கடவுளுடைய வார்த்தையைத் தைரியத்தோடு பேசுங்கள்
‘நீ போய் என் ஜனத்துக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்.’—ஆமோஸ் 7:15.
1, 2. ஆமோஸ் யார், அவரைக் குறித்து பைபிள் என்ன சொல்கிறது?
பிரசங்கித்துக் கொண்டிருந்த யெகோவாவின் ஒரு ஊழியக்காரர் ஆசாரியன் ஒருவரைச் சந்தித்தார். அப்போது அந்த ஆசாரியன், ‘நிறுத்து உன் பிரசங்கத்தை! இப்போதே இங்கிருந்து ஓடிவிடு!’ என்று கூச்சல் போட்டார். அந்த ஊழியர் என்ன செய்தார்? மிரட்டலுக்கு அடிபணிந்தாரா? அல்லது கடவுளுடைய வார்த்தையைத் தொடர்ந்து தைரியத்தோடு பேசினாரா? இதற்குரிய பதிலை நீங்களே தெரிந்துகொள்ளலாம், ஏனெனில் அந்த ஊழியர் தனது அனுபவங்களை ஒரு புத்தகத்தில் எழுதி வைத்தார். பைபிளிலுள்ள ஆமோஸ் புத்தகமே அது. ஆமோஸ் அந்த ஆசாரியனைச் சந்தித்தது பற்றி கலந்தாலோசிக்கும் முன், ஆமோஸின் பின்னணிக்கு சற்று கவனம் செலுத்தலாம்.
2 ஆமோஸ் யார்? அவர் எங்கே வசித்தார்? எந்தக் காலப்பகுதியில் வாழ்ந்தார்? இந்தக் கேள்விகளுக்குரிய பதிலை ஆமோஸ் 1:1-ல் பார்க்கிறோம்: “தெக்கோவா ஊர் மேய்ப்பருக்குள் இருந்த ஆமோஸ், யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களிலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசுடைய குமாரனாகிய எரொபெயாமின் நாட்களிலும் . . . சொன்ன வார்த்தைகள்.” ஆமோஸ் யூதாவில் வசித்தார். அவரது சொந்த ஊர் தெக்கோவா. அது எருசலேமிற்குத் தெற்கே 16 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. அவர் பொ.ச.மு. ஒன்பதாம் நூற்றாண்டின் முடிவில் வாழ்ந்தார். அப்போது யூதாவில் உசியாவும், பத்துக் கோத்திர ராஜ்யமான இஸ்ரவேலில் இரண்டாம் எரொபெயாமும் அரசர்களாக இருந்தார்கள். ஆமோஸ் ஆடு மாடுகளை மேய்க்கும் ஓர் இடையனாக இருந்தார். அவர் ‘மந்தை மேய்ப்பவர்’ மட்டுமல்ல, ‘காட்டு அத்திப் பழங்களைப் பொறுக்குகிறவராகவும் [“குத்திவிடுகிறவராகவும்,” NW] இருந்தார்’ என ஆமோஸ் 7:14 சொல்கிறது. ஆகவே, வருடத்தின் சில மாதங்களில், அதாவது அறுவடை சமயங்களில் அவர் இந்த வேலையை, அத்திப் பழங்களைக் குத்திவிடும் வேலையைச் செய்து வந்தார். அத்திப் பழங்கள் சீக்கிரம் பழுப்பதற்காக அப்படிச் செய்யப்பட்டது. அது மிகவும் கடினமான வேலை.
‘நீ போய் தீர்க்கதரிசனம் சொல்லு’
3. பிரசங்கிக்க ‘எனக்குத் தகுதியில்லை’ என நாம் உணர்ந்தால் ஆமோஸைப் பற்றிக் கற்றுக்கொள்வது நமக்கு எப்படி உதவலாம்?
3 “நான் தீர்க்கதரிசியுமல்ல, தீர்க்கதரிசியின் புத்திரனுமல்ல” என ஆமோஸ் ஒளிவுமறைவின்றி ஒத்துக்கொண்டார். (ஆமோஸ் 7:14) ஆமோஸ் ஒரு தீர்க்கதரிசியின் மகனாக பிறக்கவுமில்லை, தீர்க்கதரிசியாக பயிற்சி பெறவுமில்லை. இருப்பினும், யூதாவிலிருந்த அத்தனை பேரில் ஆமோஸையே யெகோவா தமது வேலைக்காக தேர்ந்தெடுத்தார். வலிமைமிக்க அரசனையோ கல்விகற்ற ஆசாரியனையோ செல்வமிக்க தலைவனையோ அவர் தேர்ந்தெடுக்கவில்லை. இதிலிருந்து நம்பிக்கையூட்டுகிற ஒரு பாடத்தை நாம் கற்றுக்கொள்கிறோம். உலகப்பிரகாரமான உயர்ந்த அந்தஸ்தோ உயர் கல்வியோ நமக்கு இல்லாதிருக்கலாம். ஆனால் அதற்காக கடவுளுடைய வார்த்தையைப் பிரசங்கிக்க ‘எனக்குத் தகுதியில்லை’ என நாம் உணர வேண்டுமா? வேண்டியதில்லை! கஷ்டமான பிராந்தியங்களில்கூட தம்முடைய செய்தியை அறிவிக்க யெகோவா தேவன் நம்மைப் பயிற்றுவிப்பார். அவ்வாறுதான் ஆமோஸை அவர் பயிற்றுவித்தார். ஆகவே, கடவுளுடைய வார்த்தையை தைரியமாகப் பேச விரும்புகிறவர்கள் அஞ்சா நெஞ்சம் படைத்த அந்தத் தீர்க்கதரிசியின் முன்மாதிரியை ஆராய்வதிலிருந்து பயனுள்ள பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்.
4. இஸ்ரவேலில் தீர்க்கதரிசனம் உரைப்பது ஏன் சிரமமாக இருந்தது?
4 “நீ போய் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்” என ஆமோஸிடம் யெகோவா கட்டளையிட்டார். (ஆமோஸ் 7:15) அது சிரமமான நியமிப்பாக இருந்தது. அந்தச் சமயத்தில், பத்துக் கோத்திர ராஜ்யமான இஸ்ரவேல் சமாதானத்தையும் பாதுகாப்பையும் செல்வச் செழிப்பையும் அனுபவித்து வந்தது. அநேகரிடம் ‘மாரிகாலத்து வீடும்’ ‘கோடைகாலத்து வீடும்’ இருந்தன. அவை சாதாரண மண் செங்கற்களால் அல்ல, விலையுயர்ந்த “நன்கு செதுக்கிய கற்களால்” கட்டப்பட்டிருந்தன. சிலரிடம் தந்தம் பதிக்கப்பட்ட அழகிய மரச் சாமான்கள் இருந்தன; அவர்கள் ‘அருமையான திராட்சைத் தோட்டங்களில்’ தயாரிக்கப்பட்ட திராட்சை ரசத்தை குடித்தார்கள். (ஆமோ. 3:15; 5:11, பொது மொழிபெயர்ப்பு) எனவே, பெரும்பாலான ஜனங்கள் அலட்சியமாக இருந்தார்கள். சொல்லப்போனால், ஆமோஸுக்கு நியமிக்கப்பட்ட பிராந்தியம் நம்மில் சிலர் இன்று ஊழியம் செய்கிற பிராந்தியத்தைப் போலவே இருந்திருக்க வேண்டும்.
5. இஸ்ரவேலர் சிலர் செய்து கொண்டிருந்த அநியாயமான காரியங்கள் யாவை?
5 இஸ்ரவேலர் செல்வச் செழிப்போடு வாழ்ந்ததில் எந்தத் தவறுமில்லை. ஆனால் அவர்களில் சிலர் நேர்மையற்ற வழிகளில் ஏராளமாக சொத்துக்களைக் குவித்தார்கள். பணக்காரர்கள் “தரித்திரரை ஒடுக்கி, எளியவர்களை நொறுக்கி”னார்கள். (ஆமோஸ் 4:1) பெரும் செல்வாக்குடைய வியாபாரிகளும் நியாயாதிபதிகளும் ஆசாரியர்களும் ஏழைகளைக் கொள்ளையிடுவதில் கூட்டுச்சேர்ந்து கொண்டார்கள். இப்போது, கடந்த காலத்திற்குப் பின்னோக்கிச் சென்று அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதைப் பார்க்கலாம்.
கடவுளுடைய சட்டம் மீறப்பட்டது
6. இஸ்ரவேல் வியாபாரிகள் எப்படி மற்றவர்களைச் சுரண்டிப் பிழைத்தார்கள்?
6 முதலாவதாக, சந்தைவெளிக்குச் செல்வோம். அங்கு நேர்மையற்ற வியாபாரிகள் ‘மரக்காலைக் குறைத்து, சேக்கல் நிறையை அதிகமாக்கி,’ வெறும் “பதரை” தானியமாக விற்றார்கள். (ஆமோஸ் 8:5, 6) இந்த வியாபாரிகள் பொருட்களின் அளவைக் குறைத்து விற்று, தங்கள் வாடிக்கையாளர்களை ஏமாற்றினார்கள்; அவற்றின் விலை மிக அதிகமாக இருந்தது, தரமோ படுமோசமாக இருந்தது. இவ்வாறு வியாபாரிகளால் முற்றிலும் சுரண்டப்பட்ட ஏழைகள் கடைசியில் தங்களையே அடிமைகளாக விற்க வேண்டிய நிலைக்கு வந்தார்கள். அவர்களை அந்த வியாபாரிகள் “ஒரு ஜோடு பாதரட்சை”யின் விலைக்கு வாங்கினார்கள். (ஆமோஸ் 8:5) சற்று கற்பனை செய்து பாருங்கள்! பேராசை பிடித்த அந்த வியாபாரிகள் சக இஸ்ரவேலரை வெறும் காலணிகளுக்குச் சமமாக கருதினார்கள்! ஏழைகளுக்கு எப்பேர்ப்பட்ட அவமானம்! கடவுளுடைய சட்டத்திற்கு எதிராக எப்பேர்ப்பட்ட மீறுதல்! ஆனால் அந்த வியாபாரிகள் ‘ஓய்வுநாளை’ ஆசரித்தார்கள். (ஆமோஸ் 8:6) ஆம், அவர்கள் பக்திமான்களாக வெளிவேஷம் போட்டார்கள்.
7. இஸ்ரவேல் வியாபாரிகளால் கடவுளுடைய சட்டத்தை எப்படி மீற முடிந்தது?
7 “உன்னில் நீ அன்புகூருவது போல் பிறனிலும் அன்புகூருவாயாக” என்ற கடவுளுடைய சட்டத்தை மீறியபோதிலும் இந்த வியாபாரிகள் எப்படித் தண்டனையிலிருந்து தப்பினார்கள்? (லேவியராகமம் 19:18) சட்டத்தை அமல்படுத்த வேண்டிய நியாயாதிபதிகளே அவர்களோடு சேர்ந்து கொள்ளையடித்தார்கள், அதனால்தான் வியாபாரிகள் தண்டனைக்குத் தப்பினார்கள். வழக்குகள் நடத்தப்பட்ட ஒலிமுகவாசலில் நியாயாதிபதிகள், ‘பரிதானம் வாங்கி, . . . ஏழைகளின் நியாயத்தைப் புரட்டினார்கள்.’ ஏழைகளைக் காப்பதற்கு பதிலாக நியாயாதிபதிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு அவர்களை ஏய்த்தார்கள். (ஆமோஸ் 5:10, 12) இவ்வாறு நியாயாதிபதிகளும்கூட கடவுளுடைய சட்டத்தை அசட்டை செய்தார்கள்.
8. துன்மார்க்க ஆசாரியர்கள் எந்த நடத்தையைக் கண்டும் காணாதது போல் இருந்தார்கள்?
8 மறுபட்சத்தில், இஸ்ரவேலில் இருந்த ஆசாரியர்கள் என்ன செய்தார்கள்? அதை அறிந்துகொள்ள மற்றொரு இடத்திற்கு நம் கவனத்தைத் திருப்ப வேண்டும். “தங்கள் தேவர்களின் கோவிலிலே” என்னவெல்லாம் நடப்பதற்கு அந்த ஆசாரியர்கள் அனுமதித்தார்கள் என்பதைப் பாருங்கள்! ஆமோஸ் மூலம் கடவுள் இவ்வாறு சொன்னார்: “என் பரிசுத்த நாமத்தைக் குலைச்சலாக்கும்படிக்கு மகனும் தகப்பனும் ஒரு பெண்ணிடத்தில் பிரவேசிக்கிறார்கள்.” (ஆமோஸ் 2:7, 8) சற்று கற்பனை செய்து பாருங்கள்! இஸ்ரவேலைச் சேர்ந்த தகப்பனும் அவருடைய மகனும் ஒரே ஆலய வேசியோடு பாலுறவு ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டார்கள்! ஆனால் அத்தகைய ஒழுக்கக்கேட்டை அந்தத் துன்மார்க்க ஆசாரியர்கள் கண்டும் காணாதது போல் இருந்தார்கள்!—லேவியராகமம் 19:29; உபாகமம் 5:18; 23:17.
9, 10. நியாயப்பிரமாணத்தின் எந்தக் கட்டளைகளை இஸ்ரவேலர் மீறினார்கள், நம் நாளுக்கு இதை எவ்வாறு ஒப்பிடலாம்?
9 அதோடு, வேறு பல பாவச் செயல்களைக் குறிப்பிட்டு யெகோவா இவ்வாறு சொன்னார்: “அவர்கள் சகல பீடங்களருகிலும் அடைமானமாய் வாங்கின வஸ்திரங்களின் மேல் படுத்துக்கொண்டு, தெண்டம் பிடிக்கப்பட்டவர்களுடைய மதுபானத்தைத் தங்கள் தேவர்களின் கோவிலிலே குடிக்கிறார்கள்.” (ஆமோஸ் 2:8) ஆம், ஒருவருடைய வஸ்திரத்தை அடமானமாக வாங்கினால் இருட்டுவதற்கு முன்பே அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என யாத்திராகமம் 22:26, 27-லுள்ள சட்டத்தைக்கூட ஆசாரியர்களும் ஜனங்களும் அசட்டை செய்தார்கள். வஸ்திரத்தைத் திருப்பிக் கொடுப்பதற்கு பதிலாக, அதை விரிப்பாக பயன்படுத்தி அதன் மீது அமர்ந்து பொய் தேவர்களின் கோவிலிலே விருந்துண்டார்கள், குடித்தார்கள். ஏழைகளிடமிருந்து தெண்டமாக, அதாவது அபராதமாகப் பெற்ற பணத்தில் பொய் மத பண்டிகைகளின்போது மதுபானம் வாங்கிக் குடித்தார்கள். மெய் வணக்கத்தின் பாதையைவிட்டு அவர்கள் எவ்வளவாய் வழிவிலகிச் சென்றிருந்தார்கள்!
10 நியாயப்பிரமாணத்தின் மிக முக்கியமான இரண்டு கட்டளைகளை, அதாவது யெகோவாவை நேசிக்க வேண்டும், அயலானை நேசிக்க வேண்டும் என்ற இரண்டு கட்டளைகளை இஸ்ரவேலர் துணிச்சலுடன் மீறினார்கள். ஆகவே, அவர்களுடைய துரோகச் செயல்களைக் கண்டனம் செய்ய ஆமோஸை கடவுள் அனுப்பினார். இன்று கிறிஸ்தவமண்டல தேசங்கள் உட்பட உலக தேசங்கள் அனைத்தும் பூர்வ இஸ்ரவேலின் சீரழிந்த நிலைமையைச் சித்தரித்துக் காட்டுகின்றன. சிலர் செல்வச் செழிப்பில் மிதக்கிறார்கள், ஆனால் பலர் வியாபாரம், அரசியல், பொய் மதம் ஆகியவற்றைச் சேர்ந்த நேர்மையற்ற தலைவர்களின் ஒழுக்கங்கெட்ட பழக்கங்களால் பொருளாதார ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். என்றாலும், துன்பப்படுகிறவர்களிடமும் தம்மைத் தேடுகிற ஆர்வமுள்ளவர்களிடமும் யெகோவா அக்கறை காட்டுகிறார். அதனால்தான் ஆமோஸ் செய்ததைப் போன்ற வேலையை, அதாவது தம்முடைய வார்த்தையைத் தைரியத்தோடு பேசும் வேலையைத் தமது நவீனகால ஊழியர்களுக்குக் கொடுத்திருக்கிறார்.
11. ஆமோஸின் உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
11 இப்படியாக, ஆமோஸ் செய்த வேலையும் நாம் செய்கிற வேலையும் ஒன்றுக்கொன்று ஒத்திருப்பதால் அவருடைய முன்மாதிரியைச் சிந்திப்பதிலிருந்து நாம் பெரிதும் பயனடைவோம். உண்மையில், (1) என்ன செய்தியை நாம் பிரசங்கிக்க வேண்டும், (2) அதை எப்படிப் பிரசங்கிக்க வேண்டும், (3) நம் பிரசங்க வேலையை ஏன் எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதற்கான பதில்களை ஆமோஸ் நமக்குக் காட்டுகிறார். இந்தக் குறிப்புகளை இப்போது ஒவ்வொன்றாக ஆராயலாம்.
ஆமோஸை நாம் எப்படிப் பின்பற்றலாம்
12, 13. இஸ்ரவேலர் மீது சினமடைந்திருந்ததை யெகோவா எப்படிக் காட்டினார், அதற்கு அவர்கள் எப்படிப் பிரதிபலித்தார்கள்?
12 யெகோவாவின் சாட்சிகளாகிய நாம் ராஜ்யத்தைக் குறித்து பிரசங்கிப்பதற்கும் சீஷராக்குகிற வேலைக்கும் அதிக கவனம் செலுத்துகிறோம். (மத்தேயு 28:19, 20; மாற்கு 13:10) என்றாலும், கடவுளுடைய எச்சரிப்பு செய்திகளையும்கூட நாம் அறிவிக்கிறோம், ஆம் துன்மார்க்கர் மீது யெகோவா ஆக்கினைத் தீர்ப்பைக் கொண்டு வரப்போவதாக ஆமோஸ் எச்சரித்தது போலவே நாமும் எச்சரிக்கிறோம். உதாரணமாக, இஸ்ரவேலர் மீது யெகோவா சினமடைந்திருந்ததை ஆமோஸ் 4:6-11 காட்டுகிறது. அவர் அந்த ஜனங்களுக்கு “அப்பக்குறைவை” ஏற்படுத்தி, ‘மழை பெய்யாதபடி தடுத்து,’ “கருக்காயினாலும் [அதாவது, வெப்பக் காற்றினாலும்] விஷப் பனியினாலும்” தண்டித்து, அவர்களைக் “கொள்ளைநோயினால்” தாக்கினார். இவையெல்லாம் இஸ்ரவேலரை மனந்திரும்ப வைத்ததா? “நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற் போனீர்கள்” என்று கடவுள் சொன்னார். உண்மைதான், இஸ்ரவேலர் யெகோவாவைத் திரும்பத் திரும்ப ஒதுக்கித் தள்ளினார்கள்.
13 ஆகவே, மனந்திரும்பாத இஸ்ரவேலரை யெகோவா தண்டித்தார். முதலில், அவர்களுக்கு ஒரு தீர்க்கதரிசன எச்சரிப்பைக் கொடுத்தார். இது சம்பந்தமாக, “கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்” என அவர் அறிவித்தார். (ஆமோஸ் 3:7) ஜலப்பிரளயம் வரப்போவதை நோவாவிடம் தெரிவித்து, அதைக் குறித்து ஜனங்களை எச்சரிக்கும்படி அவர் கூறினார். அதே போல, ஆமோஸிடமும் கடைசியாக ஒரு முறை ஜனங்களை எச்சரிக்கும்படி யெகோவா கூறினார். ஆனால் இஸ்ரவேலரோ இந்தத் தெய்வீக செய்தியை நிராகரித்தார்கள், தங்களைத் திருத்திக்கொள்ளத் தவறினார்கள்.
14. ஆமோஸின் நாட்களுக்கும் நம் நாட்களுக்கும் இடையே என்ன ஒற்றுமைகள் உள்ளன?
14 ஆமோஸ் வாழ்ந்த காலத்திற்கும் நம் காலத்திற்கும் இடையே குறிப்பிடத்தக்க சில ஒற்றுமைகள் இருப்பதை நீங்கள் நிச்சயம் ஒப்புக்கொள்வீர்கள். கடைசி நாட்களில், எண்ணற்ற துன்பங்கள் வரும் என்று இயேசு கிறிஸ்து முன்னறிவித்தார். உலகெங்கிலும் பிரசங்க வேலை நடைபெறும் என்றும் கூறினார். (மத்தேயு 24:3-14) எனினும், ஆமோஸின் நாட்களில் இருந்ததைப் போலவே இன்று நாம் வாழும் காலத்தின் அடையாளத்தையும் ராஜ்ய செய்தியையும் அநேகர் அசட்டை செய்கிறார்கள். மனந்திரும்பாத இஸ்ரவேலருக்கு ஏற்பட்ட முடிவே அவர்களுக்கும் ஏற்படப் போகிறது. அந்த இஸ்ரவேலர்களை யெகோவா, “உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு” என்று எச்சரித்தார். (ஆமோஸ் 4:12) இஸ்ரவேலரை அசீரிய படை வீழ்த்தியபோது அவர்கள் கடவுளுடைய ஆக்கினைத் தீர்ப்புக்குள்ளானார்கள், அதாவது ‘தேவனைச் சந்தித்தார்கள்.’ அதைப் போலவே தேவபக்தியற்ற இன்றைய உலகம் அர்மகெதோனில் ‘தேவனைச் சந்திக்கும்.’ (வெளிப்படுத்துதல் 16:14, 16) இருந்தாலும், யெகோவாவின் பொறுமை நீடிக்கும்வரை எத்தனை பேரிடம் முடியுமோ அத்தனை பேரிடமும், “கர்த்தரைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்” என்று நாம் ஊக்குவிக்கிறோம்.—ஆமோஸ் 5:6.
ஆமோஸைப் போல எதிர்ப்பை சந்தித்தல்
15-17. (அ) அமத்சியா யார், ஆமோஸ் தீர்க்கதரிசனம் உரைக்கையில் அவன் எப்படி பிரதிபலித்தான்? (ஆ) ஆமோஸுக்கு எதிராக அமத்சியா என்ன குற்றங்களைச் சாட்டினான்?
15 என்ன பிரசங்கிக்க வேண்டும் என்பதில் மட்டுமல்ல, எப்படிப் பிரசங்கிக்க வேண்டும் என்பதிலும் நாம் ஆமோஸைப் பின்பற்றலாம். இது 7-ம் அதிகாரத்தில் சிறப்பித்துக் காட்டப்பட்டுள்ளது; இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட ஆசாரியனைப் பற்றி இங்குதான் சொல்லப்பட்டிருக்கிறது. ‘பெத்தேலிலிருந்த ஆசாரியனான அமத்சியா’ என்பவனே அந்த ஆசாரியன். (ஆமோஸ் 7:10) கன்றுக்குட்டியை வழிபட்டு வந்த இஸ்ரவேலின் விசுவாசதுரோக மதத்திற்கு பெத்தேல் என்ற நகரம் ஒரு மையமாய் விளங்கியது. ஆகவே, அந்தத் தேசிய மதத்திற்கே அமத்சியா ஆசாரியனாக இருந்தான். ஆமோஸ் தைரியமாக தீர்க்கதரிசனங்கள் உரைக்கையில் அமத்சியா எவ்வாறு பிரதிபலித்தான்?
16 “தரிசனம் பார்க்கிறவனே, போ; நீ யூதா தேசத்துக்கு ஓடிப்போ, அங்கே அப்பம் தின்று, அங்கே தீர்க்கதரிசனம் சொல்லு. பெத்தேலிலே இனித் தீர்க்கதரிசனம் சொல்லாதே; அது ராஜாவின் பரிசுத்த ஸ்தலமும் ராஜ்யத்தின் அரமனையுமாயிருக்கிறது” என்று ஆமோஸிடம் அமத்சியா கூறினான். (ஆமோஸ் 7:12, 13) அதாவது, ‘இங்கிருந்து போய்விடு! எங்களுக்கென்று ஒரு மதம் இருக்கிறது’ என்பதையே அமத்சியா அர்த்தப்படுத்தினான். அதோடு, அரசாங்கத்தின் மூலம் ஆமோஸின் வேலைகளுக்குத் தடை கொண்டு வருவதற்காக, “ஆமோஸ் இஸ்ரவேல் வம்சத்தாரின் நடுவே உமக்கு விரோதமாகக் கட்டுப்பாடு பண்ணுகிறான்” என்று இரண்டாம் எரொபெயாமிடம் அவன் சொன்னான். (ஆமோஸ் 7:10) ஆமோஸ் தேசத்துரோகம் செய்ததாக அமத்சியா குற்றம் சாட்டினான்! “எரொபெயாம் பட்டயத்தினால் சாவான் என்றும், இஸ்ரவேல் தன் தேசத்திலிருந்து சிறைபிடித்துக் கொண்டு போகப்படுவான் என்றும் ஆமோஸ் சொல்லுகிறான்” என ராஜாவிடம் கூறினான்.—ஆமோஸ் 7:11.
17 அப்படிக் கூறியதன் மூலம் மூன்று கூற்றுகளை அமத்சியா திரித்துக் கூறினான். “ஆமோஸ் சொல்லுகிறான்” என அவன் கூறினான். ஆனால், அது தன்னுடைய தீர்க்கதரிசனம் என ஆமோஸ் ஒருபோதும் கூறவில்லை. மாறாக, ‘[யெகோவா] சொல்லுகிறது என்னவென்றால்’ என்றே அவர் எப்போதும் கூறினார். (ஆமோஸ் 1:3) “எரொபெயாம் பட்டயத்தினால் சாவான்” என்று கூறியதாகவும் ஆமோஸ் மீது குற்றம் சாட்டினான். ஆனால் ஆமோஸ் 7:9-ல் பார்க்கிறபடி, “நான் [யெகோவா] எரொபெயாம் வீட்டாருக்கு விரோதமாய்ப் பட்டயத்தோடே எழும்பி வருவேன்” என்றே ஆமோஸ் தீர்க்கதரிசனம் உரைத்திருந்தார். எரொபெயாமின் ‘வீட்டார்’ மீது, அவனது சந்ததியார் மீது அந்தப் பேரழிவு வரப்போவதாகவே கடவுள் முன்னுரைத்திருந்தார். மேலும், “இஸ்ரவேல் தன் தேசத்திலிருந்து சிறைபிடித்துக் கொண்டு போகப்படுவான்” என்று ஆமோஸ் கூறியதாக அமத்சியா குற்றம் சாட்டினான். ஆனால், கடவுளிடம் திரும்பும் இஸ்ரவேலர் ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள் என்றும்கூட ஆமோஸ் தீர்க்கதரிசனம் உரைத்திருந்தார். இதிலிருந்து, ஆமோஸின் பிரசங்க வேலையை அதிகாரப்பூர்வமாய் தடைசெய்ய உண்மைகளைத் திரித்தும் அரைகுறையாகவும் அமத்சியா கூறினான் என்பது தெளிவாக தெரிகிறது.
18. அமத்சியா உபயோகித்த வழிமுறைகளுக்கும் இன்று குருவர்க்கத்தினர் உபயோகிக்கிற வழிமுறைகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் யாவை?
18 அமத்சியா உபயோகித்த வழிமுறைகளும் இன்று யெகோவாவின் மக்களை எதிர்ப்போர் உபயோகிக்கும் வழிமுறைகளும் ஒரே மாதிரியாக இருப்பதைக் கவனித்தீர்களா? ஆமோஸின் வாயை அடைக்க அமத்சியா முயன்றது போலவே இன்றைய பாதிரிமார்களும், திருச்சபைத் தலைவர்களும், தலைமை பிஷப்புகளும் யெகோவாவுடைய ஊழியர்களின் பிரசங்க வேலையை தடைசெய்ய முயலுகிறார்கள். ஆமோஸ் தேசத்துரோகம் செய்ததாக அமத்சியா பொய்க் குற்றம் சாட்டியதைப் போலவே, யெகோவாவின் சாட்சிகள் தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிப்பவர்கள் என இன்று சில பாதிரிமார்கள் பொய்யாக குற்றம் சாட்டுகிறார்கள். ஆமோஸை எதிர்ப்பதற்கு ராஜாவின் உதவியை அமத்சியா எப்படி நாடினானோ, அப்படியே பாதிரிமார்களும் யெகோவாவின் ஊழியர்களைத் துன்புறுத்த அரசியல் கூட்டாளிகளின் உதவியை நாடுகிறார்கள்.
எதிர்ப்பவர்கள் நம் பிரசங்க வேலையைத் தடுத்து நிறுத்த முடியாது
19, 20. அமத்சியா எதிர்ப்பு தெரிவித்தபோது ஆமோஸ் என்ன செய்தார்?
19 அமத்சியா எதிர்ப்பு தெரிவித்தபோது ஆமோஸ் என்ன செய்தார்? முதலாவதாக, ‘இஸ்ரவேலுக்கு விரோதமாய்த் தீர்க்கதரிசனம் சொல்லாதே . . . என்று சொல்லுகிறாயா?’ என அந்த ஆசாரியனிடம் கேட்டார். தைரியமிக்க அந்தத் தீர்க்கதரிசி பின்பு அமத்சியா கேட்க விரும்பாத அதே வார்த்தைகளைச் சிறிதும் தயங்காமல் தொடர்ந்து பேசினார். (ஆமோஸ் 7:16, 17) ஆமோஸ் பயப்படவே இல்லை. பின்பற்ற வேண்டிய எப்பேர்ப்பட்ட அருமையான முன்மாதிரி! கொடூரமான துன்புறுத்தலைத் தூண்டிவிடும் நவீன நாளைய அமத்சியாக்கள் உள்ள நாடுகளில்கூட, கடவுளுடைய வார்த்தையைப் பேச வேண்டிய கட்டத்தில் நாம் கடவுளுக்கே கீழ்ப்படிவோம். ஆமோஸைப் போல, ‘யெகோவா சொல்கிறது என்னவென்றால்’ என்றே தொடர்ந்து அறிவிப்போம். ‘யெகோவாவின் கரம்’ நம்மோடு இருப்பதால், எதிர்ப்பவர்கள் நம் பிரசங்க வேலையை ஒருபோதும் தடுத்து நிறுத்த முடியாது.—அப்போஸ்தலர் 11:19-21.
20 தன்னுடைய பயமுறுத்தல்கள் எதுவும் பலிக்காது என்பது அமத்சியாவுக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஆமோஸ், தான் பேசுவதை ஏன் எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதை ஏற்கெனவே விளக்கியிருந்தார்; நாம் சிந்திக்க வேண்டிய மூன்றாவது குறிப்பும் அதுவே. ஆமோஸ் 3:3-8-ல், ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு என்பதைக் காண்பிக்க ஆமோஸ் தொடர்ச்சியாக பல கேள்விகளையும் உதாரணங்களையும் உபயோகித்தார். பிறகு, அதன் பொருத்தத்தை இவ்வாறு கூறினார்: “சிங்கம் கெர்ச்சிக்கிறது, யார் பயப்படாதிருப்பான்? கர்த்தராகிய ஆண்டவர் பேசுகிறார், யார் தீர்க்கதரிசனம் சொல்லாதிருப்பான்?” வேறு வார்த்தைகளில் சொன்னால், ‘சிங்கம் கெர்ச்சிப்பதை கேட்டு யாராலும் பயப்படாமல் இருக்க முடியாது. அதைப் போலவே, யெகோவா கட்டளை கொடுத்திருப்பதைக் கேட்டும் என்னால் கடவுளுடைய வார்த்தையைப் பிரசங்கிக்காமல் இருக்க முடியாது’ என்றே அங்கிருந்தோரிடம் ஆமோஸ் கூறினார். யெகோவா மீது ஆமோஸுக்கு இருந்த ஆழ்ந்த பயபக்தியே தைரியமாகப் பேச அவரைத் தூண்டியது.
21. நற்செய்தியைப் பிரசங்கிக்கும்படியான கட்டளைக்கு நாம் எப்படி பிரதிபலிக்கிறோம்?
21 பிரசங்கிக்கும்படி யெகோவா கொடுத்த கட்டளையை நாமும் கேட்கிறோம். கேட்ட பிறகு என்ன செய்கிறோம்? ஆமோஸையும் இயேசுவின் ஆரம்பகால சீஷர்களையும் போல, யெகோவாவுடைய உதவியுடன் அவருடைய வார்த்தையை தைரியமாகப் பேசுகிறோம். (அப்போஸ்தலர் 4:23-31) நம்மை எதிர்ப்பவர்கள் தூண்டிவிடுகிற துன்புறுத்தலோ நாம் பிரசங்கிப்பதைக் கேட்க மறுப்பவர்கள் காண்பிக்கும் அசட்டை மனப்பான்மையோ நம் வாயை அடைத்துவிடாது. ஆமோஸைப் போன்ற வைராக்கியத்தைக் காட்டுகிற யெகோவாவின் சாட்சிகள் உலகெங்கும் தொடர்ந்து நற்செய்தியைத் தைரியமாய் அறிவிக்கும்படி தூண்டப்படுகிறார்கள். வரப்போகும் யெகோவாவின் நியாயத்தீர்ப்பைப் பற்றி ஜனங்களை எச்சரிக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. அந்த நியாயத்தீர்ப்பில் என்னவெல்லாம் உட்பட்டிருக்கிறது? அடுத்த கட்டுரை இதற்குப் பதிலளிக்கும்.
எப்படி பதிலளிப்பீர்கள்?
• கடவுளுடைய வேலையை எத்தகைய சூழ்நிலைகளில் ஆமோஸ் செய்தார்?
• ஆமோஸைப் போல நாம் என்ன செய்தியைப் பிரசங்கிக்க வேண்டும்?
• எத்தகைய மனநிலையுடன் பிரசங்க ஊழியத்தில் நாம் ஈடுபட வேண்டும்?
• எதிர்ப்பவர்களால் நம் பிரசங்க ஊழியத்தை ஏன் தடுத்து நிறுத்த முடிவதில்லை?
[பக்கம் 10-ன் படம்]
அத்திப் பழங்களைக் குத்திவிடுகிற வேலை செய்துவந்த ஆமோஸை தமது வேலைக்காக கடவுள் தேர்ந்தெடுத்தார்
[பக்கம் 13-ன் படங்கள்]
ஆமோஸைப் போல் யெகோவாவின் செய்தியை தைரியத்தோடு அறிவிக்கிறீர்களா?