உபாகமம்
10 பின்பு, “யெகோவா என்னிடம், ‘முன்பு இருந்ததைப் போலவே வேறு இரண்டு கற்பலகைகளை வெட்டி எடுத்துக்கொண்டு+ மலைமேல் ஏறி வா. நீ ஒரு மரப்பெட்டியையும் செய்துகொள். 2 நீ உடைத்துப்போட்ட முதல் கற்பலகைகளில் இருந்த வார்த்தைகளை இந்தக் கற்பலகைகளில் நான் எழுதுவேன். இவற்றை நீ அந்தப் பெட்டியில் வைக்க வேண்டும்’ என்று சொன்னார். 3 அதனால், நான் வேல மரத்தால் ஒரு பெட்டியைச் செய்தேன். முன்பு இருந்ததைப் போலவே வேறு இரண்டு கற்பலகைகளை வெட்டி எடுத்துக்கொண்டு, மலைமேல் ஏறிப் போனேன்.+ 4 முன்பு நீங்கள் ஒன்றுகூடி வந்த நாளிலே,+ மலையில் எரிந்துகொண்டிருந்த நெருப்பின் நடுவிலிருந்து யெகோவா சொன்ன அதே வார்த்தைகளை,+ அதாவது முன்பு எழுதிய அதே பத்துக் கட்டளைகளை,+ அந்தக் கற்பலகைகளில் யெகோவா எழுதினார்.+ அதன்பின், அவற்றை என்னிடம் தந்தார். 5 பின்பு நான் மலையிலிருந்து கீழே இறங்கி வந்து,+ நான் செய்து வைத்திருந்த பெட்டியில் அந்தக் கற்பலகைகளை வைத்தேன். யெகோவா எனக்குக் கட்டளை கொடுத்தபடியே அவை இன்றுவரை அதில் இருக்கின்றன.
6 பிற்பாடு, இஸ்ரவேலர்கள் பேரோத் பெனெ-யாக்கானிலிருந்து புறப்பட்டு மோசெராவுக்குப் போனார்கள். அங்கே ஆரோன் இறந்துபோனார், அங்குதான் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.+ அவருடைய மகன் எலெயாசார் அவருக்குப் பதிலாகக் குருத்துவச் சேவை செய்யத் தொடங்கினான்.+ 7 அங்கிருந்து அவர்கள் புறப்பட்டு குத்கோதாவுக்குப் போனார்கள். பின்பு, குத்கோதாவிலிருந்து யோத்பாத்தாவுக்குப்+ போனார்கள். அது ஆறுகள் பாய்ந்தோடுகிற தேசம்.
8 அப்போது, யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியைச் சுமக்கவும்,+ யெகோவாவின் சன்னிதியில் அவருக்குச் சேவை செய்யவும், அவருடைய பெயரில் ஆசீர்வாதம் வழங்கவும்+ லேவி கோத்திரத்தாரை யெகோவா தேர்ந்தெடுத்தார்.+ இன்றுவரை அவர்கள் இதையெல்லாம் செய்துவருகிறார்கள். 9 அதனால்தான், லேவியர்களுக்கு அவர்களுடைய சகோதரர்களோடு எந்தப் பங்கும் சொத்தும் கொடுக்கப்படவில்லை. உங்கள் கடவுளாகிய யெகோவா சொன்னபடி, யெகோவாதான் அவர்களுடைய சொத்து.+ 10 முன்பு போலவே ராத்திரி பகலாக 40 நாட்கள் நான் மலையில் இருந்தேன்.+ அந்தச் சமயத்திலும் யெகோவா என் மன்றாட்டைக் கேட்டார்.+ யெகோவா உங்களை அழிக்காமல் விட்டுவிட்டார். 11 பின்பு யெகோவா என்னிடம், ‘நான் உங்களுடைய முன்னோர்களுக்குத் தருவதாக வாக்குக் கொடுத்த தேசத்தை+ நீங்கள் கைப்பற்றுவதற்காக, இப்போது ஜனங்களைக் கூட்டிக்கொண்டு புறப்பட்டுப் போ’ என்றார்.
12 இஸ்ரவேலர்களே, உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களிடம் என்ன கேட்கிறார்?+ உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குப் பயந்து+ அவருடைய வழிகளில் நடக்கவும்,+ அவர்மேல் அன்பு காட்டவும், உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் சேவை செய்யவும் வேண்டும் என்றுதானே கேட்கிறார்?+ 13 உங்களுடைய நன்மைக்காக இன்று நான் உங்களுக்குக் கொடுக்கிற யெகோவாவின் கட்டளைகளையும் சட்டதிட்டங்களையும் கடைப்பிடிக்க வேண்டும் என்றுதானே கேட்கிறார்?+ 14 இதோ! வானமும், ஏன் வானாதி வானமும், பூமியும் அதில் உள்ளவையும் உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குத்தான் சொந்தம்.+ 15 ஆனாலும், உங்களுடைய முன்னோர்களிடம் மட்டும்தான் யெகோவா நெருக்கமாக இருந்து, அன்பு காட்டினார். அவர்களுடைய சந்ததியான உங்களைத்தான் தனக்காகத் தேர்ந்தெடுத்தார்.+ இன்று எத்தனையோ ஜனங்கள் இருந்தாலும் நீங்கள்தான் அவருடைய ஜனம். 16 அதனால், இப்போது உங்களுடைய இதயத்தைச் சுத்தமாக்குங்கள்,+ முரண்டுபிடிப்பதை விட்டுவிடுங்கள்.+ 17 உங்கள் கடவுளாகிய யெகோவாதான் தேவாதி தேவன்,+ எஜமான்களுக்கெல்லாம் எஜமான், வல்லமை படைத்தவர், அதிசயமும் அற்புதமுமானவர், யாருக்கும் பாரபட்சம் காட்டாதவர்,+ லஞ்சம் வாங்காதவர், 18 அப்பா இல்லாத பிள்ளைக்கும்* விதவைக்கும் நியாயம் செய்கிறவர்,+ உங்களோடு வாழ்கிற வேறு தேசத்து ஜனங்களை நேசிக்கிறவர்,+ அவர்களுக்கு உணவும் உடையும் தருகிறவர். 19 நீங்களும் அவர்களை நேசிக்க வேண்டும். ஏனென்றால், நீங்களும்கூட வேறு தேசத்தில், அதாவது எகிப்து தேசத்தில், குடியிருந்தீர்களே.+
20 உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு நீங்கள் பயந்து நடக்க வேண்டும், அவருக்கு மட்டும்தான் சேவை செய்ய வேண்டும்,+ அவரையே உறுதியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும், அவருடைய பெயரில்தான் சத்தியம் செய்ய வேண்டும். 21 அவரைத்தான் நீங்கள் புகழ வேண்டும்.+ அவர்தான் உங்கள் கடவுள், அவர்தான் உங்கள் கண் முன்னால் உங்களுக்காக அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்தவர்.+ 22 எகிப்துக்குப் போன உங்கள் முன்னோர்கள் வெறும் 70 பேர்தான்.+ ஆனால், இன்றைக்கு உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை வானத்து நட்சத்திரங்கள் போல ஏராளமாகப் பெருக வைத்திருக்கிறார்”+ என்றார்.