எண்ணாகமம்
19 யெகோவா மறுபடியும் மோசேயிடமும் ஆரோனிடமும், 2 “யெகோவாவின் சட்டம் இதுதான்: ‘குறையோ ஊனமோ இல்லாத+ சிவப்பான இளம் பசு ஒன்றை உங்களுக்காகக் கொண்டுவரும்படி இஸ்ரவேலர்களிடம் சொல்லுங்கள். அது இதுவரை நுகத்தடியில் பூட்டப்படாததாக இருக்க வேண்டும். 3 அதை நீங்கள் வாங்கி குருவாகிய எலெயாசாரிடம் கொடுக்க வேண்டும். அவர் அதை முகாமுக்கு வெளியே ஓட்டிக்கொண்டு போவார். அங்கே அவர் முன்னால் அது கொல்லப்பட வேண்டும். 4 பின்பு, குருவாகிய எலெயாசார் அதன் இரத்தத்தில் கொஞ்சத்தைத் தன் விரலில் தொட்டு, சந்திப்புக் கூடாரத்தின் வாசலுக்கு முன்னால் ஏழு தடவை தெளிக்க வேண்டும்.+ 5 பின்பு, அந்தப் பசு அவர் கண்ணுக்கு முன்னால் சுட்டெரிக்கப்பட வேண்டும். அதன் தோல், சதை, இரத்தம், சாணம் ஆகிய எல்லாமே சுட்டெரிக்கப்பட வேண்டும்.+ 6 அதன்பின், தேவதாரு மரக்கட்டையையும் மருவுக்கொத்தையும்+ கருஞ்சிவப்பு துணியையும் குருவானவர் எடுத்து, அந்தப் பசு எரிக்கப்படுகிற நெருப்பில் போட வேண்டும். 7 பின்பு, அவர் தன் உடைகளைத் துவைத்து, குளிக்க வேண்டும். அதற்குப்பின் அவர் முகாமுக்குள் வரலாம். ஆனால், அவர் சாயங்காலம்வரை தீட்டுள்ளவராக இருப்பார்.
8 அந்தப் பசுவைச் சுட்டெரித்தவர் தன் உடைகளைத் துவைத்து, குளிக்க வேண்டும். அவர் சாயங்காலம்வரை தீட்டுள்ளவராக இருப்பார்.
9 தீட்டில்லாத ஒருவர் அந்தப் பசுவின் சாம்பலை+ எடுத்து, முகாமுக்கு வெளியே சுத்தமான ஒரு இடத்தில் கொட்ட வேண்டும். சுத்திகரிப்பு நீரைத்+ தயாரிப்பதற்காக ஜனங்கள் அந்தச் சாம்பலை அங்கே வைத்திருக்க வேண்டும். அந்தப் பசுதான் பாவப் பரிகார பலி. 10 அதன் சாம்பலை அள்ளுகிறவர் தன் உடைகளைத் துவைக்க வேண்டும். அவர் சாயங்காலம்வரை தீட்டுள்ளவராக இருப்பார்.
இதுதான் இஸ்ரவேலர்களுக்கும் அவர்களோடு வாழ்கிற மற்ற தேசத்து ஜனங்களுக்கும் கொடுக்கப்படுகிற நிரந்தரச் சட்டம்.+ 11 பிணத்தைத் தொடுகிற எவனும் ஏழு நாட்கள் தீட்டுள்ளவனாக இருப்பான்.+ 12 மூன்றாம் நாளில் அவன் தன்னைச் சுத்திகரிப்பு நீரினால் தூய்மைப்படுத்த வேண்டும், அப்போது ஏழாம் நாளில் அவன் சுத்தமாவான். மூன்றாம் நாளில் அவன் தன்னைத் தூய்மைப்படுத்தாவிட்டால், ஏழாம் நாளில் சுத்தமாக மாட்டான். 13 பிணத்தைத் தொடுகிறவன் தன்னைத் தூய்மைப்படுத்தாவிட்டால், யெகோவாவின் கூடாரத்தைத் தீட்டுப்படுத்துகிறான் என்று அர்த்தம்.+ அதனால் அவன் கொல்லப்பட வேண்டும்.+ சுத்திகரிப்பு நீர்+ அவன்மேல் தெளிக்கப்படாததால் அந்தத் தீட்டு அவன் மேலேயே இருக்கும், அது அவனைவிட்டுப் போகாது.
14 யாராவது கூடாரத்தில் இறந்துவிட்டால் பின்பற்ற வேண்டிய சட்டம் இதுதான்: அந்தக் கூடாரத்துக்குள் போகிறவர்களும், அதற்குள் இருந்தவர்களும் ஏழு நாட்களுக்குத் தீட்டுள்ளவர்களாக இருப்பார்கள். 15 நன்றாக மூடி வைக்கப்படாத எந்தப் பாத்திரமும் தீட்டுள்ளதாக இருக்கும்.+ 16 வெளியில் இருக்கிற ஒருவன், வாளால் கொல்லப்பட்டவனையோ வேறு விதத்தில் செத்தவனையோ ஒரு மனுஷனின் எலும்பையோ கல்லறையையோ தொட்டால், ஏழு நாட்களுக்குத் தீட்டுள்ளவனாக இருப்பான்.+ 17 அவனைச் சுத்திகரிப்பதற்காக இப்படிச் செய்ய வேண்டும்: பாவப் பரிகார பலியாகச் சுட்டெரிக்கப்பட்ட பசுவின் சாம்பலைக் கொஞ்சம் எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் ஊற்றுநீரைக் கலக்க வேண்டும். 18 அதன்பின், தீட்டில்லாத ஒருவர்+ மருவுக்கொத்தை+ எடுத்து, அந்தத் தண்ணீரில் முக்கி, கூடாரத்தின்மேலும் எல்லா பாத்திரங்களின்மேலும் அங்கு இருந்தவர்களின்மேலும் தெளிக்க வேண்டும். அதேபோல், கொல்லப்பட்டவனையோ வேறு விதத்தில் செத்தவனையோ எலும்பையோ கல்லறையையோ தொட்டவன்மேலும் தெளிக்க வேண்டும். 19 தீட்டில்லாதவர் தீட்டுப்பட்டவன்மேல் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் அதைத் தெளிக்க வேண்டும். ஏழாம் நாளில் அவனைப் பாவத்திலிருந்து சுத்திகரிக்க வேண்டும்.+ அதன்பின், சுத்திகரிக்கப்படுகிறவன் தன் உடைகளைத் துவைத்து, குளிக்க வேண்டும். சாயங்காலத்தில் அவன் சுத்தமாவான்.
20 ஆனால், தீட்டுப்பட்ட ஒருவன் தன்னைத் தூய்மைப்படுத்தாவிட்டால் அவன் சபையில் இல்லாதபடி கொல்லப்பட வேண்டும்.+ ஏனென்றால், அவன் யெகோவாவின் கூடாரத்தைத் தீட்டுப்படுத்திவிட்டான். சுத்திகரிப்பு நீர் அவன்மேல் தெளிக்கப்படாததால் அவன் தீட்டுள்ளவன்.
21 சுத்திகரிப்பு நீரைத் தெளிப்பவரும்+ தன் உடைகளைத் துவைக்க வேண்டும். சுத்திகரிப்பு நீரைத் தொடுகிறவர் சாயங்காலம்வரை தீட்டுள்ளவராக இருப்பார். இது நிரந்தரச் சட்டம். 22 தீட்டுள்ளவன் எதைத் தொட்டாலும் அது தீட்டுப்பட்டுவிடும். அதைத் தொடுகிற எவனும் சாயங்காலம்வரை தீட்டுள்ளவனாக இருப்பான்’”+ என்றார்.