ரோமருக்குக் கடிதம்
3 அப்படியானால், யூதனாக இருப்பதால் நன்மை இருக்கிறதா, விருத்தசேதனம் செய்வதால் பயன் இருக்கிறதா? 2 எல்லா விதத்திலும் நிறைய நன்மை இருக்கிறது. முதலாவதாக, யூதர்களிடம்தான் கடவுளுடைய பரிசுத்த வார்த்தைகள் ஒப்படைக்கப்பட்டன.+ 3 இருந்தாலும், சில யூதர்கள் விசுவாசம் வைக்கவில்லை! அதனால் என்ன? சிலர் விசுவாசம் வைக்காததால் கடவுள் உண்மையில்லாதவராக ஆகிவிடுவாரா? 4 இல்லவே இல்லை! மனிதர்கள் எல்லாரும் பொய்யர்களாக இருந்தாலும்+ கடவுள் உண்மையானவராக இருப்பார்.+ ஏனென்றால், “நீங்கள் நீதியுள்ளவர் என்பதை உங்களுடைய வார்த்தைகள் நிரூபிக்கும்.+ உங்களுடைய வழக்கில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்” என்று எழுதப்பட்டிருக்கிறது. 5 ஆனாலும் சிலர், “நாம் அநீதியாக நடந்துகொள்ளும்போது, கடவுள் நீதியானவர் என்பது தெளிவாகத் தெரிகிறது, இல்லையா? அப்படியிருக்கும்போது, அவர் நம்மேல் கடும் கோபத்தைக் காட்டுவது நியாயமாக இருக்குமா?” என்று நினைக்கிறார்கள். 6 கடவுள் நியாயமில்லாதவராக இருக்கவே முடியாது! அப்படி அவர் நியாயமில்லாதவர் என்றால், அவரால் எப்படி இந்த உலகத்தை நியாயந்தீர்க்க முடியும்?+
7 வேறு சிலர், “நான் பொய் பேசும்போது, கடவுள் உண்மையானவர் என்பது தெளிவாகத் தெரிவதோடு அவருக்கு மகிமையும் சேருகிறது, இல்லையா? அப்படியிருக்கும்போது, நான் ஏன் பாவி என்று தீர்ப்பளிக்கப்பட வேண்டும்” என்று கேட்கிறார்கள். 8 அப்படிப் பார்த்தால், “நாம் தீமை செய்யலாம். அதன் மூலம் நன்மை வரும்” என்று சொல்லலாமே? நாங்கள் இப்படிச் சொல்வதாகச் சில ஆட்கள் எங்கள்மீது குற்றம்சாட்டுகிறார்கள். அவர்கள் சொல்வது பொய். அவர்களுக்குத் தண்டனைத் தீர்ப்பு கிடைப்பது நியாயம்தான்.+
9 அப்படியானால் என்ன? யூதர்களான நாம் மற்றவர்களைவிட உயர்ந்தவர்களா? இல்லவே இல்லை! யூதர்கள், கிரேக்கர்கள் எல்லாருமே பாவத்தின் பிடியில் இருப்பதாக+ ஏற்கெனவே சொல்லியிருக்கிறோம். 10 எழுதப்பட்டிருக்கிறபடி, “நீதிமானே இல்லை, ஒருவன்கூட இல்லை.+ 11 விவேகமாக நடக்கிறவன் ஒருவன்கூட இல்லை, கடவுளைத் தேடுகிறவன் ஒருவன்கூட இல்லை. 12 எல்லா மனிதர்களும் வழிவிலகிப் போயிருக்கிறார்கள், எல்லாரும் கெட்டுப்போயிருக்கிறார்கள்; கருணை காட்டுகிறவனே இல்லை, ஒருவன்கூட இல்லை.”+ 13 “அவர்களுடைய தொண்டை ஒரு திறந்த கல்லறை, அவர்கள் தங்களுடைய நாவுகளால் ஏமாற்றியிருக்கிறார்கள்.”+ “அவர்களுடைய உதடுகளின் பின்னால் பாம்பின் விஷம் இருக்கிறது.”+ 14 “அவர்கள் வாயைத் திறந்தாலே சாபங்களும் கசப்பான வார்த்தைகளும்தான் வருகின்றன.”+ 15 “அவர்களுடைய கால்கள் இரத்தத்தைச் சிந்த ஓடுகின்றன.”+ 16 “எப்போதும் மற்றவர்களுக்குக் கெடுதல் செய்கிறார்கள், கஷ்டம் கொடுக்கிறார்கள். 17 சமாதான வழியைப் பற்றித் தெரியாமல் இருக்கிறார்கள்.”+ 18 “அவர்களுக்குக் கடவுள்பயம் துளிகூட இல்லை.”+
19 திருச்சட்டம் சொல்கிற எல்லாம் திருச்சட்டத்தின்கீழ் இருக்கிறவர்களுக்குத்தான் என்பது நமக்குத் தெரியும். அதனால், அவர்களில் யாரும் தங்களைக் குற்றமில்லாதவர்கள் என்று சொல்லிக்கொள்ள முடியாது. உலகமே கடவுளுடைய தண்டனைக்கு ஆளாகும் நிலையில் இருக்கிறது.+ 20 அதனால், திருச்சட்டத்தின் செயல்களைச் செய்வதால் யாருமே கடவுளுக்கு முன்னால் நீதிமான்களாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள்.+ திருச்சட்டத்தின் மூலம்தான் பாவத்தைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்கிறார்கள்.+
21 இப்போதோ, திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்காமலேயே கடவுளுக்கு முன்னால் நீதிமான்களாக இருக்க முடியும் என்பது தெளிவாகக் காட்டப்பட்டிருக்கிறது.+ இது திருச்சட்டத்திலும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களிலும்கூட குறிப்பிடப்பட்டிருக்கிறது.+ 22 இயேசு கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைப்பதன் மூலம் கடவுளுக்கு முன்னால் நீதிமான்களாக இருக்க முடியும், விசுவாசம் வைக்கிற எல்லாருமே நீதிமான்களாக இருக்க முடியும். இதில் எந்தப் பாகுபாடும் இல்லை.+ 23 ஏனென்றால், எல்லாருமே பாவம் செய்து கடவுளுடைய மகிமையான குணங்களைக் காட்டத் தவறியிருக்கிறார்கள்.+ 24 இருந்தாலும், கிறிஸ்து இயேசு செலுத்திய மீட்புவிலையால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டு,+ நீதிமான்களாக ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். இது கடவுளுடைய அளவற்ற கருணையால்+ கிடைக்கும் ஓர் இலவச அன்பளிப்பு.+ 25 கிறிஸ்துவின் இரத்தத்தில் விசுவாசம் வைப்பதன் மூலம்+ மனிதர்கள் தன்னோடு சமாதானமாவதற்காக அவரைப் பிராயச்சித்த பலியாக* கடவுள் கொடுத்தார்.+ முற்காலத்தில் செய்யப்பட்ட பாவங்களைச் சகித்துக்கொண்டு மன்னித்தது நீதியான செயல் என்பதைக் காட்டுவதற்காக அவர் அப்படிச் செய்தார். 26 இயேசுவின் மேல் விசுவாசம் வைக்கும் மனிதனை நீதிமானாக ஏற்றுக்கொள்வதன்+ மூலம் தான் நீதியுள்ளவர்+ என்பதை இந்தக் காலத்தில் நிரூபிப்பதற்காகவும் அவர் அப்படிச் செய்தார்.
27 அதனால், ஒருவன் பெருமையடிக்க முடியுமா? முடியாது. எந்தச் சட்டத்தின் அடிப்படையில் ஒருவனால் பெருமையடிக்க முடியும்? செயல்கள் முக்கியம் என்று சொல்கிற சட்டத்தின் அடிப்படையிலா?+ இல்லவே இல்லை, விசுவாசம் முக்கியம் என்று சொல்கிற சட்டத்தின் அடிப்படையில்தான். 28 அதனால், திருச்சட்டத்தின் செயல்களைச் செய்வதால் அல்ல, விசுவாசத்தால்தான் ஒருவன் நீதிமானாக ஏற்றுக்கொள்ளப்படுகிறான் என்ற முடிவுக்கு வருகிறோம்.+ 29 கடவுள் யூதர்களுக்கு மட்டுமா கடவுள்?+ மற்ற தேசத்து மக்களுக்கும் அவர்தானே கடவுள்?+ ஆம், மற்ற தேசத்து மக்களுக்கும் அவர்தான் கடவுள்.+ 30 கடவுள் ஒருவர்+ என்பதால், விருத்தசேதனம் செய்தவர்களையும் சரி, விருத்தசேதனம் செய்யாதவர்களையும் சரி, அவர்களுடைய விசுவாசத்தின் மூலம் நீதிமான்களாக ஏற்றுக்கொள்வார்.+ 31 அப்படியானால், நம்முடைய விசுவாசத்தால் நாம் திருச்சட்டத்தை ஒழிக்கிறோமா? இல்லவே இல்லை! உண்மையில், நாம் திருச்சட்டத்தை நிலைநாட்டுகிறோம்.+