ஆமோஸ்
7 உன்னதப் பேரரசராகிய யெகோவா எனக்குக் காட்டிய காட்சி இதுதான்: ராஜாவுக்கென்று புற்கள் அறுக்கப்பட்ட பின்பு, கடைசிப் பருவத்தின்* பயிர்கள் முளைக்க ஆரம்பித்தபோது கடவுள் வெட்டுக்கிளிக் கூட்டத்தை அனுப்பினார். 2 தேசத்தின் பயிர்களை அந்த வெட்டுக்கிளிக் கூட்டம் தின்றுதீர்த்தது. நான் அதைப் பார்த்ததும், “உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, தயவுசெய்து மன்னித்துவிடுங்கள்.+ யாக்கோபு பலவீனமாக இருக்கிறானே, அவன் எப்படிப் பிழைப்பான்?”+ என்றேன்.
3 அதனால், யெகோவா தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டார்.*+ பின்பு யெகோவா என்னிடம், “இது நடக்காதபடி பார்த்துக்கொள்கிறேன்” என்றார்.
4 உன்னதப் பேரரசராகிய யெகோவா எனக்குக் காட்டிய காட்சி இதுதான்: உன்னதப் பேரரசராகிய யெகோவா தண்டனை கொடுப்பதற்காக நெருப்பை வரச் செய்தார். அது ஆழமான கடலை வற்றிப்போக வைத்தது, நிலத்தின் ஒரு பகுதியைச் சுட்டெரித்தது. 5 அப்போது நான், “உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, தயவுசெய்து இது நடக்காதபடி தடுத்து நிறுத்துங்கள்.+ யாக்கோபு பலவீனமாக இருக்கிறானே, அவன் எப்படிப் பிழைப்பான்?”+ என்றேன்.
6 அதனால், யெகோவா தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டார்.*+ பின்பு யெகோவா என்னிடம், “இதுவும் நடக்காதபடி பார்த்துக்கொள்கிறேன்” என்றார்.
7 அவர் எனக்குக் காட்டிய காட்சி இதுதான்: தூக்குநூலால்* சரிபார்த்துக் கட்டப்பட்ட ஒரு மதில்மேல் யெகோவா நின்றுகொண்டிருந்தார். அவர் கையில் ஒரு தூக்குநூல் இருந்தது. 8 பின்பு யெகோவா என்னிடம், “ஆமோஸ், நீ என்ன பார்க்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு நான், “ஒரு தூக்குநூலைப் பார்க்கிறேன்” என்றேன். பின்பு யெகோவா, “என் ஜனங்களாகிய இஸ்ரவேலர்களின் நடுவில் நான் தூக்குநூலைத் தொங்கவிடுகிறேன். அவர்களை இனி மன்னிக்க மாட்டேன்.+ 9 ஈசாக்கின் ஆராதனை மேடுகள்+ பாழாக்கப்படும், இஸ்ரவேலின் வழிபாட்டு இடங்கள் நாசமாக்கப்படும்,+ யெரொபெயாமின் குடும்பத்தாரை அழிக்க நான் வாளோடு வருவேன்”+ என்றார்.
10 பெத்தேலின் ஆலய குருவான அமத்சியா,+ இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமுக்கு+ இந்தச் செய்தியை அனுப்பினார்: “ஆமோஸ் இஸ்ரவேலின் நடுவில் இருந்துகொண்டே உங்களுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறான்.+ அவன் சொல்வதை ஜனங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.+ 11 ஏனென்றால், ராஜாவாகிய நீங்கள் வாளால் சாகப்போகிறீர்கள் என்றும், ஜனங்கள் கண்டிப்பாகச் சிறைபிடிக்கப்பட்டுப் போவார்கள் என்றும் அவன் சொல்கிறான்.”+
12 பின்பு அமத்சியா ஆமோசிடம், “தரிசனக்காரனே, யூதாவுக்கு ஓடிப் போ. அங்கே உன் பிழைப்பைப் பார்த்துக்கொள், உன் தீர்க்கதரிசனத்தை அங்கே போய்ச் சொல்.+ 13 பெத்தேலில் நீ இனி தீர்க்கதரிசனம் சொல்லக் கூடாது.+ இது ராஜாவின் கோயிலும்+ அரச மாளிகையும் இருக்கிற இடம்” என்றார்.
14 அதற்கு ஆமோஸ், “நான் தீர்க்கதரிசியும் இல்லை, தீர்க்கதரிசியின் மகனும் இல்லை. சாதாரண மேய்ப்பன்,+ காட்டத்தி மரத் தோப்பில் வேலை செய்தவன்.* 15 மந்தைகளின் பின்னால் போய்க்கொண்டிருந்த என்னை யெகோவா அழைத்தார். பின்பு யெகோவா என்னிடம், ‘நீ போய் என் ஜனங்களாகிய இஸ்ரவேலர்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்’ என்றார்.+ 16 அதனால், யெகோவா சொல்வதை இப்போது கேள்: ‘இஸ்ரவேலுக்கு எதிராகத் தீர்க்கதரிசனம் சொல்லாதே+ என்றும், ஈசாக்கின் வம்சத்தாருக்கு எதிராக ஒன்றும் பேசாதே+ என்றும் நீ சொல்கிறாய். 17 அதனால், யெகோவா சொல்வது இதுதான்: “இந்த நகரத்தில் உன் மனைவி விபச்சாரியாவாள், உன் மகன்களும் மகள்களும் வாளால் சாவார்கள். உன் தேசம் அளவுநூலால் அளக்கப்பட்டு பங்கிடப்படும், நீ வேறொரு தேசத்தில் சாவாய். இஸ்ரவேலர்கள் நிச்சயம் சிறைபிடிக்கப்பட்டுப் போவார்கள்”’”+ என்றார்.