உபாகமம்
15 பின்பு அவர், “ஒவ்வொரு ஏழாம் வருஷத்தின் முடிவிலும் நீங்கள் கடன்களை ரத்து செய்ய வேண்டும்.+ 2 அதைச் செய்ய வேண்டிய முறை இதுதான்: நீங்கள் இன்னொரு இஸ்ரவேலனுக்குக் கடன் கொடுத்திருந்தால் அந்தக் கடனை ரத்து செய்துவிட வேண்டும். அதைத் திருப்பிக் கொடுக்கச் சொல்லி வற்புறுத்தக் கூடாது. ஏனென்றால், யெகோவாவின் முன்னிலையில் கடனை ரத்து செய்ய வேண்டிய வருஷம் அது.+ 3 உங்கள் சகோதரன் உங்களிடம் என்ன கடன்பட்டிருந்தாலும் சரி, அந்தக் கடனை ரத்து செய்துவிட வேண்டும். ஆனால், வேறு தேசத்தைச் சேர்ந்தவனுக்கு நீங்கள் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்கலாம்.+ 4 உங்களுக்குள் யாரும் ஏழையாக இருக்கக் கூடாது. ஏனென்றால், உங்கள் கடவுளாகிய யெகோவா சொத்தாகக் கொடுக்கிற தேசத்தில் யெகோவா உங்களை நிச்சயம் ஆசீர்வதிப்பார்.+ 5 ஆனால், நான் இன்று உங்களுக்குக் கொடுக்கிற கட்டளைகளைக் கவனமாகக் கடைப்பிடித்து,+ உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்தால் மட்டும்தான், அவர் உங்களை ஆசீர்வதிப்பார். 6 உங்கள் கடவுளாகிய யெகோவா வாக்குறுதி தந்தபடியே, உங்களை ஆசீர்வதிப்பார். நீங்கள் எத்தனையோ தேசத்தாருக்குக் கடன் கொடுப்பீர்கள், ஆனால் நீங்கள் யாரிடமிருந்தும் கடன் வாங்க மாட்டீர்கள்.+ நீங்கள் எத்தனையோ தேசங்களை அடக்கி ஆளுவீர்கள், ஆனால் எந்தத் தேசமும் உங்களை அடக்கி ஆளாது.+
7 உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற தேசத்தில், உங்கள் சகோதரன் ஒருவன் ஏழையாகிவிட்டால் அவனிடம் கல்நெஞ்சத்தோடு நடந்துகொள்ளாதீர்கள். அந்த ஏழை சகோதரனிடம் கஞ்சத்தனம் காட்டாதீர்கள்.+ 8 அவனுக்குத் தாராளமாக அள்ளிக் கொடுங்கள்.+ கடனாக அவனுக்கு என்ன தேவைப்பட்டாலும் சரி, அதையெல்லாம் தயங்காமல் கொடுங்கள். 9 ‘ஏழாம் வருஷம் நெருங்கிவிட்டதே, கடனெல்லாம் ரத்தாகிவிடுமே!’+ என்ற கெட்ட எண்ணத்தோடு, உங்கள் ஏழை சகோதரனுக்கு ஒன்றும் கொடுக்காமல் இருந்துவிடாதீர்கள். அவன் உங்களைப் பற்றி யெகோவாவிடம் முறையிடுவான், அப்போது நீங்கள் குற்றமுள்ளவர்களாக இருப்பீர்கள்.+ 10 நீங்கள் அவனுக்குத் தாராளமாகக் கொடுக்க வேண்டும்,+ வேண்டாவெறுப்போடு கொடுக்கக் கூடாது. அப்போதுதான், உங்கள் கடவுளாகிய யெகோவா நீங்கள் செய்கிற எல்லாவற்றையும் ஆசீர்வதிப்பார்.+ 11 தேசத்தில் எப்போதும் ஏழைகள் இருக்கத்தான் செய்வார்கள்.+ அதனால்தான், ‘உங்கள் தேசத்திலுள்ள பாவப்பட்ட ஏழை சகோதரனுக்குத் தாராளமாக அள்ளிக் கொடுக்க வேண்டும்’+ என்று நான் கட்டளை கொடுக்கிறேன்.
12 ஒரு எபிரெய ஆணோ பெண்ணோ உங்களிடம் அடிமையாக விற்கப்பட்டு ஆறு வருஷங்கள் வேலை செய்திருந்தால், ஏழாம் வருஷத்தில் அவரை நீங்கள் விடுதலை செய்து அனுப்பிவிட வேண்டும்.+ 13 ஆனால், அப்படி அவரை அனுப்பும்போது, வெறுங்கையோடு அனுப்பக் கூடாது. 14 உங்கள் மந்தையிலிருந்தும் களத்துமேட்டிலிருந்தும் எண்ணெய்ச் செக்கிலிருந்தும் திராட்சரச ஆலையிலிருந்தும் அவருக்குத் தாராளமாகக் கொடுக்க வேண்டும். உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை எந்தளவு ஆசீர்வதித்திருக்கிறாரோ அந்தளவு நீங்கள் அவருக்குக் கொடுக்க வேண்டும். 15 நீங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்ததை ஞாபகத்தில் வையுங்கள். உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை அங்கிருந்து விடுவித்தார். அதனால்தான், இதைச் செய்யும்படி நான் இன்று உங்களுக்குக் கட்டளை கொடுக்கிறேன்.
16 ஆனால், உங்களிடம் வேலை செய்தபோது அந்த அடிமை சந்தோஷமாக இருந்ததால், உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் அவன் நேசிக்கலாம். அதனால், ‘நான் உங்களைவிட்டுப் போக மாட்டேன்!’+ என்று சொல்லலாம். 17 அப்படி அவன் சொன்னால், நீங்கள் அவனை ஒரு கதவின் பக்கத்தில் நிறுத்தி ஊசியால் அவன் காதைக் குத்த வேண்டும். அப்போது, வாழ்நாளெல்லாம் அவன் உங்களுக்கு அடிமையாக இருப்பான். உங்கள் அடிமைப் பெண்ணுக்கும் நீங்கள் அப்படியே செய்ய வேண்டும். 18 உங்கள் அடிமையை விடுதலை செய்து அனுப்புவதை நீங்கள் பெரிய நஷ்டமாக நினைக்கக் கூடாது. ஏனென்றால் ஆறு வருஷங்களாக, ஒரு கூலியாள் செய்யும் வேலையைவிட இரண்டு மடங்கு அதிகமாக அவன் உங்களுக்கு வேலை செய்திருக்கிறான். அதோடு, எல்லா வேலைகளிலும் உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை ஆசீர்வதித்திருக்கிறார்.
19 ஆடுமாடுகளின் முதல் ஆண் குட்டிகளை உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு அர்ப்பணித்துவிட வேண்டும்.+ முதலில் பிறந்த காளையை வைத்து வேலை வாங்கக் கூடாது, ஆடுகளின் முதல் குட்டிக்கு மயிர் கத்தரிக்கக் கூடாது. 20 உங்கள் கடவுளாகிய யெகோவா தேர்ந்தெடுக்கிற இடத்தில் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் யெகோவாவின் முன்னிலையில் வருஷா வருஷம் அவற்றின் இறைச்சியைச் சாப்பிட வேண்டும்.+ 21 ஆனால் அவை முடமாகவோ, குருடாகவோ, அல்லது வேறெதாவது பெரிய குறை உள்ளதாகவோ இருந்தால், உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு அவற்றைப் பலி கொடுக்கக் கூடாது.+ 22 உங்கள் நகரங்களுக்கு உள்ளே அவற்றை வெட்டிச் சாப்பிடலாம். தீட்டுள்ளவரும் சரி, தீட்டில்லாதவரும் சரி, மான் இறைச்சியைச் சாப்பிடுவதுபோல்* அவற்றையும் சாப்பிடலாம்.+ 23 ஆனால், அவற்றின் இரத்தத்தை மட்டும் சாப்பிடக் கூடாது.+ தண்ணீரைப் போல அதைத் தரையில் ஊற்றிவிட வேண்டும்”+ என்றார்.