எபிரெயருக்குக் கடிதம்
1 பல காலத்துக்கு முன்னால், நம்முடைய முன்னோர்களிடம் பல சந்தர்ப்பங்களில் பல வழிகளில் தீர்க்கதரிசிகள் மூலம் கடவுள் பேசினார்.+ 2 இந்தக் கடைசி நாட்களில் தன்னுடைய மகன்+ மூலமாக நம்மிடம் பேசியிருக்கிறார்; எல்லாவற்றுக்கும் அவரையே வாரிசாக நியமித்தார்,+ அவர் மூலமாகவே இந்த உலகத்தையும்* உண்டாக்கினார்.+ 3 அவர் கடவுளுடைய மகிமையைப் பிரதிபலிக்கிறார்,+ அவருடைய குணங்களை அப்படியே காட்டுகிறார்;+ வல்லமையுள்ள வார்த்தையால் எல்லாவற்றையும் பாதுகாக்கிறார்; நம்மைப் பாவங்களிலிருந்து சுத்தமாக்கிய+ பின்பு, பரலோகத்தில் இருக்கிற மகிமையுள்ளவரின் வலது பக்கத்தில் உட்கார்ந்தார்.+ 4 தேவதூதர்களைவிட மிகச் சிறந்த பெயர் கிடைத்திருப்பதால்,*+ அவர் அந்தளவுக்கு அவர்களைவிட மேலானவராக ஆகியிருக்கிறார்.+
5 எப்படியென்றால், கடவுள் தன்னுடைய தூதர்களில் யாரிடமாவது, “நீ என்னுடைய மகன், இன்று நான் உனக்குத் தகப்பனாக ஆனேன்”+ என்று எப்போதாவது சொல்லியிருக்கிறாரா? அல்லது, அவர்களில் யாரைப் பற்றியாவது, “நான் அவனுக்குத் தகப்பனாக இருப்பேன், அவன் எனக்கு மகனாக இருப்பான்”+ என்று சொல்லியிருக்கிறாரா? 6 இல்லை; தன்னுடைய முதல் மகனை+ மறுபடியும் உலகத்துக்கு அனுப்பும்போது “தேவதூதர்கள் எல்லாரும் அவர் முன்னால் மண்டிபோட்டு தலைவணங்க வேண்டும்” என்றுதான் சொல்லியிருக்கிறார்.
7 அதோடு, தேவதூதர்களைப் பற்றி இப்படிச் சொல்லியிருக்கிறார்: “தன்னுடைய தூதர்களை வல்லமையுள்ள சக்திகளாகவும் தன்னுடைய ஊழியர்களை*+ தீ ஜுவாலைகளாகவும் ஆக்குகிறார்.”+ 8 மகனைப் பற்றியோ, “கடவுள்தான் என்றென்றும் உன்னுடைய சிம்மாசனம்,*+ உன்னுடைய ராஜ்யத்தின் செங்கோல் நேர்மையான* செங்கோல். 9 நீ நீதியை நேசித்தாய், அநியாயத்தை வெறுத்தாய்; அதனால்தான் உன்னுடைய கடவுள், மற்ற ராஜாக்களைவிட+ அதிகமாக உன்னை ஆனந்தத் தைலத்தால் அபிஷேகம் செய்தார்”+ என்று சொல்லியிருக்கிறார். 10 அதோடு, “எஜமானே, ஆரம்பத்தில் நீங்கள் பூமிக்கு அஸ்திவாரம் போட்டீர்கள்; வானத்தை உங்கள் கைகளால் உருவாக்கினீர்கள். 11 அவை அழிந்துபோனாலும் நீங்கள் நிலைத்திருப்பீர்கள்; அவையெல்லாம் துணி போல நைந்துபோகும்; 12 சால்வையைப் போல் நீங்கள் அவற்றைச் சுருட்டிவிடுவீர்கள், உடையைப் போல் அவற்றை மாற்றிவிடுவீர்கள்; ஆனால், நீங்கள் மாறாதவர், உங்களுடைய ஆயுளுக்கு முடிவே இல்லை”+ என்று எழுதப்பட்டிருக்கிறது.
13 அதோடு, தேவதூதர்களில் யாரிடமாவது, “நான் உன் எதிரிகளை உனக்குக் கால்மணையாக்கிப் போடும்வரை என் வலது பக்கத்தில் உட்கார்ந்திரு”+ என்று அவர் எப்போதாவது சொல்லியிருக்கிறாரா? 14 அவர்கள் எல்லாரும் பரிசுத்த சேவை செய்கிற தூதர்கள்தானே?+ மீட்பைப் பெறப்போகிறவர்களுக்குப் பணிவிடை செய்ய அனுப்பப்படுகிறவர்கள்தானே?