விபத்துக்கள் “கடவுளின் செயல்களா”?
பூமியதிர்ச்சி ஒன்று தங்களுக்குக் கீழே உள்ள நிலத்தை அதிரச் செய்யும்போது, பண்டைய கால மக்களில் சிலர், கீழுலகிலுள்ள ஒரு உயிரினம் அசைந்ததாக நம்பினார்கள். இடியும், மின்னலும் புயலும் தங்களுடைய கடவுட்களிடையே ஏற்பட்ட மோதலுக்கு அத்தாட்சியாக இருந்ததாகவும் கூட அவர்கள் நம்பினார்கள்.
விபத்துக்களை அணுகவிடாது தடுக்கும் முயற்சியில், இவர்கள் அந்தக் கடவுட்களைச் சாந்தப்படுத்தும் என்பதாக அவர்கள் நம்பிய மதங்களை அப்பியாசித்தார்கள். “சரித்திரத்தில் பெரும்பாலும், மனிதன் அவன் அனுபவிக்கும் இயற்கை அழிவுகளை . . . ஐதீக நம்பிக்கை, புராணங்கள் மற்றும் மதத்தின் மூலமாக விளக்கவே முயற்சி செய்திருக்கிறான்” என்பதாக விபத்து! இயற்கை திரும்ப தாக்குகையில் என்ற புத்தகம் சொல்லுகிறது.
ஆங்கிலம் பேசும் தேசங்களில் இன்று “கடவுளின் செயல்” என்ற சொற்றொடர் அநேகமாகச் சட்டப்பூர்வமான அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. என்றபோதிலும், 19-வது நூற்றாண்டு சட்ட அறிஞர் ஒருவர் விளக்கினார்: “இந்தச் சொற்றொடர், பைபிள் அர்த்தத்தில் கடவுளின் செயலை அர்த்தப்படுத்துவதில்லை என்பதைக் குறித்து எனக்கு ஒருபோதும் எந்தச் சந்தேகமும் இருந்ததில்லை . . . முன்னால் உணரப்பட முடியாததும் அதற்கு எதிராக நம்மை காப்பற்றிக்கொள்ள முடியாததுமான ஒரு அசாதாரணமான சூழ்நிலையையே அது குறிக்கிறது.”
கடவுளின் உண்மையான செயல்கள்
“கடவுளின் செயல்” என்ற சொற்றொடரின் கருத்தைப்பற்றிய குழப்பத்தைத் தெளிவுபடுத்திக்கொள்ள, ஒரு சம்பவம் கடவுளின் உண்மையான செயலாக இருப்பதற்கு அது நிறைவு செய்ய வேண்டிய நியதி அல்லது நிபந்தனைகளை நாம் முதலில் புரிந்துகொள்வது அவசியமாகும்.
கடவுள் சர்வவல்லமையுள்ளவர் என்பதாகப் பைபிள் நமக்குத் தெளிவாகச் சொல்கிறது. (யாத்திராகமம் 6:3) ஆனால் அது மேலும் பின்வருமாறும் கூட சொல்கிறது: “அவர் கன்மலை; அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்.”—உபாகமம் 32:4.
யெகோவா நியாயமுள்ளவர், செம்மையானவர் மற்றும் மாறாதவர் என்பதை அறிந்துகொள்வது ஒரு அழிவு எப்பொழுது உண்மையில் கடவுளின் செயலாக இருக்கிறது என்பதைத் தீர்மானிக்க நமக்கு உதவி செய்யவும் நியதியை உறுதிசெய்ய பிரயோஜனமாக இருக்கிறது. சில முக்கிய உண்மைகள்: (1) அது எப்பொழுதும் கடவுளின் நோக்கத்துக்கு இசைவாக இருக்கிறது; (2) செயல்படுவதற்கு முன்னால் கடவுள் முன்னெச்சரிப்பைக் கொடுக்கிறார்; (3) கீழ்ப்படிதலுள்ளவர்களுக்குத் தப்பிப் பிழைப்பதற்காகக் கட்டளைகளை அவர் கொடுக்கிறார்.
இதை மனதில் கொண்டு, ஒரு அழிவைக் கொண்டுவருவதற்காகக் கடவுள் செயல்பட்ட இரண்டு சந்தர்ப்பங்களைச் சிந்தித்துப் பாருங்கள். ஒன்று 4,300-க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பாக நோவாவின் காலத்தில் நடந்தது.
கடவுளின் ஒரு உண்மையான செயல்
நோவாவின் நாளில் பூமியில் நிலைமைகள் எவ்வாறு இருந்தன? ”மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது. அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததாயிருந்தது. பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கொட்டதாயிருந்தது; பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது.”—ஆதியாகமம் 6:5, 11.
ஆகவே உலகளாவிய ஒரு அழிவைக் கொண்டுவருவதன் மூலம் பூமியிலிருந்து துன்மார்க்கமான மனிதர்களைத் துடைத்தழிக்க கடவுள் தீர்மானித்தார். கிரகத்தின் “சொந்தக்காரராக” சிருஷ்டிகர், மனிதவர்க்கத்தின் ஒழுக்க சீர்கேட்டின் காரணமாக அவ்விதமாகச் செய்வதில் முற்றிலும் நியாயமுள்ளவராக இருந்தார்.
என்றபோதிலும் கடவுள் நோவாவின் மற்றும் அவனுடைய குடும்பத்தின் குறிப்பிடத்தக்க உத்தமத்தன்மையைக் கவனித்தார். அவர்கள் தம்முடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால், வர இருந்த அழிவில் அவர்களைப் பாதுகாப்பதாக அவர் அவர்களுக்கு உறுதியளித்தார். (ஆதியாகமம் 6:13-21) நோவாவும் அவனுடைய குடும்பமும் இந்த ஏற்பாட்டுக்கு ஒப்புக்கொண்டார்களா? பைபிள் பதிவு சொல்கிறது: “நோவா அப்படியே செய்தான்; தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான்.”—ஆதியாகமம் 6:22.
நோவாவின் கீழ்ப்படிதல் பயனுள்ளதாக இருந்ததா? ஆம் கடவுள், “அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின் மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணினபோது நீதியைப் பிரசங்கித்தவனான நோவா முதலான எட்டுப்பேரைக் காப்பாற்றினார்” என்பதாக அப்போஸ்தலனாகிய பேதுரு சொல்கிறான். (2 பேதுரு 2:5) உண்மையாக கடவுள் அவருடைய ஊழியர்களில் அக்கறையுள்ளவராக இருக்கிறார், அவர்களோடு தொடர்புகொள்கிறார். அவர் செயல்படும்போது அவர்கள் பாதுகாக்கப்படுவதை அவர் நிச்சயப்படுத்திக்கொள்கிறார். பைபிள் குறிப்பிடும் விதமாகவே, “யெகோவாவாகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்.”—ஆமோஸ் 3:7.
கடவுளின் மற்றொரு செயல்
ஜலப்பிரளயத்துக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்பு, கடவுள் மற்றொரு செயலை நடப்பித்தார். மோசமான ஒழுக்கங்கெட்ட நடத்தையின் காரணமாக சோதோம் கொமோராப் பட்டணங்கள் கடவுள் கொண்டுவந்த அழிவை எதிர்பட்டன. பத்து நீதிமான்களையும்கூட அங்கு காணமுடியவில்லை. மூன்று பேர் மட்டுமே நீதிமான்களாக இருந்தார்கள்—லோத்தும் அவனுடைய இரண்டு குமாரத்திகளும்.
அந்தப் பட்டணங்களிலிருந்த ஆட்களின் மனநிலை எப்படி இருந்தது? உதாரணத்துக்குக் கடவுளிடமிருந்து அழிவு உடனடியாக வர இருந்ததன் காரணமாகப், பட்டணத்தைவிட்டு வெளியேறும்படியாகச் சொல்லப்பட்டபோது லோத்துவின் குமாரத்திகளுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த மனிதர்களின் பிரதிபலிப்பைக் கவனியுங்கள்: “அவனுடைய மருமக்கள்மாரின் பார்வைக்கு அவன் பரியாசம் பண்ணுகிறதாகக் கண்டது.”—ஆதியாகமம் 19:14.
இதற்கு முன்னால் கடவுளுடைய தூதர்கள் லோத்துவோடு தங்கியிருந்தபோது, சோதோமின் மனிதர்கள், “வாலிபர் முதல் கிழவர் மட்டுமுள்ள ஜனங்கள் அனைவரும் நானாதிசைகளிலுமிருந்து வந்து வீட்டைச் சூழ்ந்து கொண்டார்கள்.” ஏன்? அவர்கள் லோத்தைக் கூப்பிட்டு: “இந்த இராத்திரி உன்னிடத்தில் வந்த மனுஷர் எங்கே? நாங்கள் அவர்களை அறியும்படிக்கு அவர்களை எங்களிடத்தில் வெளியே கொண்டுவா” என்றார்கள். கடவுளின் தூதர்களோடு இயற்கைக்கு மாறாக பாலுறவு கொள்ள அவர்கள் விரும்பினார்கள்! ஆகவே இப்படிப்பட்ட ஒழுக்கங்கெட்ட நடத்தையின் காரணமாக கடவுள் கொண்டுவந்த அழிவில் இந்தப் பட்டணங்கள் அழிந்தன.—ஆதியாகமம் 19:4, 5, 23-25.
இது கடவுளின் மற்றொரு செயல் என்பது தெளிவாக இருந்தது: “சோதோம் கொமோரா என்னும் பட்டணங்களையும் சாம்பலாக்கிக் கவிழ்த்துப்போட்டு ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, பிற்காலத்திலே அவபக்தியாய் நடப்பவர்களுக்கு அவற்றைத் திருஷ்டாந்தமாக வைத்தார். நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக் கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்தார்.”—2 பேதுரு 2:6, 8; யூதா 7.
“கடவுளின் செயல்களாக” இல்லாத விபத்துக்கள்
சிலர் “கடவுளின் செயல்”கள் என்பதாக அழைக்கும் அழிவுகளைக் கூர்ந்து ஆராய்கையில், அவற்றில் பல உண்மையில் மனிதனால் உண்டுபண்ணப்படுகிறவை என்பது தெரிகிறது. மற்றவை, பூமியதிர்ச்சிகள் மற்றும் புயல்காற்று போன்றவை இயற்கை சக்தியினால் ஏற்படுகிறவையாக இருக்கின்றன.
மனிதனால் உண்டுபண்ணப்படும் மற்றும் இயற்கையின் அழிவுகள், இந்தக் “கடைசி நாட்களைக்” குறிப்பிடும் அடையாளங்களின் பாகமாக இருப்பதாகப் பைபிள் முன்னறிவித்தபோதிலும், எந்தச் சமயத்திலும் அவற்றிலிருந்து காக்கப்படுவதற்கு உறுதியளிக்கும் கட்டளைகளை அது கொண்டில்லை. (2 தீமோத்தேயு 3:1-5; மத்தேயு 24:3-12) ஏன் இல்லை? ஏனென்றால் இப்படிப்பட்ட காரியங்கள் கடவுளின் செயல்களாக இல்லை. என்றபோதிலும் ஏன் நல்லவர்களும் கெட்டவர்களுமாகிய இருவருமே இதனால் துன்பமனுபவிக்கிறார்கள் என்பதைக் கடவுளுடைய வார்த்தை விளக்குகிறது.
கடவுள் தெளிவாக சொல்லியிருந்த கட்டளைகளை முதல் மனிதர்கள் மீறியபோது அவர்கள் அழிவைத் தாங்களாகவே வரவழைத்துக் கொண்டார்கள். “சாகவே சாவாய்“ என்பதாகக் கடவுள் எச்சரித்திருந்தார். (ஆதியாகமம் 2:17) அவர்களுடைய செயலின் பாதிப்புகள் எவ்வளவு தூரம் சென்றெட்டுவதாக இருந்தது என்பதை அப்போஸ்தலனாகிய பவுல் காண்பிக்கிறான்: “ஒரே மனுஷனாலே . . . மரணம் எல்லாருக்கும் வந்தது.”—ரோமர் 5:12.
ஆனால் இதில் அதிகம் உட்பட்டிருந்தது. முதல் தம்பதியின் கீழ்ப்படியாமை, கடவுளின் வழிநடத்தலையும் மேற்பார்வையையும் வேண்டாமென தள்ளிவிடுவதை அர்த்தப்படுத்தியது. இனிமேலும் அவர்கள் தங்கள் மீதும் தங்களின் வீடாகிய பூமி கோளத்தின் மீதும் கடவுளை அரசராகக் கொண்டிருக்க விரும்பவில்லை. கடவுளுடைய கண்காணிப்பை, இழந்துவிட்டதன் காரணமாக, விபத்துக்களிலிருந்து அவருடைய பாதுகாப்பையும் கூட அவர்கள் இழந்துவிட்டார்கள்.
இவை அனைத்தும் நமக்கு எதை அர்த்தப்படுத்துகிறது? “சமயமும் எதிர்பாராத நிகழ்ச்சிகளும்” நம் அனைவருக்கும் நேரிடுகிறது என்பதை இது அர்த்தப்படுத்துகிறது. எதிர்பாரா நிகழ்ச்சியில் நாம் பலியாகக்கூடிய வகையில் என்ன சம்பவிக்கும் என்பதை நாம் அறிந்துகொள்ள முடியாது என்பதை இது அர்த்தப்படுத்துகிறது. வலையில் அகப்படும் மச்சங்களை அல்லது கண்ணியில் பிடிபடும் பறவைகளைப் போல, “மனு புத்திரர் பொல்லாத காலத்திலே சடிதியில் தங்களுக்கு நேரிடும் ஆபத்தில் அகப்படுவார்கள்.”—பிரசங்கி 9:11, 12.
ஆகவே நீதி மன்றங்கள் இயற்கை அழிவுகளைச் சட்டப்பூர்வமான கருத்தில், “கடவுளின் செயல்கள்” என்பதாகக் கருதும்போது உண்மையில் நிச்சயமாகவே அவை கடவுளின் செயல்களாக இல்லை.
கடவுளின் மற்றொரு செயல் சமீபத்தில் இருக்கிறது
1914-ம் ஆண்டு முதற்கொண்டு நாம் வாழ்ந்து வரும் இந்த ஒழுங்குமுறையின் கடைசி நாட்களின் உச்சக்கட்டத்தை விவரிக்கையில் இயேசு பின்வருமாறு எச்சரித்தார்: “உலக முண்டானது முதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும் இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்.” (மத்தேயு 24:21) அந்தச் சம்பவம், தற்போதைய அநீதியான காரிய ஒழுங்குக்கு ஒரு முடிவைக் கொண்டுவரும்: “சர்வ வல்லமையுள்ள தேவனுடைய மகா நாளில் நடக்கும் யுத்தமாகிய” அர்மெகதோன் அதன் உச்சக்கட்டமாக இருக்கும். “உலகத்தின் பாகமாக” இருக்கும் அனைவருக்கும் அது நிச்சயமாகவே அழிவாக இருக்கும்.—வெளிப்படுத்தின விசேஷம் 16:14, 16; யோவான் 17:14; 2 பேதுரு 3:3-13.
இது என்ன விதமான நியாயத்தீர்ப்பாக இருக்கும்? அது பகுத்து ஆராய்ந்து வழங்கப்படும் ஒன்றாக இருக்கும். “தேவனை அறியாதவர்களும் (அறிவதை தெரிந்துகொள்ளாதவர்களும்) நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களும்” அழிக்கப்படுவார்கள். (2 தெசலோனிக்கேயர் 1:7-10) நோவாவும் அவனுடைய குடும்பத்தாரும் செய்ததுபோலவே கடவுளுடைய எச்சரிப்புகளுக்கும் கட்டளைகளுக்கும் செவி சாய்ப்பவர்களுக்கு அது அழிவாக இருக்காது. இது நிச்சயமாகவே கடவுளின் செயலாக இருக்கும். ஏனென்றால் அவர் அவருடைய ஊழியக்காரர்களைப் பாதுகாப்பார். இது, நல்லவர்களையும் கெட்டவர்களையும் ஒன்றுபோல வாரிக்கொண்டு போகும் மற்ற அழிவுகளிலிருந்து இதை வித்தியாசமானதாகச் செய்கிறது.—ஏசாயா 28:21.
வரப்போகும் “மகா உபத்திரவம்” கடவுளின் செயலாக இருக்கும் என்பதாக நாம் எவ்விதமாக நிச்சயமாயிருக்கலாம்? நாம் நிச்சயமாயிருக்கலாம், ஏனென்றால் அது பின்வரும் நியதிகளுக்கு இசைவாக இருக்கிறது.
(1) கடவுளின் அறிவிக்கப்பட்ட நோக்கத்துக்கு இது இசைவாக இருக்கிறது: தற்போதுள்ள அவபக்தி நிறைந்த காரிய ஒழுங்குமுறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதே அந்த நோக்கமாக இருக்கிறது.—எரேமியா 25:31-33; செப்பனியா 3:8; வெளிப்படுத்தின விசேஷம் 16:14, 16; 19:11-21.
(2) முன்னெச்சரிப்பு: இப்பொழுது சுமார் 70 ஆண்டுகளாக, யெகோவாவின் சாட்சிகள் இந்த ஒழுங்கின் முடிவைப்பற்றித் தெளிவாக எச்சரித்தும் வரப்போகும் கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கித்தும் வந்திருக்கிறார்கள். பூமி முழுவதிலும் இப்பொழுது 30 இலட்சத்துக்கும் மேற்பட்ட சாட்சிகளைக் கொண்டிருக்கும் அளவுக்கு அவர்களுடைய வேலை வளர்ந்திருக்கிறது. (மத்தேயு 24:14; அப்போஸ்தலர் 20:20) அடுத்த முறை அவர்கள் உங்களைச் சந்திக்க வரும்போது, அவர்களுடைய செய்தியைப் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்ளும்படியாக நாங்கள் உங்களை உற்சாகப்படுத்துகிறோம். இயேசு சொன்ன விதமாகவே “உணராதிருந்து” ஜலப்பிரளயத்தில் அழிந்துபோன நோவாவின் நாட்களிலிருந்த ஆட்களைப் போல இருக்காதீர்கள்.—மத்தேயு 24:37-39.
(3) தப்பிப் பிழைப்பதற்குக் கட்டளைகள்: “தேவனுக்குப் பயந்து அவர் கற்பனைகளைக் கைக்கொள்” என்பதாகப் பைபிள் துரிதப்படுத்துகிறது. (பிரசங்கி 12:13) கடவுளுடைய கட்டளைகள் என்ன என்பதைக் கற்றுக்கொள்வதும் அவற்றைப் பின்பற்றுவதுமே, தப்பிப் பிழைப்பதற்குரிய வழியாக இருக்கிறது. இயேசு தெளிவாக இதைப் பின்வருமாறு சொன்னார்: “ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்.” (யோவான் 17:3) கடவுளுடைய கட்டளைகள் என்ன என்பதை உங்களுக்குக் காண்பிக்க யெகோவாவின் சாட்சிகள் மகிழ்ச்சியுள்ளவர்களாயிருப்பார்கள்.
“நீ யெகோவாவுக்குக் காத்திருந்து [அவரில் நம்பிக்கையாயிருந்து, NW] அவருடைய வழியைக் கைக்கொள் . . . துன்மார்க்கர் அறுப்புண்டு போவதை நீ காண்பாய்,” என்பதாகவும் கூட பைபிள் வாக்களிக்கிறது. (சங்கீதம் 37:34) யெகோவாவின் கட்டளைகளுக்கு இப்பொழுது செவி சாய்த்து அவற்றைப் பின்பற்றுவதன் மூலம் இதுவே உங்களுடைய நம்பிக்கை என்பதை நீங்கள் காண்பிக்கலாம். இது கடவுளுக்கும் மனிதனுக்கும் முன்பாக, அவருடைய சித்தத்தைச் செய்ய முயற்சி செய்யும் ஒருவராக உங்களை அடையாளப்படுத்தும். இவ்விதமாக நீங்கள் தப்பிப் பிழைத்திருப்பதற்கான வழியில் வரலாம். “உலகம் ஒழிந்துபோகிறது . . . தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.”—1 யோவான் 2:15-17; மத்தேயு 28:19, 20.
வரப்போகும் கடவுளின் செயலைப் பற்றிக் கற்றறிந்து, தப்பிப்பிழைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பவர்களுக்கு முன்னாலிருக்கும் எதிர்பார்ப்புகள் நிச்சயமாகவே உற்சாகமூட்டுவதாக இருக்கிறது. ஏனென்றால் அவர்கள் கடவுளுடைய ராஜ்ய ஆட்சியின் கீழ் புதிய ஒரு சகாப்தத்திற்குள் கொண்டு செல்லப்படுவார்கள். (மத்தேயு 6:9, 10) ஆனால் அந்தப் புதிய ஒழுங்கில் மனிதனால் உண்டுபண்ணப்படும் அழிவுகளிலிருந்து அல்லது இயற்கை அழிவுகளிலிருந்து மனிதர்களைப் பாதுகாக்க என்ன செய்யப்படும்?
கடவுளின் விபத்து தடுப்பு முறை
கடவுளுடைய ராஜ்யம் முழுமையாக ஆதிக்கம் செலுத்தும்போது, என்ன சமாதானமும் புத்தியிரளிக்கும் ஒரு காலமாகவும் அது இருக்கும்! கடவுள் நியமித்திருக்கும் பரலோக ராஜாவாகிய கிறிஸ்து இயேசுவின் ஆட்சிக்கு நம்மை கீழ்ப்படுத்துவதால் வரும் நன்மைகளைச் சிந்தித்துப் பார்க்கையில் அவை மகத்தானவையாக இருக்கின்றன.
ராஜ்ய ஆட்சியில் அவர் என்ன செய்வார் என்பதைக் காண்பிக்கும் வகையில், பூமியிலிருக்கும்போது இயேசு செய்ததைச் சிந்தித்துப் பாருங்கள்: அவர் நோயாளிகளைக் குணப்படுத்தினார், சப்பாணிகளைச் சொஸ்தமாக்கினார், குருடர்களுக்குப் பார்வையளித்தார், செவிடரின் காதுகளைத் திறந்தார், ஊமையரைப் பேச வைத்தார், மரித்தோரையும் கூட உயிர்த்தெழுப்பினார்!—மத்தேயு 15:30, 31; லூக்கா 7:11-17.
அதன் காரணமாகவே, ராஜ்ய ஆட்சியின் கீழ் “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்து போயின” என்பதாகப் பைபிள் உறுதியளிக்கிறது.—வெளிப்படுத்தின விசேஷம் 21:4.
இயேசு பூமியில் செய்த காரியமானது, வரப்போகும் புதிய ஒழுங்கில் அவர் தம்முடைய குடிமக்களுக்குக் கொடுக்கப்போகும் உதவிக்கு மாதிரியாக இருக்கிறது. இயற்கை அழிவுகளிலிருந்து பாதுகாப்பைப்பற்றி என்ன? ஒரு சமயம் சுழல் காற்று ஒன்றை அடக்குவதன் மூலம் இயேசு ஒரு விபத்தைத் தடுத்ததை நினைவுபடுத்திப் பாருங்கள். அவருடைய சீஷர்கள் ஆச்சரியப்பட்டு ஒருவரையொருவர் பார்த்து: “இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே” என்று சொல்லிக் கொண்டார்கள். (மாற்கு 4:37-41) இயற்கை சக்தியின் மீது முழுமையாக ஆதிக்கம் செலுத்துகிறவராக, புதிய ஒழுங்கின் வல்லமையுள்ள பரலோக ராஜா இயற்கை விபத்துக்கள் இனி ஒருபோதும் மனிதனுக்குக் கேடு விளைவிக்காதபடிக்குப் பார்த்துக் கொள்வார்.
நம்முடைய கிரகத்துக்கும் அதனுடைய சுற்றுப்புறச் சூழலுக்கும் ஏற்கெனவே, மனிதன் உண்டுபண்ணியிருக்கும் சேதத்தை அல்லது இயற்கை உண்டு பண்ணியிருக்கும் அழிவைக் கடவுளுடைய ராஜ்யம் நிச்சயமாகச் சரிசெய்துவிடும். பைபிளின் வாக்கு பின்வருமாறு: “வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப் போலச் செழிக்கும். அது மிகுதியாய்ச் செழித்துப் பூரித்து ஆனந்தக் களிப்புடன் பாடும்.! . . . வெட்டாந்தரை தண்ணீர்த் தடாகமும் வறண்ட நிலம் நீரூற்றுகளுமாகும்.”—ஏசாயா 35:1-7, தி லிவ்விங் பைபிள்.
ஒரே விதமான கல்வித் திட்டத்தின் மூலமாக, புதிய ஒழுங்கிலுள்ள எல்லோரும் திறமையாக வேலை செய்யவும், உடன் மானிடரின் மீதும் பூமியின் மீதும் அக்கறைக்கொள்ளவும் கற்பிக்கப்படுவார்கள். “பூச்சக்கரத்துக் குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்.” (ஏசாயா 26:9) பூமி முழுவதிலும் அந்தத் தெய்வீக கல்வியினாலும், மனதின் பிரகாரமாயும் சரீர பிரகாரமாயும் மனிதவர்க்கத்தினர் பரிபூரண நிலைக்கு உயர்த்தப்படுவதாலும் அபூரணத்தின் காரணமாக ஏற்படும் தவறுகள் மறைந்துவிடும். வேலை செய்யுமிடத்தில் விபத்துக்களுக்கு வழிநடத்தக்கூடிய குறுக்கு வழிகளுக்குக் காரணமாக இருக்கும் சுயநலம் இனிமேலும் இராது.
இன்று மனிதனால் உண்டுபண்ணப்படுகிறவையும் இயற்கையில் ஏற்படுகிற விபத்துக்களும் நம் அனைவரையுமே பாதிக்கிறது. ஆனால் நாம் அதிகமாக அக்கறைக்கொள்ள வேண்டிய அழிவு “மகா உபத்திர”வமாக இருக்கிறது. இது கடவுளின் செயலாக, இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையை அதன் முடிவுக்குக் கொண்டுவரும். கடவுளின் அந்தச் செயல் இந்தச் சமயத்தில் சத்தியத்தை நழுவிச்செல்ல அனுமதிக்காத ஆட்களுக்கு நீதியுள்ள ஒரு புதிய சகாப்தத்துக்கான வழியைத் திறந்து வைக்கும். அவர்களுக்கு, “நம்முடைய தேவன் இரட்சிப்பை அருளும் தேவனாயிருக்கிறார்” என்பது காண்பிக்கப்படும். (சங்கீதம் 68:20) ஆகவே இப்பொழுது தெய்வீக ஞானத்தை வெளிக்காட்டுகிறவர்கள் ஒரு புதிய ஒழுங்குக்குள் பிரவேசித்து அங்கே “விக்கினமின்றி வாசம் பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பார்கள்.”—நீதிமொழிகள் 1:33. (g86 8/87)
[பக்கம் 6-ன் பெட்டி]
கடவுளுடைய செயலில் அடங்கியிருக்கும் அம்சங்கள்:
(1) அது எப்பொழுதும் கடவுளின் நோக்கத்துக்கு இசைவாக இருக்கிறது.
(2) செயல்படுவதற்கு முன்னால் கடவுள் முன்னெச்சரிப்பைக் கொடுக்கிறார்.
(3) கீழ்ப்படிதலுள்ளவர்களுக்குத் தப்பிப் பிழைப்பதற்காகக் கட்டளைகளை அவர் கொடுக்கிறார்.
[பக்கம் 7-ன் படம்]
சோதோம் கொமோராவின் அழிவு கடவுளின் மற்றொரு செயலாக இருந்தது
[பக்கம் 9-ன் படம்]
ஆபத்தான புயல்காற்றை அடக்குவதன் மூலம் இயேசு, இயற்கை சக்தியின் மீது தமக்கிருக்கும் வல்லமையைக் காண்பித்தார்