரலோடு ஒப்பிட்டுப் பார்ப்பது முட்டாள்தனம். யெகோவா உங்களை வேறொருவரோடு ஒப்பிடுவதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள், அவர் ஒருபோதும் அப்படிச் செய்யவும் மாட்டார். ஆனால், ஒப்பிட்டு பார்க்கும் மனப்பான்மை மனிதரிடையே சகஜமாகக் காணப்படுகிறது, இது மக்களின் திருப்தியைப் பறித்துவிடுகிறது. இவ்விஷயத்தை, மனதில் பதியும் விதத்தில் மத்தேயு 20:1-16-ல் இயேசு விளக்கியிருப்பதைக் கவனியுங்கள்.
தன் திராட்சத் தோட்டத்தில் வேலையாட்களைப் பணிக்கு அமர்த்தும் ஒரு ‘எஜமானை’ பற்றி இயேசு இங்கு குறிப்பிடுகிறார். அவர் “அதிகாலையிலே” ஒருவேளை காலை ஆறு மணிக்கெல்லாம் புறப்பட்டு சென்று, வேலையில்லாத சில ஆட்களைக் கண்டுபிடித்து அவர்களைக் கூலிக்கு அமர்த்தினார். அவர்களும் அன்றைய தினக்கூலியை, அதாவது 12 மணிநேரத்திற்கு ஒரு பணத்தைப் பெறுவதற்கு ஒப்புக்கொண்டார்கள். தங்களுக்கு வேலை கிடைத்ததைக் குறித்து அவர்கள் நிச்சயம் சந்தோஷப்பட்டிருப்பார்கள், அதுமட்டுமல்ல வழக்கமான கூலி கிடைப்பதைக் குறித்தும் சந்தோஷப்பட்டிருப்பார்கள். பிறகு, அந்த எஜமான் காலை 9 மணிக்கும், மதியம் 12 மணிக்கும், பிற்பகல் 3 மணிக்கும் மாலை 5 மணிக்கும்கூட வேலையில்லாத சிலரைக் கண்டுபிடித்து அவர்களைப் பணியில் அமர்த்தினார். இவர்கள் யாருமே முழுநாளும் வேலை செய்யவில்லை. ஆனால், இவர்கள் எல்லாருக்கும் ‘நியாயமானபடி’ கூலி கொடுப்பதாக உறுதி அளித்தார், அவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டார்கள்.
அந்த நாளின் இறுதியில், வேலையாட்களுக்குக் கூலி கொடுக்கும்படி தன் காரியகாரனுக்கு எஜமான் உத்தரவிட்டார். வேலையாட்கள் எல்லாரையும் அழைத்து, பிந்தி பணியில் அமர்த்தப்பட்டவர்களுக்கு முதலில் கூலிகொடுக்கும்படி சொன்னார். இவர்கள் ஒரு மணிநேரமே வேலை செய்திருந்தார்கள், ஆனால் அந்த நாளுக்குரிய முழு கூலியையும் பெற்றபோது ஆச்சரியப்பட்டார்கள். அதைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் உற்சாகமும் பரபரப்புமாய் என்னவெல்லாம் பேசியிருப்பார்கள் என்பதை நம்மால் ஓரளவு கற்பனை செய்ய முடியும். 12 மணிநேரம் வேலை செய்தவர்கள் தங்களுக்கு அவர்களைவிட அதிக கூலி கிடைக்கும் என்று முடிவே செய்துவிட்டார்கள். ஆனால், அவர்களுக்கும் அதே கூலிதான் கிடைத்தது.
அதற்கு அவர்கள் எப்படிப் பிரதிபலித்தார்கள்? “பிந்திவந்தவர்களாகிய இவர்கள் ஒரு மணி நேரமாத்திரம் வேலை செய்தார்கள்; பகலின் கஷ்டத்தையும் வெயிலின் உஷ்ணத்தையும் சகித்த எங்களுக்கு இவர்களைச் சமமாக்கினீரே என்று முறுமுறுத்தார்கள்.”
ஆனால், அந்த எஜமானின் கண்ணோட்டம் வித்தியாசமாக இருந்தது. அவர்கள் ஒத்துக்கொண்ட கூலியையே கொடுத்ததாகவும் அதைவிட குறைவாகக் கொடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மற்றவர்களுக்கோ முழு நாள் கூலியையும் கொடுக்கத் தீர்மானித்திருந்தார், நிச்சயமாகவே, அது அவர்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருந்தது. ஆனால், யாருமே அவர்கள் ஒத்துக்கொண்டதைவிட குறைவான கூலியைப் பெறவில்லை; சொல்லப்போனால் பலரும் அவர்கள் எதிர்பார்த்ததைவிட அதிக கூலியையே பெற்றார்கள். ஆகவே, முடிவாக அந்த எஜமான் இவ்வாறு கேட்டார்: “என்னுடையதை என் இஷ்டப்படி செய்ய எனக்கு அதிகாரமில்லையா?”
ஒருவேளை, அந்த காரியகாரன் அதிகாலையில் வேலைக்கு வந்தவர்களுக்கு முதலில் கூலி கொடுத்திருந்தால் அவர்கள் அதை வாங்கிக்கொண்டு உடனே போயிருப்பார்கள். திருப்தியாகவும் உணர்ந்திருப்பார்கள். ஆனால், கொஞ்ச நேரமே வேலை செய்தவர்களும் அதே கூலியைப் பெற்றதைப் பார்த்தபோதுதான் அவர்கள் அதிருப்தி அடைந்தார்கள். வேலையில்லாதிருந்த தங்களுக்கு வேலை கொடுத்ததற்காக அதுவரை எஜமானுக்கு நன்றியுள்ளவர்களாயிருந்தவர்கள், இப்போது அவருக்கெதிராக முறுமுறுக்குமளவுக்குக் கொதிப்படைந்தார்கள்.
மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது என்ன நடக்கும் என்பதை இது தெளிவாக காட்டுகிறது. யெகோவாவோடு உள்ள உங்கள் உறவைப் பற்றி ஆழமாக யோசித்துப் பார்த்து, அவர் தரும் ஆசீர்வாதத்திற்கு நன்றியுள்ளவர்களாயிருந்தால், நீங்கள் திருப்தியுள்ளவர்களாய் இருப்பீர்கள். உங்கள் சூழ்நிலையை மற்றவர்களுடையதோடு ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். மற்றவர்களுக்கு இன்னும் அதிகமாகச் செய்ய யெகோவா தீர்மானித்திருப்பதுபோல் தெரிந்தால் அதைக் குறித்து சந்தோஷப்படுங்கள், அவர்களுடன் சேர்ந்து சந்தோஷப்படுங்கள்.
என்றாலும், ஏதோவொன்றை நாம் செய்யும்படி யெகோவா எதிர்பார்க்கிறார். அது என்ன? கலாத்தியர் 6:4 இவ்வாறு சொல்கிறது: “அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப்பார்க்கக்கடவன்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்போதல்ல, தன்னையே பார்க்கும்போது மேன்மை பாராட்ட அவனுக்கு இடமுண்டாகும்.” வேறு வார்த்தையில் சொன்னால், எட்ட முடிந்த இலக்குகளை வையுங்கள். உங்கள் சக்திக்குத் தகுந்தாற்போல் என்ன செய்ய முடியும் என்பதைத் திட்டமிடுங்கள், அதன்படி செய்யுங்கள். உங்களுடைய இலக்கு நியாயமானதாக இருந்து, அதை நீங்கள் எட்டிவிட்டால் உங்களுக்கு ‘மேன்மை பாராட்ட இடமுண்டு.’ திருப்தியையும் அடைவீர்கள்.
பின்தொடரும் பலன்கள்
இந்தக் கடைசி நாட்களிலும், நம்முடைய குறைபாடுகளின் மத்தியிலும் பைபிள் நியமங்களைப் பின்பற்றினால் திருப்தி காண முடியும் என்பதை இதுவரை நாம் சிந்தித்த மூன்று நியமங்களும் காட்டுகின்றன. அன்றாட பைபிள் வாசிப்பின்போது, நேரடியாகவோ உதாரணங்கள் வாயிலாகவோ கொடுக்கப்பட்டுள்ள இத்தகைய நியமங்களை நீங்கள் தேடிப் பார்க்கலாமே!
நீங்கள் திருப்தியற்றவர்களாக உணருகிறீர்கள் என்றால், அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முயலுங்கள். அதைச் சரிசெய்வதற்கு உதவும் பைபிள் நியமங்களை அலசி ஆராயுங்கள். உதாரணத்திற்கு, ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’ என்ற புத்தகத்தில் பக்கங்கள் 110-11-ஐ நீங்கள் பார்க்கலாம்.a அங்கு நீதிமொழிகள் புத்தகத்திலிருந்து குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன; 12 தலைப்புகளின்கீழ் அநேக நியமங்களும் ஆலோசனைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. உவாட்ச்டவர் பப்ளிகேஷன்ஸ் இன்டெக்ஸ்b மற்றும் உவாட்ச்டவர் லைப்ரரி சிடி-ரோம்* அருமையான தகவல்களை அளிக்கின்றன. அவற்றை அடிக்கடி பயன்படுத்தி வந்தால், பொருத்தமான பைபிள் நியமங்களை எளிதில் கண்டுபிடித்துவிடுவீர்கள்.
தகுதிவாய்ந்தோரை யெகோவா, பூங்காவனமான பரதீஸ் பூமியில் பரிபூரணத்தோடு நித்தியமாய் வாழ வைக்கப் போகிறார்; அந்தக் காலம் விரைவில் வரவிருக்கிறது. அப்போது எல்லாருமே திருப்தியோடு வாழ்வார்கள்.
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
b யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 12-ன் சிறு குறிப்பு]
‘எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாக ஆனார்கள்.’—ரோமர் 3:23
[பக்கம் 13-ன் சிறு குறிப்பு]
இயேசு ‘தாம் பட்ட பாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்.’—எபிரெயர் 5:8, 9
[பக்கம் 15-ன் சிறு குறிப்பு]
“மற்றவனைப் பார்க்கும்போதல்ல, தன்னையே பார்க்கும்போது மேன்மை பாராட்ட அவனுக்கு இடமுண்டாகும்.”—கலாத்தியர் 6:4