எசேக்கியேல்
5 அதன்பின் அவர், “மனிதகுமாரனே, கூர்மையான ஒரு வாளை நீ எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு சவரக்கத்தியைப் போல அதை வைத்து உன்னுடைய தலைமுடியையும் தாடியையும் சிரைக்க வேண்டும். பின்பு, அந்த முடியைத் தராசில் எடைபோட்டு மூன்று பங்காகப் பிரிக்க வேண்டும். 2 அதில் ஒரு பங்கை எடுத்து முற்றுகை நாட்களின் முடிவில் நகரத்துக்குள் சுட்டெரிக்க வேண்டும்.+ இன்னொரு பங்கை எடுத்து நகரத்தைச் சுற்றிலும் வாளால் வெட்டிப்போட வேண்டும்.+ கடைசி பங்கை எடுத்து காற்றில் பறக்கவிட வேண்டும். அவற்றுக்குப் பின்னால் நான் ஒரு வாளை அனுப்புவேன்.+
3 அந்தக் கடைசி பங்கிலிருந்து கொஞ்சத்தை எடுத்து உன்னுடைய அங்கியின் ஓரங்களில் முடிந்துகொள். 4 இன்னும் கொஞ்சத்தை எடுத்து நெருப்பில் போட்டு எரித்துவிடு. அந்த நெருப்பு இஸ்ரவேல் ஜனங்கள் எல்லார் மேலேயும் பற்றியெரியும்.+
5 உன்னதப் பேரரசராகிய யெகோவா இப்படிச் சொல்கிறார்: ‘இது எருசலேமைக் குறிக்கிறது. மற்ற ஜனங்களின் நடுவிலும் தேசங்களின் நடுவிலும் நான் எருசலேமை வைத்தேன். 6 ஆனால், அவள் என்னுடைய நீதித்தீர்ப்புகளையும் சட்டதிட்டங்களையும் மீறினாள். சுற்றியுள்ள ஜனங்களையும் தேசங்களையும்விட மோசமாக நடந்துகொண்டாள்.+ என்னுடைய நீதித்தீர்ப்புகளை ஒதுக்கித்தள்ளி, என்னுடைய சட்டதிட்டங்களின்படி நடக்காமல்போனாள்.’
7 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘சுற்றியுள்ள எல்லா தேசங்களையும்விட நீ அதிக அட்டூழியம் செய்தாய். என்னுடைய சட்டதிட்டங்களையும் நீதித்தீர்ப்புகளையும் ஒதுக்கிவிட்டு அந்தத் தேசங்களின் நீதித்தீர்ப்புகளைப் பின்பற்றினாய்.+ 8 அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “நகரமே, நான் உன் எதிரியாக வருவேன்.+ எல்லா தேசங்களுக்கு முன்பாகவும் உன்னைத் தண்டிப்பேன்.+ 9 நீ அருவருப்பான காரியங்களைச் செய்ததால் நான் உனக்கு ஒன்றைச் செய்யப்போகிறேன். அப்படிப்பட்ட ஒன்றை நான் இதுவரை செய்ததும் இல்லை, இனிமேல் செய்யப்போவதும் இல்லை.+
10 பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளையும் பிள்ளைகள் தங்களுடைய பெற்றோரையும் கொன்று சாப்பிடுவார்கள்.+ நான் உங்களைத் தண்டித்து, மிச்சமிருக்கிற எல்லாரையும் நாலாபக்கமும் சிதறிப்போகச் செய்வேன்.”’+
11 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்,* அருவருப்பான சிலைகளாலும் அருவருப்பான பழக்கவழக்கங்களாலும் நீ என்னுடைய ஆலயத்தைத் தீட்டுப்படுத்தியதால்+ நான் உன்னை ஒதுக்கித்தள்ளுவேன். உன்னைப் பார்த்துப் பரிதாபப்பட மாட்டேன். உன்மேல் கொஞ்சம்கூட கரிசனை காட்ட மாட்டேன்.+ 12 உன்னுடைய ஜனங்களில் மூன்றிலொரு பங்கினர் கொள்ளைநோயினால் அல்லது பஞ்சத்தினால் சாவார்கள். மூன்றிலொரு பங்கினர் உன்னைச் சுற்றிலும் வாளுக்குப் பலியாவார்கள்.+ மிச்சமிருக்கிற மூன்றிலொரு பங்கினரை நான் எல்லா திசைகளிலும் சிதறிப்போகப் பண்ணுவேன். அவர்களுக்குப் பின்னால் ஒரு வாளை அனுப்புவேன்.+ 13 அப்போதுதான் என் கோபம் அடங்கும். என்னுடைய ஆக்ரோஷம் தணிந்து, நான் நிம்மதி அடைவேன்.+ நான் அவர்கள்மேல் என் கோபத்தைக் கொட்டித் தீர்த்த பின்பு, யெகோவாவாகிய நான் முழு பக்தியை*+ எதிர்பார்க்கிற கடவுளாக இருப்பதால்தான் இதையெல்லாம் சொன்னேன் என்று தெரிந்துகொள்வார்கள்.
14 நான் உன்னைப் பாழாக்கி, சுற்றியுள்ள ஜனங்களும் அந்தப் பக்கமாகப் போகிற எல்லாரும் உன்னைப் பழித்துப் பேசும்படி செய்வேன்.+ 15 நான் கோபத்தோடும் ஆக்ரோஷத்தோடும் உன்னைப் பயங்கரமாகத் தண்டிக்கும்போது, உனக்கு வந்த கோரமான முடிவைப் பார்த்து சுற்றியுள்ள ஜனங்கள் உன்னைப் பழித்துப் பேசுவார்கள். உன்னைக் கிண்டல் செய்வார்கள்.+ உன்னுடைய கெட்ட உதாரணம் அவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும். யெகோவாவாகிய நானே இதைச் சொல்கிறேன்.
16 உன்னைப் பாழாக்குவதற்காக, பஞ்சத்தின் கொடிய அம்புகளை உன்மேல் எறிவேன். அந்த அம்புகள் உன்னை அழிக்கும்.+ நான் பஞ்சத்தைத் தீவிரமாக்கி, உனக்கு உணவே கிடைக்காதபடி செய்துவிடுவேன்.+ 17 பஞ்சத்தையும் கொடிய மிருகங்களையும் உனக்கு எதிராக அனுப்புவேன்.+ அவை உன் பிள்ளைகளைக் கொன்றுபோடும். எங்கு பார்த்தாலும் ஜனங்கள் கொள்ளைநோய்க்குப் பலியாவார்கள், கொலை செய்யப்பட்டுக் கிடப்பார்கள். உனக்கு எதிராக நான் ஒரு வாளை அனுப்புவேன்.+ யெகோவாவாகிய நானே இதைச் சொல்கிறேன்’” என்றார்.