1 நாளாகமம்
5 இஸ்ரவேலின் மூத்த மகன் ரூபன்.+ ஆனால், அவர் தன்னுடைய அப்பாவின் படுக்கையைக் களங்கப்படுத்தியதால்+ மூத்த மகனின் உரிமை இஸ்ரவேலின் மகனாகிய யோசேப்பின் மகன்களுக்குக்+ கொடுக்கப்பட்டது. அதனால், வம்சாவளிப் பட்டியலில் ரூபன் மூத்த மகனாகக் குறிப்பிடப்படவில்லை. 2 யூதா+ தன்னுடைய சகோதரர்களைவிட உயர்ந்தவராக இருந்தார், வருங்காலத் தலைவர் அவருடைய வம்சத்தில்தான் வரவிருந்தார்;+ இருந்தாலும், மூத்த மகனின் உரிமை யோசேப்புக்கே கிடைத்தது. 3 இஸ்ரவேலின் மூத்த மகனாகிய ரூபனின் மகன்கள்: ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ.+ 4 யோவேலின் மகன் செமாயா; செமாயாவின் மகன் கோகு; கோகுவின் மகன் சீமேயி, 5 சீமேயியின் மகன் மீகா, மீகாவின் மகன் ராயா; ராயாவின் மகன் பாகால், 6 பாகாலின் மகன் பீராகு; இவரை அசீரிய ராஜாவாகிய தில்காத்-பில்நேசர்+ சிறைபிடித்துக்கொண்டு போனான்; ரூபன் கோத்திரத்தில் இவரும் ஒரு தலைவர். 7 வம்சாவளிப் பட்டியலில் குடும்பம்வாரியாகக் குறிப்பிடப்பட்ட அவருடைய சகோதரர்கள்: தலைவர் எயியேல், சகரியா, 8 யோவேலின் மகனாகிய சேமாவின் பேரனும் ஆசாசின் மகனுமாகிய பேலா; இவருடைய வம்சத்தார் ஆரோவேரில்+ குடியிருந்தார்கள், நேபோ, பாகால்-மெயோன்+ வரையிலும் குடியிருந்தார்கள். 9 கிழக்குப் பகுதியில் யூப்ரடிஸ்* ஆற்றின் அருகே இருக்கிற வனாந்தரத்தின் எல்லைவரை குடியிருந்தார்கள்.+ ஏனென்றால், கீலேயாத் பிரதேசத்தில்+ இருந்தபோது அவர்களுடைய கால்நடைகள் ஏராளமாய்ப் பெருகியிருந்தன. 10 சவுலின் காலத்தில், அவர்கள் ஆகாரியர்களோடு போர் செய்து, அவர்களைத் தோற்கடித்தார்கள். அதன் பின்பு, கீலேயாத்தின் கிழக்குப் பகுதியெங்கும் இருந்த ஆகாரியர்களின் கூடாரங்களில் குடியிருந்தார்கள்.
11 காத் வம்சத்தார் இவர்களுக்கு அருகே பாசான் பிரதேசத்தில், சல்கா+ நகரம்வரை குடியிருந்தார்கள். 12 பாசானில், யோவேல் தலைவராக இருந்தார். அவருக்கு அடுத்த இடத்தில் சாப்பாம் இருந்தார்; யானாயும் சாப்பாத்தும்கூட தலைவர்களாக இருந்தார்கள். 13 அவர்களுடைய தந்தைவழிக் குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள்: மிகாவேல், மெசுல்லாம், சேபா, யொராய், யாக்கான், சீயா, ஏபேர் என மொத்தம் ஏழு பேர். 14 இவர்கள் ஹூரியின் மகனாகிய அபியாயேலின் மகன்கள்; யெரொவாவின் மகன் ஹூரி, கீலேயாத்தின் மகன் யெரொவா, மிகாவேலின் மகன் கீலேயாத், எசிசாயின் மகன் மிகாவேல், யாதோவின் மகன் எசிசாய், பூசின் மகன் யாதோ. 15 கூனியின் மகனாகிய அப்தியேலுக்குப் பிறந்த அகி அவர்களுடைய தந்தைவழிக் குடும்பத் தலைவராக இருந்தார். 16 இவர்கள் கீலேயாத்திலும்+ பாசானிலும்+ அவற்றின் சிற்றூர்களிலும்* சாரோன் மேய்ச்சல் நிலங்களின் எல்லைவரையிலும் குடியிருந்தார்கள். 17 யூதாவின் ராஜாவாகிய யோதாம்+ காலத்திலும் இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாம்*+ காலத்திலும் இவர்கள் எல்லாருடைய பெயர்களும் வம்சாவளிப் பட்டியலில் பதிவு செய்யப்பட்டன.
18 ரூபன் கோத்திரத்திலும் காத் கோத்திரத்திலும் மனாசேயின் பாதிக் கோத்திரத்திலும் இருந்த மாவீரர்கள் மொத்தம் 44,760 பேர்; எல்லாரும் கேடயமும் வாளும் வில்லும் ஏந்திய வீரர்கள், போர்ப் பயிற்சி பெற்றவர்கள். 19 ஆகாரியர்களோடும்+ யெத்தூர், நாபீஸ்,+ நோதாப் வம்சத்தாரோடும் அவர்கள் போர் செய்தார்கள். 20 அப்படிப் போர் செய்தபோது அவர்களுக்குக் கடவுளுடைய உதவி கிடைத்தது; அதனால், ஆகாரியர்களையும் அவர்களோடு இருந்த அத்தனை பேரையும் ஜெயித்தார்கள். ஏனென்றால், போரின்போது கடவுளிடம் அவர்கள் உதவி கேட்டுக் கெஞ்சினார்கள், அவர்மேல் நம்பிக்கை வைத்தார்கள்; அதனால், கடவுள் அவர்களுடைய மன்றாட்டைக் கேட்டு உதவி செய்தார்.+ 21 ஆகாரியர்களுடைய கால்நடைகளை, அதாவது 50,000 ஒட்டகங்களையும் 2,50,000 செம்மறியாடுகளையும் 2,000 கழுதைகளையும், பிடித்துக்கொண்டு வந்தார்கள். அதோடு 1,00,000 ஆட்களையும் கைதிகளாகப் பிடித்துக்கொண்டு வந்தார்கள். 22 அவர்களுக்காக உண்மைக் கடவுள் போர் செய்ததால், ஏராளமான ஆட்களை வெட்டி வீழ்த்தினார்கள்.+ சிறைபிடிக்கப்பட்டுப் போகும்வரை அவர்கள் அங்கேயே குடியிருந்தார்கள்.+
23 மனாசேயின் பாதிக் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்,+ பாசான் பிரதேசம்முதல் பாகால்-எர்மோன், செனீர், எர்மோன் மலைவரை+ குடியிருந்தார்கள். அவர்களுடைய எண்ணிக்கை மிக அதிகமாய் இருந்தது. 24 அவர்களுடைய தந்தைவழிக் குடும்பத் தலைவர்கள்: ஏப்பேர், இஷி, ஏலியேல், அசரியேல், எரேமியா, ஒதாவியா, யாதியேல்; இவர்கள் மாவீரர்களாக, புகழ்பெற்றவர்களாக, தந்தைவழிக் குடும்பத் தலைவர்களாக இருந்தார்கள். 25 தங்களுடைய கண் முன்னால் கடவுள் அழித்த மற்ற தேசத்தாருடைய தெய்வங்களை மக்கள் வணங்கினார்கள்;* இப்படித் தங்களுடைய முன்னோர்களின் கடவுளுக்குத் துரோகம் செய்தார்கள்.+ 26 அதனால், ரூபன் கோத்திரத்தாரையும் காத் கோத்திரத்தாரையும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரையும் அசீரிய ராஜாவாகிய பூல் (அதாவது, அசீரிய ராஜாவாகிய தில்காத்-பில்நேசர்)+ சிறைபிடித்துக்கொண்டு போனான்; இஸ்ரவேலின் கடவுள்தான் அவன் மனதில் இந்த எண்ணத்தை ஏற்படுத்தினார்;+ சிறைபிடித்த மக்களை ஆலா, ஆபோர், ஆரா ஆகிய இடங்களுக்கும் கோசான் ஆற்றுப்பகுதிக்கும்+ அவன் கொண்டுபோனான். இன்றுவரை அவர்கள் அங்கேதான் குடியிருக்கிறார்கள்.