“இப்பொழுதே வெளியேறுங்கள்!” ஒரே இரவில் பத்தாயிரம்பேர் வெளியேற்றம்
ஜப்பான் விழித்தெழு! நிருபர்
இப்பொழுதே வெளியேறுங்கள்! உடனடியாக புறப்பட்டுச் செல்லுங்கள்!” நவம்பர் 21, 1986 அன்று மிஹாரா மலை சீற்றங்கொள்ள ஆரம்பித்ததால் மூத்த குடிகளுக்கான ஓஷிமா காப்பகத்திலிருந்த வயதான ஆண்களும் பெண்களும் ஒரு முதல்நிலைப் பள்ளியில் அடைக்கலம் பெறும்படிச் சொல்லப்பட்டனர். எரிமலை ஒருசில நாட்களுக்கு முன்பே எரிய ஆரம்பித்ததால் அந்தக் காப்பகத்தின் பணியாட்கள் வெளியேறுவதற்கு ஆயத்தப்படுத்தப்பட்டனர். என்றாலும், அன்று பிற்பகல் அது திடீரென்று வலிமையடைந்ததால் அங்கிருந்து தப்பிச் செல்வது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.
“நாங்கள் ஆயத்தம் செய்திருந்த தூக்குபடுக்கையைக் குறித்து நினைப்பதற்குங்கூட எங்களுக்கு நேரமில்லை,” என்று விளக்குகிறார் அந்த காப்பக பணியாளர்களில் ஒருவராகிய கஜுக்கோ. “எங்கள் நகர அலுவலகம் காப்பகத்துக்கு அனுப்பியிருந்த இரண்டு பேருந்துகளில் ஏற்றி விடுவதற்காக நாங்கள் வயதானவர்களை எங்கள் தோள்களிலும் முதுகுகளிலும் தூக்கிச் சென்றோம். பேருந்துகள் நிரம்பியதும் சிலரை மற்றொரு வாகனத்தின் மூலம் பாதுகாப்பான இடத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டியதாயிருந்தது.”
அந்த வயதான ஆட்கள் சரியான நேரத்தில் துறைமுகம் சேர்ந்தனர். அங்கு அவர்கள் ஒரு பாதுகாப்புத் துறையினரின் கப்பலில் ஏற்றப்பட்டனர். அந்தத் தீவை விட்டு வெளியேறுவதற்காக இப்படிச் செய்யப்பட்டது. வெளியேறிய முதல் ஆட்கள் இவர்களே. இதைத் தொடர்ந்து அந்தத் தீவிலிருந்த பத்தாயிரத்துக்கும் அதிகமான குடிமக்களும் சுற்றுலாப் பயணிகளும் வெளியேற்றப்பட்டனர்.
பூமியதிர்ச்சிகளும் எரிமலை வெடிப்புகளும்
ஓஷிமா என்று பொதுவாக அழைக்கப்பட்ட இஜு-ஓஷிமா தீவிலிருந்த மிஹாரா மலை ஜப்பானில் அதிக கவனமாகக் கண்காணிக்கப்பட்டு வரும் நான்கு உயிருள்ள எரிமலைகளில் ஒன்று. அது மெதுவாகச் செயல்படுவது அறியப்பட்டதே. அந்த மலைப் பகுதி பாதுகாப்பாகவே இருக்கிறது என்று எரிமலை வெடிப்பை முன்னறிவிக்கும் இணைப்பு மாநாடு அறிவித்து இரண்டே வாரங்களில், நவம்பர் 15, 1986 அன்று அது வெடித்தது. அந்த எரிமலையின் முதல் வாய் பலமாகப் புகைய ஆரம்பித்தது. (பக்கம் 6-லுள்ள நிலப்படத்தைப் பாருங்கள்) இதன் குழம்பு இந்த வாயின் உள்வட்டத்திலிருந்து எரிமலையின் அகல்முகட்டு வாயில் பாய்ந்தது. பின்பு 21-ம் தேதி எதிர்பாராத ஓர் வெடிப்பு ஏற்பட, அந்தத் தீவு மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். புதியதோர் வாய் உண்டானது. இதைத் தொடர்ந்து தரை வெடிப்புகளிலும் தீ பொங்கியெழு ஆரம்பித்தன. 330 அடிக்கும் (100 மீ) அதிகமாக தீ உயர்ந்தது. மலையின் பக்கவாட்டில் உண்டான வெடிப்புகளினூடே புதிய தீ தாரைகள் ஏற்படலாயின.
எரிமலையின் வெடிப்புகளால் பயந்துகொண்டிருந்த அந்த மக்களைப் பூமியதிர்ச்சிகள் அதிர்ச்சிக்குள்ளாக்கின. அந்தத் தீவு ஒரு மணி நேரத்திற்குள் 80 அதிர்வுகளைக் கண்டது. எரிமலையின் புறவாய் வழியாய்க் குழம்பு வழிய ஆரம்பித்தது. அது மலைச்சரிவில் ஓஷிமாவின் மக்கள் மிகுந்த குடியேற்றப் பகுதியாகிய மோட்டோமாச்சியை நோக்கி வழிய ஆரம்பித்தது. மோட்டோமாச்சியை நோக்கி வழிவதைக் கண்ட மேயர் ஹைட்மாசா யுமுரா மக்கள் மோட்டோமாச்சியிலிருந்து வெளியேறுவதற்கான உத்தரவு பிறப்பிக்க தூண்டப்பட்டார். அந்தச் சமயத்தில் தீவின் தென் பிராந்தியமாகிய ஹபூ பகுதி பாதுகாப்பானதாகக் கருதப்பட்டது.
‘ஓர் அணுகுண்டு வெடிப்பைப் போன்ற ஒரு துணை மேகம்’
“நாங்கள் தேனீர் அருந்திக் கொண்டிருந்தோம்,” என்று நடந்ததை சொல்கிறார் யெகோவாவின் சாட்சிகளுடைய இஜு-ஓஷிமா சபையின் ஒரே மூப்பர் ஜிரோ நிஷிமுரா. “அப்பொழுது ஒரு பெரிய வெடிப்பு ஆகாயத்தை ஆட்டியது. நான் வெளியே சென்று பார்த்தபோது, மிஹாரா மலைமீது ஓர் அணுகுண்டு வெடிப்பைப் போன்ற ஒரு துணை மேகத்தைப் பார்த்தேன். இது ஒரு சாதாரண வெடிப்பு அல்ல என்பதை என்னால் உணர முடிந்தது. நகரின் அலுவலக ஒலிபெருக்கியில் ஏதோ சொல்லப்படுவதை என்னால் கேட்க முடிந்தது, ஆனால் அந்த அறிவிப்பை தெளிவாகப் புரிந்துகொள்ள முடியவில்லை, எனவே நான் நகர அலுவலகத்துக்குச் சென்றேன். மோட்டோமாச்சி குடிகள் வெளியேறும்படியாகச் சொல்லப்படவில்லை என்றார்கள். எங்களுக்கு சாப்பிட ஏதாவது வேண்டுமே என்பதை உணர்ந்து, என் மனைவியிடம் சாதம் சமைக்கச் சொன்னேன். சாப்பிட உட்கார்ந்த நான் முதல் உருண்டையை சாப்பிடுவதற்குள்ளாக, நாங்கள் வெளியேற வேண்டும் என்ற உத்தரவு கொடுக்கப்பட்டது.
“தொன்னூறு வயது சென்ற என் மனைவியின் தாய் உட்பட நாங்கள் ஐவரும் மோட்டோமாச்சி துறைமுகத்துக்கு விரைந்தோம். எல்லா மக்களும் அந்தத் தீவிலிருந்து வெளியேறுவதற்காக வரிசையாக நின்றனர். வரிசை மிக நீளமாக இருந்தது, ஆனால் என்னுடைய மாமியார் வயதுசென்றவளாயிருந்ததாலும், தனிமையாக நடக்க முடியாத நிலையிலிருந்ததாலும் நாங்கள் அட்டாமிக்குச் செல்லும் முந்திய கப்பலில் செல்ல அனுமதிக்கப்பட்டோம்.”
அந்தத் தீவுடன் பலமான பிணைப்பைக் கொண்டிருந்த சிலருக்கு அதை விட்டு வெளியேறுவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. 84 வயது கிச்சிஜிரோ ஒக்காமுரா மூத்த குடிகளுக்கான அந்தக் காப்பகத்தில் ஓர் அக்குபங்சர் மருத்துவர். இவர் ஓஷிமாவில் 40 ஆண்டுகள் வாழ்ந்தவர். ஒக்காமுரா தன்னுடைய உணர்ச்சிகளைத் தெரிவிக்கிறார்: “பூமியதிர்ச்சிகளோ படுமோசமாக இருந்தது, ஆனால் நான் பரவாயில்லை என்று நினைத்து, இன்னும் சில நாட்களுக்கு காரியங்கள் எப்படி இருக்கிறது பார்க்கலாம் என்றிருந்தேன். பூமியதிர்ச்சிகளுக்கும் எரி மலைவெடிப்புகளுக்கும் நான் பழக்கப்பட்டவன். நான் அதிகக் கவலைப்படவில்லை, ஏனென்றால் அது தாழ்ந்துவிடும் என்று தெரியும். ஆனால் தீ துறை பணியாட்கள் என்னை வற்புறுத்தி வெளியேறச் செய்தனர். நான் அவர்களுக்கு இணங்க வேண்டியதாயிருந்தது.” இவர் தன்னுடைய மனைவியுடனும், இரண்டு பெண் பிள்ளைகளுடனும் நான்கு பேரப்பிள்ளைகளுடனும் வெளியேறினார்கள்.
தீவு மக்கள் எல்லாரும் வெளியேறுவதற்கான உத்தரவு
எரிமலைக் குழம்பு முதலில் தீவின் வடக்குப் பகுதியைத்தான் அச்சுறுத்தியது. மோட்டோமாச்சி பகுதியில் வாழ்ந்த சிலர் ஹபு பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். தென் பகுதி குடிகள் பள்ளிகளில் கூடிவரும்படிச் சொல்லப்பட்டனர்.
“என்னிடம் இரண்டு படுக்கை விரிப்புகளும் இந்தப் பையுமே இருந்தது,” என்கிறார் நோமாஷி விளையாட்டரங்கில் மாலை 5 மணிக்கு அடைக்கலம் கண்ட காவோக்கோ ஹிராக்காவா. “ஓர் இரவு மட்டுமே இப்படி இருக்கும் என்று நினைத்தேன்.” அவருடைய கணவராகிய ரின்ஜோவுக்குப் புதிய எரிமலைவாய்க்கு அருகாமையில் வசித்து வந்த நோய்ப்பட்டிருந்த தன் பெற்றோர் ஞாபகம் வந்தது. அதிக கலக்கத்தோடு அவர்களை அழைத்துவர தங்கள் காரில் விரைந்தனர். “பூமியதிர்ச்சிகள் பயங்கரமாயிருந்தன,” என்கிறார் ரின்ஜோ. “ஒரு கப்பலிலிருப்பது போலிருந்தது. எங்களுடைய பெற்றோரைக் காரில் ஏற்றிய அந்த நேரமே அவர்களுடைய வீட்டிலிருந்து ஒருசில கிலோ மீட்டர் தூரத்தில் நிலம் வெடித்தது.” அவர்கள் நோமாஷி விளையாட்டரங்கை வந்து சேர்ந்துவிட்டனர். ஆனால் பின்பு அவர்கள் ஹபுவுக்கு மாறிச் செல்லும்படி சொல்லப்பட்டனர்.
மாலை 10:50-க்கு நகரின் மேயர் நகர மக்களை வெளியேற உத்தரவிட்டார். “நாங்கள் ஹபுவில் மூன்றாம் இளம் உயர்நிலைப்பள்ளியில் அடைக்கலம் நாடினோம்,” என்கிறாள் திருமதி டாமோக்கி. “பின்பு நாங்கள் துறைமுகத்துக்குப் போகும்படி சொல்லப்பட்டோம். ஆனால் பெரிய கப்பல்களுக்கு ஹபு துறைமுகம் மிகச் சிறியது. எனவே நாங்கள் பேருந்தில் மோட்டோமாச்சிக்குச் சென்று அங்கிருந்து கப்பலில் டோக்கியோவுக்குச் சென்றோம்.”
பத்தாயிரத்துக்கும் அதிகமான அந்தத் தீவுக் குடிகளும் சுற்றுலா பயணிகளும் தீவிலிருந்து வெளியேறி முடிக்கும்போது நேரம் காலை 5:55-ஆக இருந்தது. நவம்பர் 22-ம் தேதி மேயரும் மற்ற அதிகாரிகளும் கடைசியாக கப்பலேறினர். இஜு-ஓஷிமாவில் மக்களை முழுவதுமாக வெளியேற்றும் பணி, அந்தப் பெரிய வெடிப்புக்குப் பின் ஐந்து மணிநேரத்துக்குள் நிறைவேற்றப்பட்டது. பெரும்பாலும் இது ஒழுங்காக, கிரமமாக நிறைவேற்றப்பட்டது. இதற்கான போற்றுதல் அந்த நகர அதிகாரிகளுக்கும், மக்களை ஏற்றிச் செல்வதற்காக கப்பல்களை அனுப்பிய கப்பல் நிறுவனத்தாருக்கும், மனமுவந்து ஒத்துழைத்த அந்தத் தீவு மக்களுக்குமே உரியது. வெளியேறுவதற்கான உத்தரவுக்கு வெகு சிலரைத் தவிர மற்ற எல்லோருமே தாமதமின்றிச் செயல்பட்டனர். காவல் துறையினரும், தீயணைப்பு துறையினரும் மற்றும் சில அதிகாரிகளுமாக சில நூறுபேர் மட்டுமே தீவில் தங்கிவிட்டனர். இவர்களோடு தீவை விட்டு வெளியேற மறுத்த ஒருசிலரும் இருந்தனர்.
ஆனால் வெளியேற்றப்பட்ட அந்த மக்கள் எங்கு தங்கினார்கள். அவர்களை யார் கவனித்துக் கொள்வார்கள்? அந்தத் தீவிலிருந்த யெகோவாவின் சாட்சிகளைப் பற்றியதென்ன? (g87 7⁄8)
[பக்கம் 4-ன் படம்]
“தீ துறை பணியாட்கள் என்னை வற்புறுத்தி வெளியேறச் செய்தனர்”
[பக்கம் 6-ன் வரைப்படம்/படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
ஓஷிமா
மிஹாரா மலை
ஓஷிமா
மிஹாரா மலை
டோக்கியோ
விமானநிலையம்
ஒக்காட்டா
கிட்டநோயமா
மோட்டோமாச்சி
நோமாஷி
எரிமலைக் குழம்பு
எரிமலை வாய் 2
வெடிப்புகள்
எரிமலை வாய் 1
எரிமலையின் அகல்முகட்டு வாயில்
சாஷிக்கிஜி
ஹபு துறைமுகம்
எபினா
அட்டாமி
இட்டோ
இனடோரி
ஷிமோடா
சாக்குராஜிமா