எண்ணாகமம்
27 யோசேப்பின் மகன் மனாசே, மனாசேயின் மகன் மாகீர், மாகீரின் மகன் கீலேயாத், கீலேயாத்தின் மகன் ஹேப்பேர், ஹேப்பேரின் மகன் செலோப்பியாத்.+ செலோப்பியாத்தின் மகள்களுடைய பெயர்கள் மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள். 2 இந்தப் பெண்கள் சந்திப்புக் கூடாரத்தின் நுழைவாசலுக்கு வந்து, மோசேக்கும் குருவாகிய எலெயாசாருக்கும் தலைவர்களுக்கும்+ ஜனங்களுக்கும் முன்னால் நின்று, 3 “எங்களுடைய அப்பா வனாந்தரத்தில் செத்துப்போனார், ஆனால் யெகோவாவுக்கு அடங்கி நடக்காத கோராகுவின் கும்பலோடு+ சேர்ந்ததால் அவர் சாகவில்லை, தன்னுடைய பாவத்தினால்தான் செத்துப்போனார். அவருக்கு மகன்கள் யாரும் இல்லை. 4 எங்களுடைய அப்பாவுக்கு ஆண் வாரிசு இல்லை என்பதற்காக அவருடைய பெயர் ஏன் அவருடைய வம்சத்திலிருந்து மறைந்துபோக வேண்டும்? எங்கள் அப்பாவின் அண்ணன் தம்பிகளோடு எங்களுக்கும் சொத்தில் பங்கு கொடுங்கள்” என்றார்கள். 5 உடனே மோசே அவர்களுடைய வழக்கை யெகோவாவிடம் சொன்னார்.+
6 அப்போது யெகோவா மோசேயிடம், 7 “செலோப்பியாத்தின் மகள்கள் கேட்பது சரிதான். நீ அவர்களுடைய அப்பாவின் அண்ணன் தம்பிகளோடு அவர்களுக்கும் கண்டிப்பாகச் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும். அவர்களுடைய அப்பாவின் சொத்தை அவர்களுடைய பெயருக்கு மாற்றிக் கொடுக்க வேண்டும்.+ 8 இஸ்ரவேலர்களிடம் நீ சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘ஒருவன் ஆண் வாரிசு இல்லாமல் இறந்துபோனால், அவனுடைய பரம்பரைச் சொத்து அவனுடைய மகளுக்குப் போய்ச் சேர வேண்டும். 9 அவனுக்கு மகளும் இல்லாவிட்டால், அவனுடைய பரம்பரைச் சொத்தை அவனுடைய சகோதரர்களுக்குக் கொடுத்துவிட வேண்டும். 10 அவனுக்குச் சகோதரர்களும் இல்லாவிட்டால், அவனுடைய அப்பாவின் சகோதரர்களுக்கு அந்தச் சொத்தைக் கொடுக்க வேண்டும். 11 அவன் அப்பாவுக்கும் சகோதரர்கள் இல்லாவிட்டால், அவனுடைய மிக நெருங்கிய இரத்த சொந்தத்துக்கு அந்தச் சொத்தைக் கொடுக்க வேண்டும். அது அவருக்குச் சொந்தமாகிவிடும். மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்தபடி, இந்தத் தீர்மானம்* இஸ்ரவேலர்களுக்கு ஒரு சட்டமாக இருக்கும்’” என்றார்.
12 பின்பு யெகோவா மோசேயிடம், “அபாரீம் மலைக்கு+ ஏறிப்போய், இஸ்ரவேலர்களுக்கு நான் கொடுக்கப்போகும் தேசத்தை அங்கிருந்து பார்.+ 13 அதை நீ பார்த்த பிறகு, உன் அண்ணன் ஆரோன் இறந்ததுபோல்+ நீயும் இறந்துபோவாய்.*+ 14 ஏனென்றால், சீன் வனாந்தரத்தில் ஜனங்கள் என்னிடம் வாக்குவாதம் செய்தபோது, அவர்களுக்குத் தண்ணீர் கொடுத்த விஷயத்தில் நீங்கள் இரண்டு பேரும் என்னை மகிமைப்படுத்தாமல், என் கட்டளையை மீறி நடந்தீர்கள்.+ அந்தத் தண்ணீர்தான் சீன் வனாந்தரத்தில்+ காதேசுக்குப்+ பக்கத்திலுள்ள மேரிபாவின் தண்ணீர்”+ என்றார்.
15 அப்போது மோசே யெகோவாவிடம், 16 “யெகோவாவே, எல்லா ஜனங்களுக்கும் உயிர் கொடுக்கிற கடவுளே, இந்த ஜனங்களுக்காக ஒரு தலைவனை நியமியுங்கள். 17 அவன் எல்லா விஷயங்களிலும் இவர்களுக்குத் தலைமை தாங்கி, இவர்களை வழிநடத்தட்டும். அப்போதுதான், யெகோவாவின் ஜனங்கள் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல இருக்க மாட்டார்கள்” என்றார். 18 அதனால் யெகோவா மோசேயிடம், “அதற்குத் தகுந்த குணமுள்ளவன் நூனின் மகனாகிய யோசுவாதான். அவனைக் கூப்பிட்டு, அவன்மேல் உன் கையை வை.+ 19 பின்பு, குருவாகிய எலெயாசாருக்கும் ஜனங்கள் எல்லாருக்கும் முன்பாக அவனை நிற்க வைத்து, அவர்களுடைய கண் முன்னால் அவனைத் தலைவனாக நியமி.+ 20 உனக்கு இருக்கிற அதிகாரத்தில் கொஞ்சத்தை அவனுக்குக் கொடு.+ அப்போதுதான், இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரும் அவன் பேச்சைக் கேட்பார்கள்.+ 21 யோசுவா குருவாகிய எலெயாசாருக்கு முன்னால் நிற்க வேண்டும். எலெயாசார் அவனுக்காக ஊரீம்+ மூலம் யெகோவாவிடம் விசாரித்துச் சொல்வான். பின்பு, தங்களுக்குக் கொடுக்கப்படும் கட்டளையை யோசுவாவும் இஸ்ரவேலர்கள் எல்லாரும் பின்பற்றுவார்கள்” என்றார்.
22 யெகோவா கட்டளை கொடுத்தபடியே மோசே செய்தார். அவர் யோசுவாவைக் கூப்பிட்டு, குருவாகிய எலெயாசாருக்கு முன்னாலும் எல்லா ஜனங்களுக்கு முன்னாலும் நிற்க வைத்தார். 23 பின்பு, அவர்மேல் கை வைத்து அவரை நியமித்தார்.+ யெகோவா சொன்னபடியே மோசே செய்தார்.+