ஏசாயா
7 உசியாவின் பேரனும் யோதாமின் மகனுமான ஆகாஸ், யூதாவை ஆட்சி செய்துவந்தார்.+ அப்போது, சீரியாவின் ராஜாவான ரேத்சீனும் இஸ்ரவேலின் ராஜாவும் ரெமலியாவின் மகனுமான பெக்காவும்+ எருசலேமுக்கு எதிராகப் போர் செய்ய வந்தார்கள். ஆனால், அவர்களால்* அதைக் கைப்பற்ற முடியவில்லை.+ 2 “எப்பிராயீமோடு* சீரியா கூட்டுச் சேர்ந்துவிட்டது” என்ற செய்தி தாவீதின் வம்சத்தாருக்கு அறிவிக்கப்பட்டது.
ஆகாசும் அவருடைய ஜனங்களும் அதைக் கேட்டபோது, காட்டிலுள்ள மரங்கள் காற்றில் ஆடுவது போல ஆடிப்போனார்கள்.
3 அப்போது யெகோவா ஏசாயாவிடம், “தயவுசெய்து உன் மகன் சேயார்-யாசூபுவை*+ கூட்டிக்கொண்டு வண்ணார் பகுதிக்குப் போகிற நெடுஞ்சாலைக்குப் போ. அங்கே மேல் குளத்தின் வாய்க்கால் முனையில்+ ஆகாஸ் இருப்பான். 4 நீ அவனிடம், ‘பதட்டப்படாமல் நிதானமாக இருங்கள். சீரியாவின் ராஜாவான ரேத்சீனும் ரெமலியாவின் மகனும்+ பயங்கர கோபத்தோடு படையெடுத்து வரப்போவதை நினைத்து நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். புகைந்துகொண்டிருக்கும் அந்த இரண்டு கொள்ளிக்கட்டைகளைப் பார்த்துப் பயப்படாதீர்கள். 5 சீரியர்கள் எப்பிராயீமியர்களோடும் ரெமலியாவின் மகனோடும் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி, 6 “நாம் போய் யூதாவைத் தாக்கி,* அதைக் கைப்பற்றுவோம்.* தபேயாலின் மகனை அதன் ராஜாவாக்குவோம்” என்று பேசி வைத்திருக்கிறார்கள்.+
7 ஆனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்:
“அவர்களுடைய திட்டம் பலிக்காது.
அவர்கள் நினைப்பது நடக்காது.
8 சீரியாவின் தலைநகர் தமஸ்கு.
தமஸ்குவின் தலைவன் ரேத்சீன்.
இன்னும் 65 வருஷத்துக்குள்
எப்பிராயீம் ஒரு தேசமாக இல்லாதபடி அடியோடு அழிந்துவிடும்.+
உங்களுக்கு உறுதியான விசுவாசம் இல்லாவிட்டால்,
நீங்கள் நிலைத்திருக்க மாட்டீர்கள்”’ என்று சொல்” என்றார்.
10 பின்பு யெகோவா ஆகாசிடம், 11 “உன் கடவுளான யெகோவாவிடம் ஒரு அடையாளத்தைக் கேள்;+ அது கல்லறையைப் போல் ஆழத்திலும் இருக்கலாம், வானத்தைப் போல் உயரத்திலும் இருக்கலாம்” என்று சொன்னார். 12 ஆனால் ஆகாஸ், “நான் கேட்க மாட்டேன். யெகோவாவைச் சோதித்துப் பார்க்க மாட்டேன்” என்று சொன்னார்.
13 அப்போது ஏசாயா, “தாவீதின் வம்சத்தாரே, தயவுசெய்து கேளுங்கள். நீங்கள் மனுஷருடைய பொறுமையைச் சோதித்தது போதாதா? கடவுளுடைய பொறுமையையும் சோதிக்க வேண்டுமா?+ 14 உங்களுக்கு ஒரு அடையாளத்தை யெகோவாவே கொடுப்பார். இதோ! ஒரு இளம் பெண்* கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுப்பாள்.+ அவனுக்கு இம்மானுவேல்* என்று பெயர் வைப்பாள்.+ 15 அவன் நல்லது கெட்டதைத் தெரிந்துகொள்ளும் வயதை எட்டுவதற்கு முன்பு வெறும் வெண்ணெயையும் தேனையும்தான் சாப்பிட்டுக்கொண்டிருப்பான். 16 அவன் அந்த வயதை எட்டும் முன்பே, நீங்கள் பயந்து நடுங்கிய அந்த இரண்டு ராஜாக்களின் தேசமும் குடிமக்களே இல்லாமல் வெறுமையாகிவிடும்.+ 17 ஆகாசே, உனக்கும் உன் மக்களுக்கும் உன்னுடைய அப்பாவின் குடும்பத்தாருக்கும் எதிராக யெகோவா அசீரிய ராஜாவை வரச் செய்வார்.+ எப்பிராயீம் யூதாவைவிட்டுப் பிரிந்து போனதுமுதல்+ அந்த நாள்வரை அப்படிப்பட்ட ஒரு கொடிய காலம் வந்திருக்காது.
18 அந்த நாளில், யெகோவா எகிப்தின் தொலைதூர இடங்களில் ஓடுகிற நைல் நதியின் ஓடைகளிலிருந்து ஈக்களையும் அசீரியாவிலிருந்து தேனீக்களையும் வரச் செய்வார்.* 19 அவை செங்குத்தான பள்ளத்தாக்குகளின்* மேலும் பாறைகளின் மேலும் முட்புதர்களின் மேலும் மேய்ச்சல் நிலங்களின் மேலும் வந்து உட்காரும்.
20 ஆற்றின்* பகுதியிலிருந்து வாடகைக்கு வாங்கப்பட்ட சவரக்கத்தியைக் கொண்டு, அதாவது அசீரிய ராஜாவைக் கொண்டு,+ தலையிலும் கால்களிலும் உள்ள முடியை யெகோவா சிரைத்துவிடுவார்; தாடியைக்கூட விட்டுவைக்க மாட்டார்.
21 அந்த நாளில் ஒவ்வொருவரிடமும் ஒரு இளம் பசுவும் இரண்டு ஆடுகளுமே மிஞ்சியிருக்கும். 22 பால் மட்டும் அதிகமாகக் கிடைக்கும் என்பதால் அவர்கள் வெண்ணெயைச் சாப்பிடுவார்கள். தேசத்தில் மீதியாக இருக்கிற எல்லாருமே வெறும் வெண்ணெயையும் தேனையும்தான் சாப்பிடுவார்கள்.
23 அந்த நாளிலே, 1,000 வெள்ளிக் காசுகள் மதிப்புள்ள 1,000 திராட்சைக் கொடிகள் இருந்த இடத்தில் முட்புதர்களும் களைகளும்தான் இருக்கும். 24 வில்லுகளோடும் அம்புகளோடும்தான் மனுஷர்கள் அங்கே போவார்கள். ஏனென்றால், தேசம் முழுக்க முட்புதர்களும் களைகளும் வளர்ந்து நிற்கும். 25 மண்வெட்டியால் கொத்தி பண்படுத்தப்பட்டிருந்த மலைகளில் முட்புதர்களும் களைகளும் மண்டிக் கிடக்கும். அதற்குப் பயந்து நீ அங்கே போக மாட்டாய். அது ஆடுமாடுகள் மேய்ந்து திரிகிற இடமாக மாறும்” என்று சொன்னார்.