யெகூ பக்திவைராக்கியத்தோடு உண்மை வணக்கத்தை ஆதரித்தார்
யெகூ பக்திவைராக்கியத்தோடு உண்மை வணக்கத்தை ஆதரித்தார். இதற்காக அவர் சுறுசுறுப்புடன், உடனுக்குடன், தீவிரத்துடன், ஆர்வத்துடன், தைரியத்துடன் செயல்பட்டார். அவரிடமிருந்த நல்ல குணங்களை நாமும் வெளிக்காட்ட வேண்டும்.
இஸ்ரவேலில் மோசமான சூழல் நிலவிய சமயத்தில் கடவுளிடமிருந்து யெகூ ஒரு பொறுப்பைப் பெற்றார். காலஞ்சென்ற ஆகாபின் மனைவியும் அப்போது ஆட்சி செய்து வந்த யோராம் ராஜாவின் அம்மாவுமான யேசபேலின் மோசமான செல்வாக்கின்கீழ் தேசம் இருந்தது. யெகோவாவை வழிபடுவதற்குப் பதிலாக பாகாலை வழிபடும்படி அவள் மக்களை ஊக்குவித்தாள்; கடவுளுடைய தீர்க்கதரிசிகளைக் கொலை செய்து, ‘வேசித்தனங்களாலும்,’ ‘பில்லிசூனியங்களாலும்’ மக்களை அவள் பாழ்ப்படுத்தியிருந்தாள். (2 இரா. 9:22; 1 இரா. 18:4, 13) யோராம், யேசபேல் உட்பட ஆகாபின் வீட்டார் அனைவரையும் வேரோடு அழிக்க யெகோவா முடிவுசெய்திருந்தார். அந்தப் பொறுப்பை யெகூ நிறைவேற்ற வேண்டியிருந்தது.
யெகூவைப் பற்றி பைபிள் முதன்முதலாகக் குறிப்பிடுகையில், அவர் சேனாபதிகளோடு உட்கார்ந்திருந்ததாகச் சொல்கிறது; அந்தச் சமயத்தில் கீலேயாத்திலுள்ள ராமோத்திலே சீரியர்களுடன் இஸ்ரவேலர் போர் செய்துகொண்டிருந்தார்கள். இஸ்ரவேல் படையில் யெகூ ஓர் உயர் அதிகாரியாக இருந்தார்; ஒருவேளை தளபதியாக இருந்திருக்கலாம். தீர்க்கதரிசிகளின் புத்திரரில் ஒருவரை எலிசா தீர்க்கதரிசி யெகூவிடம் அனுப்பினார்; யெகூவை இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் செய்ய அனுப்பினார்; அதோடு, விசுவாசதுரோக ஆகாபின் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களைப் பூண்டோடு அழிக்கும்படி யெகூவுக்குக் கட்டளையிடவும் அனுப்பினார்.—2 இரா. 8:28; 9:1-10.
அந்தத் தீர்க்கதரிசியின் புத்திரன் எதற்காக வந்தாரென மற்ற சேனாபதிகள் யெகூவிடம் கேட்டபோது முதலில் அவர் சொல்லத் தயங்கினார். அவர்கள் அவரை வற்புறுத்தியபோதோ, உண்மையைச் சொல்லிவிட்டார்; பின்னர் அவரும் அவருடைய சகாக்களும் சேர்ந்து யோராமுக்கு எதிராகச் சதிசெய்ய ஆரம்பித்தார்கள். (2 இரா. 9:11-14) அரசு ஆணைகள்மீதும் யேசபேல்மீதும் அவர்களுடைய உள்ளத்தில் கடுப்பும் கோபமும் ஏற்கெனவே புகைந்துகொண்டு இருந்திருக்கலாம். எப்படியிருந்தாலும், தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட வேலையைச் சிறப்பாகச் செய்து முடிக்க யெகூ மிகக் கவனமாய்த் திட்டமிட்டார்.
யோராம் ராஜா போர்க்களத்தில் காயப்பட்டிருந்தார்; குணமாவதற்கு யெஸ்ரயேல் நகரத்திற்குச் சென்றிருந்தார். யெகூ, தன் திட்டம் நிறைவேற வேண்டுமென்றால் தான் ராஜாவான செய்தி யெஸ்ரயேலை எட்டாதிருக்க வேண்டும் என்பதை அறிந்திருந்தார். “யெஸ்ரயேலில் இதை அறிவிக்கிறதற்கு ஒருவரும் பட்டணத்திலிருந்து தப்பிப்போகும்படி விடாதிருங்கள்” என்று யெகூ சொன்னார். (2 இரா. 9:14, 15) ஏனென்றால், யோராமுக்கு விசுவாசமாய் இருந்த படைவீரர்கள் தன்னை எதிர்க்க முயலுவார்களென அவர் எதிர்பார்த்திருக்கலாம். அப்படிப்பட்ட எதிர்ப்பைத் தலைதூக்கவே விடக்கூடாதென நினைத்தார்.
மின்னல் வேகத்தில் பறந்தார் ரதத்தில்!
எதிர்பாராத வேளையில் திடுதிப்பெனப் போய்த் தாக்குவதற்காக யெகூ கீலேயாத்திலுள்ள ராமோத்திலிருந்து 72 கிலோமீட்டர் (45 மைல்) தூரத்திலிருந்த யெஸ்ரயேலுக்குத் தன் ரதத்தில் விரைந்தார். யெஸ்ரயேலை நெருங்கியபோது, கோபுரத்தின்மேல் நின்றுகொண்டிருந்த ஜாமக்காரன் “யெகூவின் கூட்டம் வருகிறதை” கண்டான். (2 இரா. 9:17) தன் திட்டத்தை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக யெகூ ஏராளமான படைவீரர்களைத் தன்னுடன் அழைத்துச் சென்றிருக்கலாம்.
தைரியசாலியான யெகூ அந்த ரதங்களில் ஒன்றை ஓட்டி வருவதை அறிந்துகொண்ட ஜாமக்காரன், அவர் பைத்தியக்காரனைப் போல் ‘அதிவேகமாய் ஓட்டுவதாகச்’ சொன்னான். (2 இரா. 9:20) பொதுவாகவே அப்படித்தான் யெகூ ஓட்டுவாரென்றால், இந்தச் சமயத்தில் தன் திட்டத்தை நிறைவேற்ற இன்னும் வெறித்தனமாக ஓட்டியிருப்பார்; ஆம், மின்னல் வேகத்தில் அவர் பறந்திருப்பார்.
தன்னிடம் அனுப்பப்பட்ட இரண்டு குதிரை வீரர்களிடம் யெகூ எதுவும் சொல்ல மறுத்துவிட்டார்; பின்னர், தனித்தனி ரதங்களில் வந்த யோராம் ராஜாவையும் அவருடன் கூட்டுச் சேர்ந்திருந்த யூதாவின் ராஜாவாகிய அகசியாவையும் சந்தித்தார். “யெகூவே, சமாதானமா” என்று யோராம் கேட்டார். அப்போது, “உன் தாயாகிய யேசபேலின் வேசித்தனங்களும் அவளுடைய பில்லிசூனியங்களும், இத்தனை ஏராளமாயிருக்கையில் சமாதானம் ஏது” என்று யெகூ பதிலளித்தார். இந்தப் பதிலைக் கேட்ட யோராம் பயந்துபோய் தன் ரதத்தைத் திருப்பிக்கொண்டு தப்பிப்போக முயன்றார். ஆனால், யெகூ அவரைவிட வேகமாகச் சென்று அவரைப் பிடித்துவிட்டார்! யெகூ வில்லை நாணேற்றி யோராமுடைய நெஞ்சிலே பாய்ச்சினார்; அந்த ராஜா தன் ரதத்திலே சுருண்டுவிழுந்து செத்தார். அகசியா எப்படியோ தப்பித்துவிட்டார்; பிற்பாடு, அவரையும் யெகூ தேடிக் கண்டுபிடித்து வெட்டிப்போடும்படி செய்தார்.—2 இரா. 9:22-24, 27.
ஆகாபின் வீட்டாரில் அடுத்து தீர்த்துக்கட்டப்படவிருந்தவள் கெட்ட ராணியான யேசபேல். ‘சபிக்கப்பட்ட ஸ்திரீ’ என்று அவளை யெகூ குறிப்பிட்டது பொருத்தமானதே. யெஸ்ரயேலுக்கு யெகூ ரதத்தில் விரைந்தபோது அவள் தன் மாளிகையின் ஜன்னல் வழியாய் எட்டிப் பார்ப்பதைக் கண்டார். யெகூ கொஞ்சமும் காலம்தாழ்த்தாமல் உடனடியாக, அவளை ஜன்னலிலிருந்து கீழே தள்ளும்படி பிரதானிகளுக்குக் கட்டளையிட்டார். இஸ்ரவேலர் அனைவரையும் நெறிகெட்டுப் போகச் செய்த அந்த யேசபேல்மீது தன்னுடைய குதிரைகளை ஓட்டிக்கொண்டு சென்றார். பிறகு, கெட்ட ராஜாவான ஆகாபின் வீட்டாரில் இன்னும் ஏராளமானோரை அவர் வெட்டி வீழ்த்த ஆரம்பித்தார்.—2 இரா. 9:30-34; 10:1-14.
வன்முறையைப் பற்றிய எண்ணமே நமக்குப் பிடிக்காமல் இருந்தாலும், அன்று யெகோவா தம்முடைய நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்ற தம் ஊழியர்களைப் பயன்படுத்தினார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ‘அகசியா யோராமிடத்துக்கு வந்தது அவனுக்கு தேவனால் உண்டான கேடாக அமைந்தது; எப்படியென்றால், அவன் வந்தபோது யோராமுடனேகூட, கர்த்தர் ஆகாபின் குடும்பத்தாரைச் சங்கரிக்க அபிஷேகம்பண்ணுவித்த நிம்சியின் குமாரனாகிய யெகூவுக்கு நேராக வெளியே போனான்’ என்று பைபிள் சொல்கிறது. (2 நா. 22:7) ரதத்திலிருந்த யோராமின் உடலை நாபோத்தின் வயல்நிலத்தில் தூக்கியெறியும்படி யெகூ சொன்னார்; நாபோத்தைக் கொலை செய்ததற்காக ஆகாபுக்குத் தண்டனை வழங்கப்போவதாய் யெகோவா கொடுத்திருந்த வாக்குறுதி அப்போது நிறைவேறியதை யெகூ உணர்ந்துகொண்டார். அதோடு, யேசபேல் கொன்ற கடவுளுடைய ‘ஊழியரின் இரத்தத்திற்கு பழிவாங்கும்படி’ யெகூவுக்கு யெகோவா கட்டளையிட்டிருந்தார்.—2 இரா. 9:7, 25, 26, பொது மொழிபெயர்ப்பு; 1 இரா. 21:17-19.
இன்று, யெகோவாவின் ஊழியர்கள் யாரும் உண்மை வணக்கத்தின் எதிரிகளை நேரடியாகத் தாக்குவதில்லை. “பழிவாங்குதல் எனக்குரியது” என்று கடவுள் சொல்கிறார். (எபி. 10:30) ஆனால், சபைக்குக் கேடு விளைவிப்போரை நீக்கிப்போடுவதற்குக் கிறிஸ்தவ மூப்பர்கள் யெகூவைப் போல் தைரியமாக நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கலாம். (1 கொ. 5:9-13) அப்படிச் சபைநீக்கம் செய்யப்பட்ட நபர்களுடன் எந்தத் தொடர்பையும் வைத்துக்கொள்ளாதிருக்க சபையார் எல்லாரும் தீர்மானமாய் இருக்க வேண்டும்.—2 யோ. 9-11.
யெகோவாவிடம் யெகூ பக்திவைராக்கியம் காட்டினார்
“நீ என்னோடே கூடவந்து கர்த்தருக்காக எனக்கு இருக்கிற பக்திவைராக்கியத்தைப் பார்” என்று உண்மையுள்ள யோனதாபிடம் யெகூ சொன்னபோது அவர் என்ன நோக்கத்துடன் செயல்பட்டார் என்பது தெளிவாகத் தெரிகிறது. யெகூவின் அழைப்பை யோனதாப் ஏற்றுக்கொண்டு, அவருடைய ரதத்தில் ஏறி, அவருடன் சமாரியாவுக்குச் சென்றார். அங்கு, ‘பாகாலின் பணிவிடைக்காரரை அழிக்கும்படி யெகூ தந்திரமாய்’ செயல்பட்டார்.—2 இரா. 10:15-17, 19.
பாகாலுக்கு “பெரிய பலியிட” விரும்புவதாக யெகூ அறிவித்தார். (2 இரா. 10:18, 19) “யெகூ சாமர்த்தியமாய் வார்த்தை ஜாலம் புரிந்தார்” என்று ஓர் அறிஞர் சொன்னார். “பொதுவாக அந்த வார்த்தை ‘பலியை’ குறித்தாலும், விசுவாசதுரோகிகளை ‘படுகொலை செய்வதையும்’ அர்த்தப்படுத்தியது” என்றும் சொன்னார். இந்த நிகழ்ச்சிக்கு பாகால் வணக்கத்தார் யாரும் வராமல் இருந்துவிடக்கூடாது என்பதில் யெகூ குறியாக இருந்ததால், அவர்கள் எல்லாரையும் பாகாலின் கோவிலில் கூடிவரச் செய்தார்; அவர்களுக்கே உரிய உடையை அணிந்துவரச் செய்தார். “சர்வாங்க தகனபலியிட்டுத் தீர்ந்தபோது” பாகால் வணக்கத்தாரைக் கொன்றுபோடும்படி ஆயுதம் தரித்த 80 பேரிடம் கட்டளையிட்டார். பிறகு பாகாலின் கோவிலை இடித்துப் போடவும் அந்த இடத்தை மீண்டும் வணக்க ஸ்தலமாகப் பயன்படுத்த முடியாதபடி கழிவறையாக ஆக்கவும் செய்தார்.—2 இரா. 10:20-27.
யெகூ பேரளவான இரத்தத்தைச் சிந்தினார் என்பது உண்மைதான். என்றாலும், யேசபேல் மற்றும் அவளுடைய குடும்பத்தாருடைய கொடுங்கோல் ஆதிக்கத்திலிருந்து இஸ்ரவேலரை விடுவித்த தைரியசாலி என்று பைபிள் அவரைக் குறிப்பிடுகிறது. தைரியமும் திடத்தீர்மானமும் பக்திவைராக்கியமும் உடைய ஒருவரே இப்படிப்பட்ட காரியத்தைச் செய்திருக்க முடியும். பைபிள் அகராதி ஒன்று இவ்வாறு சொல்கிறது: “அது கடினமான வேலை, தீவிரத்துடன் முற்றும் முழுமையாக நிறைவேற்ற வேண்டியிருந்த வேலை. சாதாரண முயற்சி எடுத்திருந்தால் இஸ்ரவேலிலிருந்து பாகால் வணக்கத்தை வேரோடு அகற்ற முடியாமல் போயிருக்கலாம்.”
இன்றுள்ள சூழ்நிலையில் கிறிஸ்தவர்களும் யெகூ வெளிக்காட்டிய சில குணங்களையே வெளிக்காட்ட வேண்டியிருக்கிறது. உதாரணத்திற்கு, யெகோவா கண்டனம் செய்கிற ஏதோவொரு காரியத்தில் ஈடுபடும் ஆசை வந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்? உடனுக்குடனும், தைரியத்துடனும், பக்திவைராக்கியத்துடனும் அதை விட்டொழிக்க வேண்டும். தேவபக்தியை வெளிக்காட்டும் விஷயத்தில் நாம் வைராக்கியத்துடன் செயல்பட வேண்டும்.
யெகோவாவின் சட்டத்தைப் பின்பற்ற கவனமாய் இருங்கள்
யெகூவுடைய வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் நடந்த விஷயங்கள் நமக்கு எச்சரிக்கையாய் அமைந்துள்ளன. யெகூ, ‘பெத்தேலிலும் தாணிலும் வைத்த பொற்கன்றுக்குட்டிகளை . . . விட்டு விலகவில்லை.’ (2 இரா. 10:29) உண்மை வணக்கத்திடம் அந்தளவு பக்திவைராக்கியம் காட்டிய ஒருவரால் எப்படிச் சிலை வணக்கத்தில் ஈடுபட முடிந்தது?
இஸ்ரவேலும் யூதாவும் தனித்தனி ராஜ்யங்களாக இருக்க வேண்டுமென்றால் அவை வணக்கத்தில் பிரிந்திருக்க வேண்டுமென யெகூ ஒருவேளை நினைத்திருக்கலாம். எனவே, தனக்கு முன்பு இஸ்ரவேலை ஆண்ட ராஜாக்களைப் போலவே கன்றுக்குட்டி வணக்கத்தை ஆதரிப்பதன் மூலம் அந்த இரு தேசங்களையும் பிரித்து வைக்க முயன்றார். ஆனால் இது, அவரை ராஜாவாக்கிய யெகோவாவின்மீது அவருக்கு நம்பிக்கை இல்லாததையே காட்டியது.
யெகூ யெகோவாவின் ‘பார்வைக்குச் செம்மையானதை நன்றாய்ச் செய்தார்’; அதனால் யெகோவா அவரைப் பாராட்டினார். என்றாலும் யெகூ, “ஆண்டவரின் சட்டத்தைத் தன் முழு இதயத்தோடு பின்பற்றவில்லை.” (2 இரா. 10:30, 31, பொ.மொ.) யெகூ என்னவெல்லாம் செய்திருந்தார் என்பதை எண்ணிப் பார்க்கும்போது அவர் இவ்வாறு நடந்துகொண்டது உங்களுக்கு ஆச்சரியத்தையும் அதேசமயத்தில் வேதனையையும் அளிக்கலாம். என்றாலும், இது நமக்கு ஒரு பாடத்தைப் புகட்டுகிறது. யெகோவாவுடன் நமக்குள்ள பந்தத்தை நாம் ஒருபோதும் லேசாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஒவ்வொரு நாளும் அவரிடம் உண்மைப்பற்றை வளர்த்துக்கொள்ள வேண்டும்; அதற்கு, அவருடைய வார்த்தையைப் படிக்க வேண்டும், தியானிக்க வேண்டும், மனந்திறந்து ஜெபம் செய்ய வேண்டும். ஆக, முழு இருதயத்தோடு யெகோவாவின் சட்டத்தை எப்போதும் பின்பற்ற நாம் மிகக் கவனமாக இருப்போமாக.—1 கொ. 10:12.
[பக்கம் 4-ன் பெட்டி]
வரலாற்றுப் பதிவுகளில் யெகூ
பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் உண்மையிலேயே வாழ்ந்தவர்களா என்ற கேள்வியை விமர்சகர்கள் அடிக்கடி எழுப்பியிருக்கிறார்கள். அப்படியென்றால், யெகூ உண்மையில் வாழ்ந்தார் என்பதற்கு பைபிளைத் தவிர வேறு வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றனவா?
பூர்வ அசீரியாவைச் சேர்ந்த மூன்று பதிவுகளாவது இஸ்ரவேலை ஆண்ட இந்த ராஜாவின் பெயரைக் குறிப்பிடுகின்றன. அவற்றில் ஒன்று, யெகூ அல்லது அவருடைய தூதுவர்களில் ஒருவர் அசீரிய ராஜாவான மூன்றாம் சல்மனேசருக்குமுன் தலைவணங்கி அவருக்குக் கப்பம் செலுத்துவதைச் சித்தரிக்கிறது. அதில் இந்த வார்த்தைகளும் பொறிக்கப்பட்டுள்ளன: “உம்ரி (ஹு-யும்-ரி) என்பவரின் மகனாகிய யெகூ (லா-யூ-யா) செலுத்தும் கப்பம்; அவரிடமிருந்து வெள்ளி, தங்கம், தங்க சாப்லு-கிண்ணம், குறுகிய அடிபாகத்தைக் கொண்ட தங்க பூஞ்சாடி, தங்க டம்ளர்கள், தங்க வாளிகள், தகரம், ஒரு செங்கோல், மரத்தாலான புருட்டு [இதன் அர்த்தம் தெரியவில்லை] ஆகியவற்றை நான் பெற்றுக்கொண்டேன்.” யெகூ நிஜமாகவே ‘உம்ரியின் மகன்’ அல்ல; இஸ்ரவேலை அடுத்தடுத்து ஆண்ட ராஜாக்கள் இந்தப் பட்டப்பெயரால் அழைக்கப்பட்டார்கள்; உம்ரி பேரும் புகழும் பெற்றவராக இருந்ததாலும் இஸ்ரவேலின் தலைநகரான சமாரியாவைக் கட்டியவராக இருந்ததாலும் அவருக்குப் பின்வந்த ராஜாக்கள் அவ்வாறு அழைக்கப்பட்டிருக்கலாம்.
அசீரிய ராஜா சொல்லிக்கொண்டபடி யெகூ உண்மையிலேயே கப்பம் கட்டினாரா என்பதை நிரூபிக்க ஆதாரம் இல்லை. என்றாலும், ஒரு கல்தூணிலும், சல்மனேசரின் சிலையிலும், அசீரிய அரச பதிவுகளிலும் யெகூவின் பெயரை அவர் மூன்று முறை குறிப்பிட்டிருக்கிறார். இந்த ஆதாரங்கள், பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள யெகூ உண்மையில் வாழ்ந்தார் என்பதைச் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கின்றன.