உண்மையான வெற்றிக்கு ஆறு வழிகள்
மிகச் சிறந்த வாழ்க்கை முறையே உண்மையான வெற்றிக்கு அடையாளம். இந்த வாழ்க்கை முறையை அடைய கடவுளுடைய நெறிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம். இதுவே மனிதர்களுக்காக கடவுள் வைத்திருக்கும் நோக்கம். அவருடைய நெறிமுறைகளைப் பின்பற்றி வாழ்பவர், ‘நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்; பருவ காலத்தில் கனிதந்து என்றும் பசுமையாயிருக்கும் அம்மரத்துக்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார்’ என்று பைபிள் சொல்கிறது.—சங்கீதம் 1:3, பொது மொழிபெயர்ப்பு.
நாம் குறைபாடுள்ளவர்களாக, தவறு செய்கிறவர்களாக இருந்தாலும், மொத்தத்தில் நம் வாழ்வில் சிறக்க முடியும்! நம்பிக்கையூட்டும் இந்த வார்த்தைகள் உங்கள் நெஞ்சை குளிர்விக்கின்றனவா? அப்படியானால், வாழ்வில் சிறக்க இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆறு பைபிள் நியதிகளைக் கடைப்பிடியுங்கள். அப்போது, பைபிளின் போதனைகள் அனைத்தும் கடவுளுடைய ஞானமான அறிவுரைகள் என்பதை நீங்களே கண்டுகொள்வீர்கள்.—யாக்கோபு 3:17.
1 பணத்தை பூஜிக்காதீர்கள்
“பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, . . . அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்.” (1 தீமோத்தேயு 6:10) பணம் வைத்திருப்பதில் எந்தத் தவறுமில்லை; நம்மையும் நம்முடைய குடும்பத்தையும் பராமரிக்க பணம் தேவைதான். ஆனால், அதன்மீது அளவுக்குமீறி ஆசை வைப்பதே தவறு. சொல்லப்போனால், அப்படிப்பட்ட ஆசையுடைய ஒருவருக்கு அந்தப் பணமே கடவுளாகிவிடுகிறது.
முதல் கட்டுரையில் பார்த்தபடி, வாழ்வில் வெற்றிபெற பணமே முக்கியமென நினைத்து அதன் பின்னாலேயே அலையும் ஒருவர் கானல் நீரை தேடியலைபவரைப் போல்தான் இருக்கிறார். இதனால் ஏமாற்றத்தை மட்டுமல்ல, அநேக வேதனைகளையும் தேடிக்கொள்கிறார். உதாரணமாக, செல்வத்தையே ஆவலாய் நாடும்போது, பெரும்பாலும் குடும்ப உறவுகளையும் நண்பர்களையும் மக்கள் பறிகொடுத்துவிடுகிறார்கள். வேறு சிலரோ வேலையினால் இல்லாவிட்டாலும் கவலையினால் தூக்கத்தைத் தொலைத்துவிடுகிறார்கள். “வேலை செய்கிறவன் கொஞ்சமாய்ப் புசித்தாலும் அதிகமாய்ப் புசித்தாலும் அவன் நித்திரை இன்பமாயிருக்கும்; செல்வனுடைய பெருக்கோ அவனைத் தூங்கவொட்டாது” என்று பிரசங்கி 5:12 சொல்கிறது.
பணம் கொடூரமான ஓர் எஜமான் மட்டுமல்ல, வஞ்சகன்கூட. ‘செல்வம் வஞ்சிக்கும் சக்தி படைத்தது’ என இயேசு கிறிஸ்துவும் கூறினார். (மாற்கு 4:19, NW) வேறு வார்த்தைகளில் சொன்னால், பணம் சந்தோஷத்தைக் கொடுப்பதாக வாக்குறுதி அளிக்கும், ஆனால் அதை நிறைவேற்றாது. “இன்னும் நிறைய வேண்டுமென்ற” ஆசையைத்தான் உண்டாக்கும். “பண ஆசை உள்ளவருக்கு எவ்வளவு பணம் இருந்தாலும் ஆவல் தீராது” என பிரசங்கி [சபை உரையாளர்] 5:10 கூறுகிறது.—பொ.மொ.
சுருங்கச் சொன்னால், பண ஆசை நம்மைச் சீரழித்து, நமக்கு ஏமாற்றத்தையும் விரக்தியையும்தான் அளிக்கிறது; ஏன், வன்முறையில் இறங்கவும் நம்மை இழுத்துச் சென்றுவிடுகிறதே. (நீதிமொழிகள் 28:20) அப்படியானால், சந்தோஷத்தையும் வெற்றியையும் பெற சுலபமான வழி தாராள குணம், மன்னிக்கும் பண்பு, ஒழுக்க சுத்தம், அன்பு போன்ற பண்புகளையும் ஆன்மீக உணர்வையும் வளர்த்துக்கொள்வதே.
2 தாராள குணத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்
“பெற்றுக்கொள்வதைவிடக் கொடுப்பதிலேயே அதிக சந்தோஷம் இருக்கிறது.” (அப்போஸ்தலர் 20:35, NW) நாம் யாருக்காவது அன்பளிப்பு கொடுக்கும்போது அந்நேரம் சந்தோஷப்படுவோம், ஆனால் தாராள குணத்தை வளர்த்துக்கொண்டால் எந்நேரமும் மகிழ்ச்சியான மனநிலையோடு இருப்போம். இந்தக் குணத்தைக் காட்டுவதற்குப் பல வழிகள் இருக்கின்றன. அவற்றில் மிகச் சிறந்த ஒரு வழி, அனைவரும் விரும்பும் ஒரு வழி, நம்மையே மற்றவர்களுக்காக அர்ப்பணிப்பதாகும்.
சுயநலமின்மை, சந்தோஷம், ஆரோக்கியம் ஆகியவற்றைக் குறித்து ஆராய்ச்சியாளரான ஸ்டீஃபன் ஜி. போஸ்ட் நடத்திய ஆய்வின் முடிவு: சுயநலமின்மையும் மற்றவர்களுக்கு உதவும் பண்பும் ஒருவருடைய ஆயுசை கூட்டும், வாழ்க்கையில் திருப்தி சேர்க்கும், உடல் ரீதியிலும் மனோ ரீதியிலும் நல்ஆரோக்கியத்தை அளிக்கும், அதோடு மனச்சோர்வையும் குறைக்கும்.
மேலும், தங்களிடம் உள்ளதை தாராளமாய்க் கொடுப்பவர்களுக்கு எந்த நஷ்டமும் ஏற்படாது. நீதிமொழிகள் 11:25 இவ்வாறு சொல்கிறது: “உதார குணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்.” ஆம், எதையும் எதிர்பார்க்காமல் முழு மனதோடு தாராளமாய் கொடுப்பவர்களைக் கடவுள் மெச்சுகிறார், நேசிக்கிறார்.—எபிரெயர் 13:16.
3 தாராளமாய் மன்னியுங்கள்
“ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் [தாராளமாய்] மன்னியுங்கள்.” (கொலோசெயர் 3:13) இப்போதெல்லாம் மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விட்டது; இரக்கம் காட்டுவதற்குப் பதிலாக, பழிக்குப் பழி வாங்குவதே பண்பாடாகிவிட்டது. விளைவு? அவமானத்துக்கு அவமானம், வன்முறைக்கு வன்முறை.
அத்துடன் நின்றுவிடுவதில்லை. கனடாவிலுள்ள மான்ட்ரீல் நகரில் த கஸட் பத்திரிகையில் வெளிவந்த அறிக்கை இவ்வாறு குறிப்பிட்டது; 18-30 வயதுடையவர்களில், 4,600-க்கும் அதிகமானோரை வைத்து நடத்தப்பட்ட ஆய்வின்படி, “ஒருவருக்கு எந்தளவு பகைமையும் மனக்கசப்பும் குரோதமும் இருந்ததோ” அந்தளவு அவருடைய நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்தது. சொல்லப்போனால், அவற்றின் பாதிப்புகள் புகைப்பிடிப்பவர்களுக்கு உண்டாகும் பாதிப்புகளைவிட படுபயங்கரமாய் இருந்தன! மன்னிக்கும் குணம் மனித உறவுகளை இணைக்கும் பசை மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கு அருமருந்தாகவும் இருக்கிறது.
மன்னிக்கும் குணம் படைத்தவர்களாய் மாற என்ன செய்யலாம்? முதலாவதாக, உங்களையே நேர்மையுடன் சுயபரிசோதனை செய்யுங்கள். சிலசமயங்களில் நீங்களும்கூட மற்றவர்களுக்கு எரிச்சல் உண்டாக்குகிறீர்கள்தானே? அவர்கள் உங்களை மன்னிக்க வேண்டுமென எதிர்பார்ப்பதில்லையா? அப்படியே மற்றவர்களையும் நீங்கள் ஏன் தாராளமாய் மன்னிக்கக்கூடாது? (மத்தேயு 18:21–35) இந்த விஷயத்தில் நீங்கள் சுயக்கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்வது அவசியம். “ஒன்றுமுதல் பத்துவரை எண்ணுங்கள்” அல்லது வேறு ஏதாவது விதத்தில் உங்களை ஆசுவாசப்படுத்துங்கள். சுயக்கட்டுப்பாட்டை பலவீனமாக அல்ல, பலமாகக் கருதுங்கள். “பலவானைப் பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்” என்று நீதிமொழிகள் 16:32 சொல்கிறது. “பலவானைப் பார்க்கிலும் . . . உத்தமன்” என்று சொல்லப்பட்டிருப்பதே உங்களுக்கு வெற்றிதானே?
4 கடவுளுடைய நெறிமுறைகளைப் பின்பற்றுங்கள்
‘கர்த்தருடைய கற்பனை தூய்மையானது, கண்களைத் தெளிவாக்குகிறது.’ (சங்கீதம் 19:8) இன்னும் எளிமையாகச் சொன்னால், கடவுளுடைய நெறிமுறைகள் உடல் ரீதியிலும், உள ரீதியிலும், உணர்ச்சி ரீதியிலும் நமக்கு நன்மை அளிக்கின்றன. இந்த நெறிமுறைகள், போதைப்பொருள் துஷ்பிரயோகம், குடிவெறி, ஒழுக்கங்கெட்ட நடத்தை, ஆபாசக் காட்சிகளைப் பார்ப்பது போன்ற தீய பழக்கங்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன. (2 கொரிந்தியர் 7:1; கொலோசெயர் 3:5) இதுபோன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையானால், குற்றச்செயல், வறுமை, அவநம்பிக்கை, குடும்பப் பிளவு, மனோ ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் பிரச்சினைகள், வியாதிகள், அகால மரணம் போன்ற வடிவில் பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
கடவுளுடைய நெறிமுறைகளைப் பின்பற்றுகிறவர்களோ மற்றவர்களோடு நல்ல உறவை வளர்த்துக்கொள்கிறார்கள்; அதோடு, சுயமரியாதையையும் மனநிம்மதியையும் அனுபவிக்கிறார்கள். ‘பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிறவர் நானே’ என்று ஏசாயா 48:17, 18-ல் கடவுள் சொல்கிறார். ‘ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும். அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்’ என்றும் கூறுகிறார். ஆம், வாழ்க்கையில் நாம் செழித்தோங்க வேண்டுமென்றே—உண்மையான வெற்றிக்கு வழிகாட்டும் பாதையில் நாம் ‘நடக்க வேண்டுமென்றே’—நம் படைப்பாளர் விரும்புகிறார்.
5 சுயநலமற்ற அன்பைக் காட்டுங்கள்
“அன்பு உறவை வளர்க்கும்.” (1 கொரிந்தியர் 8:1, பொ.மொ.) அன்பில்லாத வாழ்க்கை எப்படி இருக்குமென உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? அப்படிப்பட்ட வாழ்க்கை சூனியமாகத்தான் இருக்கும். அதில் மகிழ்ச்சியே இருக்காது. கிறிஸ்தவரான அப்போஸ்தலன் பவுல், “[மற்றவர்கள் மீது] அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை. . . . எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை” என்று கடவுளுடைய சக்தியினால் தூண்டப்பட்டு எழுதினார்.—1 கொரிந்தியர் 13:2, 3.
பவுல் குறிப்பிடும் அன்பு, காம உணர்ச்சியைத் தூண்டும் அன்பல்ல; வாழ்க்கையில் அதற்கும் ஓர் இடமுண்டு என்றாலும் அதைவிட ஆழ்ந்த அர்த்தமுடைய அன்பைப் பற்றியே, நிலையான அன்பைப் பற்றியே அவர் இங்கு குறிப்பிடுகிறார். அது கடவுளுடைய நெறிமுறைகளை அடிப்படையாய்க் கொண்டது.a (மத்தேயு 22:37–39) இந்த அன்பு, மற்றவர்கள் நம்மிடம் அன்பு காட்ட வேண்டுமென எதிர்பார்த்துக்கொண்டு பேசாமல் இருந்துவிடாது; மாறாக, மற்றவர்களிடம் அன்புகாட்ட நம்மைத் தூண்டும். இந்த அன்பு பொறுமையுள்ளது, இரக்கமுள்ளது என்றும் பவுல் சொல்கிறார். அது பொறாமை கொள்ளாது, பெருமை பேசாது. சுயநலம் பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவ நம்மை உந்துவிக்கும். எடுத்ததெற்கெல்லாம் கோபப்படாது, மாறாக மன்னிக்கும் பண்புடையது. இப்படிப்பட்ட அன்பு உறவை வளர்க்கிறது. அதோடு, மற்றவர்களுடன், முக்கியமாக நம் குடும்ப அங்கத்தினர்களுடன், நல்ல உறவை வளர்த்துக்கொள்ள உதவுகிறது.—1 கொரிந்தியர் 13:4–8.
பெற்றோரைப் பொறுத்தவரை, அன்பு என்பது பிள்ளைகள்மீது பாசத்தையும் நேசத்தையும் பொழிவதாகும்; அதோடு, அவர்களை ஒழுக்கமாய் வளர்ப்பதற்கு பைபிளிலிருந்து தெள்ளத்தெளிவான அறிவுரைகளையும் பிற புத்திமதிகளையும் புகட்டுவதாகும். இப்படிப்பட்ட சூழலில் வளர்க்கப்படும் பிள்ளைகள் பாதுகாப்பாக உணர்வார்கள். குடும்பத்தில் ஒற்றுமையை அனுபவிப்பார்கள், உண்மையான அன்பையும், பாராட்டையும் பெற்று தழைத்தோங்குவார்கள்.—எபேசியர் 5:33–6:4; கொலோசெயர் 3:20.
அமெரிக்காவைச் சேர்ந்த ஜாக் என்ற இளைஞர், பைபிள் நியதிகளைக் கடைப்பிடித்துவந்த குடும்பத்தில் வளர்ந்துவந்தார். அவர் வளர்ந்தபின் தனியாகச் சென்று வாழ ஆரம்பித்தபோது தன் பெற்றோருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: “‘உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு . . . உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக’ என்ற [பைபிள்] கட்டளையைப் பின்பற்ற எப்போதும் முயற்சி செய்திருக்கிறேன். (உபாகமம் 5:16) இப்போது என் வாழ்க்கை நல்லபடியாக போய்க்கொண்டிருக்கிறது. அதற்கு நீங்கள்தான் காரணம். நீங்கள் அன்பும் அக்கறையும் காட்டி என்னை வளர்த்ததால்தான் நான் இப்போது சந்தோஷமாக இருக்கிறேன். எப்போதையும்விட இப்போது நான் அதை நன்கு உணருகிறேன். என்னை வளர்த்து ஆளாக்குவதற்கு நீங்கள் எடுத்த எல்லா பிரயாசத்திற்கும் உங்களுக்கு மிக்க நன்றி.” நீங்கள் ஒரு பெற்றோராக இருந்து, இப்படிப்பட்ட ஒரு கடிதம் உங்களுக்கு வந்தால் எப்படி உணருவீர்கள்? சந்தோஷத்தால் உங்களுடைய இருதயம் பூரித்துப்போகும், அல்லவா?
நியதியின் அடிப்படையிலான அன்பு, “சத்தியத்தில் சந்தோஷப்படும்,” அதாவது பைபிளில் காணப்படுகிற ஆன்மீகச் சத்தியத்தில் சந்தோஷப்படும். (1 கொரிந்தியர் 13:6; யோவான் 17:17) உதாரணமாக, குடும்ப பிரச்சினைகளுடன் போராடிக்கொண்டிருந்த ஒரு தம்பதியினர், “[மணவாழ்வில்] தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்” என்று மாற்கு 10:9-ல் இயேசு சொன்ன வார்த்தைகளை வாசிக்கிறார்கள். இப்போது தங்களுடைய இருதயத்தை அவர்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும். உண்மையிலேயே அவர்கள் ‘பைபிள் சத்தியத்தில் சந்தோஷப்படுகிறார்களா’? திருமணத்தைக் கடவுள் நினைப்பது போல் பரிசுத்தமாக மதித்து, நடப்பார்களா? தங்கள் பிரச்சினையைத் அன்பினால் தீர்ப்பதற்கு மனமுள்ளவர்களாய் இருக்கிறார்களா? அப்படியானால், அவர்கள் மணவாழ்வில் வெற்றிகாண முடியும், மிகுந்த சந்தோஷத்தையும் அறுவடை செய்ய முடியும்.
6 ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருங்கள்
“ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்.” (மத்தேயு 5:3, NW) மனிதர்களால் மட்டுமே ஆன்மீகக் காரியங்களை மதித்து போற்ற முடியும். விலங்குகளுக்கு அந்த உணர்வு இல்லை. அதனால்தான், ‘வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் இருக்கிறதா? படைப்பாளர் ஒருவர் இருக்கிறாரா? நாம் சாகும்போது நமக்கு என்ன நடக்கிறது? நமக்கு என்ன எதிர்காலம் இருக்கிறது?’ போன்ற கேள்விகளை நாம் கேட்கிறோம்.
இந்தக் கேள்விகளுக்கு பைபிள் பதிலளிக்கிறது என்பதை உலகெங்கிலும் வாழும் நல்மனம் படைத்த லட்சோபலட்சம் மக்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். நமக்கு என்ன எதிர்காலம் இருக்கிறது? என்ற கடைசி கேள்வி, மனிதர்களுக்காக கடவுள் வைத்திருக்கும் நோக்கத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. அந்த நோக்கம் என்ன? கடவுளையும் அவருடைய நெறிமுறைகளையும் நேசிக்கும் மக்கள் பூங்காவனமாக மாறப்போகும் இந்தப் பூமியில் என்றென்றும் வாழ வேண்டுமென்பதே அந்த நோக்கம். “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்” என்று சங்கீதம் 37:29 சொல்கிறது.
வெறுமனே 70 அல்லது 80 வருட வாழ்க்கையில் நாம் தற்காலிக வெற்றி பெறவேண்டுமென நம் படைப்பாளர் விரும்புவதில்லை. அதைவிட சிறந்த வாழ்க்கையை நமக்கு அளிக்க வேண்டுமென்றே விரும்புகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆம், நாம் என்றென்றும் வெற்றிபெற வேண்டுமென விரும்புகிறார்! எனவே, படைப்பாளரைப் பற்றி நீங்கள் கற்றுக்கொள்வதற்கு இதுவே தருணம். “ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்” என்று இயேசு சொன்னார். (யோவான் 17:3) இப்படிப்பட்ட அறிவைப் பெற்று அதை உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்தால், “[யெகோவாவின்] ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்” என்பதை நீங்களே கண்கூடாகக் காண்பீர்கள்.—நீதிமொழிகள் 10:22. (g 11/08)
[அடிக்குறிப்பு]
a கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில், அதாவது “புதிய ஏற்பாட்டில்,” பெரும்பாலான வசனங்களில் “அன்பு” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் வார்த்தைக்குரிய கிரேக்க வார்த்தை அகாப்பே. இது தார்மீக அன்பு; முன்பின் தெரியாதவர்களாய் இருந்தாலும், நீதி, கடமை, நியதி ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களிடமும் அன்பு காட்டுவதைக் குறிக்கிறது. என்றாலும், அகாப்பே அன்பு இயந்தரத்தனமான அன்பல்ல; உணர்வுள்ளது, ஆழமானது.—1 பேதுரு 1:22.
[பக்கம் 7-ன் பெட்டி]
வெற்றிக் கனியைப் பறிக்க இன்னும் சில வழிகள்
◼ கடவுளிடம் பயபக்தியாய் இருங்கள். “[யெகோவாவுக்கு] பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்.”—நீதிமொழிகள் 9:10.
◼ நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுங்கள். “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.”—நீதிமொழிகள் 13:20.
◼ மிதமிஞ்சி உட்கொள்ளாதீர்கள். ‘குடிகாரரும் பெருந்தீனிக்காரரும் ஏழைகளாவர்.’—நீதிமொழிகள் 23:21, பொ.மொ.
◼ பழிக்குப் பழி வாங்காதீர்கள். “ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்.”—ரோமர் 12:17.
◼ கடினமாய் உழையுங்கள். ‘ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாது.’—2 தெசலோனிக்கேயர் 3:10.
◼ பொன் விதியைப் பின்பற்றுங்கள். “மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.” —மத்தேயு 7:12.
◼ நாவைக் கட்டுப்படுத்துங்கள். “வாழ்க்கையை அனுபவித்து மகிழவும், சந்தோஷமான நாட்களைக் காணவும் விரும்புகிற ஒருவன் கெட்ட விஷயங்களைப் பேசாதபடி தன் நாவை . . . கட்டுப்படுத்த வேண்டும்.” —1 பேதுரு 3:10, NW.
[பக்கம் 8-ன் பெட்டி/படம்]
அன்பு ஓர் அருமருந்து
மருத்துவரும் எழுத்தாளருமான டீன் ஆர்னிஷ் இவ்வாறு எழுதினார்: “அன்பும் நெருக்கமும் நம்மை நோய்வாய்ப்படவும் செய்யும் குணமடையவும் செய்யும்; நம்மைச் சோகக் கடலில் மூழ்கடிக்கவும் செய்யும், இன்ப மழையில் நனையவும் செய்யும்; நம்மை நோகடித்து நொறுக்கவும் செய்யும், நம்மைத் தூக்கி நிறுத்தவும் செய்யும். இதே தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் எல்லா மருத்துவர்களும் நோயாளிகளுக்கு அதையே சிபாரிசு செய்வார்கள். இத்தகைய மருந்தைக் கொடுக்காமல் இருப்பது பெரிய குற்றமாகவே கருதப்படும்.”
[பக்கம் 9-ன் பெட்டி/படம்]
விரக்தியில் வாடியவர் இப்போது வெற்றி பாதையில்
மிலன்கோ தனது தாய்நாடான பால்கனில் போர் மூண்டபோது இராணுவத்தில் சேர்ந்துகொண்டார். அவருடைய வீரதீரத்தைப் பார்த்தவர்கள், ஆக்ஷன் பட ஹீரோவான ராம்போவின் பெயரை அவருக்குச் சூட்டினார்கள். நாட்கள் நகர நகர, இராணுவத்தில் நடந்த ஊழலையும் பித்தலாட்டத்தையும் கண்டு அவர் மனமொடிந்து போனார். “அதனால், மது, மாது, சிகரெட், போதைப்பொருள், சூதாட்டம் என்று எல்லாக் கெட்டப் பழக்கங்களும் என்னுடன் சேர்ந்துகொண்டன. நான் அதலபாதாளத்திற்குள் போவதை உணர்ந்தேன், ஆனால் அதிலிருந்து வெளியேற எனக்கு வழி தெரியவில்லை” என்று அவரே எழுதுகிறார்.
வாழ்க்கையில் இப்படிப்பட்ட இக்கட்டான தருணத்தில் பைபிளை வாசிக்க ஆரம்பித்தார், மிலன்கோ. பின்பு, தூரத்து உறவினர் ஒருவருடைய வீட்டுக்கு அவர் சென்றிருந்தபோது, அங்கு காவற்கோபுர பத்திரிகையை (யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது) பார்த்தார். அதில் படித்த விஷயங்கள் அவருக்குப் பிடித்துவிட்டன. சீக்கிரத்தில், சாட்சிகளுடன் பைபிளைப் படிக்க ஆரம்பித்தார். பைபிளிலுள்ள சத்தியம் அவருடைய வாழ்வில் விளக்கேற்றி, உண்மையான வெற்றி பாதையைக் காணச் செய்தது. “அது எனக்கு புதுத் தெம்பளித்தது, என்னுடைய எல்லா கெட்ட பழக்கங்களையும் விட்டுவிட்டேன். நான் ஒரு புது ஆளாக மாறிவிட்டேன், இப்போது யெகோவாவின் சாட்சிகளில் ஒருவனாக ஞானஸ்நானம் பெற்றிருக்கிறேன். நான் சாந்தமாக மாறிவிட்டதைப் பார்த்து ராம்போ என்று கூப்பிடாமல் எல்லாரும் என்னை ‘பண்ணி’ (Bunny) என்று கூப்பிடுகிறார்கள்—சின்ன வயதில் இப்படித்தான் என்னை செல்லமாகக் கூப்பிடுவார்கள்” என்று அவர் சொல்கிறார்.