கிறிஸ்துவின் வருகை எதைச் சாதிக்கும்?
“சாவோ போலோவில் பயங்கரம்.” மே 2006-ல் நான்கு நாட்களாக நடந்த கோரசம்பவங்களை வேஷா பத்திரிகை இப்படித்தான் விவரித்தது. கொடிய கும்பலின் திட்டமிட்ட தாக்குதலால் பிரேசில் நாட்டின் பணம் கொழிக்கும் மாநகரான சாவோ போலோவின் “அருமை பெருமையெல்லாம் அடியோடு மறைந்துபோனது.” “100 மணிநேரங்களுக்கு மேல் நீடித்த அந்தப் படுபயங்கரமான சம்பவத்தில்” கிட்டத்தட்ட 150 காவல்துறை அதிகாரிகளும் குற்றவாளிகளும் குடிமக்களும் கொல்லப்பட்டனர்.
உலகின் எந்த மூலைமுடுக்குக்குச் சென்றாலும் வன்முறையே முக்கியச் செய்தியாக இருக்கிறது. மனித தலைவர்களால் வன்முறையின் கொட்டத்தை அடக்க முடியாததுபோல் தெரிகிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் அக்கிரமங்களால் இந்த உலகில் வாழ்வது ஆபத்தானதாகி வருகிறது. திரும்பிய பக்கமெல்லாம் திடுக்கிடும் செய்திகளே காதில் ஒலிப்பதால் நீங்கள் ஒருவேளை விரக்தி அடையலாம். என்றாலும், சீக்கிரத்திலேயே நிலைமை மாறப்போகிறது.
கடவுளுடைய ராஜ்யம் வருவதற்காகவும் அவருடைய சித்தம் ‘பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதற்காகவும்’ ஜெபிக்கும்படி தம்மைப் பின்பற்றியவர்களுக்கு இயேசு கற்றுக்கொடுத்தார். (மத்தேயு 6:9, 10) இந்த ராஜ்யம், கடவுளால் நியமிக்கப்பட்ட ராஜாவாகிய கிறிஸ்து இயேசுவால் ஆளப்படும் ஓர் அரசாங்கமாகும். இது மனித இனத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் முடிவு கட்டும். என்றாலும், கடவுளுடைய ராஜ்யம் பூமியில் அத்தகைய மாற்றங்களைக் கொண்டுவர வேண்டுமெனில், மனித ஆட்சி நீங்கி கிறிஸ்துவின் ஆட்சி அமைய வேண்டும். கிறிஸ்துவின் வருகை இதையே சாதிக்கும்.
ஆட்சி மாற்றம்—சுமூகமாக அமையுமா?
மனித ஆட்சியாளர்கள் கிறிஸ்துவின் ஆட்சிக்கு அமைதியாக அடங்கிப் போவார்களா? அப்போஸ்தலன் யோவானுக்குக் கொடுக்கப்பட்ட தரிசனம் இதற்கு விடை தருகிறது. அதை அவர் இவ்வாறு விவரிக்கிறார்: “[“மூர்க்க”, NW] மிருகமும் [உலக அரசியல் அமைப்பும்] பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய சேனைகளும், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவரோடும் அவருடைய [இயேசுவுடைய] சேனையோடும் யுத்தம்பண்ணும்படிக்குக் கூடிவரக்கண்டேன்.” (வெளிப்படுத்துதல் 19:19) இந்த யுத்தத்தில் பூமியின் ராஜாக்களுடைய கதி என்னவாகும்? யெகோவா அபிஷேகம் செய்த ராஜா ‘இருப்புக்கோலால் அவர்களை நொறுக்கி, குயக்கலத்தைப்போல் அவர்களை உடைத்துப் போடுவார்’ என பைபிள் குறிப்பிடுகிறது. (சங்கீதம் 2:9) அரசியல் அமைப்பு சுவடு தெரியாமல் தகர்க்கப்படும். ஆம், கடவுளுடைய ராஜ்யம், “அந்த [மனித] ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.”—தானியேல் 2:44.
கடவுளுடைய ராஜ்யத்தை எதிர்க்கும் ஜனங்களுக்கு என்ன நடக்கும்? ‘கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படுவார்.’ அப்போது, ‘தேவனை அறியாதவர்களுக்கும், . . . சுவிசேஷத்திற்கு [அதாவது, நற்செய்திக்குக்] கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்துபவராக’ அவர் வர்ணிக்கப்படுகிறார். (2 தெசலோனிக்கேயர் 1:7, 8) “துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்” என நீதிமொழிகள் 2:22 குறிப்பிடுகிறது.
கிறிஸ்துவின் வருகையைக் குறித்து பைபிள் இவ்வாறு சொல்கிறது: “இதோ! அவர் மேகங்கள்மீது வருகின்றார். அனைவரும் அவரைக் காண்பர்.” (வெளிப்படுத்துதல் [திருவெளிப்பாடு] 1:7, பொது மொழிபெயர்ப்பு) ஜனங்கள் அவரைத் தங்களுடைய கண்களால் காண மாட்டார்கள். ஏனெனில், பரலோகத்திற்குச் சென்றதிலிருந்து இயேசு ஓர் ஆவி ஆளாக ‘சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறார்.’—1 தீமோத்தேயு 6:16.
பூமியின் குடிமக்கள் இயேசுவைக் ‘காண்பதற்கு’ அவர் மனித உருவில் வரவேண்டிய அவசியம் இல்லை; ஏனென்றால், மோசேயின் காலத்தில் எகிப்தியர்மீது பத்து வாதைகளைக் கொண்டுவந்தபோது யெகோவாவும் மனித உருவில் வரவில்லை. யெகோவாவே வாதைகளைக் கொண்டுவந்தார் என்பதை அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் அறிந்திருந்தார்கள்; அதோடு, அவர் வல்லமைமிக்கவர் என்பதை அவர்கள் ஒத்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டது. (யாத்திராகமம் 12:31) அவ்விதமாகவே, கடவுளுடைய தண்டனைத்தீர்ப்பை கிறிஸ்து செயல்படுத்தும்போது, தங்களை நியாயந்தீர்க்க இயேசுவை கடவுள் பயன்படுத்துகிறார் என்பதைத் துன்மார்க்கர் ‘காண,’ அதாவது உணர்ந்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். மனித இனத்திற்கு இதைக் குறித்து முன்கூட்டியே எச்சரிப்பு கொடுக்கப்பட்டிருப்பதால், அவர்கள் அதை அறிந்துகொள்வார்கள். ஆம், “அனைவரும் அவரைக் [இயேசுவை] காண்பர்; . . . அவர்பொருட்டு மண்ணுலகின் குலத்தார் அனைவரும் மாரடித்துப் புலம்புவர்.”—வெளிப்படுத்துதல் 1:7, பொ.மொ.
பூமியில் உண்மையான சமாதானமும் செழுமையும் மீண்டும் பூத்துக் குலுங்குவதற்கு முன்பு பொல்லாதவர்கள் அழிக்கப்படுவதும் தீய ஆட்சி நீக்கப்படுவதும் அவசியம். கிறிஸ்து அதையே செய்து முடிப்பார். பிறகு பூமியிலுள்ள அனைத்தையும் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவார்; அதைத் தொடர்ந்து குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழும்.
புதுப்பித்தல் நல்கும் நன்மைகள்
“தமது பழங்கால பரிசுத்த தீர்க்கதரிசிகள் மூலமாகக் கடவுள் கூறிய எல்லாக் காரியங்களும் புதுப்பிக்கப்படுவது” பற்றி அப்போஸ்தலன் பேதுரு சொன்னார். (அப்போஸ்தலர் 3:21, NW) கிறிஸ்துவுடைய ஆட்சியின்போது இப்பூமியில் நடைபெறும் மாற்றங்களும் இந்தப் புதுப்பித்தலில் உள்ளடங்கும். ‘எல்லாக் காரியங்களும் புதுப்பிக்கப்படுவதைப்’ பற்றி அநேக தீர்க்கதரிசிகள் வாயிலாக கடவுள் சொல்லியிருக்கிறார். பொ.ச.மு. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஏசாயா தீர்க்கதரிசியும் அவர்களில் ஒருவர். ‘சமாதானப் பிரபுவாகிய’ இயேசு கிறிஸ்து பூமியில் சமாதானத்தை நிலைநாட்டுவார் என அவர் முன்னறிவித்தார். கிறிஸ்துவின் ஆட்சியைக் குறித்து ஏசாயா தீர்க்கதரிசனம் இவ்வாறு சொல்கிறது: “அவருடைய ஆட்சியின் பரப்பெல்லைக்கும் சமாதானத்துக்கும் முடிவு இராது.” (ஏசாயா 9:6, 7, NW) பூமியின் குடிகள் சமாதானமாய் வாழ அவர் கற்றுக்கொடுப்பார். பூமியில் குடியிருப்பவர்கள் “மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.”—சங்கீதம் 37:11.
கிறிஸ்துவின் ஆட்சியில் எவரேனும் பசி, பட்டினியால் வாடுவார்களா? ஏசாயா இவ்வாறு சொன்னார்: “இந்த மலையிலே சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்தைச் சேனைகளின் யெகோவா ஆயத்தப்படுத்துவார்; அதிலே கொழும் பதார்த்தங்களும் பழந்திராட்சரசமும் நிறைந்திருக்கும்; கொழும் பதார்த்தங்கள் ஊன் மிகுந்தவை; பழந்திராட்சரசம் வடிகட்டப்பட்டது.” (ஏசாயா 25:6, திருத்திய மொழிபெயர்ப்பு) சங்கீதக்காரனும் இவ்வாறு பாடினார்: “பூமியில் ஏராளமான தானியம் விளையும். மலைகளின் உச்சியில் அது நிரம்பிவழியும்.” (சங்கீதம் 72:16, NW) அதுமட்டுமல்ல, பூமியின் குடிமக்களைப் பற்றி நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள். அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனிபுசிக்கிறதுமாயிருப்பதில்லை; ஏனெனில் விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனத்தின் நாட்களிருக்கும்; நான் தெரிந்து கொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள்.”—ஏசாயா 65:21, 22.
வியாதியும் மரணமும் நீக்கப்படுவதைக் குறித்தும் ஏசாயா முன்னறிவித்தார். அவர் மூலமாக கடவுள் இவ்வாறு சொன்னார்: “அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம். அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்.” (ஏசாயா 35:5, 6) அக்காலத்தில், “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை.” (ஏசாயா 33:24) கடவுள், ‘மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்துவிடுவார்.’—ஏசாயா 25:8.
“பிரேதக்குழிகளிலுள்ள” இறந்தோரைப் பற்றி என்ன சொல்லலாம்? (யோவான் 5:28, 29) “மரித்துப்போன உமது ஜனங்கள் பிழைப்பார்கள், . . . [அவர்கள்] எழுந்திருப்பார்கள்.” (ஏசாயா 26:19, தி.மொ.) ஆம், மரணத்தில் தூங்குபவர்கள் மீண்டும் உயிர்பெற்று எழுவார்கள்!
“கடவுளே யுகாயுகங்களாய் உமது சிங்காசனம்”
கிறிஸ்துவின் வருகை இந்தப் பூமியை முற்றிலும் புதிதாக்கும். இந்தப் பூமி பிரமாதமான பரதீஸாக மாறும், மனித இனம் முழுவதும் ஒரே மெய்க் கடவுளை வழிபடும். இயேசு கிறிஸ்து பொல்லாதவர்களை பூமியிலிருந்து நீக்குவதில் மட்டுமல்ல நீதி நிலவும் சூழலை உருவாக்குவதிலும் வெற்றி பெறுவாரென நாம் உறுதியாக நம்பலாமா?
வல்லமையையும் அதிகாரத்தையும் இயேசு யாரிடமிருந்து பெற்றிருக்கிறார் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். குமாரனைப் பற்றி பைபிள் இவ்வாறு குறிப்பிடுகிறது: “கடவுளே யுகாயுகங்களாய் உமது சிங்காசனம். அவர் ராஜ்யத்தின் செங்கோல் நேர்மையுள்ள செங்கோல். நீர் நீதியைச் சிநேகித்து அக்கிரமத்தைப் பகைத்திருக்கிறீர்.” (எபிரெயர் 1:8, 9, தி.மொ.) இயேசுவுடைய சிங்காசனத்தின், அதாவது அவரது அதிகாரத்தின் பிறப்பிடம் யெகோவாவே. இச்சிங்காசனத்தை உருவாக்கியவரும் அதை அளித்தவரும் கடவுளே. ஆக, இயேசுவால் சரிசெய்ய முடியாத பிரச்சினை என்று எதுவும் கிடையாது.
இயேசு தமது உயிர்த்தெழுதலுக்குப் பிறகு சீஷர்களிடம் இவ்வாறு சொன்னார்: “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.” (மத்தேயு 28:18) “தேவதூதர்களும் அதிகாரங்களும் வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது” என 1 பேதுரு 3:22 குறிப்பிடுகிறது. இயேசுவை எதிர்க்க நினைக்கும் எந்தவொரு வல்லமையானாலும்சரி, அதிகாரமானாலும்சரி, அது மண்ணைத்தான் கவ்வும். மனித இனத்திற்கு அவர் நீடித்த நன்மைகள் வழங்குவதை எதுவும் தடுக்க முடியாது.
கிறிஸ்துவின் வருகை மக்களை எப்படிப் பாதிக்கிறது
தெசலோனிக்கேயர்களுக்கு எழுதிய கடிதத்தில் அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு குறிப்பிட்டார்: “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள உங்கள் நம்பிக்கையினால் நீங்கள் விசுவாசத்தோடு செய்யும் கிரியையையும் உங்களுடைய அன்புள்ள உழைப்பையும், சகிப்புத்தன்மையையும் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நாங்கள் இடைவிடாமல் நினைவுகூருகிறோம்.” (1 தெசலோனிக்கேயர் 1:3, NW) இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம் நம்பிக்கையே நாம் பலன்தரும் விதத்தில் உழைப்பதற்கும் சகித்திருப்பதற்கும் காரணம் என பவுல் குறிப்பிட்டார். கிறிஸ்துவின் வருகையிலும் அந்த வருகையால் ஏற்படவிருக்கும் மாற்றத்திலும் விசுவாசம் வைப்பதும்கூட அந்த நம்பிக்கையில் அடங்கும். அத்தகைய நம்பிக்கை உண்மை கிறிஸ்தவர்களைத் தாங்கி ஆதரிக்கிறது, அல்லது மிகக் கடினமான சூழ்நிலைகளிலும்கூட சகித்திருக்க உதவுகிறது.
உதாரணமாக, கார்லோஸ் என்பவரை எடுத்துக்கொள்ளுங்கள்; அவர் பிரேசிலில் உள்ள சாவோ போலோவில் வசிக்கிறார். ஆகஸ்ட் 2003-ல் அவருக்குப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதுமுதல், அவருக்கு எட்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டிருக்கின்றன. அதனால் வாட்டி வதைக்கும் பக்க விளைவுகளாலும் வேதனையாலும் அவர் அவதிப்பட்டார். இருந்தாலும், மற்றவர்களை அவர் உற்சாகப்படுத்தி வந்தார். ஒருசமயம், பெரிய மருத்துவமனை ஒன்றின் முன்னால் அவர் தெரு ஊழியம் செய்துகொண்டிருந்தபோது மற்றொரு யெகோவாவின் சாட்சியைச் சந்தித்தார். அந்தச் சாட்சி அவருடைய கணவருக்கு கீமோதெரபி சிகிச்சை அளிப்பதற்காக அங்கு வந்திருந்தார். புற்றுநோய் படுத்தும் பாடுகளை கார்லோ நன்கு அறிந்திருந்ததால் அந்தக் கணவரையும் மனைவியையும் ஊக்குவித்து ஆறுதல்படுத்த அவரால் முடிந்தது. அவரோடு பேசியது மனதுக்குத் தெம்பளித்ததாக பிற்பாடு அந்தத் தம்பதியர் சொன்னார்கள். பவுலின் வார்த்தைகள் எவ்வளவு உண்மை என்பதை இதன் மூலம் கார்லோ அனுபவத்தில் கண்டார்: “தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்.”—2 கொரிந்தியர் 1:4.
கடும் வியாதியின் மத்தியிலும் மற்றவர்களுக்குத் தொடர்ந்து ஆறுதல் அளிக்க எது கார்லோவைப் பலப்படுத்துகிறது? கிறிஸ்துவின் வருகையைப் பற்றிய நம்பிக்கையும் அதன் மூலம் வரவிருக்கிற சகல மாற்றங்களுமே தொடர்ந்து ‘நன்மை செய்ய’ கார்லோவை உந்துவிக்கின்றன.—கலாத்தியர் 6:9.
சாம்யவல் என்பவரின் அனுபவத்தையும் கவனியுங்கள். அவருடைய தம்பி, அவர்களுடைய அப்பா வீட்டிலிருந்து 50 மீட்டர் தூரத்திலேயே கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். துப்பாக்கியால் சுடப்பட்டதில் அவருடைய உடலுக்குள் பத்து குண்டுகள் பதிந்திருந்தன. போலீசாரின் விசாரணை முடியும் வரையில் எட்டு மணிநேரமாக அவருடைய உடல் சாலை ஓரத்திலேயே கிடந்தது. அன்று நடந்த சம்பவத்தை சாம்யவலால் மறக்கவே முடியாது. என்றாலும், பூமியிலிருந்து எல்லா துன்மார்க்கத்தையும் கிறிஸ்து ஒழித்துக்கட்டிய பிறகு அவருடைய நீதியுள்ள ஆட்சியில் மனித இனம் ஆசீர்வாதங்களைப் பெறும் என்ற நம்பிக்கை சாம்யவலை தாங்கி ஆதரித்தது. தன்னுடைய தம்பி உயிர்த்தெழுந்து வருகையில் அவரை ஆசையோடு அரவணைப்பதைக் குறித்து அவர் எப்போதும் நினைத்துப் பார்க்கிறார்.—அப்போஸ்தலர் 24:15.
நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
கிறிஸ்துவின் வருகையிலும் அது சாதிக்கவிருக்கும் காரியங்களிலும் நம்பிக்கை வைப்பது உங்களுக்குப் பேராறுதலைத் தரும். மனித பிரச்சினைகளுக்கான ஆணி வேரையும் அவற்றின் தீய பாதிப்புகளையும் இயேசு கிறிஸ்து நிச்சயம் சரிசெய்வார்.
மனித இனத்திற்கு கிறிஸ்துவின் ஆட்சி அள்ளித் தரும் ஆசீர்வாதங்களை அனுபவித்து மகிழ்வதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்? கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளைக் கருத்தூன்றி படிக்கத் துவங்குங்கள். தம் பிதாவிடம் ஜெபிக்கையில் இயேசு இவ்வாறு சொன்னார்: “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.” (யோவான் 17:3) பைபிள் கற்பிக்கிறவற்றை ஆராய்வதை உங்கள் இலட்சியமாக்குங்கள். உங்கள் பகுதியிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு உதவ மனமுள்ளவர்களாய் இருக்கிறார்கள். அவர்களைத் தொடர்புகொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம் அல்லது இப்பத்திரிகையைப் பிரசுரிப்போருக்கு எழுதும்படி கேட்டுக் கொள்கிறோம்.
[பக்கம் 7-ன் படங்கள்]
கிறிஸ்துவின் வருகை இந்தப் பூமியை முற்றிலும் புதிதாக்கும்
[படத்திற்கான நன்றி]
உள்படம், பின்னணி மட்டும்: Rhino and Lion Park, Gauteng, South Africa