கடைசி நாட்கள் தனித்தன்மை வாய்ந்த ஓர் அம்சம்
“சரித்திரம் 1945-ல் அதன் பாதையை மாற்றியிருக்கிறது என்ற தன்னுடைய அடிப்படைக் கருத்தில் ஓப்பன்ஹீமர் [அணுகுண்டு உருவமைப்பதற்கு உதவியவர்] சரியே. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பாணியில் இனிமேலும் ஒரு பெரிய யுத்தம் நடைபெறாது.”—ஃப்ரீமன் டைசன் எழுதிய ஆயுதங்களும் நம்பிக்கையும் (Weapons and Hope)
1945-ல் அணுகுண்டு பயன்படுத்தப்பட்டதுதானே உலகத்தை மாற்றிவிட்டது. போர் சரித்திரத்தில் அது இன்னொரு திருப்பு கட்டமாக சேவித்தது. அணுகுண்டு கண்டுபிடித்தவர்களில் ஒருவரான ராபர்ட் ஓப்பன்ஹீமர் அந்த நிலையைத்தான் கண்டார். நியு மெக்ஸிக்கோ நகரில் பரிசோதனையின் கட்டமாக அணுகுண்டு வெடித்த அந்தச் சமயத்தில் ஓப்பன்ஹீமர் இந்து மத புத்தகமாகிய பகவத் கீதையிலிருந்து மேற்கோள் எடுத்து கூறியதாவது: “அனைத்தையும் அழிக்கும் மரணம் நான்.” ஓப்பன்ஹீமர் மேலும் கூறினார்: “இவ்வுலக மக்கள் ஒற்றுமைப்பட வேண்டும், இல்லாவிட்டால் அவர்கள் அழிவார்கள்.”
1949-ல் ஐ.மா.வின் அணு சக்தி ஆணைக்குழுவுக்கு விஞ்ஞானிகளடங்கிய ஓர் ஆலோசனைக் கமிட்டியின் அங்கத்தினரில் ஓப்பன்ஹீமரும் ஒருவராயிருந்தார். இன்னும் அதிக அழிவு சக்தியுடைய நீர்வளிக்குண்டு உருவாக்கப்படுவதற்கு எதிராக எச்சரிப்புகள் செய்தனர். அவர்களுடைய அறிக்கை பின்வருமாறு குறிப்பிட்டது: “இது ஒரு வல்லாயுதம்; இது ஓர் அணுகுண்டிலிருந்து முற்றிலும் வித்தியாசப்பட்ட வகையைச் சேர்ந்தது.” இதற்குக் காரணம், நீர்வளிக்குண்டின் அழிவு சக்தி அதிக விலைமலிவான டியுட்டேரியம் எரிபொருளைச் சேர்ப்பதன் மூலம் அழிவு சக்தி பன்மடங்குபடுத்தப்படலாம். நான்கு ஆண்டுகளுக்குள் அணுகுண்டு வெறும் ஒரு விளையாட்டுப் பொருளாகிவிட்டது.
அந்த ஆலோசனை கமிட்டியின் அங்கத்தினராயிருந்த என்ரிக்கோ ஃபெர்மியும் இஸிடார் ரபியும் அதைவிட அதிக பலமான எச்சரிப்பைக் கொடுத்தனர்: “இந்த ஆயுதத்தின் அழிவு சக்திக்கு அளவில்லாதிருப்பதும் அது உருவாக்கப்படுவது குறித்த அறிவும் மொத்தத்தில் மனிதவர்க்கத்துக்கு ஓர் அபாயம். எந்த வெளிச்சத்தில் பார்த்தாலும் அது ஒரு தீமையே.” (தடித்த எழுத்துக்கள் எங்களுடையது.) மனிதன் தன்னைத்தானே அழித்துக்கொள்ள முடியும் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். நீர்வளிக் குண்டை உருவாக்குவதற்கு எதிரான அவர்களுடைய ஆலோசனை அசட்டை செய்யப்பட்டது.
‘அறிவியல் ஆதாரம் கொண்ட அழிவு பற்றிய தீர்க்கதரிசனங்கள்’
மனிதன் இப்பொழுது அழிப்பதற்காகக் கொண்டிருக்கும் பயங்கரமான சக்தியின் வன்மை, அணு ஆயுத போர்த் தடை சர்வதேச மருத்துவர் கழகத்தின் உடன் தலைவர் டாக்டர் லோனின் மேற்கோளில் காணப்படும் உண்மையில் காட்டப்படுகிறது: “ஒரு நவீன நீர்மூழ்கிக்கப்பலின் அழிக்கும் சக்தி இரண்டாம் உலக மகா யுத்தத்தின் அழிக்கும் சக்தியைவிட ஏறக்குறைய எட்டு மடங்கு அதிகமாக இருக்கிறது—வடக்குப் பிரதேசத்திலுள்ள ஒவ்வொரு நகரையும் அழிப்பதற்குப் போதுமான சக்தியைக் கொண்டிருக்கிறது.” தயவுசெய்து கவனியுங்கள்—அது ஒரு நீர்மூழ்கிக்கப்பல் கொண்டிருக்கும் சக்தி! வல்லரசுகள் டஜன் கணக்கில் நீர்மூழ்கிக் கப்பல்களையும் அணு ஆயுதங்களைத் தாங்கிச்செல்லும் மற்ற போர்க்கப்பல்களையும் கொண்டிருக்கின்றன. இவற்றுடன் தரைப்படைத் தளவாடங்களும் விமானப் படைகளின் ஆயுதங்களும் சேர்க்கப்பட்டால், மொத்தமாக 50,000 அணு ஆயுத போர்க் குண்டுகளாகும்.
சரித்திரத்தில் இதற்கு முன்பாக மனிதன் எப்பொழுதாவது தன்னிடத்தே இந்தளவுக்கு அழிக்கும் சக்தியைக் கொண்டிருந்தானா? சரித்திரத்தின் ஒவ்வொரு காலப்பகுதியும் செவிகொடுக்கப்படாத தீர்க்கதரிசிகளைக் கொண்டிருந்தது என்று லோன் ஒப்புக்கொள்கிறார். இப்பொழுது வித்தியாசத்தை உண்டுபண்ணுவது என்ன? அவர் விளக்குகிறார்: “அழிவு பற்றிய தீர்க்கதரிசனங்கள் விஞ்ஞான ஆய்வுகளின் பலன்களில் பிடிப்புடையதாயிருக்கும் முதல் சகாப்தம் நம்முடையதே.” ஓர் அணு ஆயுதப் பேரழிவு ஒன்று ஏற்படுமானால், அவர் சொல்லுகிறார், “மனிதனால் ஏற்படுத்தப்படும் இப்படிப்பட்ட ஒரு பேரழிவுக்குப் பின் தப்பிப்பிழைக்கும் மனிதவர்க்கம் இருக்கும் என்று ஊகிப்பது முற்றிலும் வீம்புத்தனமாகும்.”
“ஜனங்களுக்குத் தத்தளிப்பு” கூடுகிறது
1945-ல் மனிதன் அணு ஆயுதப் போர் என்ற பொல்லாத பூதத்தை விஞ்ஞான அறிவு என்ற மாய விளக்கிலிருந்து விடுவித்திட, அதை மீண்டும் அடைப்பதற்கு வழியற்றிருக்கிறான். அவன் தன்னுடைய அணு ஆயுதங்களை அழிக்கக்கூடும், ஆனால் அதற்கு அவனைத் திரும்ப கொண்டு செல்லக்கூடிய அறிவை அவன் எப்படித் துடைத்தெறிவான்? எனவே ஹிரோஷிமா, நாகசாக்கி சம்பவங்களும் மிக சக்திவாய்ந்த அணு ஆயுதங்களின் பெருக்கமும் 1945 முதல் வானத்திலிருந்து “பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும்” “ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும்” உண்டாவதற்கான சாத்தியத்தை அதிகரித்திருக்கிறது.—லூக்கா 21:11, 25.
உடனடித் தொடர்பு கொள்ளும் நம்முடைய திறமை ஜனங்களுக்குள் தத்தளிப்பைப் பெருக்கியிருக்கிறது. இந்த 20-வது நூற்றாண்டில்தானே நவீன தொடர்பு முறைகள் (வானொலி, தொலைக்காட்சி, கணிப்பொறிகள், செயற்கைக் கோள்கள்) போர்களையும் பேரழிவுகளையும் குறித்து மனிதவர்க்கம் முழுவதுமே தெரிந்துகொள்வதற்கு ஏதுவாயிருக்கிறது, எனவே, இதுவரை இல்லாத அளவில் பயத்தையும் கவலையையும் பரப்புகிறது. உலக மக்கள் அவற்றைப் பற்றித் தெரிந்துகொள்வது மட்டுமல்ல, போர்களும் இரத்தம் சிந்துதலும் சம்பவிக்கையில் அவற்றை நேரடியாக தொலைக்காட்சியில் பார்க்கவும் முடிகிறது!
யுத்த வடுக்கள்
இந்த ஆண்டாகிய 1989-ல், நாம் கடைசி நாட்களில் இருக்கிறோம் என்பதற்கான அத்தாட்சியில் ஒரு பகுதியை உலக முழுவதுமுள்ள இலட்சக்கணக்கான குடும்பங்கள் அனுபவ ரீதியாகக் கண்டிருக்கின்றனர். எப்படி? மனிதவர்க்கத்தில் பெரும் பகுதியை அழித்திருக்கும் இரண்டு உலக மகா யுத்தங்களில் அல்லது பெரிய போர்களில் (கொரியா, வியட்னாம், ஈராக்–ஈரன், லெபனான் போன்ற தேசங்களை உட்படுத்திய போர்களில்) தங்களுடைய அன்பானவர்களில் ஒருவரையோ அல்லது அதிகம் பேரையோ இழந்திருக்கக்கூடும். ஒருவேளை நீங்கள் ஒரு தகப்பனையோ, தாத்தாவையோ, சித்தப்பாவையோ, மாமாவையோ அல்லது அண்ணனையோ, தம்பியையோ அவ்வாறு இழந்த ஒரு குடும்பமாக உங்கள் குடும்பம் இருக்கக்கூடும். மற்ற போர்களிலும் ஐரோப்பிய பேரழிவுகளிலும் இலட்சக்கணக்கான தாய்மார்களும், பாட்டிமார்களும், சகோதரிகளும், அத்தைமார்களும் சித்திமார்களும் உயிரிழந்திருக்கின்றனர்.
மற்றும், நம்முடைய தலைமுறையில், இராணுவம், ஐரோப்பா மற்றும் தூர கிழக்குப் பிரதேசங்களில் இராணுவத்தைச் சாராத மக்கள் தொகையைத் தாக்கி கொள்ளைக்கொண்டிருக்கின்றன. இவற்றில் தப்பியவர்கள், விசேஷமாகப் பெண்கள், அவர்களைத் தகாதவிதத்தில் நடத்தியதன் வடுக்களை இந்நாள் வரையும் தாங்கியிருக்கின்றனர். மனிதன் இந்தளவுக்கு இழிநிலை எட்டியவனாகவும் மூடனாகவும் ஆகிவிட்டிருக்கிறானா?
போரும் படுகொலையுமாகிய திருவெளிப்பாட்டின் சிவப்புநிற குதிரையும் மரணமாகிய மங்கியநிற குதிரையும் 1914 முதல் இந்தப் பூமி முழுவதையும் மிதித்திருக்கிறது குறுக்கே கடந்திருக்கிறது என்பது நிச்சயம்.—வெளிப்படுத்துதல் 6:4.
ஆனால் பஞ்சமாகிய அந்தக் கருப்பு குதிரையைப் பற்றியதென்ன? (வெளிப்படுத்துதல் 6:5) அது நம்முடைய தலைமுறையைத் தாக்கியிருக்கிறதா? (g88 4⁄8)
[பக்கம் 7-ன் பெட்டி]
நீங்கள் எப்படி பதிலளிப்பீர்கள்? 1914 முதல் . . .
1. நடந்த பெரிய யுத்தங்கள் என்ன?
2. எத்தனை பெரிய பூமியதிர்ச்சிகள் உங்களுக்கு ஞாபகமிருக்கிறது?
3. மனிதவர்க்கம் ஏதாவது பெரிய வியாதிகளாலும் கொள்ளை நோய்களாலும் அவதியுற்றிருக்கின்றனவா?
4. உலகத்தைப் பாதித்த பெரிய பஞ்சங்களும் உணவு குறைபாடுகளும் என்ன?
5. கள்ளத்தீர்க்கதரிசிகளும் கள்ளக் கிறிஸ்துக்களும் தோன்றினார்களா?
6. அதிகரித்திருக்கும் வன்முறைக்கும் அக்கிரமத்துக்கும் அத்தாட்சி இருக்கின்றனவா?
7. அன்பும் அயலார் உறவும் குறைந்துவந்திருக்கின்றனவா?
8. உலகத்துக்கு சமாதானம் கொண்டுவருவதாக எந்த ஓர் அமைப்பாவது உரிமைபாராட்டியிருக்கிறதா?
9. ஜனங்களுக்குத் தத்தளிப்பும் எதிர்காலம் குறித்த பயமும் இருக்கின்றனவா?
10. உலக முழுவதும் ராஜ்யத்தைக் குறித்து சாட்சி கொடுக்கும் வேலை செய்யப்படுவதற்கு நீங்கள் அத்தாட்சியைக் காணமுடிகிறதா?
(பதில்களுக்குப் பக்கம் 11-ஐப் பாருங்கள்.)
[பக்கம் 8-ன் சிறு குறிப்பு]
காரியங்களின் இன்றைய நிலையில், உலக மகா யுத்தம் இன்னும் ஒரு முறைதான் நிகழக்கூடும்—ஓர் அணு ஆயுத யுத்தமாக. அதற்குப் பின்பு நாடுகளோ ராஜ்யங்களோ இராது. இந்த ஓர் அம்சம் மட்டுமே நம்முடைய காலங்களைத் தனித்தன்மை கொண்டிருக்கச் செய்வதுடன், “கடைசி நாட்கள்” என்ற விவரிப்புக்கும் வலுவூட்டுகிறது.—2 தீமோத்தேயு 3:1.
[பக்கம் 8-ன் சிறு குறிப்பு]
“ஒரு நவீன நீர்மூழ்கிக் கப்பலின் அழிக்கும் சக்தி இரண்டாம் உலக மகா யுத்தத்தின் அழிக்கும் சக்தியைவிட ஏறக்குறைய எட்டு மடங்கு அதிகமாக இருக்கிறது—வடக்கு பிரதேசத்திலுள்ள ஒவ்வொரு நகரையும் அழிப்பதற்குப் போதுமான சக்தியைக் கொண்டிருக்கிறது.”