1 நாளாகமம்
29 இஸ்ரவேல் சபையார் எல்லாரிடமும் தாவீது ராஜா இப்படிச் சொன்னார்: “கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட என்னுடைய மகன் சாலொமோன்+ சின்னப் பையன், அவனுக்கு அவ்வளவு அனுபவம் இல்லை.*+ ஆனால் நாம் செய்யப்போவது மிகப் பிரமாண்டமான வேலை. ஏனென்றால், நாம் யெகோவா தேவனுக்கு ஆலயம்* கட்டப்போகிறோம், சாதாரண மனிதனுக்கு அல்ல.+ 2 என் கடவுளுடைய ஆலயத்துக்குத் தேவையான பொருள்களைச் சேர்த்து வைக்க நான் ரொம்ப முயற்சி எடுத்தேன். தங்கப் பொருள்களைச் செய்ய தங்கத்தையும், வெள்ளிப் பொருள்களைச் செய்ய வெள்ளியையும், செம்புப் பொருள்களைச் செய்ய செம்பையும், இரும்புப் பொருள்களைச் செய்ய இரும்பையும்,+ மர வேலைகளைச் செய்ய மரங்களையும்,+ கோமேதகக் கற்களையும், சாந்து பூசி பதிப்பதற்கு விசேஷக் கற்களையும், பலவர்ணக் கற்களையும், எல்லா விதமான ரத்தினக் கற்களையும், ஏராளமான வெண்சலவைக் கற்களையும் சேர்த்து வைத்தேன். 3 என் கடவுளுக்கு ஆலயம் கட்ட வேண்டுமென்ற ஆசையால்,+ பரிசுத்த ஆலயத்துக்காக நான் சேர்த்து வைத்த பொருள்களைத் தவிர என்னுடைய சொத்திலிருந்தும்+ தங்கத்தையும் வெள்ளியையும் என் கடவுளுடைய ஆலயத்துக்காகக் கொடுக்கிறேன். 4 நான் 3,000 தாலந்து* ஓப்பீர் தங்கத்தையும்+ 7,000 தாலந்து சுத்தமான வெள்ளியையும் தருகிறேன்; ஆலயத்திலுள்ள வெவ்வேறு அறைகளின்* சுவர்களை மூடுவதற்காக இவற்றைத் தருகிறேன். 5 அதோடு, தங்கப் பொருள்களையும் வெள்ளிப் பொருள்களையும் எல்லா விதமான கைவேலைகளையும் செய்வதற்காக இவற்றைத் தருகிறேன். இன்று யெகோவாவுக்குக் காணிக்கை கொடுக்க யாரெல்லாம் விரும்புகிறீர்கள்?”+ என்று கேட்டார்.
6 தந்தைவழிக் குடும்பத் தலைவர்கள், இஸ்ரவேலின் வம்சத் தலைவர்கள், ஆயிரம் வீரர்களுக்குத் தலைவர்கள், நூறு வீரர்களுக்குத் தலைவர்கள்,+ ராஜாவின் வேலைகளை மேற்பார்வை செய்யும் அதிகாரிகள்+ ஆகியோர் விருப்பப்பட்டு காணிக்கை கொடுத்தார்கள். 7 உண்மைக் கடவுளுடைய ஆலயத்தைக் கட்டுவதற்காக 5,000 தாலந்து தங்கமும் 10,000 தங்கக் காசுகளும்* 10,000 தாலந்து வெள்ளியும் 18,000 தாலந்து செம்பும் 1,00,000 தாலந்து இரும்பும் கொடுத்தார்கள். 8 விலைமதிப்புமிக்க கற்களை வைத்திருந்தவர்கள் யெகோவாவின் ஆலயத்திலிருந்த பொக்கிஷ அறைக்கு அவற்றைக் கொடுத்தார்கள். கெர்சோனியரான+ யெகியேல் பொக்கிஷ அறைக்கு அதிகாரியாக இருந்தார்.+ 9 மக்கள் முழு இதயத்தோடு யெகோவாவுக்குக் காணிக்கை கொடுத்தார்கள்.+ இப்படி அவர்களாகவே விருப்பப்பட்டு காணிக்கை கொடுத்ததால் சந்தோஷப்பட்டார்கள். தாவீது ராஜாவும் மிகவும் சந்தோஷப்பட்டார்.
10 பின்பு, தாவீது சபையார் எல்லாருக்கும் முன்பாக யெகோவாவைப் புகழ்ந்து, “எங்கள் மூதாதையான இஸ்ரவேலின் கடவுளே, யெகோவா தேவனே, உங்களுக்கு என்றென்றும் புகழ் சேரட்டும். 11 யெகோவாவே, நீங்கள் மகத்துவமும்+ வல்லமையும்+ அழகும் மாண்பும் கம்பீரமும்*+ உள்ளவர். பரலோகத்திலும் பூமியிலும் இருக்கிற எல்லாமே உங்களுக்குத்தான் சொந்தம்.+ யெகோவாவே, ஆட்சி உங்களுடையது.+ நீங்கள்தான் எல்லாருக்கும் தலைவர். 12 நீங்கள்தான் செல்வத்தையும் புகழையும் தருகிறீர்கள்.+ எல்லாவற்றையும் ஆட்சி செய்கிறீர்கள்.+ உங்கள் கையில் பலமும்+ மகா வல்லமையும் இருக்கிறது.+ யாரை வேண்டுமானாலும் உங்களால் உயர்த்த முடியும்;+ யாருக்கு வேண்டுமானாலும் பலம் தர முடியும்.+ 13 எங்கள் கடவுளே, இப்போது உங்களுக்கு நன்றி சொல்கிறோம்; உங்களுடைய அருமையான பெயரைப் புகழ்கிறோம்.
14 இப்படிக் காணிக்கை கொடுப்பதற்கு நான் யார்? என் மக்கள் யார்? எல்லாவற்றையும் நீங்கள்தான் தந்தீர்கள். உங்கள் கையிலிருந்து வாங்கியதைத்தான் உங்களுக்குத் திருப்பித் தந்திருக்கிறோம். 15 எங்கள் முன்னோர்கள் எல்லாரையும் போல நாங்கள் உங்களுடைய பார்வையில் அன்னியர்களாகவும், தற்காலிகக் குடிகளாகவும் இருக்கிறோம்.+ இந்த உலகத்தில் எங்களுடைய வாழ்க்கை நிழலைப் போல்+ நிலையில்லாமல் இருக்கிறது. 16 யெகோவா தேவனே, உங்களுடைய பரிசுத்த பெயருக்காக ஆலயம் கட்ட நாங்கள் சேர்த்து வைத்திருக்கும் எல்லா பொருள்களையும் நீங்கள்தான் எங்களுக்குத் தந்தீர்கள், இவை எல்லாமே உங்களுக்குத்தான் சொந்தம். 17 கடவுளே, நீங்கள் இதயத்தை ஆராய்கிறவர்,+ நேர்மையாக நடக்கிறவர்களை உங்களுக்குப் பிடிக்கும்+ என்று எனக்கு நன்றாகத் தெரியும். இந்தக் காணிக்கைகள் எல்லாவற்றையும் நான் உங்களுக்கு உண்மை மனதோடு கொடுத்தேன், நானாகவே விருப்பப்பட்டுக் கொடுத்தேன். இந்த மக்களும் அவர்களாகவே விருப்பப்பட்டு உங்களுக்குக் காணிக்கை கொடுப்பதைப் பார்க்கும்போது எனக்கு ரொம்பச் சந்தோஷமாக இருக்கிறது. 18 எங்கள் முன்னோர்களான ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் இஸ்ரவேலுக்கும் கடவுளாகிய யெகோவாவே, இப்படித் தாராளமாகக் கொடுக்கிற எண்ணமும் ஆசையும் இந்த மக்களுக்கு எப்போதும் இருக்க உதவி செய்யுங்கள், உங்களுக்கு முழு இதயத்தோடு சேவை செய்ய அவர்களுக்கு உதவி செய்யுங்கள்.+ 19 உங்களுடைய கட்டளைகளையும்+ நினைப்பூட்டுதல்களையும் விதிமுறைகளையும் முழு இதயத்தோடு+ கடைப்பிடிக்க என் மகன் சாலொமோனுக்கு உதவி செய்யுங்கள். அவற்றையெல்லாம் அப்படியே கடைப்பிடிக்கவும், எந்த ஆலயத்தை* கட்டுவதற்கு நான் முன்னேற்பாடு செய்திருக்கிறேனோ+ அந்த ஆலயத்தைக் கட்டுவதற்கும் அவனுக்கு உதவி செய்யுங்கள்” என்று சொன்னார்.
20 பின்பு, தாவீது சபையார் எல்லாரிடமும், “உங்கள் கடவுளாகிய யெகோவாவைப் புகழுங்கள்” என்று சொன்னார். உடனே எல்லாரும் தங்களுடைய முன்னோர்களின் கடவுளாகிய யெகோவாவைப் புகழ்ந்தார்கள். யெகோவாவுக்கும் ராஜாவுக்கும் முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்தார்கள். 21 அடுத்த நாள்வரை யெகோவாவுக்குப் பலிகளையும், தகன பலிகளையும்+ கொடுத்தார்கள். 1,000 இளம் காளைகள், 1,000 செம்மறியாட்டுக் கடாக்கள், 1,000 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள், அவற்றோடு கொடுக்கும் திராட்சமது காணிக்கைகள்+ ஆகியவற்றை யெகோவாவுக்குக் கொடுத்தார்கள். இஸ்ரவேலர்கள் எல்லாருக்காகவும் ஏராளமான பலிகளைக் கொடுத்தார்கள்.+ 22 அன்று யெகோவாவுக்கு முன்னால் அவர்கள் அதிக மகிழ்ச்சியோடு சாப்பிட்டார்கள், குடித்தார்கள்.+ தாவீதின் மகன் சாலொமோனை யெகோவாவுக்கு முன்னால் இரண்டாவது தடவையாக அபிஷேகம் செய்து, இஸ்ரவேல் மக்களுக்குத் தலைவராக்கினார்கள்.+ அதோடு, சாதோக்கை குருவாக நியமித்தார்கள்.+ 23 சாலொமோன் தன்னுடைய அப்பாவாகிய தாவீதுக்குப் பதிலாக யெகோவாவின் சிம்மாசனத்தில் ராஜாவாக உட்கார்ந்தார்.+ அவர் சீரும் சிறப்புமாக ஆட்சி செய்தார். இஸ்ரவேலர்கள் எல்லாரும் அவருக்குக் கட்டுப்பட்டு நடந்தார்கள். 24 எல்லா தலைவர்களும்+ மாவீரர்களும்+ தாவீது ராஜாவின் மற்ற எல்லா மகன்களும்+ சாலொமோன் ராஜாவுக்கு அடிபணிந்தார்கள். 25 இஸ்ரவேலர்கள் எல்லாருடைய பார்வையிலும் யெகோவா அவரை உயர்த்தி, அவருக்குப் பேரும் புகழும் தந்தார். இஸ்ரவேலில் எந்த ராஜாவுக்கும் அதுவரை கிடைக்காத ராஜ மகிமை அவருக்குக் கிடைத்தது.+
26 இப்படி, ஈசாயின் மகனான தாவீது இஸ்ரவேல் முழுவதையும் ஆட்சி செய்தார். 27 அவர் 40 வருஷங்கள் இஸ்ரவேலை ஆட்சி செய்தார். எப்ரோனில் 7 வருஷங்களும்,+ எருசலேமில் 33 வருஷங்களும் ஆட்சி செய்தார்.+ 28 அவர் நீண்ட காலம் சீரும் சிறப்புமாக வாழ்ந்த பின்பு இறந்துபோனார்.+ அவருக்குப் பிறகு அவருடைய மகன் சாலொமோன் ராஜாவானார்.+ 29 இறைவாக்கு சொல்பவரான சாமுவேல், தீர்க்கதரிசியான நாத்தான்,+ தரிசனக்காரரான காத்+ ஆகியோர் தாவீது ராஜாவின் முழு சரித்திரத்தையும் எழுதியிருக்கிறார்கள். 30 அவருடைய ஆட்சியையும் வீரதீர செயல்களையும், அவர் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும், அந்தச் சமயத்தில் இஸ்ரவேலிலும் சுற்றியுள்ள எல்லா தேசங்களிலும் நடந்த சம்பவங்களையும் பற்றி அவர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள்.