சமாதானம் எவ்விதமாக மெய்மையாகக்கூடும்?
நிரந்தரமான சமாதானம், மெய்மையாவதை தடை செய்யும் முக்கிய இடறல் கற்களில் சில யாவை? எமது முந்திய கட்டுரையிலிருந்து நாம் பின்வருகின்றவற்றை தெரிந்துகொள்ள முடிகிறது.
(1) மக்களை தந்திரமாக கையாண்டிருக்கும் தன்னலமுள்ள ஆளும் வர்க்கத்தினர் (அரசியல், இராணுவம், வியாபாரம் மற்றும் மதம்).
(2) ‘புனிதமான தன்னல வேட்கை நெறி’யையும் தேசீய பெருமையையும், அவநம்பிக்கையையும் பகையையும் கற்பிக்கும் தீவிர தேசப்பற்றின் அடிப்படையில் கல்வி பயிற்சி சார்ந்த கட்டுப்பாட்டு அமைப்பு.
(3) “அவிசுவாசிகளின் மனதைக் குருடாக்கியிருக்கும் இந்த காரிய ஒழுங்கின் கடவுளாகிய பிசாசாகிய சாத்தானின்” மொத்த அதிகாரமும் தூண்டுதலும்.—2 கொரிந்தியர் 4:4.
உலக அளவில் சிந்தனையில் ஒரு மாற்றம், இருதய மாற்றம் இருக்க வேண்டும். அப்படியென்றால் அது கல்வியில் ஒரு மாற்றத்தை அர்த்தப்படுத்துகிறது—எல்லா ஜனங்களுக்கும் சமாதானத்தையும் அன்பையும் பரஸ்பர மரியாதையையும் கற்பிக்க வேண்டும். உலகம் முழுவதிலும் தலைமைப் பதவியில் ஒரு மாற்றத்தை இது அர்த்தப்படுத்துகிறது. எல்லா தேசங்களாலும் மதிக்கப்படும் ஒரு ஐக்கியப்பட்ட தலைமையின் கீழ்—அழிக்கப்பட முடியாத உலக அரசாங்கத்தின் கீழ் வருவதை அது அர்த்தப்படுத்துகிறது. அது உலக அதிகாரத்தில் ஒரு மாற்றத்தை—சாத்தானுடைய ஆட்சியிலிருந்து கடவுளுடைய ஆட்சிக்கு வருவதை அர்த்தப்படுத்துகிறது! ஆனால் இந்த மாற்றங்கள் எவ்விதமாக நடந்தேறப்போகின்றன?
இந்த காரிய ஒழுங்கின் முடிவின் சமயத்தில் ‘பரலோகத்தின் தேவன் என்றென்றுமாக அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப் பண்ணுவார்’ என்பதாக பைபிள் 2500 வருடங்களுக்கு முன்பாகவே முன்னுரைத்திருக்கிறது. (தானியேல் 2:44) இந்த நித்திய ராஜ்யத்துக்காக ஜெபிக்கும்படியாகவே இயேசு தம்மை பின்பற்றியவர்களுக்கு கற்பித்தார்: “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.” (மத்தேயு 6:9, 10) பரலோகத்திலிருந்து பூமி முழுவதையும் ஆட்சி செய்யும் கிறிஸ்து இயேசுவின் புதிய ஆட்சியை அந்த ராஜ்யம் அர்த்தப்படுத்துகிறது. தானியேல் தீர்க்கதரிசியுங்கூட எழுதிய விதமாகவே: “அவருடைய கர்த்தத்துவம் (அல்லது அரசுரிமை) நீங்காத நித்திய கர்த்தத்துவமும் அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும்.”—தானியேல் 7:13, 4.
கிறிஸ்துவின் கைகளில் இந்த பரலோக அரசாங்கமே, பல ஆயிர வருடங்களாக மனிதவர்க்கத்தின்மீது மோசமாக ஆட்சி செய்திருக்கும், பிரிவினைகளை உண்டுபண்ணும் தன்னலம் கருதும் ஆளும் வர்க்கத்தினரை மாற்றீடு செய்யும் புதிய ஏற்பாடாக இருக்கிறது. ‘அவருடைய [கடவுளுடைய] வாக்குத்தத்தத்தின்படியே நாம் காத்திருக்கும் நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்கள் மற்றும் பூமி’யின் ஆளும் பகுதியை அது உண்டுபண்ணுகிறது. (2 பேதுரு 3:13) இந்த அரசாங்கமே மெய்யான “எதிர்கால உலகத்தை அமைத்திடும் தொட்டிலாக” இருக்கிறது. அது ஐ.நா. உதவி பொதுச் செயலாளர் ராபர்ட் முல்லர் ஆதரித்துப் பேசிய நியு யார்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் அல்ல. 1986-ம் ஆண்டை ஐ.நா. சர்வதேச சமாதான ஆண்டாக அறிவித்துள்ளபோதிலும் சமாதானம், கடவுளால் அங்கீகரிக்கப்பட்ட கருவியாக கடவுளுடைய ராஜ்யத்தின் மூலமாக மட்டுமே வரமுடியும்.
கல்வியின் பங்கு
அந்த ராஜ்ய அரசாங்க ஆட்சியின் கீழ் சமாதானமாக வாழ்வதற்கு லட்சக்கணக்கான ஆட்கள் ஏற்கெனவே தங்களை தயார் செய்துகொண்டு வருகிறார்கள். நூறு வருடங்களுக்கும் மேலாக அந்த ராஜ்ய செய்தியை எல்லா ஜனங்களுக்கும் கொண்டுவருவதற்கு தேசங்கள் முழுவதிலுமாக மாபெரும் கல்வி புகட்டும் ஏற்பாடு ஒன்று இருந்து வருகிறது. ஒருவேளை அந்த அரசாங்கத்தின் சமாதான பிரதிநிதி ஒருவர் உங்களுடைய வீட்டில் வந்து உங்களை சந்தித்திருக்கலாம். ஒருவேளை அந்த சமயத்தில் அவருடைய சந்திப்பின் முக்கியத்துவத்தை நீங்கள் உணராதிருந்திருக்கலாம். மனித சரித்திரத்தில் முன்னொருபோதும் இராத மிக விரிவான கல்வி புகட்டும் வேலையில் அவனோ அல்லது அவளோ ஈடுபட்டிருந்தாள். அவ்விதமாக சந்தித்த நபர் யார்? யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர். சாட்சிகள் ஏன் உங்களை வந்து சந்திக்கிறார்கள்?
சமாதானத்துக்கான யெகோவாவின் வழியைப் பற்றி கற்றுக்கொள்ள விரும்பும் உண்மை மனதுள்ள எவருடனும் பைபிளை படிக்க சாட்சிகள் முன்வருகிறார்கள். இந்த இலவச கல்வி ஏற்கெனவே லட்சக்கணக்கானோருக்கு “தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும் தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிக்க” உதவிக்கொண்டிருக்கிறது. ஏசாயா தீர்க்கதரிசி சொல்லுகிறான்: “ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.”—ஏசாயா 2:4.
ஒருவருக்கு எதிராக ஒருவர் இன்னும் வாய்வார்த்தையில் அல்லது சரீர பிரகாரமாக போர் செய்து கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் அங்கத்தினர்களுக்கு நேர் எதிர்மாறாக, யெகோவாவின் சாட்சிகள் ஏற்கெனவே இந்த தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றி வருகிறார்கள். யெகோவாவின் சாட்சிகள் எவ்விதமாக இதில் வெற்றியடைந்திருக்கிறார்கள்? காரியங்களின் பேரில் கிறிஸ்துவின் மனதைப் பெற்றுக்கொள்ள பைபிளை படிப்பதன் மூலம்; கடவுள் உண்மையில் அன்பாக இருக்கிறார் என்பதையும் எல்லா தேசங்களிலும் இனங்களிலுமுள்ள அவர்களுடைய உடன் மானிடரிடமாக அவருடைய அன்பை அவர்கள் பிரதிபலிக்க வேண்டும் என்பதையும் கற்றுக்கொள்வதன் மூலம் இந்த காரணத்துக்காகவே, அரசியல் விவகாரங்களில் அவர்கள் மிகக் கண்டிப்பாக நடுநிலைமையை காத்துக்கொண்டு என்ன ஆனாலும், எந்த போரிலோ அல்லது சண்டையிலோ பங்குகொள்ள மறுக்கிறார்கள்.—1 யோவான் 4:8; யோவான் 13:34, 35.
நிறைவேற்றமடைந்துள்ள பைபிள் தீர்க்கதரிசனத்தின் பிரகாரம், கடவுளுடைய ராஜ்யம் நடவடிக்கை எடுப்பதற்கான காலம் அருகாமையில் இருக்கிறது. (மத்தேயு 24:3-35) சீக்கிரத்தில் கடவுளுடைய யுத்தமாகிய அர்மகெதோன், அதனுடைய எல்லா பிரிவினைகளையும் அழிவையும் உண்டாக்கும் அரசியலோடுகூட சாத்தானின் ஆட்சியை ஒரு முடிவுக்கு கொண்டுவரும். (வெளிப்படுத்தின விசேஷம் 16:14-16; 19:17-21) கடவுளிடமும் அவருடைய வார்த்தையினிடமும் திரும்புவதற்கு இப்பொழுதே சமயமாக இருக்கிறது. நித்திய சமாதானம் மாயமான ஒரு கனவல்ல, ஆனால் சீக்கிரத்தில் உலகம் முழுவதிலும் மெய்யான அனுபவமாக இருக்கப்போகும் ஒன்று என்பதை நீங்கள் நிச்சயப்படுத்திக்கொள்ள, உங்களுக்கு அருகாமையிலிருக்கும் யெகோவாவின் சாட்சிகள் உதவி செய்வதற்கு மகிழ்ச்சியுள்ளவர்களாக இருப்பார்கள். அல்லது கூடுதலான தகவலுக்காகவும் உதவிக்காகவும் இந்த பத்திரிக்கையை பிரசுரிப்பவர்களுக்கு எழுத தயங்காதீர்கள். (g86 2/8)
[பக்கம் 8-ன் சிறு குறிப்பு]
“அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.”—பேதுரு அப்போஸ்தலன்
[பக்கம் 9-ன் சிறு குறிப்பு]
“அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாக அடிப்பார்கள். . . தேசத்துக்கு விரோதமாய் தேசம் பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.”—ஏசாயா தீர்க்கதரிசி
[பக்கம் 9-ன் சிறு குறிப்பு]
“நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.”—இயேசு கிறிஸ்து