யோனா
1 அமித்தாயின் மகன் யோனாவுக்கு*+ யெகோவாவிடமிருந்து ஒரு செய்தி கிடைத்தது. 2 அவர் யோனாவிடம், “நினிவே மாநகரத்துக்குப் புறப்பட்டுப் போ.+ அங்கிருக்கிற ஜனங்கள் செய்கிற அக்கிரமத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. அதனால், அவர்களுக்குக் கிடைக்கப்போகிற தண்டனையைப் பற்றி அறிவிப்பு செய்” என்று சொன்னார்.
3 ஆனால் யோனா, யெகோவாவின் பேச்சைக் கேட்காமல் தர்ஷீசுக்கு ஓடிப்போக நினைத்து, யோப்பா துறைமுகத்துக்குப் போனார். அங்கே தர்ஷீசுக்குப் போகும் கப்பல் தயாராக இருந்தது. உடனே, பணம் கட்டிவிட்டு அதில் ஏறினார். இப்படி, யெகோவாவின் பேச்சைக் கேட்காமல் தர்ஷீசுக்குக் கிளம்பினார்.
4 ஆனால், யெகோவா கடும் புயல் வீசும்படி செய்தார். கடல் பயங்கரமாகக் கொந்தளித்தது. கப்பல் உடைந்துபோகும் நிலையில் இருந்தது. 5 கப்பலோட்டிகள் பயத்தில் நடுநடுங்கி, உதவிக்காக அவரவர் தெய்வத்தைக் கூப்பிட்டார்கள். அதன்பின், கப்பலின் எடையைக் குறைப்பதற்காக அதிலிருந்த பொருள்களைக் கடலில் தூக்கியெறிய ஆரம்பித்தார்கள்.+ ஆனால் யோனா, கப்பலின் அடித்தளத்துக்குப் போய்ப் படுத்துக்கொண்டு நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தார். 6 கப்பல் தலைவன் அவரிடம் வந்து, “ஏன் இப்படித் தூங்கிக்கொண்டிருக்கிறாய்? எழுந்திரு. நீயும் உன் கடவுளிடம் வேண்டிக்கொள். உண்மைக் கடவுள் ஒருவேளை நம்மேல் இரக்கம் காட்டி நம் உயிரைக் காப்பாற்றலாம்”+ என்று சொன்னார்.
7 பிறகு கப்பலோட்டிகள், “நமக்கு ஏன் இப்படியொரு ஆபத்து வந்திருக்கிறது? இதற்கு யார் காரணம் என்று தெரிந்துகொள்ள குலுக்கல் போட்டுப்+ பார்க்கலாம்” என்று பேசிக்கொண்டார்கள். குலுக்கலில் யோனாவின் பெயர் விழுந்தது.+ 8 உடனே அவர்கள் யோனாவிடம், “தயவுசெய்து சொல், நமக்கு ஏன் இப்படியொரு ஆபத்து வந்திருக்கிறது? இதற்கு யார் காரணம்? நீ என்ன வேலை செய்கிறாய்? எங்கிருந்து வருகிறாய்? உன் தேசம் எது? இனம் எது?” என்று கேட்டார்கள்.
9 அதற்கு யோனா, “நான் ஒரு எபிரெயன். பரலோகத்தின் கடவுளாகிய யெகோவாவை வணங்குபவன். இந்தக் கடலையும் நிலத்தையும் படைத்தவர் அவர்தான்” என்று சொன்னார்.
10 அதோடு, யெகோவாவின் பேச்சைக் கேட்காமல் ஓடி வந்திருப்பதாகவும் யோனா சொன்னார். அதைக் கேட்டபோது அவர்கள் இன்னும் பயந்துபோய், “எவ்வளவு பெரிய தப்பு பண்ணிவிட்டாய்!” என்றார்கள். 11 கடல் கொந்தளிப்பது அதிகமாகிக்கொண்டே போனதால் அவர்கள் யோனாவிடம், “கடல் அலைகள் அடங்குவதற்கு நாங்கள் உன்னை என்ன செய்வது?” என்று கேட்டார்கள். 12 அதற்கு அவர், “என்னைத் தூக்கிக் கடலில் வீசிவிடுங்கள். அப்போது, கடல் அலைகள் அடங்கிவிடும். என்னால்தான் நீங்கள் இந்தப் பயங்கரமான புயலில் சிக்கித் தவிக்கிறீர்கள்” என்று சொன்னார். 13 இருந்தாலும், அந்த ஆட்கள் எப்படியாவது கப்பலைக் கரைசேர்க்கப் போராடினார்கள். ஆனால், முடியவில்லை. கடல் இன்னும் பயங்கரமாகக் கொந்தளித்தது.
14 அப்போது அவர்கள், “யெகோவாவே, இந்த மனுஷனுடைய உயிருக்காக எங்கள் உயிரை எடுத்துவிடாதீர்கள். ஒரு அப்பாவியைக் கொன்றதாக எங்கள்மேல் பழிசுமத்திவிடாதீர்கள். யெகோவாவே, உங்கள் விருப்பப்படிதானே எல்லாம் நடந்திருக்கிறது” என்று யெகோவாவிடம் கெஞ்சினார்கள். 15 பின்பு, யோனாவைத் தூக்கிக் கடலில் வீசினார்கள். உடனே, கடல் அமைதியாகிவிட்டது. 16 அதைப் பார்த்ததும் யெகோவாமேல் அவர்களுக்கு ரொம்பவே பயம் வந்தது.+ அதனால், யெகோவாவுக்குப் பலி செலுத்தி, அவரிடம் நேர்ந்துகொண்டார்கள்.
17 அதன்பின் யெகோவா ஒரு பெரிய மீனை அனுப்பி, யோனாவை விழுங்கும்படி செய்தார். யோனா மூன்று நாட்களுக்கு ராத்திரி பகலாக அந்த மீனின் வயிற்றுக்குள் இருந்தார்.+