யெகோவாவின் ஆசீர்வாதத்தை ஊக்கமாக நாடுங்கள்
“[கடவுள் தம்மை] ஊக்கமாக நாடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறார்.”—எபி. 11:6.
1, 2. (அ) கடவுளுடைய ஆசீர்வாதத்தை அநேகர் எப்படி நாடுகிறார்கள்? (ஆ) யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெற நாம் ஏன் முக்கியமாய் ஆர்வம் காட்ட வேண்டும்?
பணம், பங்களா, கார் எல்லாம் கடவுள் தரும் ஆசீர்வாதங்கள் என அநேகர் நம்புகிறார்கள். அநேக மதத் தலைவர்கள் மக்களையும் மிருகங்களையும் பொருட்களையும் ஆசீர்வதிப்பதைப் பார்த்திருப்பீர்கள். சுற்றுலாப் பயணிகள், ஆசீர்வாதம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சில புனித ஸ்தலங்களுக்குப் போக ஆசைப்படுகிறார்கள். அரசியல்வாதிகள் தங்களுடைய தேசத்தின்மீது கடவுளுடைய ஆசீர்வாதத்திற்காக ஓயாமல் வேண்டுகிறார்கள். இப்படிப்பட்ட வேண்டுதல்கள் எல்லாம் சரியானது என நினைக்கிறீர்களா? அவை பலன் தருமா? உண்மையில், கடவுளுடைய ஆசீர்வாதத்தைப் பெறுபவர்கள் யார், ஏன்?
2 கடைசி நாட்களில் எல்லாத் தேசத்தையும் சேர்ந்த சுத்தமும் சமாதானமுமான ஜனங்கள் தம்மிடம் வருவார்கள் என்று யெகோவா முன்னுரைத்தார்; அவர்கள் பகை மற்றும் எதிர்ப்பின் மத்தியிலும் தம்முடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியைப் பூமியெங்கும் பிரசங்கிப்பார்கள் என்றும் முன்னுரைத்தார். (ஏசா. 2:2-4; மத். 24:14; வெளி. 7:9, 14) இந்த ஜனங்களின் பாகமாக இருக்கும் பாக்கியத்தை ஏற்றுக்கொண்ட நாம் கடவுளுடைய ஆசீர்வாதத்தைப் பெற விரும்புகிறோம், அது நமக்குத் தேவையும்கூட. ஏனென்றால், அந்த ஆசீர்வாதமின்றி நம்மால் வெற்றிபெறவே முடியாது. (சங். 127:1, 2) ஆனால், கடவுளுடைய ஆசீர்வாதத்தை நாம் எவ்வாறு பெற முடியும்?
கீழ்ப்படிவோர்மீது ஆசீர்வாதங்கள் நிலைக்கும்
3. இஸ்ரவேலர் கீழ்ப்படிந்திருந்தால் அவர்கள் என்ன பலனைப் பெற்றிருப்பார்கள்?
3 நீதிமொழிகள் 10:6, 7-ஐ வாசியுங்கள். இஸ்ரவேலர் தமக்குக் கீழ்ப்படிந்தால் இதுவரை பெற்றிராத செழுமையையும் பாதுகாப்பையும் அனுபவிப்பார்கள் என வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் அவர்கள் நுழைவதற்குச் சற்றுமுன் யெகோவா சொன்னார். (உபா. 28:1, 2) தம்முடைய மக்கள்மீது யெகோவாவின் ஆசீர்வாதங்கள் வருவது மட்டுமல்லாமல் அவர்கள்மீது “பலிக்கும்,” அதாவது நிலைக்கும். கீழ்ப்படிதலுள்ள அந்த மக்கள் ஆசீர்வாதங்களைப் பெறவிருந்தது உறுதி.
4. உண்மையான கீழ்ப்படிதல் எப்படிப்பட்டதாய் இருக்க வேண்டும்?
4 இஸ்ரவேலர் என்ன மனப்பான்மையுடன் கீழ்ப்படிதலைக் காட்ட வேண்டியிருந்தது? அவர்கள் “மனமகிழ்ச்சியோடும் களிப்போடும்” சேவிக்கவில்லை என்றால் அவர் எரிச்சலடைவார் எனத் திருச்சட்டம் குறிப்பிட்டது. (உபாகமம் 28:45-47-ஐ வாசியுங்கள்.) சில கட்டளைகளுக்கு விலங்குகள் அல்லது பேய்கள்கூட கட்டுப்பட்டு நடக்கின்றன. இப்படிக் கடமைக்காகக் கீழ்ப்படிவதை யெகோவா நம்மிடம் எதிர்பார்ப்பதில்லை. (மாற். 1:27; யாக். 3:3) மாறாக, அவர்மீதுள்ள அன்பினால் தூண்டப்பட்டு உள்ளப்பூர்வமாகக் கீழ்ப்படிவதையே எதிர்பார்க்கிறார். யெகோவாவின் கட்டளைகள் பாரமானவைகள் அல்ல என்றும் “அவரை ஊக்கமாக நாடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறார்” என்றும் விசுவாசிப்பதால் ஏற்படுகிற மகிழ்ச்சியின் வெளிக்காட்டாக இது இருக்கிறது.—எபி. 11:6; 1 யோ. 5:3.
5. யெகோவாவின் வாக்குறுதியில் ஒருவர் நம்பிக்கை வைப்பது, உபாகமம் 15:7, 8-லுள்ள சட்டத்திற்குக் கீழ்ப்படிய எவ்வாறு உதவியிருக்கும்?
5 உபாகமம் 15:7, 8-ஐ வாசியுங்கள். இதில் சொல்லப்பட்டிருக்கும் சட்டத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் இஸ்ரவேலர் எப்படி நம்பிக்கையோடு கீழ்ப்படிதலை வெளிக்காட்டியிருக்கலாம் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். இந்தச் சட்டத்திற்கு அவர்கள் வேண்டாவெறுப்போடு கீழ்ப்படிந்திருந்தால் ஆரம்பத்தில் ஏழைகள் ஓரளவு நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கலாம்; ஆனால், இது கடவுளுடைய மக்கள் மத்தியில் நல்லுறவையும் அன்பான சூழலையும் ஏற்படுத்தியிருக்குமா? மிக முக்கியமாக, தம்முடைய ஊழியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய யெகோவாவுக்கு இருக்கும் வல்லமையில் விசுவாசம் இருப்பதை அது வெளிக்காட்டியிருக்குமா? அதுமட்டுமல்ல, அவருடைய தாராள குணத்தைப் பின்பற்றுவதற்குக் கிடைத்த வாய்ப்புக்கு நன்றி காட்டுவதாக இருந்திருக்குமா? நிச்சயமாக இல்லை! உண்மையில் தாராள குணமுடையவரின் உள்ளத்தை யெகோவா கவனித்தார்; அவர் செய்த எல்லாக் காரியங்களையும் ஆசீர்வதிப்பதாக வாக்கு கொடுத்தார். (உபா. 15:10) அந்த வாக்குறுதியில் விசுவாசம் வைப்பவர்கள் அதற்கிசைவாகச் செயல்படுவார்கள், அதன் மூலம் அளவில்லா ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள்.—நீதி. 28:20.
6. எபிரெயர் 11:6 நமக்கு என்ன உறுதியளிக்கிறது?
6 யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெற, அவர் பலன் அளிக்கிறவரென விசுவாசம் வைப்பதோடு இன்னொரு குணமும் தேவைப்படுவதாக எபிரெயர் 11:6 வலியுறுத்துகிறது. யெகோவா தம்மை “ஊக்கமாக நாடுகிறவர்களுக்கு” பலன் அளிக்கிறார் என்பதைக் கவனியுங்கள். அப்படியானால், இந்த வசனம் நமக்கு எவ்வளவாய் உறுதியளிக்கிறது! நாம் ஊக்கமாக முயற்சி எடுத்தால், நிச்சயம் ஆசீர்வாதத்தைப் பெறுவோம். ஏனென்றால், “பொய் சொல்ல முடியாத” ஒரே மெய்க் கடவுளே இந்த ஆசீர்வாதத்திற்கு ஊற்றுமூலர். (தீத். 1:3) அவர் கொடுக்கும் வாக்குறுதிகளெல்லாம் முற்றிலும் நம்பகமானவை எனப் பல்லாயிரம் வருடங்களாக நிரூபித்திருக்கிறார். அவருடைய வார்த்தைகள் ஒருபோதும் பொய் ஆகாது; அவை எப்போதுமே நிறைவேறுகின்றன. (ஏசா. 55:11) எனவே, நாம் உண்மையான விசுவாசத்தைக் காட்டினால் யெகோவா நமக்கு பலன் அளிப்பார் என்பதில் முழு நம்பிக்கையோடு இருக்கலாம்.
7. ஆபிரகாமுடைய ‘சந்ததியின்’ மூலம் நம்மால் எப்படி ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்?
7 இயேசு கிறிஸ்து, ஆபிரகாமுடைய ‘சந்ததியின்’ முக்கிய பாகமாக ஆனார். பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள், முன்னறிவிக்கப்பட்ட அந்த ‘சந்ததியின்’ இரண்டாம் பாகமாக ஆகிறார்கள். அவர்கள் ‘இருளிலிருந்து தமது அற்புதமான ஒளியின் பக்கம் [தங்களை] அழைத்தவருடைய மகத்துவங்களை எங்கும் அறிவிப்பதற்கு’ கட்டளையிடப்பட்டிருக்கிறார்கள். (கலா. 3:7-9, 14, 16, 26-29; 1 பே. 2:9) இயேசு தம் உடமைகளைக் கவனித்துக்கொள்வதற்காக நியமித்தவர்களை நாம் அலட்சியம் செய்தால், யெகோவாவுடன் நல்லுறவை அனுபவிக்கவே முடியாது. ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையின்’ உதவியில்லாமல், நம்மால் கடவுளுடைய வார்த்தையை முழுமையாகப் புரிந்துகொள்ளவும் முடியாது, அதை வாழ்க்கையில் கடைப்பிடிக்கவும் முடியாது. (மத். 24:45-47) பைபிளிலிருந்து நாம் கற்றுக்கொள்கிற விஷயங்களைக் கடைப்பிடிக்கும்போது, கடவுளுடைய ஆசீர்வாதத்தை நம்மால் பெற்றுக்கொள்ள முடியும்.
கடவுளுடைய சித்தத்திற்கே கவனம் செலுத்துங்கள்
8, 9. முற்பிதாவான யாக்கோபு கடவுளுடைய வாக்குறுதிக்கு இசைய எவ்வாறு விடாமுயற்சி எடுத்தார்?
8 கடவுளுடைய ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கு விடாமுயற்சி எடுப்பதைப் பற்றிப் பேசும்போது, முற்பிதாவான யாக்கோபுதான் நம் மனக்கண்ணில் தெரிகிறார். ஆபிரகாமுக்கு யெகோவா கொடுத்த வாக்குறுதி எப்படி நிறைவேறும் என யாக்கோபுக்குத் தெரியாதிருந்தது. ஆனால், யெகோவா தன் தாத்தாவுடைய சந்ததியை பெரிதாக்கி அவர்களுடைய வம்சத்தாரைப் பெரிய ஜனமாக்குவார் என்பதில் அவருக்கு நம்பிக்கை இருந்தது. அதனால், கி.மு. 1781-ல் யாக்கோபு தனக்கு மனைவியைத் தேட ஆரானுக்குப் போனார். அவர் வெறுமனே தனக்கேற்ற நல்ல ஜோடியைக் கண்டுபிடிப்பதற்காக அல்ல, ஆனால் யெகோவாவை வழிபடும் ஆன்மீகச் சிந்தையுள்ள ஒருத்தியை, தன் பிள்ளைகளுக்கு நல்ல அம்மாவாக இருக்கும் ஒருத்தியைக் கண்டுபிடிப்பதற்கே அங்கு போனார்.
9 யாக்கோபு தன் உறவுக்காரப் பெண் ராகேலைச் சந்தித்தார் என நமக்குத் தெரியும். அவர் ராகேலை விரும்பினார்; அவளைக் கல்யாணம் செய்துகொள்வதற்காக அவளுடைய அப்பா லாபானிடம் ஏழு வருடங்கள் வேலை செய்ய ஒத்துக்கொண்டார். இது வெறும் ஒரு காதல் காவியம் அல்ல. யாக்கோபு தன் தாத்தா ஆபிரகாமுக்குச் சர்வவல்லமையுள்ள கடவுள் கொடுத்திருந்த வாக்குறுதியையும், அதைத் தன் அப்பா ஈசாக்கிடம் உறுதிப்படுத்தியிருந்ததையும் அறிந்திருந்தார் என்பதில் சந்தேகமே இல்லை. (ஆதி. 18:17, 18; 22:17, 18; 26:3-5, 24, 25) ஈசாக்கு அதைத் தன் மகன் யாக்கோபிடம் இவ்வாறு சொன்னார்: “சர்வவல்லமையுள்ள தேவன் உன்னை ஆசீர்வதித்து, நீ பல ஜனக்கூட்டமாகும்படி உன்னைப் பலுகவும் பெருகவும் பண்ணி; தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்ததும் நீ பரதேசியாய்த் தங்குகிறதுமான தேசத்தை நீ சுதந்தரித்துக்கொள்ளும்படி ஆபிரகாமுக்கு அருளிய ஆசீர்வாதத்தை உனக்கும் உன் சந்ததிக்கும் அருளுவாராக.” (ஆதி. 28:3, 4) எனவே, யாக்கோபு தனக்குச் சரியான மனைவியைத் தேடிக் கண்டுபிடித்து ஒரு நல்ல குடும்பத்தை உருவாக்க எடுத்த முயற்சி, யெகோவாவின் வாக்குறுதியில் அவருக்கிருந்த நம்பிக்கையை வெளிக்காட்டியது.
10. யாக்கோபு கேட்டதற்கு இசைய அவரை ஆசீர்வதிக்க யெகோவா ஏன் விரும்பினார்?
10 யாக்கோபு தன் குடும்பத்திற்காகச் செல்வத்தைக் குவிக்க முயலவில்லை. மாறாக, அவருடைய மனமெல்லாம் தன் சந்ததியாரைக் குறித்து யெகோவா கொடுத்த வாக்குறுதியின் மீதே இருந்தது. யெகோவாவுடைய சித்தத்தின் நிறைவேற்றத்தில் அவர் கவனம் செலுத்தினார். பல முட்டுக்கட்டைகளின் மத்தியிலும் கடவுளுடைய ஆசீர்வாதத்தைப் பெற தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்யத் தீர்மானமாய் இருந்தார். தன் முதிர்வயதிலும் அதே மனப்பான்மையுடன் இருந்தார்; அதனால், யெகோவா அவரை ஆசீர்வதித்தார்.—ஆதியாகமம் 32:24-29-ஐ வாசியுங்கள்.
11. கடவுளுடைய சித்தத்திற்கு இசைய நாம் என்ன முயற்சி எடுக்க வேண்டும்?
11 யாக்கோபைப் போலவே நமக்கும் யெகோவாவின் நோக்கம் நிறைவேறுவதைப் பற்றிய அனைத்து விவரங்களும் தெரியாது. இருந்தாலும், பைபிளைப் படிக்கும்போது “யெகோவாவின் நாள்” எப்படி இருக்கும் என்பதை நம்மால் ஓரளவு புரிந்துகொள்ள முடிகிறது. (2 பே. 3:10, 17) உதாரணமாக, அந்த நாள் எப்போது வரும் என நமக்குத் துல்லியமாகத் தெரியாவிட்டாலும், அந்த நாள் நெருங்கிவிட்டது என்று தெரியும். மீந்திருக்கும் இந்தக் கொஞ்ச காலத்தில் முழுமையாகச் சாட்சி கொடுத்தால் நாமும் நம் செய்திக்குச் செவிகொடுப்போரும் மீட்பு பெற முடியுமென பைபிள் சொல்வதை நாம் நம்புகிறோம்.—1 தீ. 4:16.
12. நாம் எதைக் குறித்து நிச்சயமாய் இருக்கலாம்?
12 யெகோவாவின் நாள் எந்தச் சமயத்திலும் வரலாம் என்று நமக்குத் தெரியும்; பூமியிலுள்ள அத்தனை பேருக்கும் நாம் சாட்சிக் கொடுக்கும்வரை யெகோவா காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. (மத். 10:23) இருந்தாலும், பிரசங்க வேலையைப் பலன்தரும் விதத்தில் செய்வதற்குத் தகுந்த வழிநடத்துதலை நாம் பெறுகிறோம். ஆகவே, விசுவாசத்தோடு நம்மிடமுள்ள எல்லா வளங்களையும் பயன்படுத்தி இந்த வேலையில் ஈடுபட நம்மால் முடிந்தவற்றைச் செய்கிறோம். பிராந்தியத்திலுள்ள நிறைய பேர் நம்முடைய செய்தியைக் கேட்பார்களா? உண்மையில், அதை நாம் எப்படி முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியும்? (பிரசங்கி 11:5, 6-ஐ வாசியுங்கள்.) யெகோவா நம்மை ஆசீர்வதிப்பார் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து பிரசங்க வேலை செய்வதுதான் நம் பொறுப்பு. (1 கொ. 3:6, 7) நாம் எடுக்கும் எல்லா முயற்சியையும் யெகோவா பார்க்கிறார்; ஆகவே, நமக்குக் குறிப்பாக என்ன வழிநடத்துதல் தேவையோ அதைத் தமது சக்தியின்மூலம் தருவார் என்பதில் நிச்சயமாய் இருக்கலாம்.—சங். 32:8.
கடவுளுடைய சக்தியை நாடுங்கள்
13, 14. கடவுளுடைய ஊழியர்களைத் தகுதியுள்ளவர்களாக்க அவருடைய சக்தி எவ்வாறு உதவியிருக்கிறது?
13 நமக்குக் கொடுக்கப்பட்ட நியமிப்புக்கோ பிரசங்க வேலைக்கோ நாம் தகுதியற்றவர்கள் என உணர்ந்தால் என்ன செய்வது? அவருடைய சேவையைச் செய்ய நமக்கு இருக்கும் திறமையைத் தீட்டுவதற்கு தமது சக்தியைத் தரும்படி யெகோவாவிடம் ஜெபிக்க வேண்டும். (லூக்கா 11:13-ஐ வாசியுங்கள்.) மக்கள் எப்படிப்பட்ட பின்னணியைச் சேர்ந்தவர்களாய் இருந்தாலும் சரி எப்படிப்பட்ட அனுபவமுள்ளவர்களாய் இருந்தாலும் சரி, கடவுளுடைய சக்தி அவருடைய வேலையை அல்லது நியமிப்பைச் செய்ய அவர்களைத் தகுதியுள்ளவர்களாக்கும். உதாரணமாக, மேய்ப்பர்களாகவும் அடிமைகளாகவும் இருந்த இஸ்ரவேலர் எகிப்திலிருந்து விடுதலை பெற்று வந்ததும் தங்களுடைய விரோதிகளைத் துரத்தியடிக்க கடவுளுடைய சக்தி அவர்களுக்கு உதவியது; இத்தனைக்கும் அவர்கள் முன்பின் போரில் ஈடுபட்டதே இல்லை. (யாத். 17:8-13) அதற்குச் சற்று பின்பு, பெசலெயேலும் அகோலியாபும் கடவுளுடைய கட்டளைப்படி நுட்ப வேலைப்பாடுகளுடன் ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டுவதற்கு அவருடைய சக்தியே உதவியது.—யாத். 31:2-6; 35:30-35.
14 நம் நாளில், அமைப்பின் தேவைகளைக் கவனித்துக்கொள்வதற்குச் சொந்தமாக ஓர் அச்சகத்தைத் தொடங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, அவருடைய வல்லமை வாய்ந்த சக்தியே கடவுளுடைய ஊழியர்களுக்கு உதவியது. 1927-க்குள் என்னவெல்லாம் செய்யப்பட்டிருந்தது என்பதை அந்தச் சமயத்தில் அச்சக கண்காணியாக இருந்த சகோதரர் ஆர். ஜெ. மார்ட்டின் ஒரு கடிதத்தில் விளக்கினார். “சரியான சமயத்தில்தான் ஆண்டவர் எங்களுக்கு வழிகாட்டினார். பெரிய ரோட்டரி அச்சகம் கிடைத்தது; ஆனால், அதன் கட்டமைப்பு, அது செயல்படும் விதம் பற்றியெல்லாம் எங்களுக்கு எதுவுமே தெரியாது. என்றாலும், தங்களுடைய எல்லாத் திறமைகளையும் ஆண்டவருக்கென்றே அர்ப்பணித்தவர்கள் சீக்கிரமாக அந்த வேலையைக் கற்றுக்கொள்ள எப்படி உதவுவது என அவருக்குத் தெரியும். . . . சில வாரங்களிலேயே அந்த அச்சகத்தை நன்கு இயங்க வைத்தோம்; அது இன்னும் இயங்கிக் கொண்டேதான் இருக்கிறது; ஏன், அதைத் தயாரித்தவர்களையே மலைக்கவைக்கும் அளவுக்கு வேலை செய்கிறது.” இந்நாள்வரையாக அத்தகைய ஊக்கமான முயற்சிகளை யெகோவா தொடர்ந்து ஆசீர்வதித்து வருகிறார்.
15. சபலத்திற்கு ஆளாவோர் ரோமர் 8:11-லிருந்து எப்படி ஊக்குவிப்பைப் பெறலாம்?
15 யெகோவாவின் சக்தி பல்வேறு விதங்களில் செயல்படுகிறது. இந்தச் சக்தி கடவுளுடைய ஊழியர்கள் எல்லாருக்குமே கிடைக்கிறது; மலைபோன்ற தடைகளையும் தாண்ட இது அவர்களுக்கு உதவுகிறது. உதாரணமாக, நாம் சபலத்திற்கு ஆளாவதுபோல் உணர்ந்தால் என்ன செய்வது? ரோமர் 7:21, 25 மற்றும் 8:11-ல் உள்ள பவுலின் வார்த்தைகளிலிருந்து நாம் பலத்தைப் பெறலாம். ஆம், “இயேசுவை உயிர்த்தெழுப்பியவரின் சக்தி” நம் உடலின் ஆசைகளையும் எதிர்த்து போராடுவதற்கான பலத்தைத் தரும். இந்த வசனம் பரலோக நம்பிக்கை உள்ளவர்களுக்காக எழுதப்பட்ட போதிலும் கடவுளின் ஊழியர்கள் எல்லாருக்கும் இதிலுள்ள நியமம் பொருந்தும். கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதன் மூலமும், தகாத ஆசைகளை அடக்க முயலுவதன் மூலமும், கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலுக்கு இசைய வாழ்வதன் மூலமும் நாம் எல்லாருமே வாழ்வைப் பெறலாம்.
16. கடவுளுடைய சக்தியைப் பெறுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
16 நம் பங்கில் எந்த முயற்சியும் எடுக்காமலேயே கடவுள் தம்முடைய சக்தியை நமக்கு அருளும்படி எதிர்பார்க்க முடியுமா? முடியாது. அதற்காக ஜெபம் செய்வதோடு, கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எழுதப்பட்ட பைபிளை ஊக்கமாகப் படிப்பதும் அவசியம். (நீதி. 2:1-6) அதுமட்டுமல்ல, கடவுளுடைய சக்தி கிறிஸ்தவ சபையின்மீதும் இருப்பதால், நாம் கூட்டங்களுக்குத் தவறாமல் செல்வதும் அவசியம். அப்படிச் செய்வது, “கடவுளுடைய சக்தி சபைகளுக்குத் தெரிவிப்பதை” கேட்க விரும்புகிறோம் என்பதைக் காட்டுகிறது. (வெளி. 3:6) மேலும், நாம் கற்றுக்கொள்பவற்றைத் தாழ்மையுடன் செயல்படுத்துவதும் அவசியம். நீதிமொழிகள் 1:23 நமக்கு இவ்வாறு அறிவுரை வழங்குகிறது: “என் கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள்; இதோ, என் ஆவியை உங்களுக்கு அருளுவேன்.” ஆம், “கடவுள் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கு” தமது சக்தியை அருளுகிறார்.—அப். 5:32.
17. நம் முயற்சிகளைக் கடவுள் ஆசீர்வதிப்பதால் விளையும் பயனை எதற்கு ஒப்பிடலாம்?
17 கடவுளுடைய ஆசீர்வாதத்தைப் பெற ஊக்கமாய் முயலுவது அவசியம்தான்; அதே சமயத்தில், யெகோவா தம்முடைய மக்களுக்குச் செய்த ஏராளமான நல்ல காரியங்களுக்கு அவர்களுடைய கடின உழைப்பு மட்டுமே காரணமாக இருக்க முடியாது. நம்முடைய முயற்சிகளை அவர் ஆசீர்வதிப்பதால் விளையும் பயனை, சத்துள்ள உணவைச் சாப்பிடுவதால் நம் உடலுக்குக் கிடைக்கிற பயனுக்கு ஒப்பிடலாம். நாம் உணவை அனுபவித்துச் சாப்பிட்டு அதிலிருந்து தேவையான ஊட்டச்சத்தைப் பெறும் விதத்தில் யெகோவா நம் உடலை வடிவமைத்திருக்கிறார். உணவையும்கூட அவர் அளிக்கிறார். உணவில் ஊட்டச்சத்துகள் எப்படி வந்தன என்றும் நமக்கு முழுமையாகத் தெரியாது, நாம் உண்ணும் உணவிலிருந்து நம் உடல் எப்படிச் சக்தியைப் பெறுகிறது என்று விளக்கவும் நம்மில் பெரும்பாலோருக்குத் தெரியாது. ஆனால், அதெல்லாம் இயல்பாக நடக்கிறது என்றும் சாப்பிடுவதன் மூலம் அந்த வேலைக்கு நாம் ஒத்துழைக்கிறோம் என்றுமே நமக்குத் தெரியும். நாம் சத்துள்ள உணவை உண்டால் இன்னும் நல்ல பலன்களைப் பெறுவோம். அவ்வாறே, முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்கான தகுதிகளை யெகோவா வகுத்திருக்கிறார்; அந்தத் தகுதிகளை நாம் பெறுவதற்கு அவர் உதவவும் செய்கிறார். அவர் நமக்குப் பெருமளவில் உதவுவதால் நம் புகழுக்கு அவர் பாத்திரர் என்பது தெளிவாகிறது. இருந்தாலும், நாம் அவரோடு ஒத்துழைக்க வேண்டும்; ஆசீர்வாதத்தைப் பெற அவருடைய சித்தத்திற்கு இசைவாகச் செயல்படுவதன் மூலம் அவ்வாறு ஒத்துழைக்க வேண்டும்.—ஆகா. 2:18, 19.
18. உங்களுடைய தீர்மானம் என்ன, ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?
18 ஆகவே, உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற ஒவ்வொரு நியமிப்பையும் நிறைவேற்ற உள்ளப்பூர்வமாக முயலுங்கள். அவற்றை வெற்றிகரமாக முடிக்க யெகோவாவைச் சார்ந்திருங்கள். (மாற். 11:23, 24) அப்படிச் செய்யும்போது, “தேடுகிற ஒவ்வொருவனும் கண்டடைகிறான்” என்பதில் நிச்சயமாயிருங்கள். (மத். 7:8) கடவுளுடைய சக்தியால் ராஜாக்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பரலோகத்தில் “வாழ்வெனும் கிரீடத்தை” ஆசீர்வாதமாகப் பெறுவார்கள். (யாக். 1:12) ஆபிரகாமுடைய வித்துவின் மூலம் ஆசீர்வாதத்தைப் பெற முயலுகிற கிறிஸ்துவின் ‘வேறே ஆடுகளோ,’ அவர் பின்வருமாறு சொல்வதைக் கேட்பதில் மகிழ்ச்சி அடைவார்கள்: “என் தகப்பனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, வாருங்கள்; உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காகத் தயார்படுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தைச் சொந்தமாக்கிக்கொள்ளுங்கள்.” (யோவா. 10:16; மத். 25:34) ஆம், “[கடவுளால்] ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பூமியைச் சுதந்தரிக்துக்கொள்ளுவார்கள்; . . . [அவர்கள்] பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.”—சங். 37:22, 29.
விளக்க முடியுமா?
• உண்மையான கீழ்ப்படிதல் எப்படிப்பட்டதாய் இருக்க வேண்டும்?
• கடவுளுடைய ஆசீர்வாதத்தைப் பெற என்ன தேவைப்படுகிறது?
• கடவுளுடைய சக்தியை நாம் எப்படிப் பெறலாம், அது நம் சார்பாக எப்படிச் செயல்படும்?
[பக்கம் 9-ன் படங்கள்]
யாக்கோபு யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெற ஒரு தூதனோடு போராடினார்
நீங்களும் அவ்வாறே ஊக்கமாக முயற்சி செய்கிறீர்களா?
[பக்கம் 10-ன் படம்]
பெசலெயேலும் அகோலியாபும் கடவுளது வேலையில் மின்ன அவரது சக்தி உதவியது