கொரிந்தியருக்கு முதலாம் கடிதம்
8 இப்போது, சிலைகளுக்குப் படைக்கப்பட்ட உணவுகளைப் பற்றிப் பார்ப்போம்;+ இதைப் பற்றிய அறிவு நம் எல்லாருக்கும் இருக்கிறதென்பது நமக்குத் தெரியும்.+ அறிவு தலைக்கனத்தை உண்டாக்குகிறது, அன்போ பலப்படுத்துகிறது.+ 2 ஒரு விஷயத்தைப் பற்றித் தனக்கு நன்றாகத் தெரியும் என்று ஒருவன் நினைத்தால், தெரிந்துகொள்ள வேண்டிய அளவுக்கு அவன் அதைத் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறான். 3 ஆனால், ஒருவன் கடவுள்மீது அன்பு வைத்திருந்தால், கடவுள் அவனை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்.
4 சிலைகளுக்குப் படைக்கப்பட்ட உணவைச் சாப்பிடும் விஷயத்தைப் பொறுத்ததில், சிலை என்பது ஒன்றுமே இல்லை+ என்றும், ஒரே கடவுளைத் தவிர வேறு கடவுள் இல்லை+ என்றும் நமக்குத் தெரியும். 5 பரலோகத்திலும் பூமியிலும் கடவுள்கள் என்று அழைக்கப்படுபவை நிறைய இருக்கின்றன.+ இப்படி நிறைய “கடவுள்களும்” நிறைய “எஜமான்களும்” இருந்தாலும், 6 உண்மையில் ஒரே கடவுள்தான் நமக்கு இருக்கிறார்,+ அவர்தான் பரலோகத் தகப்பன்;+ அவரால்தான் எல்லாம் உண்டாயிருக்கிறது, அவருக்காக நாமும் உண்டாயிருக்கிறோம்;+ இயேசு கிறிஸ்துவாகிய ஒரே எஜமானும் இருக்கிறார்; அவர் மூலம் எல்லாம் உண்டாயிருக்கிறது,+ அவர் மூலம் நாமும் உண்டாயிருக்கிறோம்.
7 ஆனாலும், இந்த அறிவு எல்லாருக்கும் இல்லை;+ முன்பு சிலைகளை வணங்கிவந்த சிலர் அவற்றுக்குப் படைக்கப்பட்ட உணவைச் சாப்பிடும்போது அதைப் படையல் என்று நினைப்பதால்+ அவர்களுடைய பலவீனமான மனசாட்சி கறைபட்டுவிடுகிறது.+ 8 ஆனாலும், உணவு நம்மைக் கடவுளுக்குப் பிரியமானவர்களாக ஆக்கிவிடாது.+ சாப்பிடாமல் இருப்பதால் நமக்கு எந்த நஷ்டமும் இல்லை, சாப்பிடுவதால் நமக்கு எந்த லாபமும் இல்லை.+ 9 உங்களுக்கு இருக்கும் தேர்ந்தெடுக்கிற உரிமை பலவீனமானவர்களுக்கு எந்த விதத்திலும் தடைக்கல்லாகிவிடாதபடி எப்போதும் கவனமாக இருங்கள்.+ 10 அறிவைப் பெற்ற நீங்கள் சிலைகள் இருக்கிற ஒரு கோயிலில் சாப்பிட உட்காருகிறீர்கள் என்றால், அதைப் பார்க்கிற பலவீனமான ஒருவனுடைய மனசாட்சி சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றைச் சாப்பிடும் அளவுக்குத் துணிந்துவிடும், இல்லையா? 11 பலவீனமாக இருக்கிறவன் உங்களுடைய அறிவால் சீரழிந்துவிடுகிறான்; இவனும் உங்களுடைய சகோதரன்தானே, இவனுக்காகவும் கிறிஸ்து இறந்தாரே.+ 12 இப்படி, உங்களுடைய சகோதரர்களுக்கு எதிராக நீங்கள் பாவம் செய்து அவர்களுடைய பலவீனமான மனசாட்சிக்குப் பாதிப்புண்டாக்கும்போது,+ கிறிஸ்துவுக்கு எதிராகவே பாவம் செய்கிறீர்கள். 13 அதனால், நான் சாப்பிடுகிற இறைச்சி என் சகோதரனுடைய விசுவாசத்துக்குத் தடைக்கல்லாக இருந்தால், நான் அவனுக்குத் தடைக்கல்லாகிவிடாதபடி இனிமேல் அதைச் சாப்பிடவே மாட்டேன்.+