2 ராஜாக்கள்
9 தீர்க்கதரிசிகளுடைய மகன்களில் ஒருவரை எலிசா தீர்க்கதரிசி கூப்பிட்டு, “உன்னுடைய உடையை இடுப்பில் இழுத்துக் கட்டிக்கொள், இந்த எண்ணெய்க் குப்பியை எடுத்துக்கொண்டு சீக்கிரமாக ராமோத்-கீலேயாத்துக்குப் போ.+ 2 அங்கே போனதும், நிம்சியின் பேரனும் யோசபாத்தின் மகனுமான யெகூ+ எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடி. உள்ளே போய் அவருடைய சகோதரர்கள் நடுவிலிருந்து அவரைக் கூட்டிக்கொண்டு உள்ளறைக்குப் போ. 3 பின்பு, குப்பியில் இருக்கிற எண்ணெயை அவர் தலையில் ஊற்றி, ‘“உன்னை இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் செய்கிறேன்” என்று யெகோவா சொல்கிறார்’+ என்று சொல். பின்பு, கதவைத் திறந்து வேகமாக ஓடிவந்துவிடு” என்று சொன்னார்.
4 அதனால், எலிசா தீர்க்கதரிசியின் ஊழியர் ராமோத்-கீலேயாத்துக்குப் போனார். 5 அங்கே படைத் தலைவர்கள் ஒன்றாக உட்கார்ந்திருப்பதைப் பார்த்தார். அவர்களிடம், “தலைவரே, ஒரு செய்தி சொல்ல வந்திருக்கிறேன்” என்று சொன்னார். அதற்கு யெகூ, “யாருக்கு?” என்று கேட்டார். அப்போது அவர், “உங்களுக்குத்தான், தலைவரே” என்று சொன்னார். 6 உடனே யெகூ எழுந்து அவரோடு வீட்டுக்குள் போனார். அங்கே போனதும் யெகூவின் தலையில் அந்த ஊழியர் எண்ணெய் ஊற்றி, “இஸ்ரவேலின் கடவுளான யெகோவா சொல்வது இதுதான்: ‘யெகோவாவின் மக்களான இஸ்ரவேலர்களுக்கு உன்னை ராஜாவாக அபிஷேகம் செய்கிறேன்.+ 7 உன்னுடைய எஜமான் ஆகாபுடைய வீட்டாரை நீ கொன்றுபோட வேண்டும். யேசபேல் கொன்றுபோட்ட என்னுடைய ஊழியர்களான தீர்க்கதரிசிகளுடைய இரத்தத்துக்காகவும் என்னுடைய மற்ற ஊழியர்கள் எல்லாருடைய இரத்தத்துக்காகவும் யெகோவாவாகிய நான் பழிவாங்குவேன்.+ 8 ஆகாபின் வம்சமே அடியோடு அழிந்துபோகும்; அவனுடைய வம்சத்தைச் சேர்ந்த ஆண்கள் எல்லாரையும்,* ஆதரவற்றவர்களையும் அற்பமானவர்களையும்கூட, முற்றிலும் ஒழிப்பேன்.+ 9 நேபாத்தின் மகன் யெரொபெயாமின் வம்சத்துக்கும் அகியாவின் மகன் பாஷாவின் வம்சத்துக்கும் ஏற்பட்ட கதிதான்+ ஆகாபின் வம்சத்துக்கும் ஏற்படும். 10 யெஸ்ரயேலில் இருக்கிற நிலத்தில் யேசபேலின் உடலை நாய்கள் தின்னும்,+ அவளை யாரும் அடக்கம் செய்ய மாட்டார்கள்’” என்று சொல்லிவிட்டு கதவைத் திறந்து ஒரே ஓட்டமாக ஓடிவிட்டார்.+
11 யெகூ படைத் தலைவர்களிடம் போனதும், “என்ன விஷயம்? இந்தப் பைத்தியக்காரன் எதற்காக வந்தான்?” என்று அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், “இந்த மாதிரி ஆட்களைப் பற்றி உங்களுக்கே தெரியாதா? அவன் ஏதோ உளறிவிட்டுப் போனான்” என்று சொன்னார். 12 அதற்கு அவர்கள், “தயவுசெய்து உண்மையைச் சொல்லுங்கள், அவன் என்ன சொன்னான்?” என்று கேட்டார்கள். அப்போது யெகூ, “அவன் என்னிடம் இப்படியெல்லாம் சொன்னான். அதோடு, ‘உன்னை இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் செய்கிறேன்’ என்று யெகோவா சொல்கிறார்+ என்றும் சொன்னான்” என்றார். 13 அதைக் கேட்டதுமே அவர்கள் எல்லாரும் தங்களுடைய அங்கியை எடுத்து, அவருக்காகப் படிக்கட்டுகளில் விரித்து,+ ஊதுகொம்பை ஊதி, “யெகூ ராஜாவாகிவிட்டார்!”+ என்று அறிவித்தார்கள். 14 பின்பு, யோராமுக்கு எதிராக நிம்சியின் பேரனும் யோசபாத்தின் மகனுமான யெகூ+ சதித்திட்டம் தீட்டினார்.
சீரியா ராஜாவான அசகேல்+ ராமோத்-கீலேயாத்தைப்+ பிடிக்க வந்ததால், யோராம் ராஜா இஸ்ரவேல் வீரர்கள் எல்லாரையும் கூட்டிக்கொண்டு அதைப் பாதுகாக்கப் போயிருந்தார். 15 ஆனால், சீரியா ராஜாவான அசகேலுடன் நடந்த போரில்+ யோராம் காயமடைந்ததால், அதிலிருந்து குணமடைவதற்காக யெஸ்ரயேலுக்குத்+ திரும்பிவந்திருந்தார்.
இப்போது யெகூ, “நீங்கள் எனக்கு ஆதரவாக இருந்தால், யெஸ்ரயேலுக்குப் போய் இந்த விஷயத்தை அறிவித்துவிடாதபடி இந்த நகரத்திலிருந்து யாரையும் தப்பிக்க விடாதீர்கள்” என்று சொன்னார். 16 பின்பு, யெகூ தன்னுடைய ரதத்தில் ஏறி யெஸ்ரயேலுக்குப் போனார். காயமடைந்த யோராம் அங்குதான் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில், யூதா ராஜாவான அகசியா அவரைப் பார்க்க அங்கே போயிருந்தார். 17 யெகூவும் அவருடைய ஆட்களும் கூட்டமாக வந்துகொண்டிருப்பதை யெஸ்ரயேல் நகர கோபுரத்தின் மீது நின்றுகொண்டிருந்த காவல்காரன் கவனித்தான். உடனே, “ஆட்கள் கூட்டமாக வந்துகொண்டிருக்கிறார்கள்” என்று சொன்னான். அப்போது யோராம், “ஒரு குதிரைவீரனை அனுப்பு; ‘சமாதான நோக்கத்தோடுதானே வருகிறீர்கள்?’ என்று கேட்டுவிட்டு வரச் சொல்” என்றார். 18 அந்தக் குதிரைவீரன் அவரிடம் போய், “‘சமாதான நோக்கத்தோடுதானே வருகிறீர்கள்?’ என்று ராஜா கேட்கச் சொன்னார்” என்றான். அதற்கு அவர், “‘சமாதானமா?’ இதைக் கேட்க நீ யார்? பேசாமல் என் பின்னால் வா!” என்று சொன்னார்.
பின்பு அந்தக் காவல்காரன், “குதிரைவீரன் அவர்களைச் சந்தித்தான், ஆனால் திரும்பி வரவில்லை” என்று ராஜாவிடம் சொன்னான். 19 அதனால், ராஜா மறுபடியும் ஒரு குதிரைவீரனை அனுப்பினார். அவன் யெகூவிடம் போய், “‘சமாதான நோக்கத்தோடுதானே வருகிறீர்கள்?’ என்று ராஜா கேட்கச் சொன்னார்” என்றான். அதற்கு அவர், “‘சமாதானமா?’ இதைக் கேட்க நீ யார்? பேசாமல் என் பின்னால் வா” என்று சொன்னார்.
20 பின்பு அந்தக் காவல்காரன், “இரண்டாவதாகப் போனவனும் அவர்களைச் சந்தித்தான், ஆனால் திரும்பி வரவில்லை. ரதத்தை வெறித்தனமாக ஓட்டுவதைப் பார்த்தால் நிம்சியின் பேரன் யெகூ மாதிரி தெரிகிறது” என்று சொன்னான். 21 உடனே யோராம், “குதிரைகளை ரதத்தில் பூட்டுங்கள்!” என்று சொன்னார். போர் ரதத்தைக் கொண்டுவந்தவுடன் இஸ்ரவேலின் ராஜாவான யோராம் புறப்பட்டார். யூதாவின் ராஜாவான அகசியாவும்+ தன்னுடைய போர் ரதத்தில் புறப்பட்டுப் போனார். இரண்டு பேரும் யெகூவைப் பார்க்கப் போனார்கள். கடைசியில், யெஸ்ரயேலைச் சேர்ந்த நாபோத்தின் நிலத்தில்+ அவரைச் சந்தித்தார்கள்.
22 யெகூவைப் பார்த்தவுடன், “சமாதான நோக்கத்தோடுதானே வந்திருக்கிறாய், யெகூ?” என்று யோராம் கேட்டார். அதற்கு அவர், “உன்னுடைய அம்மா யேசபேல் விபச்சாரமும் பில்லிசூனியங்களும் செய்துகொண்டிருக்கும்வரை+ எப்படிச் சமாதானம் இருக்கும்?”+ என்று கேட்டார். 23 உடனே, “அகசியா, நாம் மோசம்போய்விட்டோம்!” என்று சொல்லி யோராம் தன்னுடைய ரதத்தைத் திருப்பினார். அங்கிருந்து தப்பிக்கப் பார்த்தபோது, 24 யெகூ சட்டென்று தன்னுடைய வில்லை எடுத்து யோராமின் முதுகில் அம்பு எறிந்தார், அது அவருடைய நெஞ்சைத் துளைத்துக்கொண்டு வெளியே வந்தது. யோராம் தன்னுடைய ரதத்தில் செத்து விழுந்தார். 25 உடனே யெகூ தன்னுடன் வந்திருந்த படை அதிகாரியான பித்காரிடம், “இவனைத் தூக்கி யெஸ்ரயேலைச் சேர்ந்த நாபோத்தின் நிலத்தில் வீசியெறி.+ இவனுடைய அப்பா ஆகாபுக்கு எதிராக யெகோவா தீர்ப்பு சொன்னபோது,+ நானும் நீயும் அவருக்குப் பின்னால் ஆளுக்கொரு ரதத்தை* ஓட்டிக்கொண்டு போனோமே, ஞாபகம் இருக்கிறதா? 26 ‘நாபோத்தின் இரத்தமும் அவனுடைய மகன்களின் இரத்தமும் சிந்தப்பட்டதை நேற்று நான் பார்த்தேன்’+ என்று ஆகாபிடம் யெகோவா சொன்னார். ‘அதற்காக இதே நிலத்தில் நான் உன்னைப் பழிவாங்கியே தீருவேன்’+ என்றும் யெகோவா சொன்னார். யெகோவா சொன்னபடியே, இவனைத் தூக்கி அந்த நிலத்தில் வீசியெறி”+ என்று சொன்னார்.
27 இதையெல்லாம் பார்த்ததும், யூதாவின் ராஜாவான அகசியா+ ஒரு பெரிய தோட்ட வீட்டின் பக்கமாகத் தப்பித்துப் போனார். (பிற்பாடு யெகூ அவரைத் துரத்திக்கொண்டு போய், “இவனையும் கொன்றுபோடுங்கள்!” என்று சொன்னார். உடனே, ரதத்தில் போய்க்கொண்டிருந்த அகசியாவை அவர்கள் தாக்கினார்கள்; இப்லெயாமுக்குப்+ பக்கத்தில் இருந்த கூருக்குப் போகும் வழியில் இது நடந்தது. இருந்தாலும், எப்படியோ மெகிதோவரை அவர் தப்பித்துப் போனார், ஆனால் அங்கே செத்துப்போனார். 28 அவருடைய ஊழியர்கள் அவருடைய உடலை ஒரு ரதத்தில் வைத்து எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள். அவருடைய முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்த ‘தாவீதின் நகரத்தில்,’+ அவருடைய கல்லறையில் அடக்கம் செய்தார்கள். 29 ஆகாபின் மகன் யோராம் ஆட்சி செய்த 11-ஆம் வருஷத்தில் அகசியா+ யூதாவை ஆட்சி செய்ய ஆரம்பித்திருந்தார்.)
30 யெகூ யெஸ்ரயேலுக்கு+ வந்ததை யேசபேல்+ கேள்விப்பட்டாள். உடனே தன் கண்களில் மை தீட்டி, தலையை அலங்கரித்துக்கொண்டு ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள். 31 வாசலில் யெகூ நுழைந்தபோது, “தன்னுடைய எஜமானைக் கொன்றுபோட்ட சிம்ரிக்கு வந்த கதி தெரியும்தானே?”+ என்று கேட்டாள். 32 அவர் அண்ணாந்து ஜன்னலைப் பார்த்து, “யார் என் பக்கம் இருக்கிறீர்கள்? யார்?”+ என்று கேட்டார். உடனே அரண்மனை அதிகாரிகள் இரண்டு மூன்று பேர் எட்டிப் பார்த்தார்கள். 33 அப்போது அவர், “அவளைக் கீழே தள்ளுங்கள்!” என்று சொன்னார். அவர்கள் உடனே அவளைக் கீழே தள்ளினார்கள். அவளுடைய இரத்தம் சுவர்மீதும் குதிரைகள்மீதும் தெறித்தது; அவருடைய குதிரைகள் அவளை மிதித்துப்போட்டன. 34 பின்பு, யெகூ உள்ளே போய்ச் சாப்பிட்டுக் குடித்தார். ஊழியர்களைக் கூப்பிட்டு, “சபிக்கப்பட்ட இந்தப் பெண்ணைத் தயவுசெய்து அடக்கம் செய்யுங்கள். என்ன இருந்தாலும் அவள் ஒரு ராஜாவின் மகள்”+ என்று சொன்னார். 35 அவர்கள் அடக்கம் செய்யப் போனபோது, அவளுடைய மண்டையோடும் பாதங்களும் உள்ளங்கைகளும் தவிர வேறு எதுவுமே அங்கே இருக்கவில்லை.+ 36 அவர்கள் திரும்பி வந்து யெகூவிடம் விஷயத்தைச் சொன்னார்கள். அதற்கு அவர், “திஸ்பியனான எலியா மூலம் யெகோவா சொன்னது நடந்துவிட்டது.+ ‘யெஸ்ரயேலில் உள்ள நிலத்தில் யேசபேலின் உடலை நாய்கள் தின்னும்.+ 37 “இதுதான் யேசபேல்” என்று சொல்ல முடியாதபடி, அவளுடைய உடல் யெஸ்ரயேலில் உள்ள நிலத்துக்கு எருவாக ஆகிவிடும்’ என்று அவர் சொன்னது நிறைவேறிவிட்டது” என்றார்.