யோசுவா
20 பின்பு யெகோவா யோசுவாவிடம், 2 “நீ இஸ்ரவேலர்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘மோசே மூலம் நான் உங்களுக்குச் சொன்னபடி, அடைக்கல நகரங்களைத்+ தேர்ந்தெடுங்கள். 3 அப்போதுதான், யாரையாவது தெரியாத்தனமாகவோ எதேச்சையாகவோ கொலை செய்தவன் இந்த நகரங்களுக்கு ஓடிப்போக முடியும். பழிவாங்குபவனால்+ கொல்லப்படாதபடி அங்கே போய் அவன் அடைக்கலம் பெற முடியும். 4 இந்த நகரங்களில் ஒன்றுக்கு அவன் ஓடிப்போய்+ அதன் வாசலில்+ நிற்க வேண்டும். பின்பு, அந்த நகரத்தின் பெரியோர்களிடம்* தன்னுடைய வழக்கைச் சொல்ல வேண்டும். அவர்கள் அவனை நகரத்துக்குள் கூட்டிக்கொண்டுபோய், தங்களோடு குடியிருப்பதற்கு இடம் தர வேண்டும். 5 பழிவாங்குபவன் துரத்திக்கொண்டு வந்தால், கொலையாளியை அவன் கையில் அவர்கள் ஒப்படைக்கக் கூடாது. ஏனென்றால், அவன் முன்விரோதம் எதுவும் இல்லாமல் தெரியாத்தனமாகக் கொலை செய்துவிட்டான்.+ 6 ஜனங்களின் பிரதிநிதிகளால் விசாரிக்கப்படும்வரை அவன் அந்த நகரத்திலேயே தங்கியிருக்க வேண்டும்.+ அவன் குற்றவாளி இல்லை என்று நிரூபிக்கப்பட்டால், தலைமைக் குரு சாகும்வரை அவன் அங்கேயே குடியிருக்க வேண்டும்.+ அதன்பின், எந்த நகரத்திலிருந்து ஓடி வந்தானோ அந்த நகரத்திலுள்ள தன் வீட்டுக்கே அவன் திரும்பிப் போகலாம்’”+ என்று சொன்னார்.
7 அவர் சொன்னபடியே அவர்கள் செய்தார்கள். நப்தலி மலைப்பகுதியில் உள்ள கலிலேயாவைச் சேர்ந்த கேதேஸ்,+ எப்பிராயீம் மலைப்பகுதியில் உள்ள சீகேம்,+ யூதா மலைப்பகுதியில் உள்ள கீரியாத்-அர்பா,+ அதாவது எப்ரோன், ஆகிய நகரங்களைத் தனியாக* பிரித்து வைத்தார்கள். 8 எரிகோவுக்குக் கிழக்கிலே, ரூபன் கோத்திரத்துக்குச் சொந்தமான பீடபூமியின் வனாந்தரத்திலுள்ள பேசர்,+ காத் கோத்திரத்துக்குச் சொந்தமான கீலேயாத்திலுள்ள ராமோத்,+ மனாசே கோத்திரத்துக்குச் சொந்தமான பாசானிலுள்ள கோலான்+ ஆகிய நகரங்களை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்.+
9 அந்த நகரங்கள் அடைக்கல நகரங்களாகப் பிரித்து வைக்கப்பட்டன. தெரியாத்தனமாகக் கொலை செய்துவிடுகிற இஸ்ரவேலனோ இஸ்ரவேலில் குடியிருக்கிற வேறு தேசத்துக்காரனோ தப்பியோடுவதற்காகவும்,+ ஜனங்களின் பிரதிநிதிகளால் விசாரிக்கப்படுவதற்கு முன்பே பழிவாங்குபவனால் கொல்லப்படாமல் இருப்பதற்காகவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.+