மத்தேயு
ஆராய்ச்சிக் குறிப்புகள்—அதிகாரம் 16
அதற்கு அவர்: சில முக்கியமான பழங்காலக் கையெழுத்துப் பிரதிகளில் வசனம் 2-ல் உள்ள மற்ற வார்த்தைகளும் வசனம் 3-ல் உள்ள வார்த்தைகளும் இல்லை. இந்த வார்த்தைகள் எந்தளவுக்கு நம்பகமானவை என்று சரியாகத் தெரியாவிட்டாலும், இவற்றைச் சேர்ப்பது சரி என்றே நிறைய அறிஞர்கள் சொல்கிறார்கள். ஏனென்றால், மற்ற பழங்காலக் கையெழுத்துப் பிரதிகளிலும் பிற்காலக் கையெழுத்துப் பிரதிகளிலும் பெரும்பாலானவற்றில் அவை இருக்கின்றன.
விசுவாசதுரோகம்: கடவுளுக்குத் துரோகம் செய்வதை, அதாவது உண்மையில்லாமல் நடந்துகொள்வதை, குறிக்கிறது.—மாற் 8:38-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
யோனாவின் அடையாளத்தை: மத் 12:39-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
அக்கரைக்கு: அதாவது, “கலிலேயா கடலின் அக்கரைக்கு.” அநேகமாக, சீஷர்கள் அந்த ஏரியின் வடகிழக்குக் கரையில் அமைந்திருந்த பெத்சாயிதாவை நோக்கிப் போனார்கள்.
புளித்த மாவை: பைபிள் புளித்த மாவை அடிக்கடி பாவத்துக்கும் முறைகேட்டுக்கும் அடையாளமாகப் பயன்படுத்துகிறது. இங்கே அது முறைகெட்ட போதனைகளைக் குறிக்கிறது.—மத் 16:12; 1கொ 5:6-8; மத் 13:33-க்கான ஆராய்ச்சிக் குறிப்பை ஒப்பிட்டுப் பாருங்கள்.
கூடைகளில்: இயேசு மக்களுக்கு அற்புதமாக உணவளித்த இரண்டு சந்தர்ப்பங்களைப் பற்றி விவரிக்கிற எல்லா பதிவுகளுமே (மத் 14:20; 15:37; 16:10-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளையும், மாற் 6:43; 8:8, 19, 20 ஆகிய இணைவசனங்களையும் பாருங்கள்), மீதியானதைச் சேகரிப்பதற்கு வித்தியாசமான கூடைகள் பயன்படுத்தப்பட்டதைக் காட்டுகின்றன. 5,000-க்கும் அதிகமானோருக்கு இயேசு உணவளித்ததைப் பற்றிச் சொல்லும்போது, ‘கூடை’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கோஃபினோஸ் என்ற கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது; 4,000-க்கும் அதிகமானோருக்கு அவர் உணவளித்ததைப் பற்றிச் சொல்லும்போது, ‘பெரிய கூடை’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள ஸ்ஃபிரிஸ் என்ற கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை எழுதியவர்கள் அந்தச் சம்பவத்தைக் கண்கூடாகப் பார்த்திருந்தார்கள் அல்லது அதைப் பார்த்திருந்த நம்பகமான நபர்களிடமிருந்து விவரங்களைத் தெரிந்துகொண்டார்கள் என்பதை இது காட்டுகிறது.
பெரிய கூடைகளில்: வே.வா., “உணவுப் பொருள்களுக்கான கூடைகளில்.”—மத் 15:37; 16:9-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.
பிலிப்புச் செசரியாவில்: இது, யோர்தான் ஆற்றின் பிறப்பிடத்துக்குப் பக்கத்தில் அமைந்திருந்த ஊர். இது கடல் மட்டத்திலிருந்து 350 மீ. (1,150 அடி) உயரத்தில் இருந்தது. கலிலேயா கடலின் வடக்கே சுமார் 40 கி.மீ. (25 மைல்) தூரத்திலும், எர்மோன் மலையின் தென்மேற்கு அடிவாரத்துக்குப் பக்கத்திலும் இருந்தது. ரோமப் பேரரசனைக் கௌரவிப்பதற்காக, மகா ஏரோதுவின் மகனான பிலிப்பு (கால்பங்கு தேசத்து அதிபதி) இந்த ஊருக்கு செசரியா என்று பெயர் வைத்தார். அதே பெயரில் இன்னொரு துறைமுக நகரம் இருந்தது. அதனால், குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக இந்த ஊர் பிலிப்புச் செசரியா என்று அழைக்கப்பட்டது. இதன் அர்த்தம், “பிலிப்புவின் செசரியா.”—இணைப்பு B10-ஐப் பாருங்கள்.
மனிதகுமாரனை: மத் 8:20-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
யோவான் ஸ்நானகர்: மத் 3:1-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
சீமோன் பேதுரு: மத் 10:2-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
கிறிஸ்து: இயேசுவை “கிறிஸ்து” (கிரேக்கில், கிறிஸ்டோஸ்) என்று பேதுரு அடையாளம் காட்டினார். இதற்கான எபிரெயப் பட்டப்பெயர் மேசியா” (மஷியாக் என்ற எபிரெய வார்த்தையிலிருந்து வந்திருக்கிறது). “அபிஷேகம் செய்யப்பட்டவர்” என்பதுதான் இந்த இரண்டு வார்த்தைகளின் அர்த்தம். இங்கே கிரேக்கில், “கிறிஸ்து” என்ற வார்த்தைக்கு முன்பு நிச்சயச் சுட்டிடைச்சொல் கொடுக்கப்பட்டுள்ளது; மேசியாவாக இயேசு வகிக்கும் பொறுப்பை வலியுறுத்துவதற்காக இது அநேகமாகக் கொடுக்கப்பட்டிருக்கலாம்.—மத் 1:1; 2:4-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.
உயிருள்ள கடவுளுடைய: பிலிப்புச் செசரியாவில் இருந்தவர்களை (மத் 16:13) போன்ற மற்ற தேசத்து மக்கள் உயிரற்ற தெய்வங்களை வணங்கினார்கள்; ஆனால், யெகோவா உயிருள்ள கடவுளாகவும் துடிப்போடு செயல்படுகிற கடவுளாகவும் இருக்கிறார் (அப் 14:15) என்பதை இந்த வார்த்தைகள் காட்டுகின்றன. எபிரெய வேதாகமத்திலும் இந்த வார்த்தைகள் கொடுக்கப்பட்டுள்ளன.—உபா 5:26; எரே 10:10.
யோனாவின் மகனான: வே.வா., “பர்-யோனா.” நிறைய எபிரெயப் பெயர்களில் பென் என்ற எபிரெய வார்த்தையோ பர் என்ற அரமேயிக் வார்த்தையோ சேர்க்கப்பட்டது; அந்தப் பெயரோடு அப்பாவின் பெயரும் குடும்பப் பெயராகச் சேர்க்கப்பட்டது. பென், பர் என்ற இரண்டு வார்த்தைகளின் அர்த்தமும், “மகன்” என்பதுதான். பர்த்தொலொமேயு, பர்திமேயு, பர்னபா, பர்யேசு போன்ற நிறைய பெயர்களில் பர் என்ற அரமேயிக் வார்த்தை சேர்க்கப்பட்டிருப்பது, இயேசுவின் காலத்தில் பேசப்பட்ட எபிரெய மொழியில் அரமேயிக் மொழியின் தாக்கம் இருந்ததைக் காட்டுகிறது.
எந்த மனுஷனும்: நே.மொ., “சதையும் இரத்தமும்.” இவை, யூதர்கள் பொதுவாகப் பயன்படுத்திய வார்த்தைகள். இந்த வசனத்தில், பேதுரு தானாகவோ வேறொரு மனிதர் சொல்லியோ இந்த முடிவுக்கு வரவில்லை என்பதை இயேசு அர்த்தப்படுத்தினார்.
நீ பேதுரு; . . . இந்தக் கற்பாறைமேல்: பெட்ரோஸ் என்ற கிரேக்க வார்த்தை ஆண்பாலில் பயன்படுத்தப்படும்போது, “பாறாங்கல்; கல்” என்று அர்த்தம். இது இங்கே ஒரு பெயராக (பேதுரு) பயன்படுத்தப்பட்டுள்ளது. சீமோனுக்கு இயேசு வைத்த பெயரின் கிரேக்க வடிவம் இது. (யோவா 1:42) இந்த வார்த்தையின் பெண்பால் பெட்ரா. இது இங்கே “கற்பாறை” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த கிரேக்க வார்த்தை அடிநிலப்பாறையை, செங்குத்தான பாறையை, அல்லது ஒரு பெரிய கற்பாறையைக் குறிக்கலாம். இதே கிரேக்க வார்த்தைதான் மத் 7:24, 25; 27:60; லூ 6:48; 8:6; ரோ 9:33; 1கொ 10:4; 1பே 2:8 ஆகிய வசனங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. “என்னுடைய சபையை இந்தக் கற்பாறைமேல் கட்டுவேன்” என்று இயேசு சொன்னபோது, அந்தக் கற்பாறை தான்தான் என்று பேதுரு நினைத்ததாகத் தெரியவில்லை; ஏனென்றால், ரொம்பக் காலத்துக்கு முன்பே முன்னறிவிக்கப்பட்டு, கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட “மூலைக்கல்” இயேசுதான் என்று 1பே 2:4-8-ல் அவர் எழுதினார். அதேபோல் அப்போஸ்தலன் பவுலும், இயேசுவை ‘அஸ்திவாரம்’ என்றும், “கற்பாறை” என்றும் குறிப்பிட்டார். (1கொ 3:11; 10:4) அதனால், இயேசு இங்கே சொல்வித்தையைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது; அதாவது, ‘நான் உன்னை பேதுரு (பாறாங்கல்) என்று அழைத்தேன். அப்படிப்பட்ட நீ “இந்தக் கற்பாறை” (கிறிஸ்து) யாரென்று சரியாகப் புரிந்துகொண்டாய். இந்தக் கற்பாறைதான் கிறிஸ்தவச் சபையின் அஸ்திவாரமாக இருப்பார்’ என்று இயேசு சொன்னதாகத் தெரிகிறது.
சபையை: சபை என்பதற்கான கிரேக்க வார்த்தை எக்லிசீயா. இந்த வசனத்தில்தான் இது முதல் தடவை வருகிறது. எக் என்ற கிரேக்க வார்த்தையும் (அர்த்தம், “வெளியே”), கலீயோ என்ற கிரேக்க வார்த்தையும் (அர்த்தம், “அழைப்பது”) சேர்ந்ததுதான் எக்லிசீயா. ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக அல்லது வேலைக்காக வரவழைக்கப்பட்ட அல்லது ஒன்றுதிரட்டப்பட்ட தொகுதியை இது குறிக்கிறது. (சொல் பட்டியலைப் பாருங்கள்.) இந்த வசனத்தில், பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் அடங்கிய கிறிஸ்தவ சபை உருவாவதைப் பற்றி இயேசு முன்னறிவித்தார்; “உயிருள்ள கற்களாகிய” அவர்கள் ‘ஆன்மீக வீடாகக் கட்டப்படுகிறார்கள்.’ (1பே 2:4, 5) “சபை” என்பதற்கான எபிரெய வார்த்தைக்கு இந்தக் கிரேக்க வார்த்தையைத்தான் செப்டுவஜன்ட் அடிக்கடி பயன்படுத்தியிருக்கிறது; சபை என்பது பெரும்பாலும் கடவுளுடைய மக்களை ஒட்டுமொத்தமாகக் குறிக்கிறது. (உபா 23:3; 31:30) எகிப்திலிருந்து அழைத்துவரப்பட்ட இஸ்ரவேலர்களை “ஒரு சபை” என்று அப் 7:38 குறிப்பிடுகிறது. அதேபோல், ‘இருளிலிருந்து . . . அழைக்கப்பட்டதாகவும்,’ ‘இந்த உலகத்திலிருந்து . . . தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும்’ சொல்லப்படுகிற கிறிஸ்தவர்கள் ‘கடவுளுடைய சபையாக’ இருக்கிறார்கள்.—1பே 2:9; யோவா 15:19; 1கொ 1:1.
கல்லறையின்: கல்லறை என்பதற்கான கிரேக்க வார்த்தை, ஹேடீஸ். இது இறந்தவர்களின் நிலையைக் குறிக்கிறது. (சொல் பட்டியலில், “கல்லறை” என்ற தலைப்பைப் பாருங்கள்.) இறந்தவர்கள் ‘மரண வாசலுக்கும்’ (சங் 107:18), ‘கல்லறையின் வாசலுக்கும்’ (ஏசா 38:10) உள்ளே அடைக்கப்பட்டிருப்பதாக பைபிள் சொல்கிறது. அதாவது, அவர்கள் மரணத்தின் பிடியில் இருப்பதாகச் சொல்கிறது. கல்லறையை ஜெயிக்கப்போவதாக இயேசு வாக்குறுதி கொடுக்கிறார். அதாவது, உயிர்த்தெழுதலின்போது கல்லறையின் ‘வாசல்கள்’ திறக்கப்பட்டு, இறந்தவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று சொல்கிறார். அவருடைய வாக்கு உண்மை என்பதை அவருடைய உயிர்த்தெழுதலே உறுதிசெய்தது. (மத் 16:21) சபை இயேசுமேல் கட்டப்பட்டிருக்கிறது; அதன் அங்கத்தினர்களை மரணத்திலிருந்து விடுவிக்க அவரால் முடியும். அதனால், கல்லறையால் சபையை ஜெயிக்கவோ அதை நிரந்தரமாகத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்கவோ முடியாது.—அப் 2:31; வெளி 1:18; 20:13, 14.
பரலோக அரசாங்கத்தின் சாவிகளை: பைபிள் பதிவுகளின்படி, ஒருவரிடம் நிஜமான சாவியோ அடையாளப்பூர்வ சாவியோ ஒப்படைக்கப்பட்டபோது, அவருக்கு ஓரளவு அதிகாரம் கொடுக்கப்பட்டது. (1நா 9:26, 27; ஏசா 22:20-22) அதனால், “சாவி” என்ற வார்த்தை அதிகாரத்துக்கும் பொறுப்புக்கும் அடையாளமாக ஆனது. பேதுருவிடம் இப்படிப்பட்ட “சாவிகள்” ஒப்படைக்கப்பட்டன. அவர் யூதர்களுக்கும் (அப் 2:22-41), சமாரியர்களுக்கும் (அப் 8:14-17), மற்ற மக்களுக்கும் (அப் 10:34-38) ஒரு கதவைத் திறந்துவைத்தார்; அதாவது, கடவுளுடைய சக்தியைப் பெற்று பரலோக அரசாங்கத்துக்குள் நுழையும் வாய்ப்பைத் திறந்துவைத்தார்.
பூட்டுவதெல்லாம் . . . திறப்பதெல்லாம்: வே.வா., “கட்டுவதெல்லாம் . . . கட்டவிழ்ப்பதெல்லாம்.” சில செயல்களையோ மாற்றங்களையோ தடை செய்கிற அல்லது அனுமதிக்கிற தீர்மானங்களைக் குறிப்பதாகத் தெரிகிறது.—மத் 18:18-க்கான ஆராய்ச்சிக் குறிப்பை ஒப்பிட்டுப் பாருங்கள்.
ஏற்கெனவே பூட்டப்பட்டிருக்கும் . . . ஏற்கெனவே திறக்கப்பட்டிருக்கும்: வே.வா., “ஏற்கெனவே கட்டப்பட்டிருக்கும் . . . ஏற்கெனவே கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்.” இந்த வார்த்தைகளுக்கான கிரேக்க வினைச்சொற்கள் இந்த வசனத்தில் வித்தியாசமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. பேதுரு என்ன தீர்மானம் எடுத்தாலும் (அவர் “கட்டுவதெல்லாம்”; “கட்டவிழ்ப்பதெல்லாம்”), அதற்கு முன்பே பரலோகத்தில் அந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கும் என்பதை அவை காட்டுகின்றன. அதாவது, பேதுரு தீர்மானம் எடுத்துவிட்ட பின்பு பரலோகத்தில் தீர்மானம் எடுக்கப்படாது, பரலோகத்தில்தான் முதலில் தீர்மானம் எடுக்கப்படும் என்பதைக் காட்டுகின்றன.—மத் 18:18-க்கான ஆராய்ச்சிக் குறிப்பை ஒப்பிட்டுப் பாருங்கள்.
கிறிஸ்து: மத் 16:16-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
இயேசு: சில பழங்கால கையெழுத்துப் பிரதிகளில் “இயேசு கிறிஸ்து” என்று கொடுக்கப்பட்டுள்ளது.
பெரியோர்களாலும்: வே.வா., “மூப்பர்களாலும்.” பெரியோர்கள் என்பதற்கான கிரேக்க வார்த்தை பிரஸ்பிட்டிரோஸ். பைபிளில் பயன்படுத்தப்படும்போது, சமுதாயத்திலோ தேசத்திலோ அதிகாரமும் பொறுப்பும் உள்ள நபர்களை அது முக்கியமாகக் குறிக்கிறது. அது சிலசமயங்களில் வயதில் மூத்தவர்களைக் குறிக்கிறது (லூ 15:25; அப் 2:17), ஆனால் எப்போதுமே அல்ல. இந்த வசனத்தில் அது யூதத் தலைவர்களைக் குறிக்கிறது; அவர்கள் அடிக்கடி முதன்மை குருமார்களோடும் வேத அறிஞர்களோடும் சேர்த்துக் குறிப்பிடப்படுகிறார்கள். இந்த மூன்று பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்தான் நியாயசங்கத்தின் உறுப்பினர்களாக இருந்தார்கள்.—மத் 21:23; 26:3, 47, 57; 27:1, 41; 28:12; சொல் பட்டியலில் “மூப்பர்கள்; பெரியோர்கள்” என்ற தலைப்பைப் பாருங்கள்.
முதன்மை குருமார்களாலும்: மத் 2:4-க்கான ஆராய்ச்சிக் குறிப்பையும், சொல் பட்டியலில் “முதன்மை குரு” என்ற தலைப்பையும் பாருங்கள்.
வேத அறிஞர்களாலும்: மத் 2:4-க்கான ஆராய்ச்சிக் குறிப்பையும், சொல் பட்டியலில் “வேத அறிஞர்கள்” என்ற தலைப்பையும் பாருங்கள்.
சாத்தானே: பேதுருவைப் பிசாசாகிய சாத்தான் என்று இயேசு சொல்லவில்லை; “எதிர்ப்பவன்” என்றுதான் சொன்னார். ஏனென்றால், சாட்டான் என்ற எபிரெய வார்த்தையின் அர்த்தம், “எதிர்ப்பவன்.” இந்தச் சந்தர்ப்பத்தில் சாத்தான் தன்மேல் செல்வாக்கு செலுத்த பேதுரு அனுமதித்துவிட்டதை இயேசு சுட்டிக்காட்டியிருக்கலாம்.
முட்டுக்கட்டையாக: மத் 18:7-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
தன்னையே துறந்து: வே.வா., “தனக்குரிய எல்லா உரிமைகளையும் விட்டுக்கொடுத்து.” ஒருவர் தன்னையே முழுமையாகத் துறந்துவிட, அதாவது தனக்குத்தானே மறுப்பு சொல்லிவிட, அல்லது கடவுளிடம் தன்னையே முழுமையாக ஒப்படைத்துவிட மனமுள்ளவராக இருப்பதை இது குறிக்கிறது. இதற்கான கிரேக்க வார்த்தைகளை, “தனக்குத்தானே வேண்டாம் என்று சொல்லி” என்றும் மொழிபெயர்க்கலாம். இது பொருத்தமாகவும் இருக்கிறது. ஏனென்றால், ஒருவர் தன்னையே துறக்கும்போது, தன்னுடைய ஆசைகளையும் லட்சியங்களையும் சௌகரியங்களையும் வேண்டாமென்று ஒதுக்க வேண்டியிருக்கலாம், அதாவது அவற்றுக்கு மறுப்பு சொல்ல வேண்டியிருக்கலாம். (2கொ 5:14, 15) இயேசுவைத் தெரியாது என்று சொல்லி பேதுரு மறுத்ததைப் பற்றி விவரிக்கும்போது மத்தேயுவும் அதே கிரேக்க வினைச்சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்.—மத் 26:34, 35, 75.
சித்திரவதைக் கம்பத்தை: வே.வா., “மரண தண்டனைக் கம்பத்தை.” இதற்கான கிரேக்க வார்த்தையான ஸ்டவ்ரஸ் இங்குதான் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பண்டைய கிரேக்க மொழியில், முக்கியமாக ஒரு செங்குத்தான மரக் கம்பத்தை அது குறித்தது. அடையாள அர்த்தத்தில், இயேசுவின் சீஷராக இருப்பதால் ஒரு நபர் அனுபவித்த வேதனையையும் அவமானத்தையும் சித்திரவதையையும், அந்த நபர் எதிர்ப்பட்ட சாவையும்கூட சிலசமயம் குறித்தது.—சொல் பட்டியலில் “சித்திரவதைக் கம்பம்” என்ற தலைப்பைப் பாருங்கள்.
உயிரை: ‘உயிர்’ என்பதற்கான கிரேக்க வார்த்தை சைக்கீ. சொல் பட்டியலில் “நெஃபெஷ், சைக்கீ” என்ற தலைப்பைப் பாருங்கள்.
உயிரை: மத் 16:25-க்கான ஆராய்ச்சிக் குறிப்பையும், சொல் பட்டியலில் “நெஃபெஷ், சைக்கீ” என்ற தலைப்பையும் பாருங்கள்.
உண்மையாகவே: மத் 5:18-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.