அப்போஸ்தலரின் செயல்கள்
22 “சகோதரர்களே, தகப்பன்மார்களே, இப்போது என்னுடைய வாதத்தைக் கேளுங்கள்”+ என்று அவர் சொன்னார். 2 எபிரெய மொழியில் அவர் பேசியதைக் கேட்டபோது, அவர்கள் இன்னும் அமைதியானார்கள். அப்போது அவர், 3 “நான் ஒரு யூதன்,+ சிலிசியாவில் இருக்கிற தர்சு நகரத்தில் பிறந்தேன்.+ இந்த நகரத்தில் கமாலியேலின் காலடியில் கல்வி கற்றேன்.+ முன்னோர்களுடைய திருச்சட்டத்தை நுணுக்கமாகக் கற்றுக்கொண்டேன்.+ இன்று கூடியிருக்கும் உங்கள் எல்லாரையும் போலவே கடவுளுக்காகப் பக்திவைராக்கியத்தோடு இருந்தேன்.+ 4 இந்த மார்க்கத்தை* சேர்ந்த ஆண்களையும் பெண்களையும் கட்டியிழுத்துக் கொண்டுபோய்ச் சிறையில் அடைத்தேன், அவர்களைத் துன்புறுத்தினேன், அவர்கள் கொல்லப்படும்படி செய்தேன்.+ 5 தலைமைக் குருவும் பெரியோர் குழுவினர் எல்லாரும் இதற்குச் சாட்சிகள். தமஸ்குவில் இருக்கிற யூதச் சகோதரர்களிடம் கொடுப்பதற்காக இவர்களிடமிருந்து அனுமதிக் கடிதங்களை வாங்கிக்கொண்டு, அங்கே இருக்கிற கிறிஸ்தவர்களை எருசலேமுக்குக் கட்டியிழுத்து வந்து தண்டிப்பதற்காகப் போய்க்கொண்டிருந்தேன்.
6 ஆனால், நான் தமஸ்குவை நெருங்கிக்கொண்டிருந்த சமயத்தில், ஏறக்குறைய மத்தியான நேரத்தில், திடீரென்று வானத்திலிருந்து பெரிய ஒளி தோன்றி என்னைச் சுற்றிப் பிரகாசித்தது.+ 7 நான் தரையில் விழுந்தேன். அப்போது, ‘சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?’ என்று சொல்கிற ஒரு குரலைக் கேட்டேன். 8 அதற்கு நான், ‘எஜமானே, நீங்கள் யார்?’ என்று கேட்டேன். அப்போது அவர், ‘நீ துன்புறுத்துகிற நாசரேத்தூர் இயேசு நான்தான்’ என்று சொன்னார். 9 என்னோடு இருந்த ஆட்கள் அந்த ஒளியைப் பார்த்தார்கள், ஆனால் என்னிடம் பேசியவருடைய குரலைக் கேட்கவில்லை. 10 அப்போது, ‘நான் என்ன செய்ய வேண்டும், எஜமானே?’ என்று கேட்டேன். எஜமான் என்னிடம், ‘நீ எழுந்து தமஸ்குவுக்குப் போ; நீ செய்ய வேண்டியதெல்லாம் அங்கே உனக்குச் சொல்லப்படும்’+ என்றார். 11 அந்தப் பிரகாசமான ஒளியினால் என்னுடைய கண்பார்வை போனது. அதனால், என்னோடு இருந்தவர்கள் என்னைக் கைத்தாங்கலாக தமஸ்குவுக்குக் கூட்டிக்கொண்டு போனார்கள்.
12 திருச்சட்டத்தைப் பயபக்தியோடு கடைப்பிடித்து வந்த அனனியா என்ற ஒருவர் அங்கே இருந்தார். அங்கே குடியிருந்த யூதர்கள் எல்லாராலும் அவர் உயர்வாகப் பேசப்பட்டார். 13 அவர் என் பக்கத்தில் வந்து நின்று, ‘சவுலே, சகோதரனே, உனக்கு மறுபடியும் பார்வை கிடைக்கட்டும்!’ என்று சொன்னார். அந்த நொடியே எனக்குப் பார்வை கிடைத்தது, நான் அவரைப் பார்த்தேன்.+ 14 அப்போது அவர் என்னிடம், ‘கடவுளுடைய விருப்பத்தை* தெரிந்துகொள்வதற்கும் நீதியுள்ளவரைப் பார்ப்பதற்கும்+ அவருடைய குரலைக் கேட்பதற்கும் நம் முன்னோர்களுடைய கடவுள் உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். 15 ஏனென்றால், நீ பார்த்தவற்றையும் கேட்டவற்றையும் பற்றி எல்லாருக்கும் அறிவித்து, அவருக்குச் சாட்சியாக இருக்க வேண்டும்.+ 16 இப்போது ஏன் தாமதிக்கிறாய்? எழுந்து, ஞானஸ்நானம் பெற்றுக்கொள். அவருடைய பெயரில் நம்பிக்கை வை,*+ அப்போது உன் பாவங்கள் மன்னிக்கப்படும்’+ என்று சொன்னார்.
17 பின்பு நான் எருசலேமுக்குத் திரும்பி வந்து+ ஆலயத்தில் ஜெபம் செய்துகொண்டிருந்தபோது, ஒரு தரிசனத்தைப் பார்த்தேன்.* 18 அந்தத் தரிசனத்தில் எஜமான் என்னிடம், ‘சீக்கிரம்! எருசலேமைவிட்டு உடனே புறப்பட்டுப் போ. ஏனென்றால், என்னைப் பற்றி நீ சொல்லும் சாட்சியை இவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’+ என்று சொன்னார். 19 அதற்கு நான், ‘எஜமானே, உங்கள்மேல் நம்பிக்கை வைத்தவர்களை நான் சிறையில் அடைத்தேன், ஒவ்வொரு ஜெபக்கூடமாகப் போய் அங்கிருந்தவர்களை அடித்தேன்.+ 20 உங்களுக்குச் சாட்சியாக இருந்த ஸ்தேவான் கொலை செய்யப்பட்டபோது அதற்கு நானும் உடந்தையாக இருந்தேன். அங்கே நின்றுகொண்டு அவரைக் கொலை செய்தவர்களுடைய மேலங்கிகளைக் காவல் காத்துக்கொண்டிருந்தேன்.+ இதெல்லாம் இவர்களுக்கு நன்றாகத் தெரியுமே’ என்று சொன்னேன். 21 இருந்தாலும் அவர் என்னிடம், ‘நீ புறப்பட்டுப் போ. நான் உன்னைத் தூரத்திலுள்ள மற்ற தேசத்து மக்களிடம் அனுப்பப்போகிறேன்’+ என்று சொன்னார்.”
22 இவ்வளவு நேரம் பவுல் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த மக்கள், “இவனை ஒழித்துக்கட்டுங்கள், இவன் உயிரோடே இருக்கக் கூடாது!” என்று கத்தினார்கள். 23 அவர்கள் கூச்சல் போட்டுக்கொண்டும் தங்களுடைய மேலங்கிகளைக் கழற்றி எறிந்துகொண்டும் மண்ணை அள்ளி வீசிக்கொண்டும் இருந்தார்கள்.+ 24 அதனால், அவரைப் படைவீரர்களுடைய குடியிருப்புக்குக் கொண்டுபோகும்படி படைத் தளபதி கட்டளை கொடுத்தார். அதோடு, பவுலுக்கு எதிராக ஏன் அவர்கள் இப்படிக் கத்திக் கூச்சல் போடுகிறார்கள் என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்வதற்கு அவரை முள்சாட்டையால் அடித்து விசாரிக்கும்படி கட்டளை கொடுத்தார். 25 சாட்டையடி கொடுப்பதற்காக அவர்கள் அவருடைய கைகளை இழுத்துக் கட்டியபோது, தன் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த படை அதிகாரியிடம், “ஒரு ரோமக் குடிமகனுக்கு, அதுவும் குற்றவாளியாகத் தீர்க்கப்படாத* ஒருவனுக்கு, நீங்கள் சாட்டையடி கொடுப்பது சட்டப்படி சரியா?”+ என்று கேட்டார். 26 படை அதிகாரி இதைக் கேட்டதும் படைத் தளபதியிடம் போய், “என்ன காரியம் செய்யப் பார்த்தீர்கள்! இவன் ஒரு ரோமக் குடிமகன்” என்று சொன்னார். 27 அதனால், படைத் தளபதி பவுலிடம் போய், “நீ ஒரு ரோமக் குடிமகனா?” என்று கேட்டார். அதற்கு அவர், “ஆமாம்” என்று சொன்னார். 28 அப்போது படைத் தளபதி, “இந்தக் குடியுரிமையை நான் நிறைய பணம் கொடுத்து வாங்கினேன்” என்று சொன்னார். அதற்கு பவுல், “ஆனால், நான் ரோமக் குடிமகனாகவே பிறந்தேன்”+ என்று சொன்னார்.
29 இதைக் கேட்டதும், அவரைச் சித்திரவதை செய்து விசாரிக்கவிருந்த ஆட்கள் அவரைவிட்டு விலகினார்கள். படைத் தளபதியோ, அவர் ஒரு ரோமக் குடிமகன் என்பதைத் தெரிந்துகொண்டதாலும் அவரைச் சங்கிலியால் கட்டி வைத்ததாலும் பயந்துபோனார்.+
30 யூதர்கள் பவுல்மேல் ஏன் குற்றம்சாட்டுகிறார்கள் என்பதை அவர் திட்டவட்டமாகத் தெரிந்துகொள்ள விரும்பினார். அதனால் அடுத்த நாளே அவருடைய சங்கிலிகளை அவிழ்த்தார், முதன்மை குருமார்களையும் நியாயசங்கத்தார் எல்லாரையும் கூடிவரும்படி உத்தரவிட்டார். பின்பு, பவுலை அவர்கள் முன்னால் கொண்டுபோய் நிறுத்தினார்.+