மத்தேயு
ஆராய்ச்சிக் குறிப்புகள்—அதிகாரம் 28
ஓய்வுநாளுக்கு: நே.மொ., “ஓய்வுநாட்களுக்கு.” இந்த வசனத்தில், ஓய்வுநாள் என்பதற்கான கிரேக்க வார்த்தை (சாபாட்டன்) பன்மை வடிவத்தில் இரண்டு தடவை வருகிறது. முதல் தடவை, அது வாரத்தின் ஏழாம் நாளை, அதாவது ஒரே நாளை, குறிக்கிறது; அதனால், ‘ஓய்வுநாள்’ என்றே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இரண்டாவது தடவை, அது ஏழு நாட்களை மொத்தமாகக் குறிக்கிறது; அதனால், ‘வாரம்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அந்த ஓய்வுநாள் (நிசான் 15) சூரிய அஸ்தமனத்தின்போது முடிவுக்கு வந்தது. “ஓய்வுநாளுக்குப் பின்பு,” இருட்டும் நேரத்தில் நடந்ததைப் பற்றி மத்தேயு எழுதியதாகச் சிலர் சொல்லியிருக்கிறார்கள்; ஆனால், நிசான் 16-ன் ‘விடியற்காலையில்,’ ‘சூரியன் உதயமான நேரத்தில்’ அந்தப் பெண்கள் கல்லறையைப் பார்க்கப் போனார்கள் என்பதை மற்ற சுவிசேஷப் பதிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன.—மாற் 16:1, 2; லூ 24:1; யோவா 20:1; சொல் பட்டியலில் “ஓய்வுநாள்” என்ற தலைப்பையும், இணைப்பு B12-ஐயும் பாருங்கள்.
வாரத்தின் முதலாம் நாள்: அதாவது, “நிசான் 16.” ஓய்வுநாளுக்கு அடுத்த நாள்தான் யூதர்களுக்கு வாரத்தின் முதல் நாளாக இருந்தது.
யெகோவாவின் தூதர்: மத் 1:20-க்கான ஆராய்ச்சிக் குறிப்பையும் இணைப்பு C-ஐயும் பாருங்கள்.
சீஷர்களிடம் போய், அவர் உயிரோடு எழுப்பப்பட்டிருக்கிறார் என்று சொல்லுங்கள்: இயேசு உயிரோடு எழுப்பப்பட்டிருந்த செய்தி இந்தப் பெண்களிடம்தான் முதலில் சொல்லப்பட்டது; மற்ற சீஷர்களிடம் அதைத் தெரிவிக்கும்படியும் இவர்களிடம்தான் சொல்லப்பட்டது. (மத் 28:2, 5, 7) பைபிளுக்கு முரணான யூதப் பாரம்பரியத்தின்படி, நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. அதற்கு நேர்மாறாக, யெகோவாவின் தூதர் இந்தச் சந்தோஷமான வேலையைக் கொடுத்து இந்தப் பெண்களைக் கௌரவப்படுத்தினார்.
மண்டிபோட்டு: வே.வா., “தலைவணங்கி; தரைவரைக்கும் குனிந்து; மரியாதை செலுத்தி.”—மத் 8:2; 14:33; 15:25-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.
என் சகோதரர்களிடம்: இயேசு தன் சீஷர்களை ‘சகோதரர்கள்’ என்று அழைத்தார்; ஏனென்றால், ஆன்மீக விதத்தில் அவர்கள் இயேசுவின் குடும்பத்தாராக இருந்தார்கள்.—மத் 28:16-ஐப் பாருங்கள்; இவற்றை ஒப்பிட்டுப் பாருங்கள்: மத் 25:40; யோவா 20:17; எபி 2:10-12.
பெரியோர்களோடு: மத் 16:21-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
இது: அதாவது, “அவர்கள் தூங்கிக்கொண்டிருந்ததாகச் சொல்லப்போகும் பொய்.” ரோமப் படைவீரர்கள் காவல் காக்கும்போது தூங்கிவிட்டால் மரண தண்டனை பெறலாம்.
ஆளுநருடைய: அதாவது, “பொந்தியு பிலாத்துவுடைய.”
போனார்கள்: அநேகமாக, கலிலேயாவில் நடந்த இந்தக் கூட்டத்தில் 500-க்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டார்கள்.—1கொ 15:6.
சிலர் சந்தேகப்பட்டார்கள்: 1கொ 15:6-ன்படி பார்த்தால், சந்தேகப்பட்டவர்களில் அப்போஸ்தலர்கள் இருந்ததாகத் தெரியவில்லை. கலிலேயாவில் எந்த சீஷர்கள்முன் இயேசு இன்னும் தோன்றாமல் இருந்தாரோ அவர்கள்தான் சந்தேகப்பட்டதாகத் தெரிகிறது.
எல்லா தேசத்தாரையும்: ‘எல்லா தேசத்தாரிடமும்’ போக வேண்டுமென்ற கட்டளை புதிதாக இருந்தது. இயேசு ஊழியம் செய்த காலத்திற்கு முன்பு, மற்ற தேசத்தார் இஸ்ரவேலுக்கு வந்து இஸ்ரவேலர்களோடு சேர்ந்து யெகோவாவை வணங்க முடிந்தது. (1ரா 8:41-43) ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தில், மற்ற தேசத்தாரிடம் போய்ப் பிரசங்கிக்கும்படி இயேசு தன் சீஷர்களுக்குக் கட்டளை கொடுத்தார். இப்படி, சீஷராக்கும் வேலையைக் கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதும் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.—மத் 10:1, 5-7; வெளி 7:9; மத் 24:14-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
சீஷர்களாக்கி: இதற்கான கிரேக்க வினைச்சொல் மாத்தெட்யூயோ. “கற்றுக்கொடுத்து” என்று இதை மொழிபெயர்க்கலாம்; சீஷர்களாக்கும் குறிக்கோளோடு கற்றுக்கொடுப்பதை இது அர்த்தப்படுத்தலாம். “ஞானஸ்நானம் கொடுங்கள்,” “கற்றுக்கொடுங்கள்” என்ற வினைச்சொற்கள், ‘சீஷர்களாக்க’ வேண்டுமென்ற கட்டளையில் என்ன உட்பட்டிருக்கிறது என்பதைக் காட்டுகின்றன.
பரலோகத் தகப்பனின் . . . அவருடைய மகனின் . . . அவருடைய சக்தியின்: யெகோவாதான் நம் பரலோகத் தகப்பன் என்று ஏற்றுக்கொள்வது இயல்பானது; ஏனென்றால், அவர் நம்மைப் படைத்தவர், நமக்கு உயிர் கொடுத்தவர். (சங் 36:7, 9; வெளி 4:11) அதேசமயத்தில், கடவுளுடைய நோக்கத்தில் அவருடைய மகன் வகிக்கிற பங்கை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மீட்புப் பெற முடியாது என்றும் பைபிள் சொல்கிறது. (யோவா 14:6; அப் 4:12) அதுமட்டுமல்ல, கடவுளுடைய சக்தி வகிக்கிற பங்கை ஏற்றுக்கொள்வதும் அவசியம். ஏனென்றால், கடவுள் அதைப் பல விதங்களில் பயன்படுத்துகிறார். உதாரணத்துக்கு, உயிர் கொடுப்பதற்காகவும் (யோபு 33:4), தன் செய்திகளைச் சொல்ல மனிதர்களைத் தூண்டுவதற்காகவும் (2பே 1:21), தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற அவர்களுக்கு வல்லமை தருவதற்காகவும் (ரோ 15:19) அதைப் பயன்படுத்துகிறார். இந்த வார்த்தைகள் திருத்துவத்தை ஆதரிப்பதாகச் சிலர் சொல்கிறார்கள். ஆனால், தகப்பனும் மகனும் கடவுளுடைய சக்தியும் அதிகாரத்திலோ ஸ்தானத்திலோ என்றென்றும் நிலைத்திருப்பதிலோ சமம் என்று பைபிள் எங்குமே சொல்வதில்லை. ஒரே வசனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிற காரணத்துக்காக, தகப்பனும் மகனும் கடவுளுடைய சக்தியும் சமம் என்றோ, என்றென்றும் நிலைத்திருக்கிற மூன்று கடவுள்கள் என்றோ சொல்லவே முடியாது.—மாற் 13:32; கொலோ 1:15; 1தீ 5:21.
அவருடைய சக்தியின்: வே.வா., “செயல் நடப்பிக்கும் அவருடைய பரிசுத்தமான ஆற்றலின்.” “சக்தி” என்ற வார்த்தை (கிரேக்கில், அஃறிணையில் இருக்கிறது) ஒரு நபரைக் குறிப்பதில்லை. அது கடவுளிடமிருந்து வருகிற ஆற்றலை, அதாவது செயல்படுகிற ஆற்றலை, குறிக்கிறது.—சொல் பட்டியலில் “கடவுளுடைய சக்தி”; “ரூவக்; நியூமா” என்ற தலைப்புகளைப் பாருங்கள்.
பெயரிலும்: ‘பெயர்’ என்பதற்கான கிரேக்க வார்த்தை (ஓனோமா) ஒருவருடைய தனிப்பட்ட பெயரை மட்டும் குறிப்பதில்லை. இந்த வசனத்தில், பரலோகத் தகப்பன் மற்றும் மகனுடைய அதிகாரத்தையும் ஸ்தானத்தையும், கடவுளுடைய சக்தியின் பங்கையும் ஏற்றுக்கொள்வதைக் குறிக்கிறது. இதையெல்லாம் ஏற்றுக்கொள்ளும்போது கடவுளோடு புதிய பந்தம் உருவாகிறது.—மத் 10:41-க்கான ஆராய்ச்சிக் குறிப்பை ஒப்பிட்டுப் பாருங்கள்.
அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்: ‘கற்றுக்கொடுப்பது’ என்பதற்கான கிரேக்க வார்த்தை அறிவுரை சொல்வது, விளக்குவது, பக்குவமாக எடுத்துக் காட்டுவது, அத்தாட்சி அளிப்பது போன்றவற்றைக் குறிக்கிறது. (மத் 3:1; 4:23-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.) இயேசு கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பது, தொடர்ந்து செய்ய வேண்டிய ஒரு வேலை. அவர் கற்றுக்கொடுத்த விஷயங்களைக் கற்றுக்கொடுப்பதும், அவற்றைக் கடைப்பிடிப்பதும், அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றுவதும் அதில் அடங்கும்.—யோவா 13:17; எபே 4:21; 1பே 2:21.
இதோ!: மத் 1:23-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
இந்தச் சகாப்தத்தின்: சொல் பட்டியலில் “சகாப்தம் (சகாப்தங்கள்)” என்ற தலைப்பைப் பாருங்கள்.
கடைசிக் கட்டம்வரை: மத் 24:3-க்கான ஆராய்ச்சிக் குறிப்பையும், சொல் பட்டியலில் “சகாப்தத்தின் கடைசிக் கட்டம்” என்ற தலைப்பையும் பாருங்கள்.