மத்தேயு
ஆராய்ச்சிக் குறிப்புகள்—அதிகாரம் 10
அப்போஸ்தலர்களின்: வே.வா., “அனுப்பப்பட்டவர்களின்.” இதற்கான கிரேக்க வார்த்தை அப்போஸ்ட்டோலாஸ். இது, “அனுப்பி வைப்பது” என்ற அர்த்தத்தைத் தரும் அப்போஸ்ட்டெல்லோ என்ற வினைச்சொல்லிலிருந்து வந்திருக்கிறது. (மத் 10:5; லூ 11:49; 14:32) இந்த வார்த்தையின் அடிப்படை அர்த்தம், யோவா 13:16-ல் உள்ள இயேசுவின் வார்த்தைகளிலிருந்து தெளிவாகத் தெரிகிறது; அங்கே இந்த வார்த்தை ‘அனுப்பப்பட்டவர்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
பேதுரு என்ற சீமோன்: பேதுருவுக்கு ஐந்து விதமான பெயர்களை பைபிள் குறிப்பிடுகிறது: (1) “சிமியோன்” (இது எபிரெயப் பெயரின் கிரேக்க வடிவம்); (2) “சீமோன்” என்ற கிரேக்கப் பெயர் (சிமியோன், சீமோன் ஆகிய இரண்டுமே, “கேட்பது; கவனித்துக் கேட்பது” என்ற அர்த்தத்தைத் தரும் எபிரெய வினைச்சொல்லிலிருந்து வந்திருக்கின்றன); (3) “பேதுரு” என்ற கிரேக்கப் பெயர் (இதன் அர்த்தம், “பாறாங்கல்”; பைபிளில் இவருக்கு மட்டும்தான் இந்தப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது); (4) “கேபா” என்ற செமிட்டிக் பெயர் (இது பேதுரு என்பதற்கு இணையான பெயர்; ஒருவேளை, யோபு 30:6; எரே 4:29 ஆகிய வசனங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் கேஃபிம் [பாறைகள்] என்ற எபிரெய வார்த்தையோடு சம்பந்தப்பட்டிருக்கலாம்); (5) “சீமோன் பேதுரு” (இது இரண்டு பெயர்கள் சேர்ந்த ஒரு பெயர்).—அப் 15:14; யோவா 1:42; மத் 16:16.
பர்த்தொலொமேயு: அர்த்தம், “தொல்மாயின் மகன்.” இவரைத்தான் நாத்தான்வேல் என்று யோவான் குறிப்பிடுவதாக நம்பப்படுகிறது. (யோவா 1:45, 46) சுவிசேஷப் புத்தகங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, நாத்தான்வேலையும் பிலிப்புவையும் யோவான் எப்படி சம்பந்தப்படுத்திப் பேசுகிறாரோ அப்படித்தான் பர்த்தொலொமேயுவையும் பிலிப்புவையும் மத்தேயு மற்றும் லூக்கா சம்பந்தப்படுத்திப் பேசுகிறார்கள்.—மத் 10:3; லூ 6:14.
வரி வசூலிப்பவரான: இந்த சுவிசேஷப் புத்தகத்தின் எழுத்தாளரான மத்தேயு முன்பு வரி வசூலிப்பவராக இருந்தார்; அதனால், எண்ணிக்கைகளையும் பண மதிப்புகளையும் நிறைய தடவை குறிப்பிட்டிருக்கிறார். (மத் 17:27; 26:15; 27:3) அதுவும், எண்ணிக்கைகளை அதிகத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டிருக்கிறார். இயேசுவின் வம்சாவளிப் பட்டியலை 14 தலைமுறைகள்கொண்ட மூன்று பகுதிகளாகப் பிரித்திருக்கிறார் (மத் 1:1-17); மாதிரி ஜெபத்தில் ஏழு விண்ணப்பங்களைப் பட்டியலிட்டிருக்கிறார் (மத் 6:9-13); மத் 13-ல் ஏழு உவமைகளைக் குறிப்பிட்டிருக்கிறார்; கேடு வருமென்று மத் 23:13-36-ல் ஏழு முறை சொல்லியிருக்கிறார். “வரி வசூலிப்பவர்” என்ற வார்த்தைகளைப் பற்றி மத் 5:46-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
மத்தேயு: லேவி என்றும் அழைக்கப்படுகிறார்.—லூ 5:27.
அல்பேயுவின் மகன் யாக்கோபு: மாற் 3:18-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
ததேயு: லூ 6:16; அப் 1:13 ஆகிய வசனங்களில் கொடுக்கப்பட்டுள்ள அப்போஸ்தலர்களின் பட்டியலில் ததேயுவின் பெயர் இல்லை. அதற்குப் பதிலாக, “யாக்கோபின் மகன் யூதாஸ்” என்று கொடுக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால், ‘யூதாஸ் (யூதாஸ் இஸ்காரியோத்து அல்ல)’ என்று யோவான் குறிப்பிடும் அப்போஸ்தலரின் இன்னொரு பெயர்தான் ததேயு என்ற முடிவுக்கு நாம் வரலாம். (யோவா 14:22) இந்த யூதாசையும் துரோகியான யூதாஸ் இஸ்காரியோத்தையும் குழப்பிக்கொள்ளக் கூடாது என்பதற்காகவே சிலசமயங்களில் ததேயு என்ற பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
பக்திவைராக்கியமுள்ள: நே.மொ., “கெனனீயனாகிய.” இது, அப்போஸ்தலன் சீமோனை அப்போஸ்தலன் சீமோன் பேதுருவிலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள பட்டப்பெயர். (மாற் 3:18) ‘கெனனீயன்’ என்ற வார்த்தை எபிரெய அல்லது அரமேயிக் வார்த்தையிலிருந்து வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது; இதன் அர்த்தம், “போராளி; ஆர்வலர்.” லூக்கா இந்த சீமோனை “பக்திவைராக்கியமுள்ளவன்” என்று குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு அவர் பயன்படுத்திய கிரேக்க வார்த்தை சீலோட்டேஸ். இதன் அர்த்தம், “போராளி; ஆர்வலர்.” (லூ 6:15; அப் 1:13) சீமோன், ரோமர்களை எதிர்த்த யூதப் போராளிகளில் ஒருவராக முன்பு இருந்திருக்கலாம் என்பது உண்மைதான்; ஆனால், பக்திவைராக்கியமும் ஆர்வமும் காட்டியதற்காக அவருக்கு இந்தப் பட்டப்பெயர் கொடுக்கப்பட்டிருக்கலாம்.
இஸ்காரியோத்து: ஒருவேளை இதன் அர்த்தம், “கீரியோத்தைச் சேர்ந்தவன்.” யூதாசின் அப்பா சீமோனும் “இஸ்காரியோத்து” என்று அழைக்கப்படுகிறார். (யோவா 6:71) சீமோனும் யூதாசும் யூதேயாவில் இருந்த கீரியோத்-எஸ்ரோன் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதை இந்த வார்த்தை காட்டுவதாக நம்பப்படுகிறது. (யோசு 15:25) அது உண்மை என்றால், 12 அப்போஸ்தலர்களில் யூதாஸ் மட்டும்தான் யூதேயாவைச் சேர்ந்தவன்; மற்றவர்கள் கலிலேயாவைச் சேர்ந்தவர்கள்.
பரலோக அரசாங்கம் நெருங்கி வந்துவிட்டது: மத் 4:17-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
பிரசங்கியுங்கள்: பிரசங்கிப்பது என்றால், வெளிப்படையாக எல்லாருக்கும் செய்தியை அறிவிப்பது.—மத் 3:2-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
தொழுநோயாளிகளை: மத் 8:2-க்கான ஆராய்ச்சிக் குறிப்பையும், சொல் பட்டியலில் “தொழுநோய்; தொழுநோயாளி” என்ற தலைப்பையும் பாருங்கள்.
வாழ்த்து: யூதர்கள் பொதுவாக, “உங்களுக்குச் சமாதானம்!” என்று சொல்லி வாழ்த்தினார்கள்.—நியா 19:20, அடிக்குறிப்பு; மத் 10:13; லூ 10:5.
உங்களுடைய பாதங்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்: இப்படிச் செய்வது, இனி கடவுள் கொடுக்கப்போகும் தீர்ப்புக்குத் தாங்கள் பொறுப்பல்ல என்று சீஷர்கள் சொல்வதற்கு அடையாளமாக இருந்தது. இதே வார்த்தைகள் மாற் 6:11; லூ 9:5 ஆகிய வசனங்களிலும் வருகின்றன. கூடுதலாக, இது அவர்களுக்கு ஒரு [அல்லது, “அவர்களுக்கு எதிரான”] சாட்சியாக இருக்கும் என்ற வார்த்தைகளும் அந்த வசனங்களில் வருகின்றன. பிசீதியாவிலிருந்த அந்தியோகியாவில் பவுலும் பர்னபாவும் இந்த அறிவுரையைப் பின்பற்றினார்கள் (அப் 13:51); பவுல் கொரிந்துவில் இருந்தபோதும், இதேபோன்ற ஒன்றைச் செய்தார். அதாவது, தன் உடையை உதறி, “இனி உங்களுக்கு என்ன நடந்தாலும் அதற்கு நீங்கள்தான் பொறுப்பு, நான் பொறுப்பல்ல” என்று விளக்கினார். (அப் 18:6) இப்படிப்பட்ட சைகைகள், சீஷர்களுக்குப் புதிதாக இருந்திருக்காது. ஏனென்றால், மற்ற தேசங்களுக்குப் போய்விட்டுத் திரும்பிய யூதர்கள் தங்களுடைய பாதங்கள் அசுத்தமாகிவிட்டதாக நினைத்தார்கள்; அதனால், தங்களுடைய தேசத்துக்குள் மறுபடியும் நுழைவதற்கு முன்னால் தங்கள் செருப்புகளில் படிந்திருந்த தூசியை உதறிப்போட்டார்கள். ஆனால் இயேசு, அநேகமாக வேறொரு அர்த்தத்தில்தான் இந்த அறிவுரைகளைத் தன் சீஷர்களுக்குக் கொடுத்திருப்பார்.
உண்மையாகவே: மத் 5:18-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
இதோ!: மத் 1:23-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
பாம்புகளைப் போல் ஜாக்கிரதையாகவும்: இந்த வசனத்தில், ஜாக்கிரதையாக நடந்துகொள்வது என்பது விவேகத்தோடும் புத்தியோடும் சாமர்த்தியத்தோடும் நடந்துகொள்வதை அர்த்தப்படுத்துகிறது. பெரும்பாலான பாம்புகள் மிகவும் உஷாராக இருக்கின்றன என்றும், தாக்குவதற்குப் பதிலாகத் தப்பியோடவே விரும்புகின்றன என்றும் விலங்கியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். பாம்புகளைப் போல் தன் சீஷர்களும் எதிரிகளைக் குறித்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்று இயேசு எச்சரித்தார்; ஊழியம் செய்யும்போது ஆபத்துகளில் சிக்கிக்கொள்ளாதபடி கவனமாக இருக்க வேண்டுமென்றும் எச்சரித்தார்.
உள்ளூர் நீதிமன்றங்களுக்கு: உள்ளூர் நீதிமன்றங்கள் என்பதற்கான கிரேக்க வார்த்தை, சினெடிரியோன். இங்கே அது பன்மையில் கொடுக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் அந்த வார்த்தை, எருசலேமில் இருந்த யூத உயர் நீதிமன்றத்தை, அதாவது நியாயசங்கத்தை, பெரும்பாலும் குறித்தது. (சொல் பட்டியலில் “நியாயசங்கம்” என்ற தலைப்பையும், மத் 5:22; 26:59-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளையும் பாருங்கள்.) அதேசமயத்தில், ஒரு மாநாட்டை அல்லது கூட்டத்தைப் பொதுப்படையாகக் குறிப்பதற்கும் அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது. இந்த வசனத்தில், ஜெபக்கூடங்களோடு இணைந்திருந்த உள்ளூர் நீதிமன்றங்களைக் குறிக்கிறது. முள்சாட்டையால் அடிக்கும்படியும் ஜெபக்கூடத்திலிருந்து நீக்கும்படியும் உத்தரவிட இந்த நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இருந்தது.—மத் 23:34; மாற் 13:9; லூ 21:12; யோவா 9:22; 12:42; 16:2.
சகித்திருப்பவர்தான்: மத் 24:13-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
மனிதகுமாரன்: மத் 8:20-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
பெயல்செபூப்: ஒருவேளை, பாகால்-செபூப் என்ற பெயரின் மாற்று வடிவமாக இது இருக்கலாம். பாகால்-செபூப் என்பது எக்ரோனில் இருந்த பெலிஸ்தியர்களால் வணங்கப்பட்ட பாகால் தெய்வம். பாகால்-செபூப் என்பதன் அர்த்தம், “ஈக்களின் சொந்தக்காரன் (எஜமான்).” (2ரா 1:3) சில கிரேக்க கையெழுத்துப் பிரதிகளில், பெயல்செபோல் அல்லது பெயசெபோல் என்ற மாற்று வடிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளன; ஒருவேளை இவற்றின் அர்த்தம், “உன்னதமான குடியிருப்பின் சொந்தக்காரன் (எஜமான்).” பைபிளில் பயன்படுத்தப்படாத செவெல் (சாணி) என்ற எபிரெய வார்த்தை இங்கே சொல்வித்தையாகப் பயன்படுத்தப்பட்டிருந்தால், இதன் அர்த்தம் “சாணியின் சொந்தக்காரன் (எஜமான்).” மத் 12:24 காட்டுகிறபடி, பெயல்செபூப் என்பது பேய்களின் தலைவனான சாத்தானுக்குக் கொடுக்கப்பட்ட பட்டப்பெயர்.
இன்னும் நிச்சயம்தானே?: மத் 7:11-க்கான ஆராய்ச்சிக் குறிப்பில் “இன்னும் எந்தளவுக்கு” என்ற தலைப்பைப் பாருங்கள்.
வெளிச்சத்தில்: அதாவது, “வெளிப்படையாக; எல்லாருக்கும்.”
வீட்டு மாடிகளிலிருந்து பிரசங்கியுங்கள்: “வெளிப்படையாக அறிவிப்பு செய்வதை” அர்த்தப்படுத்தும் ஒரு மரபுத்தொடர். பைபிள் காலங்களில், வீடுகளின் மொட்டைமாடிகளிலிருந்து அறிவிப்புகள் செய்யப்பட்டன; அங்கே நடந்த சில செயல்கள் எல்லாருக்கும் தெரியவந்தன.—2சா 16:22.
உயிரை: இங்கே ‘உயிர்’ என்பது, உயிர்த்தெழுதலின் மூலம் எதிர்காலத்தில் பெறப்போகும் உயிரைக் குறிக்கிறது. சைக்கீ என்ற கிரேக்க வார்த்தையும், நெஃபெஷ் என்ற எபிரெய வார்த்தையும் பெரும்பாலான தமிழ் பைபிள்களில் “ஆத்துமா” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆனால், அவை முக்கியமாக (1) நபரை, (2) மிருகத்தை, (3) ஒரு நபரின் அல்லது மிருகத்தின் உயிரை அர்த்தப்படுத்துகின்றன. (ஆதி 1:20; 2:7; 1பே 3:20; அடிக்குறிப்புகள்) பின்வரும் வசனங்களில், சைக்கீ என்ற கிரேக்க வார்த்தை “ஒரு நபரின் உயிரை” குறிப்பதால் ‘உயிர்’ என்றே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது: மத் 6:25; 10:39; 16:25, 26; மாற் 8:35-37; லூ 12:20; யோவா 10:11, 15; 12:25; 13:37, 38; 15:13; அப் 20:10. இதுபோன்ற வசனங்கள், இந்த வசனத்திலுள்ள இயேசுவின் வார்த்தைகளைச் சரியாகப் புரிந்துகொள்ள நமக்கு உதவுகின்றன.—சொல் பட்டியலில் “நெஃபெஷ், சைக்கீ” என்ற தலைப்பைப் பாருங்கள்.
உயிர், உடல் இரண்டையுமே . . . அழிக்க முடிந்தவருக்கே: ஒருவரின் ‘உயிரை’ (இந்த வசனத்தில், மறுபடியும் வாழ்வதற்கான நம்பிக்கையை) அழிக்கவோ ஒருவரை உயிரோடு எழுப்பி என்றென்றும் வாழ வைக்கவோ கடவுளால் மட்டும்தான் முடியும். “ஆத்துமா” என்று பொதுவாக மொழிபெயர்க்கப்படும் கிரேக்க வார்த்தை, அழியக்கூடிய ஒன்றைக் குறிப்பதை இந்த வசனம் காட்டுகிறது. இதைக் காட்டும் மற்ற வசனங்கள் இவைதான்: மாற் 3:4; லூ 17:33; யோவா 12:25.
கெஹென்னாவில்: இது நிரந்தர அழிவைக் குறிக்கிறது.—மத் 5:22-க்கான ஆராய்ச்சிக் குறிப்பையும், சொல் பட்டியலில் “கெஹென்னா” என்ற தலைப்பையும் பாருங்கள்.
குறைந்த மதிப்புள்ள ஒரு காசுக்கு: நே.மொ., “அசாரியன் காசுக்கு.” இது 45 நிமிட வேலைக்குக் கொடுக்கப்பட்ட கூலி. (இணைப்பு B14-ஐப் பாருங்கள்.) இயேசு மூன்றாவது தடவையாக கலிலேயாவில் ஊழியம் செய்த இந்தச் சமயத்தில், ஒரு அசாரியன் காசுக்கு இரண்டு சிட்டுக்குருவிகள் விற்கப்பட்டதாகச் சொன்னார். கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்குப் பிறகு அவர் யூதேயாவில் ஊழியம் செய்த சமயத்தில், இரண்டு அசாரியன் காசுக்கு ஐந்து சிட்டுக்குருவிகள் விற்கப்பட்டதாகச் சொன்னார். (லூ 12:6) இந்த இரண்டு பதிவுகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, சிட்டுக்குருவிகளை வியாபாரிகள் எந்தளவுக்குக் குறைவாக மதிப்பிட்டார்கள் என்று தெரிகிறது; ஐந்தாவது சிட்டுக்குருவியை அவர்கள் இலவசமாகவே கொடுத்துவிட்டார்கள்.
சிட்டுக்குருவிகளை: கிரேக்கில், ஸ்ட்ரௌத்தியான் என்ற வார்த்தை குறுமை வடிவத்தில் இருக்கிறது; அப்படியென்றால், அது எந்தவொரு சின்னஞ்சிறு பறவையையும் குறித்திருக்கலாம். ஆனாலும், அது பெரும்பாலும் சிட்டுக்குருவிகளைக் குறித்தது. உணவுக்காக விற்கப்பட்ட பறவைகளிலேயே அவைதான் விலை குறைவாக இருந்தன.
உங்கள் தலையிலுள்ள முடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது: மனிதர்களுடைய தலையில் சராசரியாக 1,00,000-க்கும் அதிகமான முடி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட நுணுக்கமான விவரங்களைக்கூட யெகோவா நன்றாகத் தெரிந்துவைத்திருப்பது, கிறிஸ்துவைப் பின்பற்றுகிற ஒவ்வொருவர் மீதும் அவர் காட்டுகிற அளவுகடந்த அக்கறைக்கு உத்தரவாதம் அளிக்கிறது.
சித்திரவதைக் கம்பத்தை: வே.வா., “மரண தண்டனைக் கம்பத்தை.” இதற்கான கிரேக்க வார்த்தையான ஸ்டவ்ரஸ் இங்குதான் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பண்டைய கிரேக்க மொழியில், முக்கியமாக ஒரு செங்குத்தான மரக் கம்பத்தை அது குறித்தது. அடையாள அர்த்தத்தில், இயேசுவின் சீஷராக இருப்பதால் ஒரு நபர் அனுபவித்த வேதனையையும் அவமானத்தையும் சித்திரவதையையும், அந்த நபர் எதிர்ப்பட்ட சாவையும்கூட சிலசமயம் குறித்தது.—சொல் பட்டியலில் “சித்திரவதைக் கம்பம்” என்ற தலைப்பைப் பாருங்கள்.
சுமந்துகொண்டு: நே.மொ., “எடுத்துக்கொண்டு; பிடித்துக்கொண்டு.” இங்கே அடையாள அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, இயேசுவின் சீஷராக இருப்பதால் வரும் பொறுப்புகளையும் அதன் விளைவுகளையும் ஏற்றுக்கொள்வதைக் குறிக்கிறது.
உயிரை: ‘உயிர்’ என்பதற்கான கிரேக்க வார்த்தை சைக்கீ. சொல் பட்டியலில் “நெஃபெஷ், சைக்கீ” என்ற தலைப்பைப் பாருங்கள்.
ஒருவர் தீர்க்கதரிசியாக இருப்பதால்: நே.மொ., “தீர்க்கதிரிசி என்ற பெயரில்.” இந்த வசனத்தில் “பெயரில்” என்ற கிரேக்க மரபுத்தொடர், ஒரு தீர்க்கதரிசி வகிக்கிற பொறுப்பையும் செய்கிற வேலையையும் மதிப்பதைக் காட்டுகிறது.—மத் 28:19-க்கான ஆராய்ச்சிக் குறிப்பை ஒப்பிட்டுப் பாருங்கள்.
தீர்க்கதரிசி பெறுகிற அதே பலனை: கடவுளுடைய உண்மையான தீர்க்கதரிசிகளை ஏற்றுக்கொண்டு அவர்களை ஆதரிப்பவர்கள் மிகுந்த பலனைப் பெறுவார்கள். ஒரு விதவையைப் பற்றி 1ரா 17-ல் உள்ள பதிவு இதற்கு ஒரு உதாரணம்.