உபாகமம்
5 பின்பு மோசே, இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரையும் கூப்பிட்டு, “இஸ்ரவேலர்களே, இன்றைக்கு நான் சொல்கிற விதிமுறைகளையும் நீதித்தீர்ப்புகளையும் கேளுங்கள். அவற்றைக் கற்றுக்கொண்டு கவனமாகப் பின்பற்றுங்கள். 2 நம் கடவுளாகிய யெகோவா ஓரேபில் நம்மோடு ஒரு ஒப்பந்தம் செய்தார்.+ 3 அந்த ஒப்பந்தத்தை யெகோவா நம் முன்னோர்களோடு செய்யாமல், இன்று உயிரோடிருக்கிற நம்மோடுதான் செய்தார். 4 அந்த மலையில் நெருப்பின் நடுவிலிருந்து யெகோவா உங்களோடு நேருக்கு நேராகப் பேசினார்.+ 5 நீங்கள் நெருப்பைப் பார்த்துப் பயந்து அந்த மலைமேல் ஏறி வராமல் இருந்தீர்கள்.+ அதனால் யெகோவாவின் வார்த்தைகளை உங்களுக்குச் சொல்வதற்காக, நான் யெகோவாவுக்கும் உங்களுக்கும் நடுவில் நின்றேன்.+ அப்போது அவர் இப்படிச் சொன்னார்:
6 ‘எகிப்து தேசத்தில் அடிமைகளாக அடைபட்டிருந்த உங்களை விடுதலை செய்து கூட்டிக்கொண்டு வந்த உங்கள் கடவுளாகிய யெகோவா நான்தான்.+ 7 என்னைத் தவிர* வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கவே கூடாது.+
8 மேலே வானத்திலோ கீழே பூமியிலோ பூமியின் கீழ் தண்ணீரிலோ இருக்கிற எதனுடைய வடிவத்திலும் நீங்கள் உருவங்களையும் சிலைகளையும் உங்களுக்காக உண்டாக்கக் கூடாது.+ 9 அவற்றுக்கு முன்னால் தலைவணங்கவோ அவற்றைக் கும்பிடவோ கூடாது.+ நான் உங்கள் கடவுளாகிய யெகோவா. நீங்கள் என்னை மட்டும்தான் வணங்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறேன்.+ தகப்பன்கள் என்னை வெறுத்து எனக்கு எதிராகப் பாவம் செய்தால் அவர்களுடைய பிள்ளைகளை மூன்றாம் நான்காம் தலைமுறைவரை தண்டிப்பேன்.+ 10 ஆனால், என்னை நேசித்து என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர்களுக்கு ஆயிரம் தலைமுறைவரை மாறாத அன்பைக் காட்டுவேன்.
11 உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பெயரை வீணாகப் பயன்படுத்தக் கூடாது.+ யெகோவாவின் பெயரை வீணாகப் பயன்படுத்துகிறவர்களை அவர் தண்டிக்காமல் விட மாட்டார்.+
12 உங்கள் கடவுளாகிய யெகோவா கட்டளை கொடுத்தபடியே, ஓய்வுநாளைப் புனித நாளாக அனுசரியுங்கள்.+ 13 ஆறு நாட்களுக்கு உங்களுடைய எல்லா வேலைகளையும் செய்யுங்கள்.+ 14 ஆனால், ஏழாம் நாள் உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கான ஓய்வுநாள்.+ அன்றைக்கு நீங்களோ, உங்களுடைய மகனோ மகளோ, உங்களிடம் அடிமையாக இருக்கிற ஆணோ பெண்ணோ, உங்களுடைய மாடோ கழுதையோ, வேறெதாவது வீட்டு விலங்கோ, உங்கள் நகரங்களில் குடியிருக்கிற வேறு தேசத்துக்காரனோ+ எந்த வேலையும் செய்யக் கூடாது.+ நீங்கள் ஓய்வெடுப்பதுபோல் உங்கள் அடிமையும் ஓய்வெடுக்க வேண்டும்.+ 15 எகிப்தில் நீங்கள் அடிமைகளாக இருந்ததை ஞாபகத்தில் வையுங்கள். உங்கள் கடவுளாகிய யெகோவா தன் கைபலத்தாலும் மகா வல்லமையாலும் உங்களை அங்கிருந்து கூட்டிக்கொண்டு வந்தார்.+ அதனால்தான், ஓய்வுநாளை அனுசரிக்க வேண்டுமென்று உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்குக் கட்டளை கொடுத்தார்.
16 உங்கள் கடவுளாகிய யெகோவா கட்டளை கொடுத்தபடியே, உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதிப்புக் கொடுங்கள்.+ அப்போதுதான், உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற தேசத்தில் நீங்கள் சீரும் சிறப்புமாக நீண்ட காலம் வாழ்வீர்கள்.+
17 நீங்கள் கொலை செய்யக் கூடாது.+
18 உங்களுடைய மணத்துணைக்குத் துரோகம் செய்யக் கூடாது.+
20 அடுத்தவனுக்கு விரோதமாகப் பொய் சாட்சி சொல்லக் கூடாது.+
21 அடுத்தவனுடைய மனைவியை அடைய ஆசைப்படக் கூடாது.+ அவனுடைய அடிமையையும்,* வீட்டையும், வயலையும், காளையையும், கழுதையையும், அவனுக்குச் சொந்தமான வேறு எதையும் அடையத் துடிக்கக் கூடாது.’+
22 சபையாராகிய உங்கள் எல்லாருக்கும் யெகோவா இந்தக் கட்டளைகளை மலையிலே கொடுத்தார். அப்போது, நெருப்பிலிருந்தும் மேகத்திலிருந்தும் இருட்டிலிருந்தும்+ சத்தமான குரலில் அவர் பேசினார். அவற்றைத் தவிர வேறு கட்டளைகளை அவர் கொடுக்கவில்லை. அவற்றை இரண்டு கற்பலகைகளில் எழுதி என்னிடம் தந்தார்.+
23 ஆனால் மலையில் நெருப்பு எரிந்துகொண்டிருந்தபோது, இருண்ட மேகத்திலிருந்து வந்த அவருடைய குரலைக் கேட்டவுடன்,+ நீங்கள் உங்களுடைய கோத்திரத் தலைவர்களையும் பெரியோர்களையும்* என்னிடம் அனுப்பி, 24 ‘நம் கடவுளாகிய யெகோவா தன் மகிமையையும் மகத்துவத்தையும் எங்களுக்குக் காட்டியிருக்கிறார், நெருப்பிலிருந்து வந்த அவருடைய குரலைக் கேட்டோம்.+ கடவுள் மனுஷனோடு பேசியும் அந்த மனுஷன் உயிரோடு இருப்பதை இன்று எங்கள் கண்களாலேயே பார்த்தோம்.+ 25 இப்போது நாங்கள் ஏன் சாக வேண்டும்? பற்றியெரிகிற அவருடைய நெருப்பு எங்களைச் சுட்டெரித்துவிடுமே. நம் கடவுளாகிய யெகோவாவின் குரலை இனியும் கேட்டுக்கொண்டிருந்தால் நாங்கள் நிச்சயம் செத்துப்போய்விடுவோம். 26 நெருப்பின் நடுவிலிருந்து பேசிய உயிருள்ள கடவுளின் குரலை நாங்கள் கேட்டது போல வேறு யாராவது கேட்டு உயிரோடு இருந்திருக்கிறார்களா? 27 அதனால், நம் கடவுளாகிய யெகோவா சொல்கிற எல்லாவற்றையும் நீங்களே போய்க் கேட்டு எங்களுக்குச் சொல்லுங்கள். நம் கடவுளாகிய யெகோவா சொல்வதையெல்லாம் நீங்களே எங்களுக்குச் சொல்லுங்கள். அதன்படி நாங்கள் நடக்கிறோம்’+ என்று சொன்னீர்கள்.
28 நீங்கள் என்னிடம் சொன்னதையெல்லாம் யெகோவா கேட்டார். அதனால் யெகோவா என்னிடம், ‘இந்த ஜனங்கள் உன்னிடம் சொன்னதையெல்லாம் நான் கேட்டேன். அவர்கள் சொல்வது சரிதான்.+ 29 எனக்குப் பயந்து, என்னுடைய எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்து நடக்கிற+ இதயம் அவர்களுக்கு எப்போதுமே இருந்தால்+ எவ்வளவு நன்றாக இருக்கும்! அப்போது அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் என்றென்றும் சந்தோஷமாக வாழ்வார்கள்.+ 30 இப்போது நீ அவர்களை அவர்களுடைய கூடாரங்களுக்குப் போகச் சொல். 31 ஆனால், நீ என்னோடு இங்கேயே இரு. நீ அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிய எல்லா கட்டளைகளையும் விதிமுறைகளையும் நீதித்தீர்ப்புகளையும் நான் உனக்குச் சொல்கிறேன். நான் அவர்களுக்குக் கொடுக்கப்போகும் தேசத்தில் அவற்றையெல்லாம் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும்’ என்று சொன்னார். 32 அதனால், உங்கள் கடவுளாகிய யெகோவாவின் கட்டளைப்படி நடப்பதற்கு நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.+ அவருடைய வழியைவிட்டு வலது பக்கமோ இடது பக்கமோ திரும்பக் கூடாது.+ 33 உங்கள் கடவுளாகிய யெகோவா காட்டிய வழியில் நீங்கள் நடக்க வேண்டும்.+ அப்போதுதான், நீங்கள் சொந்தமாக்கப்போகிற தேசத்தில் சீரும் சிறப்புமாக நீடூழி வாழ்வீர்கள்”+ என்றார்.