யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது
ஒன்று நாளாகம புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
பாபிலோன் சிறையிருப்பிலிருந்து யூதர்கள் தாயகம் திரும்பி வந்து சுமார் 77 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. யூதர்களின் தலைவரான செருபாபேல், ஆலயத்தைத் திரும்பவும் கட்டி இப்போது 55 ஆண்டுகள் ஆகின்றன. யூதர்கள் தங்களுடைய தாயகத்திற்கு திரும்பி வந்ததன் முக்கிய நோக்கமே எருசலேமில் மெய் வணக்கத்தைத் திரும்பவும் ஸ்தாபிப்பதுதான். ஆனால் யெகோவாவை வணங்குவதில் இந்த ஜனங்கள் ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களுக்கு உடனடியாக ஊக்குவிப்பு தேவைப்படுகிறது, அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஊக்குவிப்பின் செய்தியையே ஒன்று நாளாகம புத்தகம் அளிக்கிறது.
வம்சாவளி பதிவுகள் நீங்கலாக, சுமார் 40 ஆண்டுகால சரித்திரம், அதாவது சவுல் ராஜா மரணமடைந்ததுமுதல் தாவீது ராஜா மரணம் அடைந்ததுவரையான சரித்திரம், ஒன்று நாளாகம புத்தகத்தில் உள்ளது. ஆசாரியனான எஸ்றா பொ.ச.மு. 460-ல் இப்புத்தகத்தை எழுதியதாக நம்பப்படுகிறது. ஒன்று நாளாகம புத்தகம் நமக்கு ஆர்வத்திற்குரியது; ஏனெனில், ஆலய வழிபாட்டைக் குறித்து நன்கு தெரிந்துகொள்ள இது உதவுகிறது, மேசியாவின் வம்சாவளியைப் பற்றிய விவரங்களையும் இது அளிக்கிறது. கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட வார்த்தையின் பாகமான இப்புத்தகத்தின் செய்தி நம் விசுவாசத்தைப் பலப்படுத்துகிறது, பைபிள் விஷயங்களை இன்னுமதிகமாகத் தெரிந்துகொள்ள வழிசெய்கிறது.—எபிரெயர் 4:12.
பெயர்கள் அடங்கிய ஒரு முக்கிய பதிவு
குறைந்தபட்சம் மூன்று காரணங்களுக்காக விரிவான வம்சாவளி பட்டியலை எஸ்றா தொகுக்கிறார்: அங்கீகாரம் பெற்ற ஆண்கள் மட்டுமே ஆசாரிய சேவைசெய்ய வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதற்கும், ஒவ்வொரு கோத்திரமும் அதனதன் சுதந்தர வீதத்தைத் தீர்மானிக்க உதவுவதற்கும், மேசியாவை அடையாளம் கண்டுகொள்வதற்கு வழிநடத்தும் வம்சாவளி பதிவைப் பாதுகாப்பதற்குமே. இப்பதிவில், முதல் மனிதனான ஆதாம் தொடங்கி யூதர்கள்வரையான வம்சாவளி பட்டியல் உள்ளது; இதன் மூலம் யூதர்களால் தங்களுடைய வம்ச வரலாறை அடையாளங்காண முடிந்தது. ஆதாம்முதல் நோவாவரை பத்து தலைமுறைகள், அடுத்து ஆபிரகாம் வரை மற்றொரு பத்து தலைமுறைகள். இஸ்மவேலின் குமாரர், ஆபிரகாமின் மறுமனையாட்டியான கேத்தூராளின் குமாரர், ஏசாவின் குமாரர் என இவர்கள் எல்லாருடைய பட்டியலையும் குறிப்பிட்ட பிறகு, இஸ்ரவேலின் 12 குமாரருடைய சந்ததியாரைப் பற்றி இப்பதிவு குறிப்பிடுகிறது.—1 நாளாகமம் 2:1.
யூதாவின் சந்ததியாரைப் பற்றிய விவரங்கள் இதில் மிக விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன, ஏனெனில் தாவீது ராஜாவின் அரச பரம்பரை அதிலிருந்தே தோன்றுகிறது. ஆபிரகாம்முதல் தாவீதுவரை 14 தலைமுறைகளும் அடுத்து பாபிலோனுக்கு இஸ்ரவேலர் நாடுகடத்தப்படுவதுவரை 14 தலைமுறைகளும் உள்ளன. (1 நாளாகமம் 1:27, 34; 2:1-15; 3:1-17; மத்தேயு 1:17) அடுத்ததாக, யோர்தானுக்குக் கிழக்கேயுள்ள கோத்திரங்களின் சந்ததியாரையும் அதைத் தொடர்ந்து லேவியின் குமாரரின் வம்சாவளியையும் எஸ்றா குறிப்பிடுகிறார். (1 நாளாகமம் 5:1-24; 6:1) அதன் பிறகு, யோர்தானுக்கு மேற்கேயுள்ள மற்ற சில கோத்திரங்களைப் பற்றிய சுருக்கமான விவரத்தையும் பென்யமீன் வம்சாவளியைப் பற்றிய விரிவான விவரத்தையும் அளிக்கிறார். (1 நாளாகமம் 8:1) பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து யூதர்கள் திரும்பி வந்தபோது எருசலேமில் முதலாவது குடியேறியவர்களின் பெயர்களைக்கூட அவர் பட்டியலிடுகிறார்.—1 நாளாகமம் 9:1-16.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்
1:18—காயினான், அர்பக்சாத்—இவர்களில் சாலாவின் தகப்பன் யார்? (லூக்கா 3:35, 36) அர்பக்சாத் என்பவரே சாலாவின் தகப்பன். (ஆதியாகமம் 10:24; 11:12) லூக்கா 3:36-ல் காணப்படும் “காயினான்” என்ற வார்த்தை “கல்தேயர்” என்ற வார்த்தையிலிருந்து மருவி வந்திருக்கலாம். அது உண்மையென்றால், இதன் மூல வாக்கியம் “கல்தேயனாகிய அர்பக்சாத்” என்று இருந்திருக்கலாம். அல்லது காயினான், அர்பக்சாத் ஆகிய இரு பெயர்களும் ஒருவரையே குறிக்கலாம். சில பூர்வ கையெழுத்துப் பிரதிகளில், “காயினானின் குமாரன்” என்ற வார்த்தைகள் காணப்படுவதில்லை என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.—லூக்கா 3:36, NW அடிக்குறிப்பு.
2:15—தாவீது, ஈசாயின் ஏழாவது குமாரனா? இல்லை. ஈசாயிக்கு எட்டு குமாரர்கள் இருந்தார்கள், அவர்களில் கடைசி குமாரனே தாவீது. (1 சாமுவேல் 16:10, 11; 17:12) ஈசாயின் குமாரர்களில் ஒருவர் குழந்தைகள் இல்லாமலே இறந்துவிட்டதாகத் தெரிகிறது. எனவே அந்தக் குமாரனை வம்சாவளி பட்டியலில் சேர்த்துப் பயனில்லை என்பதால் அவருடைய பெயரை எஸ்றா விட்டுவிட்டார்.
3:17—எகொனியாவின் மகனான சலாத்தியேல் என்பவரை நேரியின் மகன் என லூக்கா 3:27 ஏன் குறிப்பிடுகிறது? எகொனியாதான் சலாத்தியேலின் தகப்பன். ஆனால், நேரி தன் மகளை சலாத்தியேலுக்கு மணமுடித்து கொடுத்ததாகத் தெரிகிறது. ஆகவே, நேரியின் மருமகனைத்தான் மகன் என லூக்கா குறிப்பிட்டுள்ளார்; யோசேப்பையும்கூட, மரியாளின் தகப்பனான ஏலியின் குமாரன் என்றே அவர் குறிப்பிட்டுள்ளார்.—லூக்கா 3:23.
3:17-19—செருபாபேல், பெதாயா, சலாத்தியேல் ஆகியோரின் உறவுமுறை என்ன? சலாத்தியேலின் சகோதரனான பெதாயாவின் மகன்தான் செருபாபேல். இருந்தாலும், சில சமயங்களில் செருபாபேலை சலாத்தியேலின் குமாரன் என பைபிள் குறிப்பிடுகிறது. (மத்தேயு 1:12; லூக்கா 3:27) பெதாயா இறந்ததாலும் செருபாபேலை சலாத்தியேல் வளர்த்ததாலும் அப்படி அழைக்கப்பட்டிருக்கலாம். அல்லது, ஒருவேளை பிள்ளைகள் இல்லாமல் சலாத்தியேல் இறந்துவிட்டதால், அவருடைய மனைவியை பெதாயா மணந்த பிறகு அவர்களுக்குப் பிறந்த முதல் பிள்ளையாக செருபாபேல் இருந்திருக்கலாம்.—உபாகமம் 25:5-10.
5:1, 2—சேஷ்டபுத்திர உரிமையை யோசேப்பு பெற்றுக்கொண்டது எதை அர்த்தப்படுத்தியது? ஆஸ்திகளில் இரண்டு பங்கை யோசேப்பு பெற்றுக்கொண்டதை அர்த்தப்படுத்தியது. (உபாகமம் 21:17) இவ்வாறு அவர் இரண்டு கோத்திரங்களின், அதாவது எப்பிராயீம், மனாசே ஆகிய கோத்திரங்களின் தகப்பனாக ஆனார். இஸ்ரவேலின் மற்ற குமாரர்கள் ஒவ்வொருவரும் ஒரு கோத்திரத்திற்கு மட்டுமே தகப்பனாக ஆனார்கள்.
நமக்குப் பாடம்:
1:1–9:44. மெய் வணக்கம் சம்பந்தப்பட்ட ஏற்பாடுகள் அனைத்தும் கட்டுக்கதைகளின் அடிப்படையில் அல்ல, ஆனால் உண்மைகளின் அடிப்படையிலானவை என்பதை நிஜமாகவே வாழ்ந்த ஜனங்களின் வம்ச வரலாறுகள் நிரூபிக்கின்றன.
4:9, 10. தேவபயமுள்ள ஜனங்கள் அதிகமானோர் தங்குவதற்காக தனது பிராந்திய எல்லையை விரிவாக்கும்படி யாபேஸ் செய்த ஊக்கமான ஜெபத்தை யெகோவா கேட்டு அதற்கு பதிலளித்தார். நாமும்கூட சீஷராக்கும் வேலையில் மிகுந்த ஆர்வத்தோடு ஈடுபடுகையில் அதிகமதிகமானோர் கடவுளுடைய வணக்கத்தாராக ஆவதற்கு இதயப்பூர்வமாய் ஜெபிப்பது அவசியம்.
5:10, 18-22. சவுல் ராஜாவின் காலத்தில், யோர்தானுக்குக் கிழக்கேயிருந்த கோத்திரத்தார், எண்ணிக்கையில் இருமடங்குக்கும் அதிகமாக இருந்த ஆகாரியரை முறியடித்தார்கள். இதற்குக் காரணம், இந்தக் கோத்திரத்திலிருந்த பராக்கிரமசாலிகள் யெகோவாமீது நம்பிக்கை வைத்ததும், அவரது உதவியை நாடியதுமே ஆகும். அப்படியானால், சமாளிக்க முடியாத எதிரிகளோடு ஆன்மீகப் போர் தொடுக்கையில் நாமும் யெகோவாமீது முழு நம்பிக்கை வைப்போமாக.—எபேசியர் 6:10-17.
9:26, 27. லேவிய வாயிற்காவலர்களிடம் மிகப் பெரிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஆலயத்தின் பரிசுத்தமான பகுதிகளுக்குச் செல்லும் வாயிலின் திறவுகோல் அவர்களிடம் கொடுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு நாளும் கதவுகளைத் திறந்து வைப்பதில் உண்மையுள்ளவர்களாய் இருந்தார்கள். நம் பிராந்தியத்தில் உள்ள மக்களைச் சந்தித்து அவர்கள் யெகோவாவை வணங்குபவர்களாக ஆவதற்கு உதவிசெய்யும் பொறுப்பு நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. லேவிய வாயிற்காவலர்களைப் போல நாமும் நம்பகமானவர்களாக இருக்க வேண்டும், அல்லவா?
தாவீது அரசாளுகிறார்
சவுல் ராஜாவும் அவருடைய மூன்று குமாரர்களும் கில்போவா மலையில் பெலிஸ்தருக்கு எதிரான போரில் இறந்துவிட்டதைப் பற்றிய சம்பவத்தோடு இப்பதிவு துவங்குகிறது. ஈசாயின் குமாரனான தாவீது, யூதா கோத்திரத்தின் மீது ராஜாவாக்கப்படுகிறார். எல்லாக் கோத்திரங்களையும் சேர்ந்த யுத்த மனிதர் எப்ரோனுக்கு வந்து இஸ்ரவேலர்மீது அவரை ராஜாவாக்குகிறார்கள். (1 நாளாகமம் 11:1-3) அதன் பிறகு சீக்கிரத்திலேயே அவர் எருசலேமைக் கைப்பற்றுகிறார். பிற்பாடு, இஸ்ரவேலர் உடன்படிக்கைப் பெட்டியை ‘கெம்பீரத்தோடும், எக்காளங்களின் தொனியோடும், தம்புருகளையும் சுரமண்டலங்களையும் வாசிக்கிற சத்தத்தோடும்’ எருசலேமுக்குக் கொண்டுவருகிறார்கள்.—1 நாளாகமம் 15:28.
மெய்க் கடவுளுக்கு ஓர் ஆலயத்தைக் கட்ட தாவீது விருப்பப்படுகிறார். ஆனால் யெகோவா அந்தப் பாக்கியத்தை சாலொமோனுக்கென ஒதுக்கி வைத்து, தாவீதுடன் ராஜ்யத்திற்கான ஓர் உடன்படிக்கையைச் செய்கிறார். இஸ்ரவேலரின் எதிரிகளோடு தாவீது தொடர்ந்து போரிடுகையில், யெகோவா அவருக்கு வெற்றிக்கு மேல் வெற்றி தேடி தருகிறார். கடவுளுடைய சட்டத்திற்கு விரோதமாக ஜனங்களைத் தாவீது கணக்கெடுப்பதால் 70,000 பேர் சாகிறார்கள். யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படி தாவீதிடம் ஒரு தேவதூதன் சொன்ன பிறகு, எபூசியனான ஒர்னானிடமிருந்து ஒரு நிலத்தை விலைக்கு வாங்குகிறார். அந்த நிலத்தில், யெகோவாவுக்கு ‘மகா பெரியதான’ ஓர் ஆலயத்தைக் கட்டுவதற்காக தாவீது பொருள்களை ‘திரளாய்ச் சவதரித்துவைக்க,’ அதாவது சேகரித்துவைக்க ஆரம்பிக்கிறார். (1 நாளாகமம் 22:5) லேவியரின் பணிகளை தாவீது ஒழுங்குபடுத்துகிறார்; அவர்களுடைய பணிகளைப் பற்றிய நுட்ப விவரங்கள் பைபிளின் மற்ற புத்தகங்களைக் காட்டிலும் இப்புத்தகத்திலேயே அதிகம் காணப்படுகின்றன. ராஜாவும் ஜனங்களும் ஆலயத்திற்காக தாராளமாய் நன்கொடை அளிக்கிறார்கள். 40 ஆண்டுகள் அரசாண்ட பிறகு, தாவீது ‘ஐசுவரியமும் மகிமையுமுள்ளவராய், நல்ல முதிர்வயதிலே மரணமடைகிறார்; அவர் குமாரனாகிய சாலொமோன் அவர் ஸ்தானத்திலே அரசராகிறார்.’—1 நாளாகமம் 29:28.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
11:11—இரண்டு சாமுவேல் 23:8-ல், கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 800 என குறிப்பிடப்பட்டிருக்கையில் 300 என இங்கு ஏன் குறிப்பிடப்பட்டுள்ளது? யாஷோபியாம், அதாவது யோசேப்பாசெபெத் என்பவர் தாவீதுடைய மூன்று முக்கிய பராக்கிரமசாலிகளின் தலைவராக இருந்தார். எலெயாசார், சம்மா ஆகியோர் மற்ற இரண்டு பராக்கிரமசாலிகளாவர். (2 சாமுவேல் 23:8-11) இந்த இரு பதிவுகளிலும் காணப்படும் வித்தியாசத்திற்குக் காரணம், ஒருவேளை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பராக்கிரமசாலிகளின் அந்தத் தலைவரே செய்த கொலைகளின் எண்ணிக்கையாக இருந்திருக்கலாம்.
11:20, 21—தாவீதின் மூன்று முக்கிய பராக்கிரமசாலிகளோடு ஒப்பிட, அபிசாய்க்கு என்ன அந்தஸ்து இருந்தது? தாவீதுக்கு சேவைபுரிந்த மூன்று பராக்கிரமசாலிகளில் ஒருவராக அபிசாய் இருக்கவில்லை. என்றாலும், 2 சாமுவேல் 23:18, 19-ல் (NW) குறிப்பிட்டுள்ளபடி அவர் 30 படைவீரர்களுக்கு தலைவராக இருந்தார்; அதோடு, அவர்களில் எவரையும்விட சிறந்து விளங்கினார். அபிசாய் கிட்டத்தட்ட அந்த மூன்று முக்கிய பராக்கிரமசாலிகளுடைய அதே அந்தஸ்தில் இருந்தார்; அதற்குக் காரணம், யாஷோபியாம் செய்தது போன்ற வலிமையான செயலை இவரும் செய்ததுதான்.
12:8—காத் படைவீரர்கள் முகம் எவ்விதத்தில் ‘சிங்கமுகம் போன்றிருந்தது’? தாவீது வனாந்தரத்தில் இருந்தபோது இந்தப் பராக்கிரமசாலிகள் அவருக்கு உதவினார்கள். அவர்களுக்கு நீண்ட தலைமுடி இருந்தது. அத்தகைய அடர்த்தியான முடி காரணமாக பார்ப்பதற்கு, சிங்கம் போன்று மூர்க்கமாக காட்சி அளித்தார்கள்.
13:5—“எகிப்தைச் சேர்ந்த சீகோர் நதி” என்பது என்ன? இது நைல் நதியின் ஒரு கிளை நதியைக் குறிப்பதாக சிலர் நினைத்தார்கள். ஆனால், இது “எகிப்தின் நதிப் பள்ளத்தாக்கை” குறிப்பதாய் பொதுவாக கருதப்படுகிறது. இந்த நீண்ட, குறுகிய பள்ளத்தாக்கு வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் தென்மேற்கு எல்லையாக அமைந்திருந்தது.—எண்ணாகமம் 34:2, 5, NW; ஆதியாகமம் 15:18.
16:30—யெகோவாவுக்கு முன்பாக “நடுங்குங்கள்” என்பதன் அர்த்தம் என்ன? இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள “நடுங்குங்கள்” என்ற வார்த்தை யெகோவாவிடம் பயபக்தியையும், ஆழ்ந்த மரியாதையையும் காட்டுவதைக் குறிக்கிறது.
16:1, 37-40; 21:29, 30; 22:19—உடன்படிக்கைப் பெட்டியை எருசலேமுக்குக் கொண்டுவந்ததுமுதல் ஆலயம் கட்டப்படும்வரை வணக்கத்திற்கான என்ன ஏற்பாடு இஸ்ரவேலில் இருந்தது? பல ஆண்டுகளாகவே ஆசரிப்புக்கூடாரத்தில் இல்லாதிருந்த உடன்படிக்கைப் பெட்டியை தாவீது எருசலேமுக்குக் கொண்டுவந்து, அதைத் தான் உண்டாக்கிய கூடாரத்திற்குள் வைத்தார். அதை எருசலேமுக்குக் கொண்டுவந்ததிலிருந்து அது அந்தக் கூடாரத்தில்தான் இருந்தது. ஆனால், ஆசரிப்புக்கூடாரமோ கிபியோனில் இருந்தது; அங்கே பிரதான ஆசாரியரான சாதோக்கும் அவருடைய சகோதரர்களும் நியாயப்பிரமாணத்தில் திட்டவட்டமாக குறிப்பிடப்பட்டுள்ள பலிகளைச் செலுத்தினார்கள். எருசலேமில் ஆலயம் கட்டப்படும்வரை அவ்வாறு செய்தார்கள். ஆலய கட்டுமானம் முடிவுற்றதும் ஆசரிப்புக்கூடாரம் கிபியோனிலிருந்து எருசலேமுக்குக் கொண்டுவரப்பட்டது. உடன்படிக்கைப் பெட்டி ஆலயத்தின் மகா பரிசுத்த ஸ்தலத்தில் வைக்கப்பட்டது.—1 இராஜாக்கள் 8:4, 6.
நமக்குப் பாடம்:
13:11. நம்முடைய முயற்சிகள் தோல்வி அடைகையில் நாம் எரிச்சலுற்று யெகோவாவைப் பழிப்பதற்குப் பதிலாக, சூழ்நிலையை ஆராய்ந்துபார்த்து, அந்தத் தோல்விக்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும். அதையே தாவீது செய்தார். தான் செய்த தவறிலிருந்து அவர் பாடம் கற்றுக்கொண்டார்; பிற்பாடு முறைப்படி உடன்படிக்கைப் பெட்டியை எருசலேமுக்குக் கொண்டுவந்து சேர்த்தார்.a
14:10, 13-16; 22:17-19. நாம் எப்போதும் யெகோவாவிடம் ஜெபத்தில் அணுக வேண்டும்; ஆன்மீக ரீதியில் நம்மைப் பாதிக்கிற எந்தவொரு காரியத்தையும் செய்வதற்கு முன் அவருடைய வழிநடத்துதலை நாட வேண்டும்.
16:23-29. யெகோவாவின் வணக்கத்திற்கே வாழ்க்கையில் முதலிடம் தரவேண்டும்.
18:3. யெகோவா தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறவர். ஆபிரகாமின் சந்ததிக்கு கானான் தேசம் முழுவதையும், அதாவது ‘எகிப்தின் நதி துவங்கி ஐபிராத்து நதி என்னும் பெரிய நதி மட்டும்,’ கொடுப்பதாக அளித்த வாக்குறுதியை தாவீதின் மூலம் நிறைவேற்றினார்.—ஆதியாகமம் 15:18; 1 நாளாகமம் 13:5.
21:13-15. தம் ஜனங்கள் பட்ட அவஸ்தையை சகிக்க முடியாமல் அந்த வாதையை நிறுத்தும்படி தேவதூதனுக்கு யெகோவா கட்டளையிட்டார். உண்மையிலேயே “அவருடைய இரக்கங்கள் மகா பெரியது.”b
22:5, 9; 29:3-5, 14-16. யெகோவாவுக்கு ஆலயத்தைக் கட்டும் பொறுப்பு தாவீதுக்குக் கிடைக்காவிடினும், அதற்கு அவர் தாராளமாக உதவினார். ஏன்? ஏனெனில் தான் சம்பாதித்த அனைத்தும் யெகோவாவின் நற்குணத்தினால் என்பதை அவர் உணர்ந்தார். அதுபோன்ற நன்றியுணர்வு தாராளமாகக் கொடுப்பதற்கு நம்மையும் உந்துவிக்க வேண்டும்.
24:7-18. ஆசாரியர்களை 24 வகுப்புகளாக பிரிக்கும் ஏற்பாட்டை தாவீது தொடங்கி வைத்தார். முழுக்காட்டுபவனாகிய யோவானின் தகப்பன் சகரியாவுக்கு யெகோவாவின் தூதர் தரிசனமாகி, யோவானின் பிறப்பைப் பற்றி அறிவித்த சமயத்திலும்கூட இந்த ஏற்பாடு அமலில் இருந்தது. ‘அபியா என்னும் ஆசாரிய வகுப்பைச்’ சேர்ந்த சகரியா, தனக்கு கிடைத்த வரிசைமுறைப்படி அப்போது ஆலயத்தில் சேவை செய்துகொண்டிருந்தார். (லூக்கா 1:5, 8, 9) மெய் வணக்கம் புராணக்கதைகளோடு அல்ல, ஆனால் சரித்திரப்பூர்வ ஆட்களோடு தொடர்புடையது, இன்று யெகோவாவின் ஒழுங்குபடுத்தப்பட்ட வணக்கம் சம்பந்தமாக, “உண்மையும் விவேகமுமுள்ள அடிமைக்கு” நாம் உண்மையோடு ஒத்துழைப்பு தரும்போது கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.—மத்தேயு 24:45, NW.
“உற்சாக மனதோடு” யெகோவாவுக்குச் சேவை செய்யுங்கள்
ஒன்று நாளாகம புத்தகம் வெறும் வம்ச வரலாறுகளின் புத்தகம் அல்ல. தாவீது உடன்படிக்கைப் பெட்டியை எருசலேமுக்குக் கொண்டுவந்தது, பல வெற்றிகளை பெற்றது, ஆலய கட்டுமானத்திற்கு வேண்டியவற்றை முன்கூட்டியே சேர்த்து வைத்தது, ஆலய சேவைக்கு லேவிய ஆசாரியர்களை பல வகுப்புகளாக பிரித்தது ஆகியவற்றையும் இது விவரிக்கிறது. இப்புத்தகத்தில் எஸ்றா விவரமாக குறிப்பிட்ட அனைத்து காரியங்களும் இஸ்ரவேலருக்கு நிச்சயம் நன்மை அளித்திருக்கும், ஆலயத்தில் யெகோவாவை மீண்டும் ஆர்வத்தோடு வணங்க அவர்களுக்கு உதவியிருக்கும்.
யெகோவாவின் வணக்கத்திற்கு முதலிடம் கொடுப்பதில் தாவீது எப்பேர்ப்பட்ட சிறந்த முன்மாதிரி! தனக்கென விசேஷித்த சிலாக்கியங்களை நாடுவதற்கு பதிலாக, கடவுளுடைய சித்தத்தைச் செய்வதற்கு தாவீது வழிதேடினார். “உத்தம [“முழு,” NW] இருதயத்தோடும், உற்சாக மனதோடும்” அவருக்குச் சேவை செய்யும்படி தாவீது கொடுத்த ஆலோசனையைப் பின்பற்றும்படி நாம் ஊக்குவிக்கப்படுகிறோம்.—1 நாளாகமம் 28:9.
[அடிக்குறிப்புகள்]
a உடன்படிக்கைப் பெட்டியை எருசலேமுக்குக் கொண்டுவர தாவீது முற்பட்டதிலிருந்து இன்னும் பிற பாடங்களைக் கற்றுக்கொள்வதற்கு மே 15, 2005 காவற்கோபுரத்தில் பக்கங்கள் 16-19-ஐக் காண்க.
b தாவீது சட்டவிரோதமாக ஜனத்தொகையைக் கணக்கிட்டது சம்பந்தமான பாடங்களுக்கு மே 15, 2005 காவற்கோபுரம் பக்கங்கள் 16-19-ஐக் காண்க.
[பக்கம் 8-11-ன் அட்டவணை/படங்கள்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
ஆதாம்முதல் நோவாவரை: ஒன்பது தலைமுறைகள் (1,056 ஆண்டுகள்)
பொ.ச.மு. 4026 ஆதாம்
130 ஆண்டுகள் ⇩
சேத்
105 ⇩
ஏனோஸ்
90 ⇩
கேனான்
70 ⇩
மகலாலெயேல்
65 ⇩
யாரேத்
162 ⇩
ஏனோக்கு
மெத்தூசலா
187 ⇩
லாமேக்கு
182 ⇩
பொ.ச.மு. 2970, நோவா பிறந்தார்
நோவாமுதல் ஆபிரகாம்வரை: பத்து தலைமுறைகள் (952 ஆண்டுகள்)
பொ.ச.மு. 2970 நோவா
502 ஆண்டுகள் ⇩
சேம்
பொ.ச.மு. 2370, ஜலப்பிரளயம்
100 ⇩
அர்பக்சாத்
35 ⇩
சாலா
30 ⇩
ஏபேர்
34 ⇩
பேலேகு
30 ⇩
ரெகூ
32 ⇩
செரூகு
30 ⇩
நாகோர்
29 ⇩
தேராகு
130 ⇩
பொ.ச.மு. 2018, ஆபிரகாம் பிறந்தார்
ஆபிரகாம்முதல் தாவீதுவரை: 14 தலைமுறைகள் (911 ஆண்டுகள்)
பொ.ச.மு. 2018 ஆபிரகாம்
100 ஆண்டுகள்
ஈசாக்கு
60 ⇩
யாக்கோபு
ஏ. 88 ⇩
யூதா
⇩
பாரேஸ்
⇩
எஸ்ரோன்
⇩
ராம்
⇩
அம்மினதாப்
⇩
நகசோன்
⇩
சல்மோன்
⇩
போவாஸ்
⇩
ஓபேத்
⇩
ஈசாய்
⇩
பொ.ச.மு. 1107, தாவீது பிறந்தார்