எண்ணாகமம்
12 கூஷ் தேசத்துப் பெண்ணை மோசே கல்யாணம் செய்திருந்ததால்+ மிரியாமும் ஆரோனும் அவருக்கு விரோதமாக முணுமுணுத்தார்கள். 2 “மோசே மூலம்தான் யெகோவா பேசினாரா? ஏன், எங்கள் மூலம் பேசவில்லையா?”+ என்றும் முணுமுணுத்தார்கள். இதையெல்லாம் யெகோவா கேட்டுக்கொண்டிருந்தார்.+ 3 பூமியிலுள்ள எல்லா மனிதர்களையும்விட மோசே மிகவும் தாழ்மையானவராக* இருந்தார்.+
4 உடனே யெகோவா மோசேயையும் ஆரோனையும் மிரியாமையும் பார்த்து, “மூன்று பேரும் சந்திப்புக் கூடாரத்துக்கு வாருங்கள்” என்றார். மூன்று பேரும் புறப்பட்டுப் போனார்கள். 5 பின்பு, யெகோவா மேகத் தூணில் இறங்கி வந்து+ கூடார வாசலில் நின்று, ஆரோனையும் மிரியாமையும் கூப்பிட்டார். அவர்கள் இரண்டு பேரும் முன்னால் போனார்கள். 6 அப்போது யெகோவா, “தயவுசெய்து நான் சொல்வதைக் கேளுங்கள். உங்கள் நடுவில் என் தீர்க்கதரிசி இருந்தால், தரிசனத்தில் என்னைப் பற்றி அவருக்கு வெளிப்படுத்துவேன்,+ கனவில் அவனோடு பேசுவேன்.+ 7 ஆனால், என் ஊழியனாகிய மோசேயின் விஷயத்தில் அப்படி இல்லை! என் ஜனங்கள் எல்லாரையும் அவனிடம் ஒப்படைத்திருக்கிறேன்.*+ 8 அவனிடம் நான் நேருக்கு நேராகப் பேசுகிறேன்.+ மர்மமாகப் பேசாமல் தெளிவாகப் பேசுகிறேன். யெகோவாவாகிய நான் அவன் முன்னால் தோன்றுகிறேன். அப்படியிருக்கும்போது, என்னுடைய ஊழியனாகிய மோசேக்கு விரோதமாகப் பேச உங்களுக்கு எப்படித் துணிச்சல் வந்தது?” என்றார்.
9 அப்போது, அவர்கள்மேல் யெகோவாவின் கோபம் பற்றியெரிந்தது. அவர் அவர்களைவிட்டுப் போய்விட்டார். 10 கூடாரத்தைவிட்டு மேகம் விலகிப்போனது. உடனே மிரியாமைத் தொழுநோய் தாக்கியது, அவளுடைய உடல் வெண்மையான பனி போல மாறியது.+ அவளுக்குத் தொழுநோய் பிடித்திருந்ததை+ ஆரோன் பார்த்தார். 11 உடனே அவர் மோசேயிடம், “என் எஜமானே, கெஞ்சிக் கேட்கிறேன்! எங்களுடைய பாவத்துக்காகத் தயவுசெய்து எங்களைத் தண்டிக்க வேண்டாம்! நாங்கள் முட்டாள்தனமாக நடந்துகொண்டோம்! 12 தாயின் வயிற்றிலேயே செத்து, பாதி அழுகிப்போய்ப் பிறக்கிற குழந்தையைப் போல இவள் ஆகிவிட்டாளே! தயவுசெய்து இவளை இப்படியே விட்டுவிட வேண்டாம்!” என்றார். 13 அப்போது யெகோவாவிடம் மோசே கெஞ்சிக் கதறி, “கடவுளே, தயவுசெய்து என் அக்காவைக் குணப்படுத்துங்கள்! தயவுசெய்து குணப்படுத்துங்கள்!” என்றார்.+
14 அப்போது யெகோவா மோசேயிடம், “இவளுடைய அப்பா இவள் முகத்தில் காறித் துப்பினால், இவள் ஏழு நாட்கள் வெட்கப்பட வேண்டாமா? அதுபோலவே, ஏழு நாட்கள் இவள் முகாமுக்கு வெளியே ஒதுக்கி வைக்கப்பட வேண்டும்,+ அதன்பின் இவளை உள்ளே கூட்டிக்கொண்டு வரலாம்” என்றார். 15 அதனால், மிரியாம் முகாமுக்கு வெளியே ஏழு நாட்கள் ஒதுக்கி வைக்கப்பட்டாள்.+ மிரியாமைத் திரும்பவும் முகாமுக்குள் கூட்டிக்கொண்டு வரும்வரை ஜனங்கள் புறப்படவில்லை. 16 அதன்பின், ஜனங்கள் எல்லாரும் ஆஸ்ரோத்திலிருந்து+ புறப்பட்டு பாரான் வனாந்தரத்துக்குப் போய் முகாம்போட்டார்கள்.+