யோவானுக்குக் கிடைத்த வெளிப்படுத்துதல்
10 பலமுள்ள இன்னொரு தேவதூதர் பரலோகத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன்; மேகம் அவருக்கு உடையாக* இருந்தது; அவருடைய தலைக்குமேல் ஒரு வானவில் இருந்தது; அவருடைய முகம் சூரியனைப் போலவும்,+ அவருடைய கால்கள்* நெருப்புத் தூண்களைப் போலவும் இருந்தன; 2 விரிக்கப்பட்ட ஒரு சிறிய சுருள் அவருடைய கையில் இருந்தது. அவர் தன்னுடைய வலது காலைக் கடலின் மீதும், இடது காலைப் பூமியின் மீதும் வைத்தார். 3 பின்பு, சிங்கம் கர்ஜிப்பதுபோல்+ உரக்கச் சத்தம் போட்டார். அப்படி அவர் சத்தம் போட்டபோது, ஏழு இடிகளின் குரலைக்+ கேட்டேன்.
4 ஏழு இடிகள் பேசியபோது, அவற்றை நான் எழுதப்போனேன். ஆனால், பரலோகத்திலிருந்து ஒரு குரல்,+ “ஏழு இடிகள் சொன்னதை முத்திரை போடு; அவற்றை எழுதாதே” என்று சொல்வதைக் கேட்டேன். 5 கடலின் மீதும் பூமியின் மீதும் நின்றுகொண்டிருந்த அந்தத் தேவதூதர் வானத்தை நோக்கித் தன்னுடைய வலது கையை உயர்த்தினார். 6 என்றென்றும் வாழ்கிறவரும்,+ வானத்தையும் அதில் இருக்கிறவற்றையும் பூமியையும் அதில் இருக்கிறவற்றையும் கடலையும் அதில் இருக்கிறவற்றையும் படைத்தவருமான+ கடவுளின் பெயரில் அவர் ஆணையிட்டு, “இனியும் தாமதமாகாது. 7 ஏழாவது தேவதூதர்+ தன்னுடைய எக்காளத்தை ஊதப்போகிற நாட்களில்,+ கடவுளுடைய பரிசுத்த ரகசியம்+ நிறைவேற்றப்படும். இதுதான் கடவுள் தன்னுடைய அடிமைகளாகிய தீர்க்கதரிசிகளுக்கு அறிவித்த நல்ல செய்தி”+ என்று சொன்னார்.
8 பரலோகத்திலிருந்து நான் கேட்ட குரல்+ மறுபடியும் என்னிடம், “கடலின் மீதும் பூமியின் மீதும் நிற்கிற தேவதூதரின் கையில் இருக்கிற விரிக்கப்பட்ட சுருளை நீ போய் வாங்கிக்கொள்”+ என்று சொன்னது. 9 அதன்படியே நான் அந்தத் தேவதூதரிடம் போய், அந்தச் சிறிய சுருளைக் கொடுக்கும்படி கேட்டேன். அதற்கு அவர், “இதை வாங்கிச் சாப்பிடு;+ இது உன் வாயில் தேன்போல் இனிக்கும், ஆனால் உன் வயிற்றில் கசக்கும்” என்று சொன்னார். 10 நான் அந்தத் தேவதூதரின் கையிலிருந்த சிறிய சுருளை வாங்கிச் சாப்பிட்டேன்;+ அது என்னுடைய வாயில் தேன்போல் இனித்தது;+ ஆனால், அதைச் சாப்பிட்டு முடித்தவுடன் என் வயிற்றில் கசப்பாக இருந்தது. 11 அப்போது, “பல இனத்தினரையும் தேசத்தினரையும் மொழியினரையும் ராஜாக்களையும் பற்றி நீ மறுபடியும் தீர்க்கதரிசனம் சொல்ல வேண்டும்” என்று அவர்கள் என்னிடம் சொன்னார்கள்.